ஒரு பழைய விக் கம்மொடோர் கம்பியூட்டர் [!!] பரணை ஒழிக்கும் முயற்சியில் நம் கண்ணில் பட, நம் புதை பொருள் ஆராய்ச்சி வல்லுநர் ஆனந்த் அதன் கேம் காசெட்டுகளையும் எங்கிருந்தோ தேடிப் பிடித்துக் கொண்டு வந்து விட ஒட்டடை, சிலந்தி - மற்ற பூச்சி வற்றல்கள்(!) இவை எல்லாவற்றையும் அகற்றி தொலைக் காட்சிப் பெட்டி கிரிக்கெட், சீரியல் இவற்றிலிருந்து மீண்டிருக்கும் ஒரு சுப யோக சுப வேளையில் இணைக்கப் பட்டு இயக்கப் பட, மோல் அட்டாக் ஓட ஆரம்பித்தது. விளையாட்டு என்னவோ ரொம்ப எளிமையானது தான்.
TYU, GHJ,VBN இந்த ஒன்பது எழுத்துக்களுக்கு நேரே தலை அல்லது வால் எழும்பி வரும். அது தலையாக இருந்து அந்த எழுத்தைத் தட்டினால், உங்கள் ஸ்கோர் அதிகமாகும். வாலாக இருந்து அந்த எழுத்தை அமுக்கி விட்டீர்களானால் உங்கள் ஸ்கோர் குறையும். இதில் யார் நிறைய ஸ்கோர் செய்கிறார்களோ அவர்கள் ஆட்டத்தில் வல்லுநர் என்பது தவிர நாங்கள் ஒரு பாட்டேர்ன் (pattern) பார்த்தோம். நிறைய ஸ்கோர் செய்பவர்கள் வேகமாகப் படிக்கவும் செய்கிறார்கள் என்பது தான் அது. வழக்கம் போல அங்கிதாவுக்கு வரும் 'கோழியா / முட்டையா எது முதலில்?' (வேகப் படிப்பா / நிறைய ஸ்கோரா- எது முதலில்?) என்ற சந்தேகம் எங்களுக்கும் வர, நாங்கள் பார்த்த வரை, விளையாடும் நேரம் அதிகரிக்கும் பொழுது குழந்தைகள் படிக்கும் வேகமும் அதிகமானது. நீங்கள், உங்கள் குழந்தைகள் விளையாடும் ஆட்டங்களை சற்று கவனித்து, எந்த ஆட்டங்கள் இது மாதிரி வரவேற்கத் தக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை - வழக்கம் போல - பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்.
பி.கு. : விக் கம்மொடோர் மியூசியங்களில் மட்டும் தான் கிடைக்கும் என்கிறார் அறிவு. ஆகையால், மற்ற கம்பியூட்டர், பிளே ஸ்டேஷன் கேம்கள்தான் உங்களுக்குக் கிடைக்கக் கூடும்.
