Ungodly utterance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Ungodly utterance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.7.12

நிக்காதே, ஓடு!

       
'எங்களி'ன் ரத்தக் காட்டேரிப் பதிவுக்கு பதில் பதிவாக ஒரு அற்புதப் பதிவு தந்த அப்பாதுரையின் பதிவில் வந்த குறி சொல்பவர் பற்றிய வரிகள் எனக்கு எங்கள் வீட்டு அனுபவங்கள் சிலவற்றை நினைவு படுத்தின.
          
(பெரிதாக எதுவும் அந்தப் பதிவுகளின் தொடர்ச்சியாக இதை எதிர்பார்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!)
              
இது சிறுவயதில் பார்த்த, அனுபவித்த ஒரு அனுபவத்தின் பகிர்வு!
               
உறவினர் ஒருவர் இருந்தார். அவரும் அவர் மனைவியும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தாலும் இவருக்கு  ஒரு பழக்கம் இருந்தது. குறி சொல்வார். காந்திமதி அம்மன் என்று ஞாபகம், அவர் (அது?) வந்து அவர் நாக்கிலிருந்து பேசுவதாகச் சொல்வார்! ஆனால் அவர் அந்த பொழுதில் சொல்லும் சில வார்த்தைகளை அம்மன் சொல்லுமா என்று சந்தேகம் வரும்.
 
              
"கெட்ட தேவதை குறுக்க குறுக்க வருதுடா.... அதைத் துரத்த வேண்டி அப்படிச் சொல்ல வேண்டியிருக்கு" என்பார்.
              
வெள்ளி மாலைகளிலும் ஞாயிறு மாலைகளிலும் சாதாரணமாகக் குறி சொல்வார். அப்புறம் விரும்பும் நேரத்திலும் குறி சொல்வார். வெற்றிலை பாக்கு, பழம், ஐந்து ரூபாயோ பத்து ரூபாயோ தட்சிணையுடன் கஸ்டமர்கள் வந்ததும் (இவரும் அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வந்திருப்பார்) குளித்து விட்டோ அல்லது முகம் கழுவி விட்டோ வந்து சுவாமி முன் அமர்வார். விபூதியை எடுத்து நெற்றி பூரா அப்பிக் கொள்வார். 

கண்கள் மூடியிருக்க நிமிடங்கள் கரையும். போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கும் அவர் வீட்டுக்கு சந்தைக்குப் போகும் நாட்களில் போய் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் மாட்டிக் கொண்டதுண்டு. இது மாதிரி சமயங்களில் அமைதி காக்க வேண்டும். கஸ்டமர்கள் எதிரில் பயபக்தியுடன் அமர்ந்திருப்பார்கள். அவரின் திருமதி சமயலறையில் வேலையாய் இருப்பார். அவர்களின் செல்வங்கள் இப்படி ஒரு காட்சியே நடக்கவில்லை போல தங்கள் ஹோம்வொர்க்கில் கவனமாக இருப்பார்கள்.
                       
நிமிடங்கள் கரைந்த பின் கண்மூடியிருக்கும் அவர் வாயால் 'உஸ்.... உஸ்..ஸ்......' என்று சத்தம் செய்தபடியே தலையை இடம் வலமாக ஆட்டத் தொடங்குவார். மெல்ல மெல்லப் பேசத் தொடங்குவார். 'அதானே... இதானே'  என்று கேள்விகள் கேட்டு பதில்கள் சொல்லி கடைசியாக எல்லாவற்றுக்கும் ஒரு பரிகாரம் சொல்வார். சொல்லி முடித்ததும் அவ்வளவுதான் எழுந்து போ என்று சொல்லி கையை, 'படார்' என்று சத்தம் செய்வார். கண்கள் மூடியபடியே இருக்க, விபூதியை அள்ளி வாயில் போட்டுக் கொள்ளுவார். முன்னும் பின்னுமாக ஆடி, ஒரு வழியாக 'ஆச்' என்ற கூச்சலுடன் கண் திறப்பார். சுவாமி மலையேறி விட்டதாம்!
 
விபூதிக்குத்தான் நிறைய செலவு. விபூதியை அள்ளி எதிரே அமர்ந்திருக்கும் ஆள்  கையில் தருவார். சைகையிலேயே நெற்றியில் பூசிக் கொள்ளச் சொல்வார். இன்னும் கொஞ்சம் தந்து தொண்டையில், அப்புறம் கையில், அப்புறம் வயிற்றில்.... அப்புறம் கொஞ்சம் கொடுத்து வாயில் போட்டுக் கொள்ளச் சொல்வார். அப்புறம் கொஞ்சம் விபூதி எடுத்து தலையில் வைத்து ஷாம்பூ தேய்ப்பது போல மெல்லத் தேய்த்துக் கையை எடுக்காமல் கழுத்து முதுகு என்று வந்து கால் பக்கம் வந்து கையை உதறுவார். இப்படிச் செய்யும் போதெல்லாம் அவர் கண்கள் முக்கால் வாசி மூடியே இருக்கும். வாய் அந்தக் காலத் தமிழ்ப் படங்களில் பாடல் காட்சிகளில் ஹீரோ பாடும்போது ஹீரோயின்கள் ஒரு மாதிரி மூச்சுக்கு அல்லாடுவது போல வாயைத் திறந்து திறந்து மூடுவார்களே அபபடி மெல்லச் செய்து கொண்டிருப்பார்!
                 
சில நேரங்களில் கொஞ்ச நேரக் கண் மூடல், தலையாட்டலுக்குப் பின் 'அம்மன் வரவில்லை, அருள் கிடைக்கவில்லை' என்று தோல்வி அறிவிப்பு ஒன்று கொடுத்து ஒரிஜினாலிட்டி டச் கொடுத்ததும் உண்டு!
             
நினைத்த நேரத்தில் அவரால் அம்மனை வரவழைக்க முடிந்தது. சில சமயங்களில் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கும் சமயங்களிலும் கேட்காமலேயே அம்மன் அவர் மீது ஆஜராகி விடுவதும் உண்டு. எங்களுக்குத்தான் தொல்லை. அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்த நேரம் அது. குறி சொல்லி விட்டு கண்கள் மூடியபடியே விபூதி சாப்பிட்டு, ஒரு சொம்பு தண்ணீரும் கேட்டு வாங்கிக் குடிப்பார். ("நல்ல பெரிய சொம்புல தண்ணி எடுத்து வா") குறி சொல்வதற்கு நடுவிலேயே சில நேரம் அமைதியாக இருப்பார். தலையை இடம் வலமாக வேகமாக ஆட்டி மறுப்பார். சைடில் பார்த்து "சீ போ நாயே..... ஓடிப்போ.... தள்ளிப்போ...." என்பார். "ஒ.....ளி...ஒ...ளி (கெட்ட வார்த்தை!)" என்பார். இதைத்தான் 'அம்மன் இப்படிச் சொல்லுமா' என்று கேட்போம். அதில் அவர் மனைவிக்குக் கோபம் வரும். அருகில் வந்து குறி சொல்ல விடாமல் துர்த் தேவதைகள் தடுக்குமாம். அவற்றை விரட்டுகிறாராம். அமைதியாக இருக்கும் நேரத்தில் நாமும் அமைதி காக்க வேண்டும். பொறுமை இன்றி எதாவது பேசி விட்டால் அம்மனுக்குக் கெட்ட கோபம் வந்து விடும்.
                   
இதில் எங்களுக்கு என்ன தொல்லை என்றால் இவர் சொல்லும் கன்னா பின்னா பரிகாரங்களை நிறைவேற்றும் பொறுப்பு எங்களுக்குத்தானே....
                  
உதாரணத்துக்கு ஒன்று.
 
                     


"சர்க்கரைப் பொங்கல் ரெண்டு டம்ப்ளர் அளவுக்கு செஞ்சி எவர்சில்வர் பாத்திரத்தில் வைத்து எடுத்துப் போ.... துணிப்பை வேண்டாம்... பிளாஸ்டிக் பேக் அல்லது வொயர் கூடை பரவாயில்லை. ரெண்டு எலுமிச்சம் பழம் எடுத்துக்கோ. ஒண்ணை வெட்டி அதுல குங்குமம் தடவி 'பேக்'ல போட்டுக்கோ... மீனாட்சி அம்மன் கோவில் போய் அம்மன் சன்னதிக்கு வெளில... எங்க... அம்மன் சன்னதிக்கு வெளில....  நின்னுக்கோ... சுவாமி சன்னதி போகக் கூடாது. ஒருத்தர் சன்னதிக்குள்ள போய் அம்மனைக் கும்பிட்டு விட்டு வந்து 'பேக்'கை பார்த்துக்கணும். அடுத்தவர்கள் அப்புறம் உள்ளே போய் அம்மனைப் பார்த்து வரணும். வெளில நின்னு நல்ல பழுத்த சுமங்கலியாப் பார்த்து இந்த சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் மாதிரி ஒரு ஒரு ஸ்பூன் குடு. மூணு கன்னியாப் பொண்ணுக்கு ரெண்டு ரெண்டு ஸ்பூன் குடு. அவங்க சாப்பிட்டதும் எலுமிச்சம் பழத்துல இருக்கற குங்குமத்தை அவர்களிடம் காட்டு. இப்படி ஒன்பது சுமங்கலிப் பொண்ணுங்களுக்கும், மூணு கன்னியாப் பொண்ணுங்களுக்கும் கொடுத்த பின் அந்த எலுமிச்சம் பழத்தை கோவிலுக்கு வெளியே தெற்கால ஒரு பாதி, வடக்கால ஒரு பாதின்னு போட்டுட்டு மீதி இருக்கற வெட்டாத எலுமிச்சம்பழத்தைப் பூ சுத்தி அம்மனுக்கு முன்னால காட்டிட்டு, எடுத்துட்டு வந்து நம்ம பூஜையறைல வைங்க... மூணு நாள் போகட்டும். அப்புறம் என்ன செய்யணும்னு சொல்றேன்"
  
பரிகாரம் ஒரே மாதிரிச் சொல்லக் கூடாது அல்லவா.... அடுத்தமுறை தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் பரிகாரம் சொல்வார். அதுவும் லேசில் செய்யக் கூடியதாய் இருக்காது. செய்யாவிட்டால் அலட்சியப் படுத்துகிறோம் என்ற கோபமும் அதனால் அப்பாவுக்குக் கோபமும் வரும். அவர்களுக்கென்ன.... நாங்கள்தானே கோவிலில் போய் அங்கு வருபவர்களின் சந்தேகப் பார்வையையும் கோபத்தையும் எதிர்கொள்ள வேண்டும்?  
                        
அய்யா... யோசித்துப் பாருங்கள்... இப்படியெல்லாம் கொடுத்தால் வாங்குவார்களா... நம்மை உண்டு இல்லை என்று செய்து விட மாட்டார்களா.... எங்கள் மீது அவருக்கு ஏதோ தீராத கோபம் இருந்தது என்று எங்களுக்குத் தோன்றும். கைரேகை ஜோசியம் எல்லாம் பார்ப்பார். அப்பா அம்மாவை யார் வைத்துக் காப்பாற்றுவார்கள், யார் சுயநலம் என்றெல்லாம் எங்களைப் பற்றி அவர் அப்போது சொல்லிய அருள்வாக்குகள் ஒன்றும் பலிக்கவில்லை என்று இன்று தெரிகிறது!
                          
அண்ணனின் கல்யாணத்திலும் அவருக்கு அம்மன் வந்ததே பார்க்கணும். ஓட முடியாதது அண்ணன்தான். நாங்கள் எல்லாம் ஓடி விட்டோம். தெரியாத ஊரில் யார் அய்யா 'பரிகாரம்' செய்வது!