வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

அதிசயம் ஆனால் உண்மையா?

பிரார்த்தனைகள் நிறைவேற்றி வைக்கும் கடவுள்கள் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும்.  இதற்கு இங்கே என்று பல கோயில்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். யோசித்துப்   பார்த்தால், கோவிலுக்கு வரும் (நல்ல?) பழக்கத்தை ஊக்குவிக்க பலப் பல உபாயங்களை நம்மவர்கள் மேற்கொண்டார்கள் என்றே தோன்றுகிறது. கல்யாணம் ஆக, கர்ப்பம் தரிக்க, தொலைந்தது கிடைக்க, வீடு கட்ட, பிரிந்தவர் கூட, சீக்கிரம் டைவர்ஸ் கிடைக்கக் கூட ஒரு கோவில் எங்காவது இருக்கக் கூடும்.  ஒரே முறையில் பித்ருக் கடன்களை ஒரேயடியாக கழிக்க கோவில்கள் க்ஷேத்திரங்கள் இருக்கின்றன.  திடீர் கல்யாணம் செய்ய வசதி தரும் க்ஷேத்திரங்களைக் குறித்து  தனியாக ஏதும் சொல்ல வேண்டியது இல்லை.    " ஓடிப்போய் திருநீர்மலையில் சாமி முன்னிலையில் தாலி கட்டிக் கொண்டார்கள் " என்று கதைகளில் வருமே அது போல.

தொலைந்தது கிடைப்பது குறித்து மேலும் ஒரு ருசிகர தகவல்.  எங்கள் குடும்பத்திலேயே இரண்டொருவர் தொலைந்தது எங்கே இருக்கிறது என்று ஆரூடம் சொல்வார்களாம்.  இதில் ஒரு விசித்திரம் தொலைத்தவர் குறி கேட்கப் போகும்போது ஒரு கல் எடுத்துச் சென்று குறி சொல்பவரிடம் தர வேண்டும்.  என் உறவினர் ஒருவர் என்ன தொலைந்தது என்பதைக் கூட சொல்லப் படாமல் குட்டாக சொல்வாராம்.  " மினு மினுப்பாக எதோ தெரிகிறது, தண்ணீர் ஓடும் வழியில் இருக்கிறது"  என்று கழன்று விழுந்து சாக்கடை வரை சென்ற மூக்குத்தி குறித்தும், " நாலு கால் ஒரு வால் - கிழக்கு திசையில் மூன்று மைல் தொலைவில் இருக்கிறது" என்று எஸ்கேப் ஆன மாடு குறித்தும் சொல்வாராம்.  என் நண்பர் ஒருவர் மூச்சுப் பிடிப்புக்கு மந்திரம் சொல்லி சரி செய்வார்.  மந்திரம் வேண்டி செல்பவர் ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.  அவர் அதை வாங்கி மந்திரித்து அருந்தக் கொடுப்பார். பிடிப்பு ஒரே நொடியில் சரியாவதாக சொல்லப் படுவதை நான் கேட்டிருக்கிறேன்.

தேள் கடிக்கு வேப்பிலை வீசி மந்திரிப்பது சர்வ சகஜம்.  வேப்பிலை அடிக்கும் மாமி ஒருவர் " ரொம்ப குஞ்சு தேள் தான் கொட்டி இருக்கிறது. வலி என் மேல் ஏறும் போது அதிகம் இல்லை "  என்று சொன்னதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  பாம்புக் கடிக்கு தந்தி கொடுத்து மந்திரிப்பவர் என்ன துணி உடுத்தி இருந்தாலும் தகவல் வந்த உடனே தண்ணீரில் நின்று மந்திரித்து வேட்டியை நீக்கி கிழித்துப் போடுவார் என்றும் பாம்பு உடனே சாவது மட்டும் இல்லாமல் விஷம் இறங்கி விடும் என்றும் பரவலாக சொல்லக் கேட்டிருக்கிறேன்.  பாய்சன் கிங் துரைசாமி அய்யர் என்ற ஸ்டேஷன் மாஸ்டர் வெகு பிரபலமாக நாற்பதுகளில் இருந்தார். அவருக்கு தந்தி அடிக்க ரயில்வே இலவச உதவி செய்ததாகச் சொல்வார்கள். என் சிறு வயதில் கழுத்தில் அக்கி என்று சொல்லப் படும் ஒரு மாதிரி சொறி வந்த போது, தில்லை விளாகம் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று மந்திரித்து கழுத்தில் ஒரு வெள்ளை நூல் தாலி கட்டிக் கொண்டு வந்தது நினைவிலிருக்கிறது.  அக்கி நாளா வட்டத்தில் சரியாகி விட்டது.  தாலி இன்றியும் சரியாகி இருக்குமோ என்னவோ.

விஷக்கடிக்கு கலர் கூழாங்கல் போன்ற ஒன்றை கடி வாயில் வைத்து மந்திரம் சொல்ல, அது ஒட்டிக் கொண்டு விஷம் இறங்கியதும் உதிர்ந்து விடும் என்றும் சொல்லி விற்றவர்களை பார்த்திருக்கிறேன். 

விஷம் சரிவர உடலில் ஏறாத போது இறங்குவது ஆட்டோமாடிக் என்றும் மந்திரங்கள் பலிப்பது இதனால்தான் என்றும், பல சமயம் பலிக்காமல் போனதாகவும் நாஸ்திகர்கள் சொல்வர்.  உண்மை எதுவோ அறியேன்.   தொலைந்தது கிடைப்பதும் இதுபோல தற்செயலாக இருக்கலாம்.

7 கருத்துகள்:

  1. மஞ்சள் காமாலைக்கு கோணி ஊசியால் தடவி மந்தரிக்க, மந்தரிப்பவர் கண் நகமெல்லாம் மஞ்சளாகி, ஒரு பாத்திர நீரில் அந்த ஊசியை வைத்து மேலும் மந்தரித்து நீர் மஞ்சளாக இருவரும் சரியாவதை கண்டிட்டுண்டு. பாம்புக் கடிக்கு மந்தரிப்பவர்களையும். கிரகண காலத்தில் கிணற்று நீரில் நின்றபடி பாம்புக்கடி மந்திரத்தை சார்ஜ் செய்வார்கள். ஒரு வேளை சந்திர சூரியனுக்கு விஷமிறக்குவார்களோ?

    பதிலளிநீக்கு
  2. பல்லாவரம் ஸ்டேட் பாங்கில், ஜனவரி மத்தியில் என்னுடைய பர்சனல் பிராவிடண்ட் ஃபண்டு (பி.பி.எஃப்) கணக்கில் போடப்பட்ட செக் ஒன்று தொலைந்துபோய் - பிறகு அது எப்படியோ ராஜா அண்ணாமலைபுரம் ஸ்டேட் பாங்கில் வேறு யார் கணக்கிலோ (பி பி எஃப் கணக்கு எண் கிடைத்துள்ளது - என்னுடைய பி பி எஃப் எண்ணிலிருந்து முற்றிலும் மாறுபட்ட எண்) போடப்பட்டுள்ளது. என்னுடைய பணம் திரும்ப எண் பி பி எஃப் கணக்கில் கொண்டு வர நான் என்ன மந்திரம் சொல்வது, எந்த கோவிலுக்குப் போவது? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். ஸ்டேட் பாங்கின் மாட்சிமை தங்கிய அலுவலகங்கள் (சம்பந்தப்பட்ட கிளைகள்) ஈ மெயில் பார்க்கிறார்களா, அதற்கு ஒரு அக்னாலட்ஜ்மென்ட்அனுப்ப கடமைப் பட்டவர்களா என்றெல்லாம் யாரும் கேட்கக் கூடாது போலிருக்கு. ஒரு வாரமாக மௌனப் (மெயில்) போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. //பர்சனல் பிராவிடண்ட் ஃபண்டு (பி.பி.எஃப்)//

    'பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்டுல' போட்டுட்டு, ஏன் சார் 'பர்சனல் பிராவிடண்ட் ஃபண்டு' (பி.பி.எஃப்) கணக்கில தேடுறீங்க?

    சார் உங்கிட்ட பணம் போட்டதுக்கு செல்லானின் கவுண்டர் (கோவை அல்ல) ஃபாயில் இருக்குமே சார்.. அதை வச்சு பணத்த உங்க கணக்குல கொண்டு வந்துடலாம் சார். சம்பந்தப்பட்ட கிளைக்கு போய் சரி செய்யுங்க சார்.. மந்திரமாவது.. தந்திரமாவது..

    பதிலளிநீக்கு
  5. மாதவன் கரெக்ஷனுக்கு நன்றி. ஆமாம் - பப்ளிக் தான் சரி. ஆனா - கலெக்சனுக்குத்தான் சரியான வழி இல்லே. என்னுடைய ஏஜெண்டு - பி பி எஃப் செலான் கொடுக்காமல், டிராப் பாக்ஸில் சாதாரண செலான் எழுதிப் போட்டுவிட்டார்.

    பதிலளிநீக்கு
  6. நீரில் மந்திரம் செய்து கொடுத்து ஊற்றிக்கொள்ள செய்வது பற்றி பார்த்து இருக்கேன் ராம்

    பதிலளிநீக்கு
  7. I am thankful to DGM customer service SBI Mumbai - for his follow up action on the PPF complaint copy i sent to him through email. I am also thankful to my orkut friend Pradeep - for his follow up with SBI Pallavaram, with a print of my complaint. I have started getting positive responses from SBI, now.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!