இலவச தொலைக் காட்சி, ஒரு ரூபாய் அரிசி, வாக்குக்கு ரொக்கம் இவை குறித்து பல வீடுகளிலும் சர்ச்சை நடக்கும் என்று தோன்றுகிறது. எரிந்த கட்சி, எரியாத கட்சி ( அப்படி என்றால் என்ன என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்) எல்லாவற்றிலும் இருக்கும்தானே.
வாங்கலாம் என்று கட்சி கட்டுபவர் முன்வைக்கும் வாதம் இப்படியாக இருக்கும்:
நான் வாங்காவிட்டால் என் பெயர் சொல்லி வேறு யாரோ அபேஸ் செய்யப் போகிறார்கள். அதற்கு நானே வாங்கிக்கொண்டு விடலாமே.
எவன் எவனோ எவ்வளவோ மூட்டை அடிக்கிறான். நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?
வாங்கிக் கொண்டு வேலைக்காரி மாதிரி ஒரு டிசர்விங் கேஸ் பார்த்துக் கொடுத்துவிடலாம்.
வாங்கக் கூடாது என்பவர் சொல்லும் பாயின்ட்கள் இப்படி இருக்கும்:
என் பெயரை சொல்லி எவன் வாங்கினாலும் அந்தப் பாவம் அவனுக்கு. எனக்கு என்ன ஆயிற்று?
இது ஏழை பாழைகளுக்கான சலுகை. வசதி இருப்பவர் இதைப் பெறக் கூடாது.
இது ஒரு மாதிரி மறைமுக லஞ்சம். தேர்தல் சமயத்தில் வருமானால் அது வாக்குக்கு பணம் கொடுக்க ஒரு குறுக்குவழி என்று தான் கொள்ள வேண்டும். அதற்கு நாம் துணை போகக் கூடாது.
எவனெவனோ ஊழல பண்ணினால் நானும் ஏன் பண்ண வேண்டும்?
வேலைக்காரி மாதிரி ஆட்களுக்கு தமக்குத் தாமே வாங்கிக்கொள்ளலாமே. நாம் ஏன் நடுவில் தலையை நுழைக்க வேண்டும்?
சரி இந்த வாதங்கள் எல்லாம் ஏன் இப்போது சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா? அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
திடீரென்று ஒரு நாள் காலை எங்கள் வீட்டு மோட்டார் (போர் வெல் பம்பு) ஸ்ட்ரைக் செய்து விட்டது. துரை என்ற பிளம்பர் வந்து பார்த்து விட்டு, இரண்டு மணி நேரம் வேலை செய்து அதை சரி செய்து விட்டார்.
"துரை, எவ்வளவு கொடுக்கணும்? "
" உங்கள் இஷ்டம் சார், நீங்க கொடுப்பதைக் கொடுங்க. "
"சே அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, வேலை செய்பவர் தான் கூலி கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். சொல்லுங்க எவ்வளவு தரணும்?"
"சரி ஒரு ஐம்பது ரூபாய் குடுங்க."
எனக்கு மூச்சே நின்று போய் விட்டது. இவ்வளவு அப்பாவியாக இருக்கிறாரே இந்த ஆள்! அவனவன் என்ன வேலை செய்தாலும் முன்னூறு, நானூறு என்று அடித்து வாங்குகிறார்கள். நானே இவருக்கு நானூறு தர ரெடியா இருந்தது எனக்கு மட்டும் தான் தெரியும். சரி, ஒரு நூறு நமக்கும் ஆதாயமாக இருக்கட்டும் என்று முன்னூறு ரூபாயை எடுத்து நீட்டினேன்.
நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் போங்கள். துரை நூறு ரூபாய்க்கு மேல் வாங்கிக் கொள்ள மறுத்து, தயக்கத்துடன் நூறு ரூபாயைப் பெற்றுக் கொண்டு சென்றார். இரண்டு நாளைக்கு முன்னால் நடந்த ஆச்சரியம் இது.
நொண்டிச் சாக்கு சொல்லி கலர் டீவி, ஒரு ரூபாய் அரிசி என்று வாங்குபவர்களுக்கு மத்தியில் துரை போன்ற அசாதாரணங்கள் இருப்பது ஒரு சந்தோஷம். வேறு என்ன சொல்ல?
