முத்து
ரஞ்சனி நாராயணன்
“அம்மா! இந்தாங்க, வீட்டுக்கு க்ருகப்ரவேசம் செய்ப்போறோம். நீங்க கண்டிப்பா பையன், மருமகளை அளைச்சுகிட்டு வந்துடுங்க! பாப்பாவையும் கூட்டுகிட்டு வாங்க!’
முத்து ரொம்பவும் அருமையாக எங்களையெல்லாம்
அழைத்தார். ‘அந்த இனிவிடேசன் மொத பக்கத்துல படம் இருக்கு பாருங்க. அதுதான் நம்ம வீடு.’
அழைப்பிதழின் முதல் பக்கத்தைப்
பார்த்தேன். நாலு பக்க அழைப்பிதழ். அடுக்கு மாடிக் கட்டிடம் தான் இருந்தது முதல் பக்கத்தில்.
“ஃபிளாட்டா.....?” என்றேன்.
“இல்லம்மா... மூணு மாடி கட்டியிருக்கேன்.
கீழ பேஸ்மென்டு கார் பார்க்கிங். முதல் மாடில நானும் என் பொஞ்சாதியும். இரண்டாவது மாடில
முதல் பையன். மூணாவது மாடில இரண்டாவது பையன். அதுக்கும் மேல இப்போதைக்கு மொட்ட மாடிதான்.
அதுலேயும் ரெண்டு ரூம்பு போட்டுட்டுட்டா பொண்ணு மாப்ள வந்து போக சௌகரியமா இருக்கும்....”
முத்து பேசப்பேச வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
முத்து எங்கள் வீட்டு ஆஸ்தான தச்சர்.
நாங்கள் முதல் முதலில் ஒரு தொழிற்சாலை ஆரம்பித்த போது அறிமுகம் ஆனவர். நீளச் செவ்வகமாக
இருந்த அந்த இடத்தை கச்சிதமான தனது தச்சு வேலையால் ஒரு தொழிற்சாலையாக மாற்றியவர். என்
கணவர் என்ன சொன்னாலும் ‘அப்படியே பண்ணிடலாம் சார்’ என்பார். அவருக்கு மாற்றுக் கருத்து
இருந்தால் உடனே ‘அம்மாவ ஒரு வார்த்தை கேட்டுடலாங்க சார்!’ என்பார்.
முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை.
ஏதோ ஒரு மரியாதை என்று நினைத்தேன். ஒருநாள் அதற்கு விடையும் தெரிந்தது.
அன்று எங்கள் தொழிற்சாலையில் வேலை
செய்வதற்காக வந்திருந்த பெண்களை நேர்முகம் பார்த்துக் கொண்டிருந்தேன். என் கணவரும்
முத்துவும் இயந்திரங்களை வைக்க மேஜைகள், வேலை செய்பவர்கள் உட்கார நாற்காலிகள், அவர்களது
உடைமைகளை வைக்க இடம், சாப்பிடுவதற்கு இடம், என் கணவர் உட்காருமிடம் இவற்றை எப்படி,
எங்கு வைப்பது என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
‘அம்மாவ ஒரு வார்த்தை கேட்டுடலாங்க
சார்!’ என்றவாறே முத்து என்னிடம் வந்து, ‘கொஞ்சம் இந்தப் பக்கம் வாங்கம்மா,’ என்று
அந்தக் கூடத்தின் வாசல் பக்கம் அழைத்துக் கொண்டு போனார்.
‘ஏம்மா! இங்க சின்னதா ஒரு மரத் தடுப்பு போட்டு ஒரு டேபிள் சேர் போட்டுட்டா, நீங்களும் ஐயாவும் உட்கார்ந்து கொள்ள தோதாக இருக்கும். அங்கேயே மதியம் சாப்பிடலாம். என்ன சொல்றீங்க?’ என்றார்.
இதுவரை என் கணவரின் காதிலும் படும்படி
பேசியவர் குரலைத் தழைத்துக் கொண்டு.
‘ஐயா தன்னோட கண் பார்வையிலேயே
அந்த பொண்ணுங்க வேலை செய்யணும் தடுப்பு எதுவும் வேணாம்னு சொல்றாரும்மா. நல்லா இருக்காதும்மா
அது. வாசல் பக்கமா ஒரு மரத்தடுப்பு போட்டு ஒரு ரூம்பு போட்டுட்டாக்க அதுங்க பாட்டுக்கு
அங்க வேலை செய்யுங்க. ஐயா இங்க உக்காந்துக்கலாம். நீங்க வந்தீங்கன்னா, ஒங்களுக்கும்
ஒரு ப்ரேவேசி இருக்கும்ல. என்ன சொல்றீங்க?’ பேசி முடித்துவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல்,
‘அம்மாவும் இங்க ஒரு தடுப்பு இருந்தா
நல்லாருக்கும்னு சொல்றாங்க சார்’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய்விட்டார்.
முத்து அன்று என் மதிப்பில் மிகவும்
உயர்ந்து போனார்.
அடுத்தபடியாக நாங்கள் பணஷங்கரியில்
ஒரு வீடு வாங்கியபோது இன்டீரியர் முழுக்க முத்துதான். பார்த்துப் பார்த்து செய்தார்.
சாப்பாட்டு அறையில் இரண்டு பக்கங்களிலும் நான் உட்காருவதற்கு மரத்தில் திண்ணை கட்டிக்
கொடுத்தார். எங்கள் பூஜை அலமாரி கண்ணாடிக் கதவில் இன்றும் திருவேங்கடமுடையான் முத்துவின்
கைத்திறமையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். 20 வருடங்கள் ஆகிவிட்டது அந்த வீடு வாங்கி.
இன்றுவரை அலமாரிகளும், கதவுகளும் ஜம்மென்று இருக்கின்றன.
முத்து போட்ட (beeding) இன் மகிமை.
முத்துவின் பாஷையில் ‘பீடிங்(peeding)’
ஒருநாள் பரபரவென்று வந்தார் முத்து.
‘சார்! ரஜனிகாந்த்தோட அண்ணா வீட்டில வேலை வந்திருக்கிறது, சார்!’ என்றார் மிகுந்த சந்தோஷத்துடன்.
முத்து எங்கள் தொழிற்சாலை அருகில்
தான் இருந்தார். போக வர என் கணவருடன் பேசிவிட்டுப் போவார்.
அவரைப் பார்க்கும் போதெல்லாம்
என் கணவர், ‘முத்து, ரஜனிகாந்தை பாத்தீங்களா?’ என்று கேட்பார்.
அப்புறம் ரொம்பவும் பிசியாகிவிட்டார்
முத்து. யாராவது அவரது கைத்திறமையைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால் எங்கள் வீட்டுக்கு
அழைத்து வந்து, தான் வடிவமைத்த சமையலறையை மிகவும் பெருமையுடன் காண்பிப்பார்.
என் கணவர் அவர்களிடம், ‘முத்து
கொஞ்சம் அதிகமாகத்தான் ரேட் சொல்லுவார். ஆனால் வேலை பிரமாதமாக இருக்கும்.’ என்பார்.
‘சார்! நான் அதிகமால்லாம் கேட்கறதில்லை,
சார்!’ என்று முத்து ஏகத்துக்கு நெளிவார். அடிக்கடி நடக்கும் இந்த நாடகத்தை நாங்கள்
மிகவும் ரசிப்போம். நிறைய இடங்களுக்கு முத்துவை நாங்கள் சிபாரிசு செய்தோம்.
என் பெண்ணின் திருமணத்திற்கு இரண்டு
பெரிய மணைகள் செய்து அதற்கு தன் மனைவி கையால் அழகான கோலமும் போட்டுக் கொடுத்தார்.
மிகுந்த திறமைசாலி முத்து. இரண்டு
பையன்கள், ஒரு பெண். முதல் பையன். முத்துவின் தொழிலைச் செய்து வருகிறான். இன்னொருவன்
வேறு வேலையில் சேர்ந்து விட்டான். பெண்ணுக்கும், முதல் பிள்ளைக்கும் கல்யாணம் செய்து
வைத்து பேரன் பேத்திகள் எடுத்து முத்து தாத்தாவும் ஆகிவிட்டார்.
===================================================================================
நானும் நண்பனுமாக ஊட்டி போய் பல இயற்கைக் காட்சிகளை நாங்களும் நின்று கொண்டு படம் பிடித்துக் கொண்டு வந்தோம். கலர் பிலிம் என்பதால் அதை சென்னைக்கு டெவலப் செய்வதற்காக அனுப்பி வைத்தேன். தினம் தினம் ஆவலோடு காத்திருந்த போது ஒருநாள் சென்னை ஸ்டுடியோவில் இருந்து எனக்கு பதிவுத் தபால் வந்தது. பிரித்துப் பார்த்தால் சந்தோஷப்படுவதா வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை. நாங்கள் அனுப்பி வைத்த ஃபிலிம் டெவலப் செய்து அந்தப் பிரதிகளை அனுப்பாமல், பதிலாக யாரோ ஒருவர் மலம்புழா அணைப் பகுதியில் பிரமாதமாக எடுத்திருந்த அற்புதமான படங்களின் தொகுதி எனக்கு வந்திருந்தது. விலாசம் மாறி அனுப்பி வைத்து விட்டார்கள். அதை நன்றாக ரசித்துப் பார்த்த பின் , ஸ்டுடியோவுடன் தொடர்பு கொண்டு அதைத் திருப்பி அனுப்பி, எங்கள் படங்களை வாங்கிக் கொண்டோம். டிரங்குப் பெட்டியில் மழை நீர் அழித்த படங்களில் அவையும் இருந்தன. எல்லாவற்றுக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!