கொண்டைக்கடலை வடைகீதா சாம்பசிவம்
ஹூஸ்டனில்
பையர் எங்கேயோ கொண்டைக்கடலையில் வடை சாப்பிட்டிருக்கார். அதிலிருந்து அதைப் பத்தியே
சொல்லிட்டு இருப்பார். எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லைனாலும் ஒரு தரமாவது பண்ணிப் பார்க்கணும்னு
நினைச்சுப்பேன். அதுக்கு இன்னிக்கு வேளை வந்தது. போன மாதம் வாங்கிய கொண்டைக்கடலையில்
வண்டு வர ஆரம்பிக்க, சரிதான், இனியும் இதைக் காபந்து பண்ண வேண்டாம், மத்த சாமான்களுக்கும் வண்டு வர ஆரம்பிச்சுடும்னு
கொண்டைக்கடலையை நன்கு புடைத்து சுத்தம் செய்து விட்டு நிறைய நீர் விட்டு அலசினேன்.
பத்து நிமிஷத்துக்கும் மேல் அலசி அதிலே தூசி, தும்பு, வண்டு இருக்க வாய்ப்பில்லைன்னதும்
அதிலே தேவையான நீரை விட்டு ஊற வைச்சேன். நேத்திக்கே ஊற வைச்சுட்டேன். ஊற வைக்கையில்
வடை பண்ணும் எண்ணமே இல்லை. முளைக்கட்டி எடுத்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சப்பாத்திக்குக்
கூட்டு அல்லது சுண்டல் என்று பண்ணிக்கலாம்னு தான் எண்ணம்.
ஊற வைத்த கொண்டைக்கடலை
இன்னிக்குக் காலம்பர மீண்டும் கழுவி நீரை வடிக்கையில்
வடை செய்தால் என்னனு ஒரு எண்ணம்! அதோடு நேத்திலிருந்து
மழை பெய்துட்டு இருக்கா! சூடாகச் சாப்பிட நல்லா இருக்குமேனு ஒரு ஆசை! உடனே ரங்க்ஸிடம்
கேட்டேன். அவருக்கு உள்ளுக்குள்ளே தான் சோதனை எலியாகி விட்டது குறித்து பயம் வந்ததோ
என்னமோ! தெரியலை! இரண்டே இரண்டு வடை தான் எடுத்துப்பேன், சம்மதம்னா பண்ணு, இல்லைனா
வேண்டாம்னு சொல்லிட்டார். எனக்கா வடை பண்ணியே தீரணும்னு. தூக்கமே வராது போல இருந்தது.
ஆகவே கொஞ்சமாகக் கொண்டைக்கடலையை எடுத்து வடைக்குனு
தனியா வைச்சேன். மிச்சத்தை முளைக்கட்ட விட்டுட்டேன். இப்போக் கொஞ்ச நேரம் முன்னால் அதிலே உப்பு, காரம்
சேர்த்து அரைத்து, பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கிப் போட்டுக் கருகப்பிலை, கொ.மல்லி சேர்த்து
வெங்காயம் நறுக்கிப் போட்டு வடையாகத் தட்டி விட்டேன்.
செய்முறை:
ஊறிய கொண்டைக்கடலை ஒரு கிண்ணம்
மி.வத்தல்,
ப.மிளகாய் வகைக்கு இரண்டு
ஒரு சின்னத்
துண்டு இஞ்சி
பெருங்காயம்,
உப்பு தேவைக்கு.
வெங்காயம்
பெரிது ஒன்று
இவற்றைச் சேர்த்து
அரைத்துக் கொள்ள வேண்டும். உதிர் உதிராகத் தான் வருது. கொஞ்சம் உளுந்து சேர்த்திருக்கலாமோனு
நினைச்சேன். அப்போத் தான் சேர்ந்து வரும். இப்போ ஒண்ணும் பண்ண முடியாது என்பதால் ஒரு
டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கொண்டேன்.
வடைக்கு அரைத்த
மாவு.
இதில் எல்லாமும்
கலந்திருக்கேன்.
=======================================================================================
எண்ணெயில் வேகும் வடைகள்
சுடச் சுட வடைகள் சாப்பிட ரெடி!
சின்னதாய்
ஒரு பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி உள்ளே உள்ள விதையை எடுத்துவிட்டுப் பொடிப்பொடியாக
நறுக்கிப் போட்டேன். இஞ்சியும் ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிச் சேர்த்தேன். அப்போது
தான் வாசனையாக இருக்கும். வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து, கருகப்பிலை, கொத்துமல்லி
போட்டுக் கலந்து கொண்டு வடையாகத் தட்டினேன். எல்லோரும் வேணும்ங்கற வடைகளை எடுத்துக்குங்க!
=========================================================================================
மனசாட்சியம் - 38
KGY Raman
" தன்னெஞ்சறிவது "
பஞ்சமா பாதகங்கள் என்றால் எவை என்று நான் உங்களுக்குப் பட்டியல் போட்டுச் சொல்ல வேண்டிய தேவையில்லை. தவறு அல்லது பாதகம் அது கூட இல்லை மகாபாதகம் என்று தெரிந்தும் இரண்டு மூன்று பாவங்களைச் செய்யாமல் இருக்க இயலவில்லை என்பதே கசப்பான உண்மை.
சுதந்திரத்திற்கு முன்பாகவே மதுவிலக்கைக் கொண்டு வந்தவர் ராஜாஜி. யாரோ ஒரு ஆள் ஒரு மண் கலயத்தில் கள் எடுத்துப் போவதைப் பார்த்த அவர் அதை வாங்கிப் பார்த்து அப்படி இதில் என்னதான் இருக்கிறது ? மக்கள் ஏன் இப்படி விடாப்பிடியாக குடிக்கிறேன் என்கிறார்கள் " என்று கேட்டு தன் விரலை அதில் தோய்த்து நாக்கில் தொட்டுக் கொண்டாராம். " சே, இதைப் போயா இவ்வளவு ஆர்வமாகக் குடிக்கிறார்கள் " என்று ஆச்சரியப்பட்டுப் போனாராம். இன்றைய குடிமகன் யாராவது அப்போது அருகில் இருந்திருந்தால் " நைனா தமத்துண்டு குடிச்சிட்டு இப்படிக் கேட்காதே ! ஜம்முன்னு ஒரு லிட்டர் குடிச்சு பாரு தெரியும் " என்று நிச்சயம் சொல்லி இருப்பார். அது லிட்டர் வராத காலம்.
என்னதான் இருக்கிறது என்று ஒரு ஆவல் காரணமாக குடித்துப் பார்த்து அதில் மூழ்கிப் போனவர்களை எனக்குத் தெரியும். நீங்கள் சாப்பிடும் டானிக்கில் கூடத்தான் ஆல்கஹால் இருக்கிறது என்று அவர்கள் நம்மோடு விதண்டாவாதம் செய்வார்கள். நான் விமானத்தில் குடித்த கதை உங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறேன்.
அலுவலகத்தில் என் மொடாக்குடி நண்பர் ஒருவர் ஜுரம் இருமல் ஜலதோஷம் என்று எந்த உபாதை வந்தாலும் கால் லிட்டர் அரை லிட்டர் என்று மது டோஸ் சாப்பிட்டு அதனால் சரியாயிற்று என்று வாதம் செய்வார். அற்பாயுளில் மறைந்து போனார்.
" தர்மபுத்திரரே சூதாடி இருக்கிறார் " என்று ரம்மி வெறியர்கள் தம் கட்சிக்கு சப்பை கட்டுவதை நான் பார்த்திருக்கிறேன்.
பாதகங்களிலேயே மிகவும் லேசானது பொய் சொல்வது தான் போலிருக்கிறது. பொய், புளுகு என்று இதில் இரண்டு வகை. பொய்க்கும் புளுகுக்கும் என்ன வித்தியாசம் என்று நான் ரொம்ப நாள் தெரியாமல் தான் இருந்தேன். கெடுதல் விளைவிப்பது அல்லது தீய நோக்கத்துடன் சொல்லப்படுவது பொய். யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாது, இக்கட்டான நிலைமையைச் சமாளிக்க வேண்டிய காரணத்துக்காக சொல்லப்படுவது புளுகு.
வேலை பார்க்கிற காலத்தில் பொய் அல்லது புளுகு சொல்லாமல் பல விஷயங்களைச் சமாளிக்க இயலாது. " குடும்பத்தோடு சினிமாவுக்குப் போக அரை நாள் லீவு வேண்டும் " என்று கேட்டால் எந்த அதிகாரியும் கொடுக்க மாட்டார். " சில சொந்த அலுவல்கள் " ( some urgent private affairs) என்கிற ஆங்கில சொற்றொடர் இதைச் சமாளிக்க மட்டுமே ஏற்பட்டது. அப்போது கூட அது என்ன சொந்த அலுவல் என்று என் மேல் அதிகாரி குடைந்து குடைந்து கேட்பார். எனவே அவரிடம் அரை நாள் லீவு வேண்டுமானால் கூட ஏதாவது சீக்கு காரணம் சொல்லித்தான் வாங்க வேண்டும்.
அதேபோல " ரேடியோ வாங்க வேண்டும் வைப்பு நிதியிலிருந்து கடன் கொடுங்கள் " என்று கேட்டால் கொடுக்க மாட்டார்கள். " என்னைச் சார்ந்து இருக்கிற ஒருவரது நெடுநாள் தொடர்கிற நோய்க்குச் சிகிச்சை செய்ய " என்று பொய் சொல்லிக் கடன் வாங்க வேண்டும். சில சமயம் டாக்டர் சர்டிபிகேட் கூட கேட்பார்கள். ஐந்து அல்லது பத்து ரூபாய் கொடுத்தால் லட்ச ரூபாய் வரை சர்டிபிகேட் பெற முடியும்.
இன்னொரு தவிர்க்கக்கூடிய ஆனால் தவறுத்திராத பாதகம் திருட்டு. சின்னதானாலும் சொற்பமானாலும் திருட்டு திருட்டுத்தானே ! நான் செய்த சின்ன சின்னத் திருட்டுகளைப் பற்றி அதிகம் சொல்லாமல் இருப்பதே நல்லது. இதுவரை பிடிபடவில்லை என்ற நல்ல செய்தியைச் சொல்வதுடன் முடித்துக் கொள்கிறேன்.
கொசு கரப்பான் பூச்சி எலி பெருச்சாளி இவற்றைக் கொல்வது கொலையாகுமா என்று தெரியவில்லை. " உன்னை முட்ட வந்த பசுவைக் கொல்லு " என்று புத்தர் சொன்னதாக நாக நந்தி அடிகள் மூலம் கல்கி நமக்குச் சொல்லுகிறார்.
எல்லாம் யோசித்துப் பார்க்கும் வேளையில் அடுத்த ஜென்மத்திலாவது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!