கருப்பை வெளுப்பாக்க ஒரு எளிய, புத்திசாலித் தனமான வழி கண்டுபிடிக்கப் பட்டு விட்டது. கட்சித் தொண்டர்கள் மனமுவந்து போட்டதாக அறிவித்து, பத்து சாக்கு மூட்டை கொள்ளுமளவுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாலையாகக் கட்டிக் கொண்டு வந்து தலைவருக்கு சார்த்தினால் கேள்வி கேட்பது கடினமாகிவிடும். யாராவது ஏதாவது ஆட்சேபம் சொன்னால் இருக்கவே இருக்கிறது, ஜாதி, மொழி, இனம் என்று எந்த அடிப்படையிலாவது தானும் தன தொண்டர்களும் பழி வாங்கப் படுவதாக அறிவித்து விடலாம்.
யார் ஆண்டாலும் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்துதான் ஆட்சி நடக்கும். எனவே கட்சி வசூலிக்கும் பணத்தை கணக்கு எல்லாம் கேட்டு அவதிப் படுத்துவதை எந்தக் கட்சியும் விரும்புவதில்லை. இது போதாதா?
எல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக போடப்பட்டதில் - ஒரு சிறிய சிக்கல் எழலாம். எந்த வங்கியிலிருந்து எந்தக் கணக்கிலிருந்து யார் எடுத்தது என்று கேள்வி எழுப்பி என்ன பதில் வருகிறது என்று பார்க்கலாம். இதற்கும் ஒரு புத்திசாலித் தனமான பதில் தயாராக இருந்தாலும இருக்கலாம். யார் கண்டது?
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் என்று பாடின கவி இவ்வளவு மோசமான அவலங்களைப் பார்க்கவில்லை என்று திடமாகச் சொல்லலாம். அதிருஷ்டக் காரர்.
இன்னும் எவ்வளவு கேவலங்களை சகித்துக் கொண்டு செய்வதறியாமல் திண்டாட வேண்டும் என்று நம் தலையில் எழுதியிருக்கிறதோ யாருக்குத் தெரியும்?