மிகப் பழங்காலத்தில் - சென்னையில் சாலைகளில் ஒரு புரட்சிகரமான மாற்றம் செய்யப்பட்டது. சாலைப் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் அகற்றப்பட்டன. அப்போ என் நண்பர் வீட்டுக்கு வந்த தென்மாவட்ட நண்பர் ஒருவர், 'எக்மோர்ல - சாலை எங்கே இருக்குன்னு தெரியுமா?' என்று கேட்டார். நான், "எல்லா இடத்திலும் இருக்கு. ஏன்?" என்று கேட்டேன். "விளையாடாதீங்க சார். சாலை எங்கே இருக்கு? அங்கே ஒரு இண்டர்வியூ" என்றார். நான், "ஆமாம், சாலையில விளையாடக்கூடாது - வண்டி வந்து மோதிடும்" என்றேன். பிறகு நாங்க எக்மோர் போயி தேடிக் கண்டுபிடித்தோம் - " டாக்டர் நாயர் சாலை " வெறும் "சாலை" என்ற பெயருடன் இருந்தது. இப்போ அந்த சாலைக்கு என்ன பெயர்?
சில நாட்களுக்கு முன் வானொலியில் ஒரு பாடல் நிகழ்ச்சி அறிவிக்கப் படும்போது " பாடியவர் எம். எம். தண்டபாணி " என்று அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்கள். எம். எம். தண்டபாணி தேசிகர் என்ற பெரும் கலைஞர் மிகப் பிரபலாமானவர். அவரை ஏதோ அவமதிப்புச் செய்தாற்போல அவரு டைய பெயர் குறைக்கப் பட்டத்தாக எனக்குத் தோன்றியது.
ஜாதிப் பெயரை வெறும் பலகைகளிருந்து நீக்கி மட்டுமே புரட்சி எதுவும் வந்து விடாது என்பது கிருஷ்ணமாச்சாரி சாலை கிருஷ்ணமா சாலை என்று சிதைக்கப் பட்ட போதே நமக்குத் தெரிய வந்தது. ராஜ கோபாலாச்சாரி ராஜகோபாலா என்று சுருக்கப் பட்டால் என்னவோ விளித்தல் விகாரமாக ஆகிவிடும். ரா. பி. சேது, நாமக்கல் ராமலிங்கம், எஸ். வையாபுரி, மகா வித்துவான் மீனாக்ஷி சுந்தரம் என்றெல்லாம் பெயரைச் சொன்னால் நன்றாக இருக்குமா?
மாறாக கமல ஹாசன் அய்யங்கார், (எழுத்தாளர் சுஜாதா ) ரங்கராஜன் அய்யங்கார் மதுரை சோமுப்பிள்ளை இதெல்லாம் எடுபடுமா? அரியக்குடி ராமனுஜம் பாடிய பாடல் என்று சொன்னால் என்னவோ போல இருக்கிறது இல்லையா? பெயரில் அய்யர், அய்யங்கார், முதலியார் செட்டியார் என்று வால்கள் ஒட்டிக் கொண்டு அறியப் பட்டவர்களை அப்படியே குறிப்பிடுவதுதான் பொருத்தம், மற்றும் மரியாதை. உலகம் சுற்றும் தமிழர் என்று பிரபலமான A.K.செட்டியாரை AK dash dash என்றோ A.கருப்பன் என்றோ (அவர் பெயர் கருப்பன் செட்டியார்) குறிப்பிடமுடியுமா? ஆர். எம். அழகப்ப செட்டியார் தன கையெழுத்தை ராம. அழகப்பன் என்றுதான் போடுவார். எனினும் அவர் பெயரை முழுமையாகக் குறிப்பிடுவதில் தொனிக்கும் மரியாதை முக்கியமானது அல்லவா? சாதிக் குறிப்பீடு வேண்டாம் தான். விரும்பத் தக்கது இல்லைதான். இப்போதைய தலைமுறை அதை நன்றாக கடைப் பிடித்து வருகிறது. மிக்க மகிழ்ச்சி. ஆனால் வரலாற்று ரீதியாக ஒருவரை சுட்டும் பொழுது அவர் எந்தப் பெயரில் வழங்கி வந்தாரோ அந்தப் பெயரிலேயே குறிப்பிடுவது நல்லதுதானே. அதுவே அவர் பெயர். ப. சிதம்பரம் செட்டியார், வாசன் மூப்பனார் என்றெல்லாம் குறிப்பிட்டால் வேடிக்கையாக இருக்கும். என்றாலும், ராஜா சர் அண்ணாமலை செட்டியார் என்பதில் உள்ள கம்பீரம் விட்டுக் கொடுக்கப் பட என்ன நிர்ப்பந்தம் வந்து விட்டது?
வட புலத்தில் வாழும் சில தமிழர்கள் தங்கள் சாதி ஒட்டு மதிக்கப் படுவதன் காரணமாக வைத்துக் கொண்டு விளங்குவதாகத் தெரிகிறது. சாதி வித்தியாசம் பாராட்டி அடித்துக் கொள்ளாதவரை அவரவர்களுக்கு விருப்பமான ஒட்டுகள் இருந்து விட்டுப் போகட்டுமே! ஒரு வருக்கு பிடிக்கிறது என்பதால் என்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டால் என்ன? ஜாதிப் பெயரை யாராவது சொல்லிவிட்டால் குற்றம் என்று கருதப் படுகிறதோ அதை பெரிய எழுத்தில் போட்டு, பெயரோடு ஒட்ட வைத்துக் கொள்ளும் சில தலைவர்கள் பெயரையும் நம்மால் பார்க்க முடிகிறது. சாதிப் பெயர்களை தேவை இருக்கும் போது குறிப்பதில் பெரிய தவறோ ஆபத்தோ இல்லை என்றே தோன்றுகிறது.மீண்டும் சமுதாய சீர்கேடுகள் நுழைந்து விடும் என்று அஞ்சும் அளவுக்கு இதில் ஆபத்து இல்லை என்றே எண்ணுகிறேன்.