6.2.10

சொல்லி அடிப்பேனடி !


ஒரு கேள்வி கேட்கப் படும்போது சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டும் சொல்லலாம், சொல்லாமலேயும் இருக்கலாம், சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு சொல்லியும் விடலாம் என்றெல்லாம் சொன்னாலும் சொல்லுதல் என்பது இங்கு முக்கியமாகக் கொள்ளப்பட்டு, சொல்லவந்த கருத்தை சொல்லி விடுகிறார்களா, அல்லது சொல்லாமலே விடுகிறார்களா, சொல்ல வந்ததை விட்டு விட்டு சம்பந்தம் இல்லாமல் வேறு ஏதாவது சொல்கிறார்களா, என்றெல்லாம் பார்த்து விட்டு பதில் சொல்லலாம் என்று சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் எவ்வளவுதான் சொல்வது, நாம் சொல்வதை யார் கேட்கப் போகிறார்கள், கேட்பவர்கள் முழுமையாகக் கேட்பார்களா, கேட்காமலே விடுவார்களா, கேட்டும் கேட்காத மாதிரி போய் விடுவார்களா, கேட்டதை கேட்டோம் என்று ஒத்துக் கொண்டு மற்றவர்களிடமும் சொல்வார்களா என்றெல்லாம் ஆராயாமல் நாம் சொல்ல வந்ததை சொல்லிதான் ஆகவேண்டும் என்று சொல்லி விட்டோமானால், நமக்கு வேண்டுமானால் திருப்தி என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, கேட்டவர்கள் சொல்லப் பட்டதை திருப்பிச் சொல்லுமளவு கேட்டார்களா, கேட்டதை விரும்புகிறார்களா, மறுக்கிறார்களா என்றெல்லாம் தெரியாமல் நாம் பாட்டுக்குச் சொல்வது என்பது, சொல்வது ஒன்றுதான் முக்கியம் கேட்பவர்கள் அபிப்ராயமோ, விருப்பமோ தேவை இல்லை என்று ஆகிவிடுகிறது என்று சொல்லாமல் சொல்வது போல ஆகி விடுவதால், அவர்கள் சொல்வதையும் கேட்டு விட்டு நாம் சொல்ல நினைப்பதைச் சொல்லலாம் என்பதோடு கேட்பவர்கள் விருப்பத்தையும் அறிந்துதான் நாம் சொல்லலாமா கூடாதா என்று முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லும் அதே நேரத்தில் சொல்வது எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கடடாயமுமல்ல, கேட்பது எல்லாவற்றையும் மறுக்க வேண்டும் என்பதும் கட்டாயமல்ல என்று சொல்லி, சொல்லப் படுவதில் என்ன நியாயம் இருக்கிறதோ அதை கேட்டுக் கொண்டு சொல்லுபவர் கருத்துக்கு பதில் கருத்தை சொல்லத் தொடங்கும்போது...


விரும்புவதை விரும்புகிறேன் என்று கூட சொல்ல விரும்பாதவர்கள் எத்தனை பேர் எத்தனை பேரை விரும்புகிறார்களோ அத்தனை பேரிடமும் போய் விரும்புகிறேன் விரும்புகிறேன் என்று சொல்லிக் கொள்ள விரும்பாமல் விரும்புவதை தனக்கு விருப்பமில்லாமலே கூட மனதுக்குள் வைத்து விரும்பிக் கொண்டிருப்பார்கள் என்றாலும் விளக்கம் கேட்டால் விரும்புகிறேன் என்பதற்கு புத்தகம் படிக்க விரும்புகிறேன், சினிமா பார்க்க விரும்புகிறேன் இந்த இடத்துக்கு செல்ல விரும்புகிறேன், அந்த நபரைப் பார்க்க விரும்புகிறேன் என்றெல்லாம் கூறி விரும்பிய விஷயத்தையே மாற்றி விருப்பங்களை பட்டியல் போட்டு நாம் கேட்க விரும்பாமல் செய்து விட்டு, தான் விரும்பிய உண்மையான விஷயத்தை மட்டும் மனதோடு வைத்துக் கொண்டு விருப்பங்களை வெளியில் சொல்லாமல் இருப்பவர்களின் விருப்பங்களை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி...
(இந்தப் பதிவை இவருக்குப் படித்துக் காட்டினோம். கேட்டவுடன், ஓடியவர், பக்கத்தில் இருக்கின்ற பளிங்குக்கல் சுவரில் தலையை மோத ஆரம்பித்தவர், இன்னும் நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.)

5.2.10

அதிசயம் ஆனால் உண்மையா?

பிரார்த்தனைகள் நிறைவேற்றி வைக்கும் கடவுள்கள் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும்.  இதற்கு இங்கே என்று பல கோயில்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். யோசித்துப்   பார்த்தால், கோவிலுக்கு வரும் (நல்ல?) பழக்கத்தை ஊக்குவிக்க பலப் பல உபாயங்களை நம்மவர்கள் மேற்கொண்டார்கள் என்றே தோன்றுகிறது. கல்யாணம் ஆக, கர்ப்பம் தரிக்க, தொலைந்தது கிடைக்க, வீடு கட்ட, பிரிந்தவர் கூட, சீக்கிரம் டைவர்ஸ் கிடைக்கக் கூட ஒரு கோவில் எங்காவது இருக்கக் கூடும்.  ஒரே முறையில் பித்ருக் கடன்களை ஒரேயடியாக கழிக்க கோவில்கள் க்ஷேத்திரங்கள் இருக்கின்றன.  திடீர் கல்யாணம் செய்ய வசதி தரும் க்ஷேத்திரங்களைக் குறித்து  தனியாக ஏதும் சொல்ல வேண்டியது இல்லை.    " ஓடிப்போய் திருநீர்மலையில் சாமி முன்னிலையில் தாலி கட்டிக் கொண்டார்கள் " என்று கதைகளில் வருமே அது போல.

தொலைந்தது கிடைப்பது குறித்து மேலும் ஒரு ருசிகர தகவல்.  எங்கள் குடும்பத்திலேயே இரண்டொருவர் தொலைந்தது எங்கே இருக்கிறது என்று ஆரூடம் சொல்வார்களாம்.  இதில் ஒரு விசித்திரம் தொலைத்தவர் குறி கேட்கப் போகும்போது ஒரு கல் எடுத்துச் சென்று குறி சொல்பவரிடம் தர வேண்டும்.  என் உறவினர் ஒருவர் என்ன தொலைந்தது என்பதைக் கூட சொல்லப் படாமல் குட்டாக சொல்வாராம்.  " மினு மினுப்பாக எதோ தெரிகிறது, தண்ணீர் ஓடும் வழியில் இருக்கிறது"  என்று கழன்று விழுந்து சாக்கடை வரை சென்ற மூக்குத்தி குறித்தும், " நாலு கால் ஒரு வால் - கிழக்கு திசையில் மூன்று மைல் தொலைவில் இருக்கிறது" என்று எஸ்கேப் ஆன மாடு குறித்தும் சொல்வாராம்.  என் நண்பர் ஒருவர் மூச்சுப் பிடிப்புக்கு மந்திரம் சொல்லி சரி செய்வார்.  மந்திரம் வேண்டி செல்பவர் ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.  அவர் அதை வாங்கி மந்திரித்து அருந்தக் கொடுப்பார். பிடிப்பு ஒரே நொடியில் சரியாவதாக சொல்லப் படுவதை நான் கேட்டிருக்கிறேன்.

தேள் கடிக்கு வேப்பிலை வீசி மந்திரிப்பது சர்வ சகஜம்.  வேப்பிலை அடிக்கும் மாமி ஒருவர் " ரொம்ப குஞ்சு தேள் தான் கொட்டி இருக்கிறது. வலி என் மேல் ஏறும் போது அதிகம் இல்லை "  என்று சொன்னதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  பாம்புக் கடிக்கு தந்தி கொடுத்து மந்திரிப்பவர் என்ன துணி உடுத்தி இருந்தாலும் தகவல் வந்த உடனே தண்ணீரில் நின்று மந்திரித்து வேட்டியை நீக்கி கிழித்துப் போடுவார் என்றும் பாம்பு உடனே சாவது மட்டும் இல்லாமல் விஷம் இறங்கி விடும் என்றும் பரவலாக சொல்லக் கேட்டிருக்கிறேன்.  பாய்சன் கிங் துரைசாமி அய்யர் என்ற ஸ்டேஷன் மாஸ்டர் வெகு பிரபலமாக நாற்பதுகளில் இருந்தார். அவருக்கு தந்தி அடிக்க ரயில்வே இலவச உதவி செய்ததாகச் சொல்வார்கள். என் சிறு வயதில் கழுத்தில் அக்கி என்று சொல்லப் படும் ஒரு மாதிரி சொறி வந்த போது, தில்லை விளாகம் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று மந்திரித்து கழுத்தில் ஒரு வெள்ளை நூல் தாலி கட்டிக் கொண்டு வந்தது நினைவிலிருக்கிறது.  அக்கி நாளா வட்டத்தில் சரியாகி விட்டது.  தாலி இன்றியும் சரியாகி இருக்குமோ என்னவோ.

விஷக்கடிக்கு கலர் கூழாங்கல் போன்ற ஒன்றை கடி வாயில் வைத்து மந்திரம் சொல்ல, அது ஒட்டிக் கொண்டு விஷம் இறங்கியதும் உதிர்ந்து விடும் என்றும் சொல்லி விற்றவர்களை பார்த்திருக்கிறேன். 

விஷம் சரிவர உடலில் ஏறாத போது இறங்குவது ஆட்டோமாடிக் என்றும் மந்திரங்கள் பலிப்பது இதனால்தான் என்றும், பல சமயம் பலிக்காமல் போனதாகவும் நாஸ்திகர்கள் சொல்வர்.  உண்மை எதுவோ அறியேன்.   தொலைந்தது கிடைப்பதும் இதுபோல தற்செயலாக இருக்கலாம்.

4.2.10

தொலைத்ததும் ... கிடைத்ததும்!

இந்த வாரம் தினகரன் ஆன்மீகச் சிறப்பிதழில் நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் ஆலயம் பற்றி சிறப்பு செய்திகள். இழந்த பொருள்களைத் திரும்பிப் பெறும் சக்தி மிக்க மந்திரம் ... என்றெல்லாம் கேட்டுக்கொண்டே தூங்கிப் போனேன். 


சனிக்கிழமை, வழக்கமான வாராந்தர சந்திப்புகள், கூட்டுப் பிரார்த்தனை இவற்றுக்கு நடுவில் அறிவு ஜீவியின் வருகையும் சேர்ந்தது.  குழந்தைகள் வழக்கம் போல் அவரிடம் போய் பாட்டரி டிஸ்சார்ஜ் ஆனதால் வேலை செய்வதை நிறுத்திவிட்ட ரிமோட் கண்ட்ரோல் கார் தொடங்கி, அதிகம் சார்ஜ் செய்யப்பட்டு உப்பிப் போன செல் ஃபோன் பாட்டரி வரை எல்லாவற்றையும் காட்டி ஏதேதோ கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். 



மாமா தினகரன் ஆன்மிகச் சிறப்பிதழுடன் ஆஜரானார். " இழந்த பொருள்களைத் திரும்பிப் பெறுவதற்கு இந்த மந்திரத்தை சொன்னால் பொருள் இழந்தவரிடம் திரும்பிவிடுமாமே ?"   "சரி, நான் முதலில் சொல்ல மற்ற எல்லோரும் திரும்பி சொல்லுங்கள். இந்த வாரம் முதல் நாம் இழந்த பொருள் என்ன என்னவெல்லாம் திரும்பி வருகிறது என்று பார்ப்போம்" என்றார் அறிவு. எல்லோரும் அப்படியே அவர் சொல்லச் சொல்லத் திரும்பி சொன்னோம். பலன் ...?  அடுத்த வாரம் வரை பொறுத்திருங்களேன். யார் யாருக்கு என்னென்ன நடந்தது அல்லது திரும்பி வந்தது என்று கேட்டுச் சொல்கிறேன்.

3.2.10

எங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்...


எந்த ஒரு விஷயத்தையும் ஒரே மாதிரி யோசித்தாலோ, ஒரே மாதிரி அணுகினாலோ தீர்வுகள் கிடைப்பதில்லை. அந்த விஷயத்தை விட்டு விட்டு வேற ஏதாவது யோசித்துப் பாருங்கள்.முன்னதற்கு தேடிய விடை 'சட்'டெனக் கிடைக்கும்.இதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?
மாத்தி யோசிக்கறது (Lateral Thinking) என்பது இதுதான். இன்னொரு உதாரணம் ஒரு பொருளைத் தொலைத்து விட்டு விழுந்து விழுந்து தேடுவோம். கிடைக்காது. ஆனால் அதே சமயம் எப்போதோ காணாமல் போன பல பொருட்கள் கிடைக்கும்! (அட! இப்போது இதெல்லாம் கிடைத்ததே' என்ற சந்தோஷத்துக்கு பதில் ஆத்திரம் வரும்...!) அதே போல தேடிக் கிடைக்காத பொருளை விட்டு விட்டு வேறு ஏதாவது வேலை தொடங்குங்கள்..
ஒன்று தேடிய பொருள் கிடைக்காத டென்ஷன் குறையும்..இரண்டு, தொலைத்த பொருளை வைத்த இடம் மனதில் நினைவு வந்து விடும்...இந்த மாத்தி யோசிக்கற பயிற்சிக்காக அங்கங்கே கேள்விப் பட்ட & கிடைத்த இந்தக் கேள்விகளைப் பாருங்கள்..சிந்தியுங்கள்...விடை கிடைக்கிறதா என்று பாருங்கள்..கிடைத்தால் பதியுங்கள்..
(கிடைக்காவிட்டால்...? அட என்னங்க இது! நம்ம தொண்ணூறு ரசிகர்களில் எட்டு கேள்விகளுக்கு சுட்டோ சுடாமலோ பதில் சொல்கிறவர்கள் இல்லாமல் போய்விடுவார்களா என்ன?)

1. மிக உயரமான கட்டிடத்தின் மே...ல் தளத்தில் குடியிருந்த ஒருவன் தினமும் லிஃப்டில் கீழ் தளம் வரை வருவான். வீடு திரும்புகையில் பாதி வழி மட்டும் லிஃப்டில் ஏறி மீதி நடந்தே ஏறுவான்...மழை நாட்கள் தவிர...

2. ஒரு மனிதனும் அவன் மகனும் காரில் செல்லும்போது விபத்தில் சிக்கி அந்த மனிதன் அந்த இடத்திலேயே உயிரிழக்க, ஆஸ்பத்திரி கொண்டு செல்லப் பட்ட குழந்தையை கவனிக்க வந்த சர்ஜன் என்னால் சிகிச்சை அளிக்க முடியாது..இவன் என் மகன் என்கிறார்...எப்படி?

3. 'பாரு'க்குள் நுழைந்த மனிதன் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்க, 'பார்மேன்' துப்பாக்கியை எடுத்து இவன் முகம் முன் காட்டுகிறான். இவன் "நன்றி" என்று சொல்லி வெளியேறுகிறான்...ஏன்?

4. அந்த வீட்டுக்கு நான்கு சுவர்கள்...நான்கும் தெற்கு நோக்கி இருக்கின்றன. நான்கு சுவர்களிலும் நான்கு ஜன்னல்கள். ஒரு ஜன்னல் அருகே ஒரு கரடி ஒன்று கடக்கிறது.. அதன் நிறம் என்ன?

5. மேலும் கீழும் போகும் ஆனால் நகராது...அது....எது?

6. திங்கள், புதன், வெள்ளி சொல்லாமல் மூன்று நாட்களைத் தொடர்ந்து சொல்ல முடியுமா?

7. மரணதண்டனை விதிக்கப்பட்ட கொலைகாரனுக்கு மூன்று வாய்ப்பு. முதலாவது அறைக்குள் பயங்கரத் தீ, இரண்டாவது அறைக்குள் சுட்டுக் கொல்ல, துப்பாக்கியுடன் ஏகப் பட்ட ஆட்கள், மூன்றாவது அறையில் மூன்று வருடங்களாக பட்டினி போடப் பட்டிருக்கும் சிங்கங்கள்... எது நல்லது?

8. கணவனைச் சுட்ட ஒரு பெண்மணி பத்து நிமிடம் அவனைத் தண்ணீரில் ஊறவைத்தவள், அரை மணி நேரம் தொங்க விடுகிறாள். ஆனால் அரை மணி நேரம் கழித்து உற்சாகமாக பார்டிக்கு கணவனுடன் சந்தோஷமாகச செல்கிறாள்...எப்படி? 


1.2.10

இதுதான் நமக்குத் தெரியுமே!

RBC 20 நொடியில் உலகை..சீ...உடலை ஒரு முழு ரவுண்ட் அடித்து விடும்
அந்த நேரத்துல மாமூல் ஏதானும் வசூல் பண்ணுமா?

முப்பத்திரண்டு பல்லையும் உடைச்சிடுவேன்னு நாய் கிட்ட சொல்ல முடியாது ஏன்னா அதுக்கு நாற்பத்திரண்டு பற்கள்.
நாயினுடைய ஒரு பல்லைக் கூட நம்பளால உடைக்க முடியாது. அதுக்குள்ள அது நம்மைக் கடிச்சிடுமே!

மனிதனைத் தவிர ப்ரோஸ்ட்ரெட்  இருக்கற ஒரே உயிரினம் நாய்
மனிதனிடம் இல்லாத நன்றியுணர்ச்சி கூடத்தான் நாயிடம் இருக்கு.

லிபர்டி சிலையின் ஆள்காட்டி விரல் எட்டு அடி நீளம்.
ஒரு முழம் பூ வாங்கினா கூட அதை லிபர்டி கையாலத்தான் வாங்கணும்னு நான் சொல்றேன்!

ஒரு எழுபத்தைந்து வயது மனிதன் சுமார் இருபத்து மூன்று வருடம் தூக்கத்தில் கழித்திருப்பான்.
அப்படியா? இப்பிடி சொன்னா எங்களுக்கு என்ன தெரியும்? அவரோட பேரு, ஊரு எல்லாம் சொல்லுங்க.

கொசுக்கள் நீல நிறத்தால் மிகக் கவரப் படுகின்றன.
ச்சீ - கொசுக்களுமா ?

கங்காருவால் பின்னால் நடக்க முடியாது.
யாரு பின்னால?

பில் கிளிண்டன் தன் ஜனாதிபதி பதவி காலத்தில் இரண்டே இரண்டு ஈ மெயில்தான் அனுப்பி இருக்கிறாராம்.
ஆமாம் - அவரு தன்னுடைய காரியதரிசிகூட எப்பவுமே பிசியா இருந்தார்னு சொன்னாங்க.

அக்டோபசுக்கு மூன்று இதயங்கள்.
அப்போ ஆக்டபஸ் வெச்சி தமிழ் சினிமா எடுத்தா முக்கோணக் காதல், இல்லை - நாற்கோணக்  காதல் என்று நவகோணக் காதல் வரை எடுக்கலாம்.

Sperm Whales என்ற ஒருவகைத் திமிங்கிலத்துக்குதான் பெரிய மூளை. 20lb.
எடை அதிகமிருந்து என்னங்க பிரயோஜனம்? சுவை எப்பிடி இருக்கும் என்று கேட்கிறார் - ஒரு அசைவப் பிரியர்.


Tiger Shark என்ற சுறா வகை தாயின் கருவில் முட்டையாக இருக்கும்போதே ஒன்றுடன் ஒன்று சண்டை இட்டு அழித்துக் கொள்ளும். மிஞ்சுவதுதான் பிறக்கும்.
பிறந்தபின் இரண்டிரண்டாகச் சேர்ந்து - இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படுமோ? 

Blue Whale திமிங்கிலத்தின் நாக்கு ஒரு யானையை விட எடை கூடியது.
அடேங்கப்பா - படிக்கும்போதே நாக்குத் தள்ளுது, கண்ணைக் கட்டுதே!

மூங்கில் இருபத்துநாலு மணி நேரத்தில் மூன்று அடி வளரும்.
எங்கள் பள்ளி ஆசிரியர் கையில் உள்ள மூங்கில் குச்சி ஒரு மணி நேரத்தில் இருபத்து நாலு அடி போடும்.

உலகின் மிகப் புகழ் பெற்ற செவிலி Florence Nightingale தன் வாழ்வில் மொத்தம் மூன்று வருடங்கள் மட்டுமே நர்சாக இருந்திருக்கிறார்.
நம்ம ஊருல - ரொம்பப் பேருங்க செவிலித் தகுதி கூட இல்லாமல் டாக்டர் ஆயிடுராங்களே. இதுக்கு அது எவ்வளவோ மேல்.  




விவரம் தேவை ..

 விவரம் தேவை. இந்தத் தலைப்பில், கு கு அவர்கள்,
எங்களுக்கு முதல் மெயில் அனுப்பியிருக்கிறார்.
" ம மா க - பற்றி விவரமாக எழுதவும். நன்றி."
ஆஹா - கிளம்பிட்டாங்கையா - கிளம்பிட்டாங்க!
இந்தப் பெயரில் யார், என்ன கட்சி ஆரம்பிச்சிருக்காங்க தெரியலையே!!