Ashok Leyland experience லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Ashok Leyland experience லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28.7.14

அலேக் அனுபவங்கள் 140728 ஆரம்ப காலத்தில் .....

             
அப்ரண்டிஸ் ஆக இருந்த பொழுது முதல் இரண்டு அல்லது ஒன்றரையாண்டுகள் பல பிரிவுகளிலும் பயிற்சி. மெஷின் ஷாப் முதல் அக்கவுண்ட்ஸ் செக்சன் வரையிலும் எல்லா பகுதிகளிலும் குறைந்த பட்சம் ஒருநாள் அதிகபட்சம் ஒருமாதம் என்று பயிற்சி உண்டு. (காண்டீனில் மட்டும் பயிற்சி கிடையாது) 
         


ஒவ்வொரு பகுதிக்கும் ட்ரைனிங் சென்ற நாட்களில் அங்கு அரட்டை அடிக்க சில ஆட்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வேன். அதற்கு ஆள் பிடிப்பது ரொம்ப ஈசி. 
            
அந்தந்தப் பகுதிகளில் உள்ள யாராவது ஒருவர், நீங்கள் யார், பெயரென்ன, எங்கிருந்து வருகிறீர்கள், எந்த ஊர் என்று ஏதாவது கேட்டுவிட்டால் போதும். விலாவாரியாக விவரங்கள் கூறி, அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டு, அவருடைய இண்டரஸ்ட் என்ன என்று தெரிந்துகொண்டு, அந்த சப்ஜெக்டிலேயே பந்து போட்டு, பந்தடித்து விளையாட ஆரம்பித்துவிடுவேன். 
            
ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு நண்பர் அதிக பட்சம் அந்தப் பகுதியில் இருப்பவர்கள் எல்லோரையும் நண்பராக்கிக் கொண்டுவிடுவேன். சந்தடிசாக்கில் நண்பருடைய பிறந்தநாள் எது என்று தெரிந்து வைத்துக்கொள்வேன். டயரியில் எழுதி வைத்துக்கொள்வேன். பிறந்தநாளில் அவரை நேரில் சென்று கைகுலுக்கி வாழ்த்திவிட்டு வருவேன். 
              

சூப்பர்வைசர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் (என்னுடைய பேட்ச் ஆட்களைத் தவிர) யாரும் சுலபமாகப் பழகமாட்டார்கள்.  அவர்கள் எல்லோரும் மேலதிகாரிகளுக்கு நிறைய பயப்படுபவர்கள். எனவே எனக்கு அதிக நண்பர்கள் தொழிலாளர் வர்க்கத்தினர்தான். அதிலும் குறிப்பாக செமி ஸ்கில்டு  / அன் ஸ்கில்டு /  காஷுவல் /  தொழிலாளத் தோழர்கள் அதிகம். ஜாதி, மத, இன வித்தியாசமே கிடையாது. எல்லோரும் நன்கு பழகுவார்கள். 
                
நான் வடிவமைப்பு & அபிவிருத்திப் பகுதியில் நிரந்தர வேலை செய்ய ஆரம்பித்த பிறகு கூட, மற்றப் பகுதிகளில் ஏதேனும் வேலை ஆகவேண்டியிருந்தால், (உதாரணத்திற்கு) ஒரு சாம்பிள் பிராக்கெட் செய்ய ஸ்டீல் ப்ளேட் 7" X 8" தேவை என்றால், ஷியரிங் செக்சன் சென்று, அங்குள்ள நண்பரிடம் என் தேவையைக் கூறி, யாரிடம் கேட்டால் காரியம் ஆகும் என்று தெரிந்துகொண்டு அவரின் சிபாரிசோடு வேலையை முடித்துக்கொண்டு வருவேன். 
      
    

மெஷின் ஷாப்பில் ஓல்ட் மெஷின்ஷாப், நியூ மெஷின்ஷாப் என்று இரண்டு மெஷின்ஷாப்கள். 
                
அதில் ஓல்ட் மெஷின்ஷாப்புக்கு ட்ரைனிங் சென்றிருந்த பொழுது அங்கிருந்த ஒரு நண்பர், ஆரம்பக் காலத்தில் (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டு / ஐம்பதுகளில்) லேலண்டு கம்பெனி எப்படி இருந்தது என்று விவரமாகச் சொன்னார். 
                
அதை அடுத்த பதிவில் பார்ப்போம். 
                  

24.6.13

அலேக் அனுபவங்கள் 21 :: சின்ன காம்பஸ், பெரிய காம்பஸ்!

   
அசோக் லேலண்டில், ஆராய்ச்சி & அபிவிருத்திப் பிரிவில், ஒரு வரைவு மனிதனாக (டிராப்ட்ஸ்மேன்) பணியாற்றிய காலம். ('உனக்கு டிராப்ட்ஸ்மேன் என்கிற பதம் சரியில்லை. உனக்கு டிராப்ட்ஸ்பாய் என்பதுதான் சரியான டெசிக்னேஷன் என்று என்னை என் நண்பன் வி. பாஸ்கர் அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு!) 
     

பக்கத்து வரைவு மேசை/ வரைவுப் பலகையில் பணியாற்றியவர் பெயர் சி.வி. தயாளன். அந்தக் காலத்து ஆர்மி வண்டியில், (4X4 Model) பயன்படுத்தப் பட்ட பல பாகங்களை படம் வரைந்து அதற்கான விவரங்களை அட்டவணை (specifications) இட்டவர் அவர். அந்த வண்டியின் முன் அச்சு பாகங்கள் எல்லாமே அவருக்கு அத்துப்படி. 
     
அவர் பல வருடங்களாக அசோக் லேலண்டில் பணியாற்றி வருபவர் என்பதால், பல்வேறு டிப்பார்ட்மெண்ட் நண்பர்கள் அவரைத் தேடி வருவதுண்டு. சில சமயங்களில், அவரைத் தேடி வருபவர்கள், அவரின் வேலைக்கு இடையூறாக ஏதேனும் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில், அவர்களை, தவிர்க்க இயலாது திண்டாடுவார், அவர். 
        
நான் அப்பொழுது பணியாற்றிக் கொண்டிருந்தது, மெட்ரிகேஷன், சஜஷன் ஸ்கீம், ஸ்டான்டார்டைசேஷன் - என்று பல தலைப்புகளில். சஜஷன் ஸ்கீம் சம்பந்தமாக, என்னைக் காணவும் பல வெளி டிபார்ட்மெண்ட் ஆட்கள் வருவார்கள். என்னுடைய வேலையிலும் வருகின்ற விசிட்டர்களால் தாமதம் ஏற்படும். 
     
வெளியாட்கள் தொந்தரவுகளைத் தவிர்க்க நாங்கள் இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டோம். 
   
தவிர்க்கப்பட வேண்டிய இம்சை அரசர்கள், எங்கள் வரைவு மேஜைக்கு அருகில் வந்து, வேலையை செய்யவிடாமல் போர் அடித்துக் கொண்டிருந்தால்,  யாருக்கு இம்சையோ, அவர், எங்களில் மற்றவரிடம், "சின்ன காம்பஸ் கொடு" என்று கேட்கவேண்டும். உதாரணத்திற்கு, அவர் இம்சை அரசனால் பாதிக்கப் பட்டு, திணறிக் கொண்டிருந்தால், அவர் என்னிடம் வந்து, சத்தமாக, "கௌதமன், சின்னக் காம்பஸ் கொடு" என்று கேட்க வேண்டும். நான் உடனடியாக அதை அவருக்குக் கொடுத்து விட்டு, சற்று நேரம் கழித்து, கொஞ்சம் வெளியே உலா போவது போல - அல்லது தொலைபேசி மேஜை அருகே சென்று, தொலைபேசியை எடுத்து, சற்று நேரம் கேட்டுவிட்டு (கேட்பது போல நடித்து) "தயாளன் - போன் கால் ஃபார் யூ" என்று கத்தி சொல்லி, அகன்று விடுவேன். அவர் உடனே ஓடி வந்து போனில் சற்று நேரம் கேட்பது போல நடித்து, "இதோ வருகிறேன் சார்!" என்று பய பக்தியுடன் சொல்லி போனை வைத்துவிட்டு, அவருடைய பாஸ் இருக்கும் அறைப் பக்கம் பார்த்து வேகமாக நடப்பார். நன்றாக நடிப்பார்.  
      

வந்திருக்கும் இம்சை, சாதாரணமாக இந்தக் கட்டத்திலேயே வாபஸ் ஆகி வெளியே சென்றுவிடுவார்கள். 
    
அப்படியும் அசையாமல் அவர் மேஜைக்கு அருகே இம்சை நின்று கொண்டிருந்தால், நான், அந்த  இம்சையிடம், "அவரு பாஸ் கூப்பிட்டிருக்காரு. பாஸ் ரொம்பக் கோபமா இருக்காரு. அது அவரு குரலிலேயே தெரியுது. அவர் திட்டு வாங்கிகிட்டு திரும்ப வரும்போது நீங்க இங்கே இருக்காதீங்க.   அனேகமா பாஸ் அவர் கூட சேர்ந்து இங்கே வந்து, படப் பலகையில் இருக்கின்ற படம் குறித்து விவாதிப்பார்கள். இந்த சமயத்தில், நீஙகள் இங்கே இருந்தால், உங்க நண்பருக்கு மிகவும் இக்கட்டான நிலைமை ஏற்படும். ஆகவே சீக்கிரமாக சென்றுவிடுங்கள். பிறகு வந்து பாருங்கள்" என்று சொல்லி அனுப்பிவிடுவேன். 
      
நான் தயாளனிடம் 'சின்ன காம்பஸ்' கேட்டாலும் இந்த நாடகங்கள் அரங்கேறும்; நான் இம்சையிலிருந்து காப்பாற்றப் படுவேன்! 
      
இப்படியாக எங்கள் நடிப்புத் திறமையைக் காட்டி நாங்கள் ஒருவரையொருவர் காப்பாற்றி வந்த நாட்களில் ஒருநாள் ......
      
"கௌதமன், அர்ஜண்டா சின்ன காம்பஸ் கொடு" என்று பரபரத்தார், தயாளன். அவருடைய மேஜை அருகே யாரும் இல்லை. 'சரி மனிதர் உண்மையிலேயே கேட்கிறார்' என்று நினைத்து, நான் அவரிடம் சின்ன காம்பஸ் கொடுத்துவிட்டு, என் வேலையில் ஆழ்ந்துவிட்டேன்.   
   
சற்று நேரம் கழித்து, மீண்டும் தயாளன். "கௌதமன், பெரிய காம்பஸ் கொடு." கொடுத்தேன். 
     
சற்று நேரம் கழித்து மீண்டும் அவர். என்னருகே வந்து, "கௌதமன் சின்ன காம்பஸ் கொடு." நான் உடனே "அது உங்களிடம்தானே இருக்கு?" என்று சொன்னேன். அவர், "ஆமாம், ஆமாம். என் 'கிட்டே'தான் இருக்கு. போர்டு கிட்டே வா - ஒரு சந்தேகம்" என்றார். 
    

சென்று பார்த்தால், வழக்கமாக மேஜை அருகே நின்று போரடிக்கின்ற இம்சை ஒன்று, தயாளனின் டிராயிங் போர்டு பக்கத்தில் ஒரு ஸ்டூலில் அமர்ந்துகொண்டு இருந்தார். அப்போதான் எனக்கு தயாளன் ஏன் இவ்வளவு பதட்டப்பட்டார் என்று தெரிந்தது. அவரை இம்சையிலிருந்து விடுவிக்க எண்ணி, தொலைபேசிகள் இருக்கின்ற மேஜையருகே சென்றேன். நான் அந்த மேஜையருகே சென்றபோது, சரியாக உள்(தொலை)பேசி அடிக்க ஆரம்பித்தது. எடுத்து, "ஹலோ?" என்றேன்.    
    

மறுமுனையில் பேசியவர், தயாளனின் பாஸ். "ஹலோ தயாளனை உடனே வந்து என்னை பார்க்கச் சொல்லு." என்றார், வைத்துவிட்டார். 
   
நான் உடனே உரத்த குரலில், "தயாளன், கபீர் கால்ஸ் யூ" என்று சொல்லி, என்னுடைய இடத்திற்கு வந்துவிட்டேன். 'அப்பா - இன்று ஒரு நாளாவது உண்மையை உரைத்தோமே!' என்று மனதில் ஒரு திருப்தியும் வந்தது. நான் சொல்வதற்காகவே காத்திருந்தது போல தயாளன் அவசரம் அவசரமாக ஓடினார். 
    
வந்து உட்கார்ந்திருந்த இம்சை நபரும் ஒருவாறு நிலைமையுணர்ந்து இடத்தை விட்டு அகன்றார். 
     
பத்து நிமிடங்கள் கழித்து, அங்கே வேகமாக வந்தார் கபீர். "கௌதமன், தயாளன் எங்கே? அவரை என் ரூமுக்கு வரவேண்டும் என்று சொன்னேனே - அவரிடம் சொல்லவில்லையா?" என்று கேட்டார். 
    
நான் 'பெப்பேப்பே ' என்று விழித்தேன். 
     
அப்போதான் - உள்பேசியில் நிஜமாகவே ஒரு கால் வந்தது என்பதை தயாளன் கவனிக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். வழக்கம்போல அவரை இம்சையிலிருந்து விடுவிக்க நான் சொன்ன பொய்தான் அது என்று நினைத்து, கபீர் ரூம் பக்கம் செல்லாமல் டிப்பார்ட்மெண்டுக்கு வெளியே ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. 
     
கபீரிடம், 'சொன்னேன் சார். அவர் வயிறு சரியில்லை. அர்ஜெண்டா டாய்லட் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னார் சார். இதோ வந்துவிடுவார் சார்!" என்றேன்.   பேசிக் கொண்டே வெளியே தூரத்தில் மரத்தடியில் நின்று கொண்டிருக்கும் தயாளனை கண்ணாடி ஜன்னல் வழியாகப்  பார்த்தேன். 
   

என் பார்வை போன திக்கில் பார்த்த கபீர், மரத்தடியில் நின்று கொண்டிருக்கும் தயாளனைப் பார்த்ததும், என் பக்கம் திரும்பி, "டிப்பார்ட்மெண்டில் டாய்லட் இல்லையா? அவரு ஏன் மரத்தடிக்கெல்லாம் போயி அசிங்கம் செய்கிறார்?" என்று கேட்டு, சிரித்தவாறு சென்றுவிட்டார்!