கத்தரிக்காய் பிட்ளை என்பதைத்தான் சுருக்கமாக அப்படி சொல்லியுள்ளோம் தலைப்பில்!
கத்தரிக்காய் வாங்கும் பொழுது, அதன் பாவாடை பார்த்து வாங்கவேண்டும். பாவாடை பச்சைப்பசேல் என்று, நீளத்தில் மினிஸ்கர்ட் போல இல்லாமல் மிடி அளவுக்கு இருக்கவேண்டும் என்று விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுவர்.
இப்படியாகப்பட்ட கத்தரிக்காய் கால்கிலோ வாங்கிக்கொள்ளுங்கள்.
மேலும் தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றும் அரை டீ ஸ்பூன்.
ஐந்து மிளகாய் வற்றல்,
கால் டீஸ்பூன் மிளகு, கொஞ்சம் பெருங்காயம் இவை எல்லாவற்றையும் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும்.
இவற்றுடன் கால் மூடி (அதாகப்பட்டது, ஒரு மூடி தேங்காயைத் துருவி, அதில் கால் பகுதியை எடுத்துக்கொண்டால் கால் மூடி என்று கொள்க. கணக்குல நான் எவ்வளவு ஸ்ட்ராங் பார்த்தீர்களா!) தேங்காய்த் துருவலையும் சேர்த்து, எல்லாவற்றையும் மிக்சியிலிட்டு, அரைத்துக் கொள்ளவும். தேங்காய் மூடியை சேர்த்து அரைக்கக் கூடாது!
இந்தக் கலவைக்கு எக்ஸ் என்று பெயரிட்டு ஒருபக்கம் எடுத்து வைத்துக் கொள்ளவும். அல்ஜீப்ரா தெரியாதவர்கள் கலவைக்கு அ என்று பெயரிட்டுக் கொள்ளலாம்.
மொச்சை அல்லது மஞ்சள் பட்டாணி (பச்சைப்பட்டாணி அல்ல) நூறு கிராம் ஊறவைத்து, தோல் நீக்கி, போதிய அளவு தண்ணீரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காய்களை, நீளவாக்கில் நான்கு அல்லது எட்டாக ஆரஞ்சு சுளை வடிவத்தில் அரிந்து கொள்ளவும்.
எலுமிச்சங்காய் அளவு புளியும் இரண்டு டீஸ்பூன் பொடி உப்பும் இரண்டு கப் தண்ணீரில் கரைத்து, தண்ணீர்ப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, நறுக்கிய கத்தரிக்காய்த் துண்டுகளைப் போட்டுக் கொதிக்கவிடவும்.
கத்தரிக்காய் துண்டுகள் வெந்தவுடன், அ அல்லது எக்ஸ் கலவையை ஒரு கப் தண்ணீரில் கரைத்து, மேற்கண்ட புளி, உப்பு, கத்தரிக்காய் கலவையில் சேர்க்கவும். வேகவைத்த பட்டாணி / மொ கொ இவற்றையும் சேர்க்கவும்.
எல்லாம் கலந்து கொஞ்சம் கெட்டிப்பட்டவுடன், ஒரு டீஸ்பூன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதை கத்தரிக்காய் பிட்ளையில் விட்டு, கிளறவும்.
வாணலியில் மூன்று டீஸ்பூன் நெய் விட்டு, கடுகு கால் டீஸ்பூன் போட்டு, கடுகு வெடித்ததும், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு அரை டீஸ்பூன், பத்துப் பதினைந்து கறிவேப்பிலை எல்லாம் போட்டு, தாளித்து பிட்ளையில் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும், பிட்ளையை அடுப்பிலிருந்து இறக்கிவிடலாம்.
அவ்வளவுதான்! கத்தரி பிட் ரெடி.





