திங்கள், 2 ஜூன், 2014

திங்க கிழமை 140602 :: கத்தரி பிட்

      
கத்தரிக்காய் பிட்ளை என்பதைத்தான் சுருக்கமாக அப்படி சொல்லியுள்ளோம் தலைப்பில்! 
              
கத்தரிக்காய் வாங்கும் பொழுது, அதன் பாவாடை பார்த்து வாங்கவேண்டும். பாவாடை பச்சைப்பசேல் என்று, நீளத்தில் மினிஸ்கர்ட் போல இல்லாமல் மிடி அளவுக்கு இருக்கவேண்டும் என்று விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுவர். 
  

இப்படியாகப்பட்ட கத்தரிக்காய் கால்கிலோ வாங்கிக்கொள்ளுங்கள். 
   


   

    

மேலும் தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றும் அரை டீ ஸ்பூன். 
ஐந்து மிளகாய் வற்றல், 
கால் டீஸ்பூன் மிளகு, கொஞ்சம் பெருங்காயம் இவை எல்லாவற்றையும் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். 
   
 
   

இவற்றுடன்  கால் மூடி (அதாகப்பட்டது, ஒரு மூடி தேங்காயைத் துருவி, அதில் கால் பகுதியை எடுத்துக்கொண்டால் கால் மூடி என்று கொள்க. கணக்குல நான் எவ்வளவு ஸ்ட்ராங் பார்த்தீர்களா!) தேங்காய்த் துருவலையும் சேர்த்து, எல்லாவற்றையும் மிக்சியிலிட்டு, அரைத்துக் கொள்ளவும். தேங்காய் மூடியை சேர்த்து அரைக்கக் கூடாது! 
            
இந்தக் கலவைக்கு எக்ஸ் என்று பெயரிட்டு ஒருபக்கம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.  அல்ஜீப்ரா தெரியாதவர்கள் கலவைக்கு அ  என்று பெயரிட்டுக் கொள்ளலாம். 
  

மொச்சை அல்லது மஞ்சள் பட்டாணி (பச்சைப்பட்டாணி அல்ல) நூறு கிராம் ஊறவைத்து, தோல் நீக்கி, போதிய அளவு தண்ணீரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். 
              
கத்தரிக்காய்களை, நீளவாக்கில் நான்கு அல்லது எட்டாக ஆரஞ்சு சுளை வடிவத்தில் அரிந்து  கொள்ளவும். 
                
எலுமிச்சங்காய் அளவு புளியும் இரண்டு டீஸ்பூன் பொடி உப்பும் இரண்டு கப் தண்ணீரில் கரைத்து, தண்ணீர்ப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, நறுக்கிய கத்தரிக்காய்த் துண்டுகளைப் போட்டுக் கொதிக்கவிடவும். 
கத்தரிக்காய் துண்டுகள் வெந்தவுடன், அ  அல்லது எக்ஸ் கலவையை ஒரு கப் தண்ணீரில் கரைத்து, மேற்கண்ட புளி, உப்பு, கத்தரிக்காய் கலவையில் சேர்க்கவும். வேகவைத்த பட்டாணி / மொ கொ இவற்றையும் சேர்க்கவும். 
                
எல்லாம் கலந்து கொஞ்சம் கெட்டிப்பட்டவுடன், ஒரு டீஸ்பூன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதை கத்தரிக்காய் பிட்ளையில் விட்டு, கிளறவும். 
                   
வாணலியில் மூன்று டீஸ்பூன் நெய் விட்டு, கடுகு கால் டீஸ்பூன் போட்டு, கடுகு வெடித்ததும், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு அரை டீஸ்பூன், பத்துப் பதினைந்து கறிவேப்பிலை எல்லாம் போட்டு, தாளித்து பிட்ளையில் சேர்க்கவும். 
                  
ஒரு கொதி வந்ததும், பிட்ளையை அடுப்பிலிருந்து இறக்கிவிடலாம். 
                 
அவ்வளவுதான்! கத்தரி பிட் ரெடி.  
                

14 கருத்துகள்:

 1. சந்தேகம் கால் முடியில் ஒரு முடி எதுக்கு ? காலில் முடி இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க? இந்த கத்திரி பிட் மலச்சிக்கலுக்கு மிக நல்ல மருந்தாக இருக்கும் என நினைக்கிறேன் காரணம் யார் வயித்துக்குள்ள அந்த முடி போகுதோ அவங்களுக்கு பாத்ருமில்தான் குடி இருக்க வேண்டும். என்ன நான் சொலவது சரிதானே?

  பதிலளிநீக்கு
 2. முதலில் அல்ஜீப்ரா சொல்லிக் கொடுக்க வேண்டும்... ஹிஹி...

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப நீளமான வோம் ஒர்க்கா இருக்கே!நமக்கு சாப்பிடத்தான் லாயக்கு!

  பதிலளிநீக்கு
 4. காலம்பரலேருந்து "திங்க" வர முடியலை. எனக்கு ஆஸ்தினு ஏதானும் இருந்தால் அதை இந்தக் கத்திரிக்காய்ப் பிட்லைக்கும் மோர்க்குழம்புக்கும் செலவு செய்வேன். அல்லது இதைச் செய்து போடுபவர்களுக்கு எழுதி வைப்பேன். (நல்லவேளையா ஒண்ணும் இல்லையோ பிழைச்சேன்) இதிலே கொஞ்சம் போல் துவரம்பருப்பும் குழைய வேக விட்டு நாங்க சேர்ப்போம். இதே செய்முறையில் பாகற்காயிலும் பிட்லை செய்யலாம். காராமணிக்காய்+சேனைக்கிழங்கு போட்டும் பண்ணலாம். மத்ததெல்லாம் பிட்லைக்கு ஏற்ற காய்கள் அல்ல, அல்ல, அல்ல, அல்லவே அல்ல!

  பதிலளிநீக்கு
 5. மதுரையிலே இந்த மொச்சைப்பருப்பைத் தோல் உரித்துக் காய வைத்துப் பிதுக்குப் பருப்புனு விப்பாங்க. அதை ஊற வைச்சுச் சேர்த்த பிட்லைக்கு இந்த உலகத்தையே கொடுத்துடலாம். :)

  பதிலளிநீக்கு
 6. பிட்லை அதுவும் கத்திரிக்காய் பிட்லை.ஏன் சார் டார்ச்சர் இப்படி. விவரங்கள் சூப்பர். நீங்களே செய்வீர்களோ. இல்லை மறுபாதி கடுணையா. கீதா பந்தால்தான் இன்னும் மணக்கிறது. எங்கள் பாட்டி மண்சட்டியில் இதைச் செய்வார். இன்னும் கமகமா. கீதா உலகத்தையே கொடுத்துவிட்டதால் நான் எதைக் கொடுப்பது என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 7. பிட்லை அதுவும் கத்திரிக்காய் பிட்லை.ஏன் சார் டார்ச்சர் இப்படி. விவரங்கள் சூப்பர். நீங்களே செய்வீர்களோ. இல்லை மறுபாதி கடுணையா. கீதா பந்தால்தான் இன்னும் மணக்கிறது. எங்கள் பாட்டி மண்சட்டியில் இதைச் செய்வார். இன்னும் கமகமா. கீதா உலகத்தையே கொடுத்துவிட்டதால் நான் எதைக் கொடுப்பது என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 8. # விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுவர்#
  இவங்க என்னவோ மார்க்கெட்டுக்கு கத்தரிக்காய்வாங்க வந்தவங்க மாதிரி தெரியலை !

  பதிலளிநீக்கு
 9. பாவற்காய் பிட்லை அவ்வப்போது செய்வதுண்டு.. பொதுவாகவே கத்திரிக்காய் என்றால் பிடிப்பதில்லை - சின்னச் சின்னதாய் நறுக்கி கத்திரிக்காய் கடலைப்பருப்பு கூட்டு என்று ஒன்று செய்வார் அத்தைப்பாட்டி - அதுமட்டும் பிடிக்கும்!

  பதிலளிநீக்கு
 10. இந்த செய்முறையை நம்பி காரியத்தில் இறங்கினேன். நம்பினார் கெடுவதில்லை இது நாக்கு உரை தீர்ப்பு. கத்தரிக்காய் பிட்லை அட்டகாசமாக வந்தது. மொச்சைக்குப் பதில் வேர்கடலை (கிடைத்தது அதான்) நன்றாகச் சேர்ந்தது என்பேன்.
  என்ன... மிளகாய் வற்றல் ஐந்து ரொம்ப அதிகம் என்பது தெரியாமல் உஸ் ஹா இன்னும் இரண்டு ஸ்பூன் நெய்... பரவாயில்லை நல்ல ருசி. நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!