மணியைப் பார்த்தேன். காலை மணி நான்கு. அட - அலாரம் வைத்தது காலை ஐந்து மணிக்குத் தானே!
அப்போதான் - நான் விழித்தெழுவதற்கு முன் கண்ட கனவு கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் வந்தது.
ஒளிமயமான ஒரு சோலை. உள்ளே நுழைந்து செல்கிறேன். நடக்கிறேனா பறக்கிறேனா என்றே தெரியாத வேகப் பயணம். வலியே இல்லை. ஆனால் காட்சிகள் வேகமாக நகருகின்றன. அங்கே, ஆத்மா பதிவில் இருப்பதுபோல ஒரு மேடை. அதில் ஓர் உருவம். ஆனால் நிழல் உருவம் இல்லை, ஒளி வடிவம். சந்திர ஒளி போன்ற சூழல் - எல்லாமே சில் என்று இருக்கிறது.
அந்த உருவம் என்னை நோக்கி 'நில்' என்று சைகை செய்தது.
என் பயணம் மா நகர பஸ்சின் சடன் பிரேக்காக நின்றது.
'என்ன வேண்டும்?' யாரும் கேட்கவில்லை - ஆனால் அது என்னைப் பார்த்து கேட்ட மாதிரி ஓர் உணர்வு.
'என்ன வேண்டுமா?' என்னய்யா இது - என்னை வேகமாக இங்கே இழுத்துவிட்டு - திடீரென்று இப்படி ஒரு கேள்வி?
திரும்பிப் போக யத்தனிக்கிறேன். முடியவில்லை. கண்கள் அதைவிட்டு விலகவில்லை, காதுகளில் வேறு சப்தம் எதுவும் விழவில்லை. மனம் முழுவதும் வெறுமையாக - வேறு ஏதும் சிந்தனை இல்லாமல் - எனக்கே நான் இப்படி அங்கே ஏதோ ஓர் உருவில் நிற்பது ஆச்சரியமாக இருந்தது.
ஓ! இவர்தான் கடவுளோ?
கேட்க வாயெடுத்தேன்.
தெரிந்த பதில்களுக்கு எதுவும் கேள்விகள் வேண்டாம். அதுதான் ஸ்பஷ்டமாகக் கூறியது.
என் மனம் பதில் தெரியாத கேள்விகளை வேகமாக யோசனை செய்ய ஆரம்பித்தது. என்ன ஆச்சரியம் - அந்த சில வினாடிகளில் பதில் தெரியாத கேள்விகள் எதுவுமே எனக்கு சட்டென்று ஞாபகம் வரவில்லை.
சரி - ஏதாவது கேள்வி கேட்டு வைப்போம் என்று, " ஒன்று பலவாகிறதா அன்றி பல ஒன்றாகிறதா" என்று கேட்டேன்.
கேட்டு முடிப்பதற்குள் பதில் வந்தது.
" இரண்டுமே சாத்தியம்தான். சொல்லப்போனால், ஒன்று சாத்தியம் என்றால் மற்றது அதன் முற்றோருமித்த பிரதி பிம்பம் தானே!" அப்போ புரிஞ்ச மாதிரி இருந்தது. இப்போ புரியல.
அதற்குள் எனக்கு அடுத்த கேள்வி மனதில் உதித்துவிட்டது.
கணமும் தாமதியாது கேட்டுவிட்டேன்.
"கடவுள் உண்டா கிடையாதா?"
கேட்டு முடிப்பதற்குள் பதில். " எது எந்தக் காலத்திலும் சத்தியமாக நிறைந்திருக்கிறதோ அதை எந்தக் காலத்திலும் யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது" இதுவும் அப்போ புரிஞ்சது - இப்போ?
நான் கேட்ட அடுத்த கேள்விதான் சற்று விசித்திரமானது.
" நான் உங்களை அடுத்தது எப்போ பார்ப்பேன்?"
" நீ தினமும் என்னையும், நான் தினமும் உன்னையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீ கேட்டதால் சொல்கிறேன், நாளைக் காலையில் நீ எழுந்த பிறகு நீ சந்திக்கின்ற உன் சொந்த பந்தம் இல்லாத நான்காவது உயிரினம் நாந்தான் - அந்த நான்காவது உயிரினத்தை ஞாபகத்தில் என்றும் வைத்திரு. மீண்டும் சந்தர்ப்பம் நேர்ந்தால் நாம் இந்தக் கனவுலகில் சந்திப்போம்."
அந்த உருவம் அப்படியே கரைந்து போயிற்று. மரத்திலிருந்து ஒரு மாதுளம் பழம் மேடை மீதிருந்த தாம்பாளத்தில் விழுந்து, தாம்பாளம் துள்ளித் தரையில் விழுந்து - புரண்டு செய்த பேரோசையில்தான் நான் விழித்திருக்கிறேன் போலிருக்கிறது!
(தொடரும்)

