வியாழன், 3 நவம்பர், 2011

தங்கத் தவளை பெண்ணே!


சவடால் கதைப் போட்டி. எங்கள் 2K+11. 

புங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னன் புங்கவர்மன். இளைஞன். இன்னும் ஒரு திருமணம் கூட செய்துகொள்ளவில்லை. வீரத்தை வளர்த்துக் கொள்வதற்காக அடிக்கடி வேட்டையாட காட்டுக்குச் சென்றுவிடுவான். நாட்டிலே இருந்தால், யாராவது புலவர்கள் தேடி வந்து, அவனை 'இந்திரன், சந்திரன்' என்று அனாவசியமாகப் புகழ்ந்து (காரே பூரே என்று) கவிதை பாடி, கஜானாவை காலி செய்ய முற்படுவார்கள் என்று அவன் நினைத்ததும் ஒரு காரணம் - அவனுடைய 'வேட்டையாடு விளையாடு' மன நிலைக்கு. 

                 

               
ஒரு நாள் காலையில் எழுந்தவுடன், இரண்டு கைகளையும் நேராக மேலே தூக்கி, உப்பரிகைப் பக்கம் பார்த்து, கண்களை இறுக மூடியபடி, 'ஆவ்வ்...' என்று பெரிய சத்தம் எழுப்பியபடி, கொட்டாவி விட்டு, சோம்பல் முறித்தான், புங்கவர்மன். பிறகு, இரண்டு கைகளையும் சேர்த்து, ஒரு தட்டு தட்டி ஓசை எழுப்பி, "ஏய் யாரங்கே?" என்றான். படுக்கையறைக்கு வெளியே, மூடியிருந்த கதவுக்கு அருகே பல் குத்திக் கொண்டிருந்த பச்சை வண்ண ஆடை அணிந்த காவலன், கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்து, "ஆணை இடுங்கள் மன்னா" என்றான்.  

'ஆமாம். இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆணை இடுவதாம், ஆணை! இதுவரை இட்ட ஆணைகளை பூனை அளவுக்குக் கூட செய்து முடித்ததில்லை' என்று மனதினுள் நினைத்தவாறு, "அரண்மனை ஜோசியரைக் கூப்பிடு!" என்றான் புங்கவர்மன். 

'ஆமாம். இது பெரிய ஆணை! கையை இரண்டு தடவை தட்டியிருந்தால், இரண்டு மாத சம்பள பாக்கி இருக்கின்ற அந்த பக்கி ஜோசியர் இடது அறையிலிருந்து ஓடி வந்திருப்பார். ஒரு தடவை கை தட்டியதால், ஒரு மாத சம்பள பாக்கி இருக்கின்ற நான் ஓடி வந்தேன்.' என்று நினைத்தவாறு, "சரி மன்னா " என்று கூறியவாறு ஓடினான், ப வ ஆ கா.  

இடது பக்க அறை வாயிலுக்குச் சென்று, கதவைத் தட்ட கை எடுத்தவனைத் திகைக்க வைத்தார், அரண்மனை ஜோஸ்யர், கதவைப் 'படார்' என்று திறந்து. காவலனைப் பார்த்து, வாயெல்லாம் பல்லாகச் சிரித்தபடி, 'அரசர் உன் சம்பள பாக்கியைக் கொடுத்துவிட்டாரா? ஒரு தடவை மட்டும் கை தட்டி, உன்னை அழைத்தாரே! என்னையும் கூப்பிட்டாரா?" என்று கேட்டார். 

காவலன் சோகமாக, "ஹூம் அதெல்லாம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. உங்களுக்காவது கிடைத்தால் சந்தோஷம். மன்னர் மீன ராசி. அதனால்தானோ என்னவோ கழுவின மீனில் நழுவின மீனாக எப்பவும் நழுவிவிடுகிறார். நம்ம ரெண்டு பேரும் ஒரே ராசி. நீங்க சமயம் பார்த்து, நம்ம ராசிக்கு, 'பண வரவு' என்று என்றைக்காவது மன்னர் காதில் போட்டு வையுங்க சாமி. அவரு மனம் இரங்கி நம்ம சம்பள பாக்கியைக் கொடுக்கச் சொல்லி, கஜானா அதிகாரிக்கு உத்தரவு கொடுக்கின்றாரா என்று பார்ப்போம்" என்றான். 

இன்றைக்கு மன்னருக்கு நிறைய ஐஸ் வைக்க வேண்டும், எப்படியாவது சம்பள பாக்கியைக் கறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன், உள்ளே நுழைந்த ஜோசியரிடம், "இன்றைக்கு என்னுடைய ராசிக்கு என்ன பலன்?" என்று கேட்டான் புங்கவர்மன். 

உடனே ஆர்வத்துடன், "கதிரவன் எழுந்த காலையில், கலைவாணி அருள் மழையில், நிலை யாதென்று ... " என்று சற்றேறக் குறைய முகாரி ராகத்தில் பாடத் துவங்கிய ஜோஸ்யரைக் கையமர்த்தி, "இந்த பில்ட் அப் எல்லாம் வேண்டாம். சுருக்கமாக இரண்டு வார்த்தைகளில் பலன் சொல்லிவிட்டுப் போங்க" என்றான் மன்னன.

"மன்னா மீன ராசிக்கு இன்று இனிய அனுபவங்கள்" என்றார் ஜோஸ்யர். தொடர்ந்து "மன்னா ... என்னுடைய ராசிக்கு ப..." 

அதை எல்லாம் கேட்டுக் கொண்டு அங்கே நின்று கொண்டிருக்கவில்லை புங்கவர்மன். தன்னுடைய வேட்டை உடைகளை ஒரு கையிலும், வில் அம்புகளை மறு கையிலும் எடுத்துக் கொண்டு குதிரை மீது தாவி ஏறிப் பறந்துவிட்டான். 

*** *** *** 
காட்டிலே, வேட்டைக்கு, உடன் வந்த காவலர்கள் பறித்து வந்த பழங்களை காலி செய்தபோது, 'இதுதான் இனிய அனுபவமா?' என்று நினைத்துக் கொண்டான். பிறகு, 'இது வேட்டைக்கு வரும்பொழுதெல்லாம் நிகழ்வது ஆயிற்றே! எனவே, இது இல்லை' என்று நினைத்துக் கொண்டான். 

அதன் பிறகு, தான் அம்பு எய்து கொன்ற நாலு கால் பிராணிகளைப் பார்த்த பொழுதெல்லாம் - 'இவைகளும் எப்பொழுதும் நடக்கின்ற அனுபவங்கள்தாமே?' என்று நினைத்துக் கொண்டான். 

மாலையில், காவலர்கள் அமைத்துக் கொடுத்த கூடாரத்தில், இனிய அனுபவம் குறித்து யோசித்தபடி இனிய தூக்கம் தூங்கினான். தவளை கத்தும் சத்தம் கேட்டு, திடீரென்று விழிப்பு வந்தது, புங்கவர்மனுக்கு. காவலர்கள் எல்லோரும் பக்கத்தில் இருந்த இரண்டு கூடாரங்களில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். 
   
புங்கவர்மனின் கூடார வாயிலில், ஒரு பொன்னிறத் தவளை! தகத்தகவென மின்னியது. 'அட இதைப் பிடித்தால் ஒரு அஞ்சு பவுனாவது தேறும் போலிருக்கே' என்று நினைத்தவாறு வில் அம்பு எடுத்தவனை ஏமாற்றி, பொன் தவளை குதித்துக் குதித்து காட்டுக்குள் சென்றது. வில் அம்பு சகிதமாக, பின் தொடர்ந்தான், புங்கவர்மன். 
  
காட்டினுள் நுழைந்ததும், அந்தத் தவளை ஒவ்வொரு தடவை குதித்த போதும், கொஞ்சம் கொஞ்சமாகப் பெரியதாகி, இறுதியில் அதன் முதுகு தோல் உரிந்து ஒரு பொன்னிற உடையாகி, அந்த உடையை அணிந்த ஒரு அழகிய, பொன்னிற மங்கையாக உருவெடுத்தது. 
  
அந்தப் பொன்னிற மங்கை, புங்கவர்மனிடம் சொன்னாள்: "மன்னா உங்களிடமிருந்து எனக்கு ஓர் உதவி தேவை. அந்த உதவியை உங்களால் மட்டுமே செய்ய இயலும். நான் பக்கத்து நாட்டு இளவரசி. என் கணவனுடன் இங்கு உல்லாசப் பயணம் வந்தேன். என் கணவரை ஓர் அரக்கன் பிடித்துப் போய், இங்கிருந்து மேற்கே ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி, ஓரிடத்தில் சிறை வைத்திருக்கின்றான். அடுத்த பௌர்ணமிக்குள் அவரை மீட்டு வந்துவிட்டால் அந்த அரக்கன் எங்கள் இருவரையும் ஆசீர்வதித்து, இந்தப் பக்கம் மீண்டும் வராமல் சென்றுவிடுவான். வருகின்ற பௌர்ணமிக்குள் அவரை யாராலும் மீட்க முடியாவிட்டால், அரக்கன் என் கணவனைக் கொன்று, என்னைக் கடத்திச்  சென்றுவிடுவான். மன்னா நீங்கதான் எப்பாடு பட்டாவது அவரை 

(நாங்க வாங்கிய 'தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்' காகிதத்தில், இவ்வளவுதான் கதை இருந்தது. இதோடு கதை அப்ரப்டாக முடிஞ்சு போயிடுச்சு. பீச்சில் பறந்துகொண்டிருந்த துண்டு பேப்பர்களை எல்லாம் ஓடி, ஓடி காட்ச் பிடித்துத் தேடியும், தொடர்ச்சி எங்கள் கையில் கிடைக்கவில்லை. ஆனாலும் என்ன? 'எங்களுக்குத்தான் ஆயிரக் கணக்கான வாசகர்கள் இருக்கின்றார்களே. அவர்களைக் கேட்டால், இந்தக் கதையை அவர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால், எவ்வளவோ இனிய முடிவுகள் கிடைக்குமே!' என்று நினைத்தோம்.  பெரிய பதிவர்கள் எல்லோரும் சிறுகதைப் போட்டிகள் சிறப்பாக நடத்துகிறார்கள். எங்கள் ப்ளாக், ஏழைகளுக்கேற்ற எள்ளுருண்டையாக, ஒரு போட்டி நடத்தினால் என்ன' என்று நினைத்தோம். ஆகவே, இதோ இங்கே வெளியிட்டுவிட்டோம். சரி. போட்டி நிபந்தனைகள் எவை? ) 

 நிபந்தனைகள் ரொம்ப சிம்பிள்: 

* இந்தக் கதையின் தொடர்ச்சியை எழுதுபவர்கள், கதையை முடிக்கும் பொழுது, எழுதி முடிக்கவேண்டிய கடைசி வார்த்தை 'அவரை'

* பதிவர்கள், தங்கள் பதிவில், இந்தப் பதிவிற்கான சுட்டியைக் கொடுத்துவிட்டு, மீதிக் கதையை அவர்களுடைய வலைப் பதிவில் எழுதி முடிக்கலாம் (கடைசி வார்த்தை 'அவரை' இது இல்லாத கதைகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ள இயலாது. அந்த 'அவரை ' கதையோடு சேர்ந்து இருக்கவேண்டும். 'அதன் பிறகு அவர்கள் சுகமாக வாழ்ந்தார்கள். அவரை.' என்றெல்லாம் இருக்கக் கூடாது!)

* மீதிக் கதையில் காதல், வீரம், ஈரம், பாசம், நேசம், சோகம், மோகம், தாகம், நகைச்சுவை என்று எந்த ரசம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆபாசம் மட்டும் கண்டிப்பாகக் கூடாது. 

* முடிவுப் பகுதியாக ஒரே பதிவுதான் எழுதலாம். தொடர்கதைகள் எல்லாம் எழுதக்கூடாது! 

* பதிவர்கள் அவர்கள் எழுதுகின்ற கதைக்கு என்ன தலைப்பு வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால், அந்தத் தலைப்புடன், (எங்கள் சவடால் 2K+11) என்பதையும் சேர்க்கவேண்டும். 

* உங்கள் பதிவில் வெளியாகும் கதைக்குக் கிடைக்கின்ற பாராட்டுகளும் (அனானி கமெண்டுகள் நீங்கலாக) பரிசுக்குரிய கதையைத் தேர்ந்தெடுக்க உதவும். ஆனால், அது மட்டுமே கணக்கு என்பது இல்லை. 

* போட்டி முடிவு தேதி 31.12.2011. அந்தத் தேதிக்குள், மீதிக் கதை வெளியிட்டு, அந்தப் பதிவின் சுட்டியை, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். பதிவு இல்லாத வாசகர்கள், மீதிக் கதையை எழுதி, அதை மேற்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம். அவற்றை 'நம்ம ஏரியா' வலைப் பதிவில் வெளியிடுவோம். அவைகளும் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும். 

* போட்டி முடிவுகள் 2012 ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி, எங்கள் ப்ளாக் பதிவில் வெளியிடப்படும். மொத்தம் ஐந்து முதல் பரிசுகள். (ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு முதல் பரிசுக்குரிய கதையைத் தேர்ந்தெடுப்பார்). ஒவ்வொரு பரிசும் பத்தாயிரம் (பைசா) அல்லது அதன் மதிப்பு உள்ள புத்தகம். 

* வேறு ஏதாவது பாயிண்டுகள் இருந்தால், அவ்வப்போது சைடு பாரில் வெளியிடுகிறோம். அல்லது ஒரு பதிவாக வெளியிடுகிறோம்.

:: ஆசிரியர்கள் ::
:: எங்கள் ப்ளாக் ::
                 
            

66 கருத்துகள்:

 1. அவசியம் கலந்துகிறோம். ஆனா எங்களை வைச்சு காமெடி, கீமெடி பண்ணலயே.

  பதிலளிநீக்கு
 2. எங்கள் ப்ளாக்3 நவம்பர், 2011 அன்று 5:52 PM

  காமெடி எல்லாம் எதுவும் கிடையாது சார்! மெய்யாலுமே இது ஒரு கதைப் போட்டிதான். புகுந்து விளையாடுங்க!

  பதிலளிநீக்கு
 3. நீண்ட நாட்களுக்கு பிறகு வாச்கர்களாகிய எங்களுக்கு ஒரு சவடால் போட்டி ஹ ஹ ஹா நல்ல முயற்சி .. ட்ரை பண்ணுவோஓஓஒம்ம்...........

  பதிலளிநீக்கு
 4. எங்கள் ப்ளாக்3 நவம்பர், 2011 அன்று 7:05 PM

  நன்றி ப்ரியமுடன் வசந்த்! வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல முயற்சி.நானும் முயற்சி செய்கிறேன்.நன்றி.

  பதிலளிநீக்கு
 6. எங்கள் ப்ளாக்3 நவம்பர், 2011 அன்று 7:30 PM

  சண்முகவேல் சார்! முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. எங்கள் ப்ளாக்3 நவம்பர், 2011 அன்று 8:48 PM

  Boniface ! பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதே! வாங்க, வாங்க. எங்கள் கிட்டேயே சொல்லுங்க, பரிசை வெல்லுங்க!

  பதிலளிநீக்கு
 8. அவரை இருக்கணும், ஆபாசம் கூடாது..தொடர்கதை கூடாது.. நான் எல்லாம் கலந்துக்கக் கூடாதுனு நேரடியா சொல்லிட்டுப் போக வேண்டியது தானே?

  பதிலளிநீக்கு
 9. எங்கள் ப்ளாக்4 நவம்பர், 2011 அன்று 8:31 AM

  அப்பாதுரை சார்! நீங்க கலந்துகிட்டா நிச்சயம் ஐந்து முதல் பரிசுகளில் ஒன்று உங்களுக்குத்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கின்றது.
  அவரை வேண்டும், அப்பாதுரையும் வேண்டும், ஆபாசம் மட்டும்தான் கூடாது.

  பதிலளிநீக்கு
 10. அவரை வேண்டாம்னு சொல்லவே மாட்டேன்.:)
  பார்க்கலாம். சவடால் விட்டா என்ன செய்யறது. பழைய விஜயபுரி வீரி..ஆக இருந்தால் மாயம் செய்யலாம்:) பின்னூட்டம்லாம் எனக்கு நிறைய வராது சார்!!!

  பதிலளிநீக்கு
 11. எங்கள் ப்ளாக்4 நவம்பர், 2011 அன்று 10:59 AM

  வல்லிமா - பழைய விஜயபுரி வீரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை! புதிய வைஜயந்தி ஐ பி எஸ் ஆக இருந்தால் கூட சரிதான்!

  பதிலளிநீக்கு
 12. எங்கள் ப்ளாக்4 நவம்பர், 2011 அன்று 11:01 AM

  கதை நன்றாக இருந்தால் - எங்கள் ஆசிரியர்களே உங்கள் பதிவில் பாராட்டி, பின்னூட்டம் இடுவார்கள். பின்னூட்டப் பெருமாளே போற்றி!

  பதிலளிநீக்கு
 13. எங்கள் ப்ளாக்4 நவம்பர், 2011 அன்று 11:38 AM

  @Gopi Ramamoorthy ???? !!!!

  பதிலளிநீக்கு
 14. 'அவரை' -- இதென்ன பெரிய விஷயம்.. முடிச்சிட்டப் போச்சு..

  ஒரு பிரண்டு சொன்னார் தொடர்ந்து மூன்று 'because' வெச்சு ஒரு செண்டென்ஸ் சொல்லுனு..
  ரெண்டாவது பிரண்டு "No sentence ends with the word 'because', because, 'because' is a conjunction" சொன்னார்.
  அதக்கு நா சொன்னேன் "I can write a sentence, that ends with the word 'because'."னு

  என்ன சொல்ல வர்றது புரியுதா ?

  இதென்ன 'கதைய எழுது, பரிச வெல்லு' சீசனா ?

  பதிலளிநீக்கு
 15. எங்கள் ப்ளாக்4 நவம்பர், 2011 அன்று 11:42 AM

  மாதவன். அவரை, அவரை. Because இல்லை!

  பதிலளிநீக்கு
 16. குரோம்பேட்டைக் குறும்பன்4 நவம்பர், 2011 அன்று 11:46 AM

  Judge ordered the orderly of the court to call one Mr Because to the witness stand. The orderly called, "Because, Because, Because."

  பதிலளிநீக்கு
 17. // The orderly called, "Because, Because, Because." //

  கிளிப்பிள்ளை மாதிரி எதுக்கு சொன்னதையே சொல்லிக்கிட்டு.. மேல சொல்லுங்க, கு.கு

  பதிலளிநீக்கு
 18. குரோம்பேட்டைக் குறும்பன்4 நவம்பர், 2011 அன்று 12:01 PM

  மேல

  பதிலளிநீக்கு
 19. அடடே .. ரெண்டே வரிகளில் கதைய முடிச்சிட்டேன், உங்கள் நிபந்தையையும் பூர்த்தி செய்தபடி..
  ஆனா, ரெண்டே வரிகளை எப்படி பதிவா போடுறது... படிக்கறவங்க அடிக்க வரமாட்டாங்களா ?

  பதிலளிநீக்கு
 20. எங்கள் ப்ளாக்4 நவம்பர், 2011 அன்று 12:09 PM

  மாதவன் இன்னும் எங்களுக்கு சுட்டி எதுவும் வந்து சேரலை!

  பதிலளிநீக்கு
 21. எ பி. !!!
  உற்சாகம் கொடுக்கிற உங்களுக்கு
  சவுடால் மன்னர்கள் என்ற பட்டத்த்தை இப்பவே கொடுத்துட்டேன்.
  உங்களுக்கு ரெண்டு சவுடால் பேவழிகள் கதை தெரியுமா.
  ஒருத்தர்....டேய் எங்க வீட்டுப் புழக்கடையில் ஒரு புலி வந்துட்டதுடா.
  இன்னொருத்தர் ...என்னடா பண்ணே

  ஒருத்தர் அப்போ பல் தேய்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே அந்தப் புலி மேல எச்சிலைத் துப்பிட்டேன்.பயந்து ஓடிவிட்டது.

  இன்னொருத்தர்...ஆஹா அந்த புலிதாண்டா எங்கவீட்டுக்கும் வந்து இருக்கு.
  ஒருவர் எப்படி சொல்றே
  இன்னொருவர்...நான் அந்தப் புலியைத் தட்டிக் கொடுத்தேண்டா. மேல ஈரமா இருந்தது.:)

  பதிலளிநீக்கு
 22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 23. அந்த இளவரசி மன்னன் வெறுங்கரமாக திரும்பிவந்த பிறகு ஓடிவந்து கட்டிக் கொண்டாள் அவரை

  - னு முடிச்சா ஏத்துக்கிட மாட்டிங்களா ?

  அன்று தான் செய்த சாகசங்களின் இனிமை அனுபவ மிதப்பில் பந்தலில் ஓய்வெடுக்க சாய்ந்தான், அங்கே பந்தலில் நன்கு படர்ந்து பூ விட்டிருந்தது அவரை


  :)))))))

  முடியல, கலக்கலாக எழுதி இருந்திங்க

  November 4, 2011 12:10 PM

  பதிலளிநீக்கு
 24. எங்கள் ப்ளாக்4 நவம்பர், 2011 அன்று 12:29 PM

  கோவி கண்ணன் சார்! கலக்கலாக இருக்கின்றன கடைசி வரிகள். பங்கேற்பவர்களுக்கு இவை நிச்சயம் பயன்படும்!

  பதிலளிநீக்கு
 25. இப்பிடியான கதை எனக்கெழுதக் கொஞ்சம் கஸ்டம்.முயற்சிக்கிறேன் !

  பதிலளிநீக்கு
 26. ரொம்ப சுவாரஸ்யமான அறிவிப்பு!
  சவுடால் எனக்கு சரி வருமா தெரியவில்லை தொடர் பதிவுகள் போல.
  பங்கு பெற இருப்போருக்கும் எங்கள் ப்ளாகுக்கும் வாழ்த்துக்கள்!! கதைகளை வாசிக்கக் காத்திருக்கிறேன்:)!

  பதிலளிநீக்கு
 27. பாரதி சுவாமிநாதன்5 நவம்பர், 2011 அன்று 10:29 AM

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 28. எங்கள் ப்ளாக்5 நவம்பர், 2011 அன்று 10:31 AM

  பாரதி - போட்டியில் கலந்துகொள்ளுங்கள். உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 29. கதையும் சுவை. போட்டியும் சுவாரஸ்யம். ஒருவாரம் அவரைக்காய் சாப்பிட்டலாமென்றிருக்கிறேன். அப்பவாவது ஏதாவது தோணுதா என்று பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 30. எங்கள் ப்ளாக்6 நவம்பர், 2011 அன்று 2:13 PM

  கீதா மேடம் ஒரு வாரம் அவரைக்காய் சாப்பிட்டால் போதுமா? அப்போ போட்டி முடிவு தேதியை முன் தேதியாக மாற்றி அறிவித்து விடலாமா!

  பதிலளிநீக்கு
 31. எங்கள் ப்ளாக்6 நவம்பர், 2011 அன்று 9:16 PM

  லக்ஷ்மி மேடம் - வாங்க, வாங்க. உத்தரவின்றி உள்ளே வரலாம். கதை எழுதி, பரிசு பெறலாம். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 32. எங்கள் ப்ளாக்6 நவம்பர், 2011 அன்று 9:21 PM

  கு கு, ஹேமா, ராமலக்ஷ்மி - எல்லோரும் இந்த கதைப் போட்டியில் பங்கு பெறவும்.

  கு.கு - நீங்க அனுப்பிய கதைப் பகுதி மிகவும் சுருக்கமாக உள்ளது. இதை நம்ம ஏரியா ப்ளாக்ல போட முடியாது. கொஞ்சம் விரிவாக எழுதியனுப்பவும்.

  பதிலளிநீக்கு
 33. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்! நானும் கலந்து கொள்ளலாம்தானே! கதை எழுத ஆசைதான். ஆனால் இன்று வரை முடிந்ததில்லை. முயற்சி செய்கிறேன். முடியலைன்னா மண்டபத்துல யாரையாவது எழுதி கொடுக்க சொல்லி, என் பேரை போட்டு அனுப்பிடறேன், சரியா! :)

  பதிலளிநீக்கு
 34. அதுக்குள்ளாற குகு எழுதி அனுப்பிட்டாரா? சரியா கவனிச்சுப் பாருங்க. வேறே ஏதாவது கதை எழுதிட்டு 'இதே போல் புங்கவர்மன் கதையும் உண்டு என்று நண்பர் சொன்னார். சும்மா விடலாமா அவரை'னு தென்னைமரத்தில் பசுமாடு கட்டின கதையாட்டம் எழுதியிருக்கப் போறாரு.

  பதிலளிநீக்கு
 35. ஆமா.. இது என்னங்க புது ரூல். கதை எழுதி அனுப்புனு சொல்லிட்டு அப்புறம் 'அதெல்லாம் முடியாது, விரிவா எழுதணும்னு' அடம் பிடிச்சா எப்படி? அவரை வேணும்,ஆபாசம் வேணாம் - இதானே ரூல்? இத்தனை அளவிருக்கணும்னு ஒரு ரூலா?

  பதிலளிநீக்கு
 36. எங்கள் ப்ளாக்7 நவம்பர், 2011 அன்று 7:02 AM

  அப்பாதுரை சார் - கு கு ஒரு பஸ் டிக்கெட் பின்னாடி எழுதி, அதைப் படம் எடுத்து, எங்களுக்கு அனுப்பியிருக்கின்றார். அதை வெளியிட்டால், எல்லோரும் 'பெட்டி சிந்தனை' போல (Box thinking) அதே ரூட்டில் செல்ல தலைப்படுவார்கள். அப்புறம் 'எங்கள்' வாசகர்களுக்கு, நல்ல கதைகள் கிடைக்காது. துணுக்குகள்தாம் கிடைக்கும். ஆகவே அந்த ரூல் போடவேண்டியதாகிவிட்டது!

  பதிலளிநீக்கு
 37. எங்கள் ப்ளாக்7 நவம்பர், 2011 அன்று 10:02 AM

  // meenakshi said...
  நல்ல முயற்சி. பாராட்டுக்கள்! நானும் கலந்து கொள்ளலாம்தானே! //

  நிச்சயம் கலந்துகொள்ளலாம். இதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 38. குரோம்பேட்டைக் குறும்பன்7 நவம்பர், 2011 அன்று 10:48 AM

  அன்புள்ள எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு.
  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தன்னுடைய
  2
  E = m . c என்கிற மாஸ் எனர்ஜி இகிவாலன்ஸ் ஃபார்முலாவை ஒரு பஸ் டிக்கெட்டின் பின்னால்தான் எழுதிக் கொடுத்து நோபல் பரிசு பெற்றார் என்று விளையாட்டாக என்னுடைய பிசிக்ஸ் வாத்தியார் சொல்லியிருக்கிறார். நீங்க என்னுடைய பஸ் டிக்கெட் கதைக்கு நூறு ரூபாய் முதல் பரிசு தரக்கூடாதா என்ன?

  பதிலளிநீக்கு
 39. கடைசியில் அவன் யோசித்தான். “என்ன பண்ணலாம் அவரை?” :-)) இப்படி ரெண்டு வரியில முடிச்சிடலாமா?

  ஹா.ஹா... சரித்திரக் கதையா?

  இந்தக் கதையின் கடைசி ஒட்டு எவ்வளவு வரிக்கு மிகாமல் அல்லது குறையாமல் இருக்கவேண்டும்? :-)

  பதிலளிநீக்கு
 40. எங்கள் ப்ளாக்7 நவம்பர், 2011 அன்று 5:31 PM

  முதல் பாதிக் கதையில் மொத்தம் எழுநூற்றைம்பது வார்த்தைகள் உள்ளன. மீதிப் பாதி கதையில், ஐநூறு முதல் ஆயிரம் வார்த்தைகள் வரை இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 41. குரோம்பேட்டைக் குறும்பன்8 நவம்பர், 2011 அன்று 7:39 AM

  அடேங்கப்பா - குறைந்தபட்சம் ஐநூறு வார்த்தைகள் இருக்க வேண்டுமா? அப்ப சரி. நீங்களே, நடுவுல நடுவுல 'மானே, தேனே'னு அங்கங்கே போட்டு ஐநூறு வார்த்தைகளாக்கி வெளியிடுங்கள்.

  பதிலளிநீக்கு
 42. அதிகமான பாசம் இருக்கலாமா கதையில்?

  பதிலளிநீக்கு
 43. எங்கள் ப்ளாக்16 நவம்பர், 2011 அன்று 12:34 PM

  இருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 44. நல்லா இருக்கு. கதையை விடப் பின்னூட்டங்கள் சுவாரசியமா இருக்கு. ஜனவரி பதினைந்து தேதி வரை நேரம் இருக்கா? சரி என்ன பண்ணலாம் பார்க்கலாம்! மன்னன் பறித்தான் தன் தோட்டத்து அவரை!னு முடிக்கலாமா?(நம்ம புத்தி நம்மளை விட்டுப் போகாதே) அதனால் "பொரிச்ச குழம்பு எதிலே வைக்கிறதுனு யோசித்தான், கண்களிலே பட்டது அவரை!" னு முடிக்கலாமா?

  பதிலளிநீக்கு
 45. எங்கள் ப்ளாக்17 நவம்பர், 2011 அன்று 6:16 PM

  கீதா சாம்பசிவம் - எப்படியும் விடாதீர்கள், அவரை.
  கதைகள் பதிய கடைசி நாள் டிசம்பர் முப்பத்தொன்று இரவு பன்னிரண்டு மணி. போட்டி முடிவுகள்தான் ஜனவரி பதினைந்து.

  பதிலளிநீக்கு
 46. ஹலோ!! ஆரம்பம் எல்லாம் நன்னா தான் வரும் பினிஷிங்ல தான் நமக்கு கொஞ்சம் பிரச்சனை. நிஜமாவே போட்டியா இல்லைனா லூலூவாயிக்கா?

  @ மன்னார்குடி மைனர் - இப்பதானே சவால்-ல முதல் பரிசு வாங்கினேள், அதுக்குள்ள இங்கயும் வந்தா எங்களை மாதிரி ஏழைபாழைங்க என்ன பண்ணுவாங்க பாவம்! :P

  பதிலளிநீக்கு
 47. எங்கள் ப்ளாக்18 நவம்பர், 2011 அன்று 11:23 AM

  தக்குடு
  மெய்யாலுமே போட்டிதாங்க.
  பங்கேற்றுப் பரிசு பெறுங்கள்.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 48. @அப்பாதுரை, பொரிச்ச குழம்பிலே அவரை சுவை தனி இல்லையா?? ஹிஹிஹி,

  எங்கள் ப்ளாக், என்னோட என்ட்ரி சுட்டி அனுப்பி இருந்தேனே, வந்ததானு சொல்லவே இல்லையே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  கொஞ்சம் முன்னேப் பின்னே இருந்தாலும் அதுக்கான காசுகளைக் குறைச்சுட்டு அமெரிக்க டாலராவே அனுப்பிடுங்க. (10,000 பொற்காசுகள் தானே? :P)

  பதிலளிநீக்கு
 49. எங்கள் ப்ளாக்18 நவம்பர், 2011 அன்று 5:14 PM

  கீதா சாம்பசிவம் மேடம் - எங்கள் ப்ளாக் சைட் பாரில் - உங்க பதிவுக்கு சுட்டி கொடுத்துள்ளோமே - நீங்க பார்க்கவில்லையா?

  பதிலளிநீக்கு
 50. //பொரிச்ச குழம்பிலே அவரை சுவை தனி இல்லையா??

  'பொறிச்ச குழம்பில் போட்டான் அவரை'னு முடிக்க ஒரு ஐடியா கொடுத்தீங்கனு சொல்ல வந்தேன். ஒரு வேளை அது ஏதாவது தணிக்கையாயிடுமோனு நெனச்சு முழுதும் எழுதவில்லை :) ஆபாசம் தான் கூடாது, ஆள்மாம்சம் பரவாயில்லைனு மறந்து போச்சு :))

  பதிலளிநீக்கு
 51. எங்கள் ப்ளாக்18 நவம்பர், 2011 அன்று 8:07 PM

  அப்பாதுரை - அவரை பொரிச்ச குழம்பில் போடுவதில்லை, பொரிச்ச கூட்டில்தான் போடுவார்கள் என்கிறார் எங்கள் வீட்டில் ஒருவர்.

  பதிலளிநீக்கு
 52. எங்கள் ப்ளாக் அவரை பொரிச்ச குழம்பும் உண்டு. பொரிச்ச கூட்டும் உண்டு. செய்முறை மாறும். மிளகு பொரிச்ச குழம்பு செய்து சாப்பிட்டுப்பாருங்கள் , விடமாட்டீர்கள் அவரை.

  பதிலளிநீக்கு
 53. மெய்யாலுமே என்றால் நானும் கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.சும்மனாச்சுக்கும்னு அப்புறம் சொல்லி எஸ்கேப்ப முடியாது.

  பதிலளிநீக்கு
 54. எங்கள் ப்ளாக்19 நவம்பர், 2011 அன்று 4:50 PM

  // asiya omar said...
  மெய்யாலுமே என்றால் நானும் கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.//

  மெய்யாலுமேதாங்க. அவசியம் கலந்துக்குங்க. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 55. 15 நாட்களாக நான் கொஞ்சம் busy இப்பத்தான் உங்க அறிவிப்பை பார்த்தேன்.சவால் சிறுகதை போட்டிக்கு என்னோட முதல் கதையை எழுதினேன்.இப்ப உங்க பிளாக்ல இரண்டாவது கதை எழுத எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கறது.முயற்சி செய்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 56. விதி முறைகளில் ரிலாக்சேஷன் உண்டா? (அவரைக்குப் பதிலா துவரைன்னு முடிப்பது போல்!!) (ஒரு முன் ஜாக்ரதைக்கு கேட்டு வைச்சுக்கறேன்!)

  பதிலளிநீக்கு
 57. எங்கள் ப்ளாக்21 நவம்பர், 2011 அன்று 8:01 PM

  ராம்வி - பங்கு பெறுங்கள்; பரிசு வெல்லுங்கள். வாழ்த்துக்கள்.

  மி கி மாதவி - தூ ... அவரை என்று வேண்டுமானால் முடிக்கலாம். ஆனால் துவரை என்று முடிக்கக் கூடாது!

  பதிலளிநீக்கு
 58. புங்க மர விதையில் பயோ டீசலாம்.....பள்ளி மாணவியர்கள் கண்டுபிடிப்பாம்....புங்க வர்மனுக்கு இது ஏதாவது உதவுமா?

  பதிலளிநீக்கு
 59. அமேசான் காட்டில் பொன்னிறத் தவளைகள் - விஷம் கொண்டவையாம். புங்க நாட்டரசர் அங்கு வேட்டையாட செல்லவேண்டாம் என்று எச்சரித்து வைக்கவும். ராணி படத்திற்கு போயும் போயும் பார்பி டால் படத்தையா போடவேண்டும். கதை எழுத inspiration வரவில்லை! இப்படியும் சாக்கு சொல்வோமில்ல?

  முன் கூட்டியே வாழ்த்துகிறேன் வெற்றிபெறு(ப்+அ)வரை !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!