சவடால் கதைப் போட்டி. எங்கள் 2K+11.
புங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னன் புங்கவர்மன். இளைஞன். இன்னும் ஒரு திருமணம் கூட செய்துகொள்ளவில்லை. வீரத்தை வளர்த்துக் கொள்வதற்காக அடிக்கடி வேட்டையாட காட்டுக்குச் சென்றுவிடுவான். நாட்டிலே இருந்தால், யாராவது புலவர்கள் தேடி வந்து, அவனை 'இந்திரன், சந்திரன்' என்று அனாவசியமாகப் புகழ்ந்து (காரே பூரே என்று) கவிதை பாடி, கஜானாவை காலி செய்ய முற்படுவார்கள் என்று அவன் நினைத்ததும் ஒரு காரணம் - அவனுடைய 'வேட்டையாடு விளையாடு' மன நிலைக்கு.

'ஆமாம். இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆணை இடுவதாம், ஆணை! இதுவரை இட்ட ஆணைகளை பூனை அளவுக்குக் கூட செய்து முடித்ததில்லை' என்று மனதினுள் நினைத்தவாறு, "அரண்மனை ஜோசியரைக் கூப்பிடு!" என்றான் புங்கவர்மன்.
'ஆமாம். இது பெரிய ஆணை! கையை இரண்டு தடவை தட்டியிருந்தால், இரண்டு மாத சம்பள பாக்கி இருக்கின்ற அந்த பக்கி ஜோசியர் இடது அறையிலிருந்து ஓடி வந்திருப்பார். ஒரு தடவை கை தட்டியதால், ஒரு மாத சம்பள பாக்கி இருக்கின்ற நான் ஓடி வந்தேன்.' என்று நினைத்தவாறு, "சரி மன்னா " என்று கூறியவாறு ஓடினான், ப வ ஆ கா.
இடது பக்க அறை வாயிலுக்குச் சென்று, கதவைத் தட்ட கை எடுத்தவனைத் திகைக்க வைத்தார், அரண்மனை ஜோஸ்யர், கதவைப் 'படார்' என்று திறந்து. காவலனைப் பார்த்து, வாயெல்லாம் பல்லாகச் சிரித்தபடி, 'அரசர் உன் சம்பள பாக்கியைக் கொடுத்துவிட்டாரா? ஒரு தடவை மட்டும் கை தட்டி, உன்னை அழைத்தாரே! என்னையும் கூப்பிட்டாரா?" என்று கேட்டார்.
காவலன் சோகமாக, "ஹூம் அதெல்லாம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. உங்களுக்காவது கிடைத்தால் சந்தோஷம். மன்னர் மீன ராசி. அதனால்தானோ என்னவோ கழுவின மீனில் நழுவின மீனாக எப்பவும் நழுவிவிடுகிறார். நம்ம ரெண்டு பேரும் ஒரே ராசி. நீங்க சமயம் பார்த்து, நம்ம ராசிக்கு, 'பண வரவு' என்று என்றைக்காவது மன்னர் காதில் போட்டு வையுங்க சாமி. அவரு மனம் இரங்கி நம்ம சம்பள பாக்கியைக் கொடுக்கச் சொல்லி, கஜானா அதிகாரிக்கு உத்தரவு கொடுக்கின்றாரா என்று பார்ப்போம்" என்றான்.
இன்றைக்கு மன்னருக்கு நிறைய ஐஸ் வைக்க வேண்டும், எப்படியாவது சம்பள பாக்கியைக் கறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன், உள்ளே நுழைந்த ஜோசியரிடம், "இன்றைக்கு என்னுடைய ராசிக்கு என்ன பலன்?" என்று கேட்டான் புங்கவர்மன்.
உடனே ஆர்வத்துடன், "கதிரவன் எழுந்த காலையில், கலைவாணி அருள் மழையில், நிலை யாதென்று ... " என்று சற்றேறக் குறைய முகாரி ராகத்தில் பாடத் துவங்கிய ஜோஸ்யரைக் கையமர்த்தி, "இந்த பில்ட் அப் எல்லாம் வேண்டாம். சுருக்கமாக இரண்டு வார்த்தைகளில் பலன் சொல்லிவிட்டுப் போங்க" என்றான் மன்னன.
"மன்னா மீன ராசிக்கு இன்று இனிய அனுபவங்கள்" என்றார் ஜோஸ்யர். தொடர்ந்து "மன்னா ... என்னுடைய ராசிக்கு ப..."
அதை எல்லாம் கேட்டுக் கொண்டு அங்கே நின்று கொண்டிருக்கவில்லை புங்கவர்மன். தன்னுடைய வேட்டை உடைகளை ஒரு கையிலும், வில் அம்புகளை மறு கையிலும் எடுத்துக் கொண்டு குதிரை மீது தாவி ஏறிப் பறந்துவிட்டான்.
*** *** ***
காட்டிலே, வேட்டைக்கு, உடன் வந்த காவலர்கள் பறித்து வந்த பழங்களை காலி செய்தபோது, 'இதுதான் இனிய அனுபவமா?' என்று நினைத்துக் கொண்டான். பிறகு, 'இது வேட்டைக்கு வரும்பொழுதெல்லாம் நிகழ்வது ஆயிற்றே! எனவே, இது இல்லை' என்று நினைத்துக் கொண்டான்.
அதன் பிறகு, தான் அம்பு எய்து கொன்ற நாலு கால் பிராணிகளைப் பார்த்த பொழுதெல்லாம் - 'இவைகளும் எப்பொழுதும் நடக்கின்ற அனுபவங்கள்தாமே?' என்று நினைத்துக் கொண்டான்.
மாலையில், காவலர்கள் அமைத்துக் கொடுத்த கூடாரத்தில், இனிய அனுபவம் குறித்து யோசித்தபடி இனிய தூக்கம் தூங்கினான். தவளை கத்தும் சத்தம் கேட்டு, திடீரென்று விழிப்பு வந்தது, புங்கவர்மனுக்கு. காவலர்கள் எல்லோரும் பக்கத்தில் இருந்த இரண்டு கூடாரங்களில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
புங்கவர்மனின் கூடார வாயிலில், ஒரு பொன்னிறத் தவளை! தகத்தகவென மின்னியது. 'அட இதைப் பிடித்தால் ஒரு அஞ்சு பவுனாவது தேறும் போலிருக்கே' என்று நினைத்தவாறு வில் அம்பு எடுத்தவனை ஏமாற்றி, பொன் தவளை குதித்துக் குதித்து காட்டுக்குள் சென்றது. வில் அம்பு சகிதமாக, பின் தொடர்ந்தான், புங்கவர்மன்.
காட்டினுள் நுழைந்ததும், அந்தத் தவளை ஒவ்வொரு தடவை குதித்த போதும், கொஞ்சம் கொஞ்சமாகப் பெரியதாகி, இறுதியில் அதன் முதுகு தோல் உரிந்து ஒரு பொன்னிற உடையாகி, அந்த உடையை அணிந்த ஒரு அழகிய, பொன்னிற மங்கையாக உருவெடுத்தது.
அந்தப் பொன்னிற மங்கை, புங்கவர்மனிடம் சொன்னாள்: "மன்னா உங்களிடமிருந்து எனக்கு ஓர் உதவி தேவை. அந்த உதவியை உங்களால் மட்டுமே செய்ய இயலும். நான் பக்கத்து நாட்டு இளவரசி. என் கணவனுடன் இங்கு உல்லாசப் பயணம் வந்தேன். என் கணவரை ஓர் அரக்கன் பிடித்துப் போய், இங்கிருந்து மேற்கே ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி, ஓரிடத்தில் சிறை வைத்திருக்கின்றான். அடுத்த பௌர்ணமிக்குள் அவரை மீட்டு வந்துவிட்டால் அந்த அரக்கன் எங்கள் இருவரையும் ஆசீர்வதித்து, இந்தப் பக்கம் மீண்டும் வராமல் சென்றுவிடுவான். வருகின்ற பௌர்ணமிக்குள் அவரை யாராலும் மீட்க முடியாவிட்டால், அரக்கன் என் கணவனைக் கொன்று, என்னைக் கடத்திச் சென்றுவிடுவான். மன்னா நீங்கதான் எப்பாடு பட்டாவது அவரை
(நாங்க வாங்கிய 'தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்' காகிதத்தில், இவ்வளவுதான் கதை இருந்தது. இதோடு கதை அப்ரப்டாக முடிஞ்சு போயிடுச்சு. பீச்சில் பறந்துகொண்டிருந்த துண்டு பேப்பர்களை எல்லாம் ஓடி, ஓடி காட்ச் பிடித்துத் தேடியும், தொடர்ச்சி எங்கள் கையில் கிடைக்கவில்லை. ஆனாலும் என்ன? 'எங்களுக்குத்தான் ஆயிரக் கணக்கான வாசகர்கள் இருக்கின்றார்களே. அவர்களைக் கேட்டால், இந்தக் கதையை அவர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால், எவ்வளவோ இனிய முடிவுகள் கிடைக்குமே!' என்று நினைத்தோம். பெரிய பதிவர்கள் எல்லோரும் சிறுகதைப் போட்டிகள் சிறப்பாக நடத்துகிறார்கள். எங்கள் ப்ளாக், ஏழைகளுக்கேற்ற எள்ளுருண்டையாக, ஒரு போட்டி நடத்தினால் என்ன' என்று நினைத்தோம். ஆகவே, இதோ இங்கே வெளியிட்டுவிட்டோம். சரி. போட்டி நிபந்தனைகள் எவை? )
நிபந்தனைகள் ரொம்ப சிம்பிள்:
* இந்தக் கதையின் தொடர்ச்சியை எழுதுபவர்கள், கதையை முடிக்கும் பொழுது, எழுதி முடிக்கவேண்டிய கடைசி வார்த்தை 'அவரை'
* பதிவர்கள், தங்கள் பதிவில், இந்தப் பதிவிற்கான சுட்டியைக் கொடுத்துவிட்டு, மீதிக் கதையை அவர்களுடைய வலைப் பதிவில் எழுதி முடிக்கலாம் (கடைசி வார்த்தை 'அவரை' இது இல்லாத கதைகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ள இயலாது. அந்த 'அவரை ' கதையோடு சேர்ந்து இருக்கவேண்டும். 'அதன் பிறகு அவர்கள் சுகமாக வாழ்ந்தார்கள். அவரை.' என்றெல்லாம் இருக்கக் கூடாது!)
* மீதிக் கதையில் காதல், வீரம், ஈரம், பாசம், நேசம், சோகம், மோகம், தாகம், நகைச்சுவை என்று எந்த ரசம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆபாசம் மட்டும் கண்டிப்பாகக் கூடாது.
* முடிவுப் பகுதியாக ஒரே பதிவுதான் எழுதலாம். தொடர்கதைகள் எல்லாம் எழுதக்கூடாது!
* பதிவர்கள் அவர்கள் எழுதுகின்ற கதைக்கு என்ன தலைப்பு வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால், அந்தத் தலைப்புடன், (எங்கள் சவடால் 2K+11) என்பதையும் சேர்க்கவேண்டும்.
* உங்கள் பதிவில் வெளியாகும் கதைக்குக் கிடைக்கின்ற பாராட்டுகளும் (அனானி கமெண்டுகள் நீங்கலாக) பரிசுக்குரிய கதையைத் தேர்ந்தெடுக்க உதவும். ஆனால், அது மட்டுமே கணக்கு என்பது இல்லை.
* போட்டி முடிவு தேதி 31.12.2011. அந்தத் தேதிக்குள், மீதிக் கதை வெளியிட்டு, அந்தப் பதிவின் சுட்டியை, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். பதிவு இல்லாத வாசகர்கள், மீதிக் கதையை எழுதி, அதை மேற்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம். அவற்றை 'நம்ம ஏரியா' வலைப் பதிவில் வெளியிடுவோம். அவைகளும் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
* போட்டி முடிவுகள் 2012 ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி, எங்கள் ப்ளாக் பதிவில் வெளியிடப்படும். மொத்தம் ஐந்து முதல் பரிசுகள். (ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு முதல் பரிசுக்குரிய கதையைத் தேர்ந்தெடுப்பார்). ஒவ்வொரு பரிசும் பத்தாயிரம் (பைசா) அல்லது அதன் மதிப்பு உள்ள புத்தகம்.
* வேறு ஏதாவது பாயிண்டுகள் இருந்தால், அவ்வப்போது சைடு பாரில் வெளியிடுகிறோம். அல்லது ஒரு பதிவாக வெளியிடுகிறோம்.
:: ஆசிரியர்கள் ::
:: எங்கள் ப்ளாக் ::