11.7.11

அவன் இவன், அவர்.

                     
ஏகாம்பரம், பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அவர், தமிழும், ஆங்கிலமும், எழுத, பேச, படிக்கத் தெரிந்தவர். அவருக்கு, காலை நேரத்தில், எல்லோரும் அரக்கப் பரக்க - அலுவலகம் செல்ல டென்ஷனாக அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில், எல்லோரையும் வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். வாக்கிங் வந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு, அல்லது சிமிண்ட் பெஞ்சு கிடைத்தால், அங்கே அமர்ந்தோ கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பார். கண்ணையும் காதையும் மனதையும் திறந்து வைத்துக் கொண்டு அரை மணி அல்லது ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பார். 

ஏகாம்பரம், தன்னிடம் நேரம் கேட்பவர்களுக்கு நேரத்தையும், சுற்றுப் புற இடங்களுக்கு வழி கேட்பவர்களுக்கு, வழியையும் சொல்லுவார். அவர்கள் நன்றி சொன்னால், புன்னகையுடன் ஏற்றுக் கொள்வார். 

கடந்த இரண்டு வாரங்களாக,  ஓர் இளைஞனை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த இளைஞன் ஒரு குறிப்பிட்ட பேருந்துக்காக காத்திருக்கின்றான் என்பதும், அவன் செல்ல வேண்டிய பேருந்து வருவதற்கு பத்து நிமிடங்கள் முன்பாக அவன் வருகிறான் என்பதையும், தெரிந்துகொண்டார். அவன் வந்தவுடன், சுற்றுப் புறம உள்ளவர்களை ஆர்வமாக நோக்குவதையும், தன்னைப் பார்த்து அடிக்கடி புன்னகை சிந்துவதையும், இவர் தெரிந்து வைத்திருந்தார். 

மேலும், அடிக்கடி நிகழும் ஒரு சம்பவம் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 
    
இளைஞன் அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த ஐந்து நிமிடங்களுக்குள், மற்றொரு இளைஞன் (பார்ப்பதற்கு வட நாட்டுப் பக்கத்தைச் சேர்ந்த இளைஞனோ என்று தோன்றும்) வருவான். அவன், இவனைப் பார்த்ததும், சின்னதாகச் சிரித்து, அருகே வந்து, "ஹலோ ஹவ் ஆர் யு?" என்று கேட்பான். இவன் உடனே, "ரா ... மு ... சா ........மி" என்பான். அவன் உடனே சிரித்த வண்ணம், சென்று, அவன் செல்ல வேண்டிய பேருந்தில் ஏறிச் சென்றுவிடுவான். 

பிறகு, இவன் செல்ல வேண்டிய பேருந்தில் இவன் ஏறிச் சென்று விடுவான். இதில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் போகின்ற நாட்களில் அல்லது இரண்டு பேரில் ஒருவர் வராத நாட்களில் இந்த நாடகம் நடக்காது! 

இன்றைக்கும், இதே சந்திப்பு, விசாரணை, பதில், சிரிப்பு, எல்லாம் நடந்தது. அவன் பேருந்து ஏறிச் செல்வது வரை, எல்லாம் வழக்கத்திற்குக் கொஞ்சம் முன்பாகவே நடந்தது. ராமுசாமி செல்லவேண்டிய பேருந்து வருவதற்கு, இன்று இன்னும் ஏழ்ட்டு நிமிடங்கள் இருந்தன. 

ஏகாம்பரம், மெல்ல ராமுசாமிக்கு அருகே சென்று, "தம்பி - நீங்க சரியாக, தினமும் இந்த நேரத்திற்கு இந்த பஸ் ஸ்டாண்டிற்கு வந்து விடுகின்றீர்கள். உங்க நண்பர் கூட இதே நேரத்திற்கு இங்கு வருகிறார். அவர் தினமும், 'ஹலோ ஹவ் ஆர் யு?' என்று கேட்கிறார். நீங்க அதற்கு 'ராமுசாமி' என்கிறீர்கள். அவர் சிரித்துக் கொண்டே செல்கிறார். நீங்க 'இங்க்லீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ்' புத்தகம் ஏதாவது வாங்கிப் படித்து, தெரிந்துகொண்டு, ஆங்கிலத்தில் பேச முயன்று வருகின்றீர்களா?" என்று கேட்டார். 
       
ராமுசாமி, மிகவும் தயக்கமாக "ஆமாம்" என்றார். 

ஏகா: "நீங்க முயன்றால் இன்னும் கொஞ்சம் சரியாக ஆங்கிலத்தில் பேசலாம். அவர் உங்களிடம், உங்கள் பெயரைக் கேட்கவில்லை. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்றுதான் தினமும் கேட்கிறார். நீங்க அதற்கு, 'நான் நன்றாக இருக்கின்றேன், தாங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?' என்று கேட்பதுதான் சரியாக இருக்கும். நாளையிலிருந்து அவர் வந்து, 'ஹலோ ஹவ் ஆர் யு?' என்று கேட்டால், 'அயம் வெரி வெல். தாங்க் யு! ஹவ் ஆர் யு?' என்று கேட்கவேண்டும். அதுதான் சரியான முறை." 

ராமு: "சரிங்க அப்படியே செய்கிறேன். என்ன சொல்லணும்? இன்னும் ஒருமுறை சொல்லுங்க?"

ஏகா : "அயம் வெரி வெல்! தாங்க் யு! ஹவ் ஆர் யு?"

*************************************

மறுநாள். ஏகாம்பரம் வந்தார். ராமுசாமி வந்தார். அந்த மூன்றாவது நபரும் வந்தார். 

ராமுசாமிக்கு அதற்குள், ஏகாம்பரம் சொல்லித் தந்திருந்த வாக்கியங்கள் மறந்து போய்விட்டது. சரி, எப்படியும் சமாளிக்கலாம், அவர் அருகில் வந்ததும், தான் முந்திக் கொண்டு, 'ஹலோ ஹவ் ஆர் யு?' என்று கேட்டுவிடுவோம். அப்போ தான் சொல்லவேண்டிய பதிலை, அவரே சொல்லுவார், கொஞ்சம் அதைக் கேட்டுப் பழக்கப் படுத்திக் கொண்டு, அவ்வப்போது, அவர் கேட்டால் அதே போல நாம் பதில் சொல்லலாம் என்று முடிவு செய்துகொண்டார். மூன்றாமவர் அருகே வந்து புன்னகையுடன் வாய் திறக்க முற்படுகையில், ராமுசாமி, தான் முந்திக் கொண்டு கேட்டார், "ஹலோ ஹவ் ஆர் யு?"

அதைக் கேட்ட மூன்றாமவர், புன்னகையுடன், "ரா ...மு சா ......மி" என்று பெருமிதமாகச் சொல்லி விட்டு, பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டார். 

ராமுசாமி, திகைத்து நின்றார்; ஏகாம்பரம் (துணியைக் கிழித்துக் கொள்ளாமல்) தெருவில் இறங்கி ஓடிவிட்டார். 
                   
(இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமான, 'தென்கச்சி கோ சுவாமிநாதன்' அவர்கள், ஒரு முறை ரேடியோவில், 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியில் கூறிய நகைச்சுவைத் துணுக்கை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்ட கதை) 
                              

6.7.11

சோணகிரியை லாக்கப்புல போடுங்க! :: K13

                                   
அத்தியாயம் 13: "சோணகிரியை லாக்கப்புல போடுங்க" 

மருந்துக் கடைகாரரிடம், தங்களை அறிமுகப் படுத்திக்கொண்ட கா சோ வும் எ சா வும், தங்கள் விசாரணையைத் தொடர்ந்தனர். 

கா சோ: "அது எப்படி கிழமை, நேரம் எல்லாம் அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்?"

ம க கா: "இந்தப் படத்துல இருக்கற மனிதர், அடிக்கடி இந்தக் கடையில் அம்ருதாஞ்சன் வாங்குவார். தலைவலியா என்று கேட்டால் - இல்லை அம்ருதாஞ்சன் வாசனை தனக்குப் பிடிக்கும் என்பார். தவிர, அவர் இந்தக் கடையிலிருந்துதான் அடிக்கடி ஃபோன் பேசுவார்."

எ சா: "என்ன பேசுவார் யாருக்குப் பேசுவார் என்பது ஏதேனும் ஞாபகம் இருக்கின்றதா?"

ம க கா: "ரொம்பச் சின்னக் குரலில் பேசுவார். இவர் அதிகம் பேசமாட்டார். எதிர் முனையில் இருப்பவர் பேசுவதை உன்னிப்பாகக் கவனிப்பார், சில சமயங்களில், தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருக்கும் சிறிய குறிப்பு நோட்டில் குறிப்பு எழுதிக்கொள்வார்."

கா சோ: "அந்த வெள்ளிக்கிழமை என்ன நடந்தது?"


ம க கா: "அன்று மாலை மணி மூன்றுக்கு மேல் இருக்கும். மூன்றரை கூட ஆகி இருக்கும். அப்போ ஒருவர், இந்தக் கடைக்கு ஃபோன் செய்ய வந்தார். அவரை இந்த ஏரியாவில் இதுவரைப் பார்த்ததில்லை. ரொம்பப் பதற்றத்தில் இருந்தவர் போல காணப்பட்டார்."

எ சா: "அப்புறம்?"

ம க கா: "அவர் யாருக்கோ ஃபோன் செய்ய மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டு இருந்தார். ஆனால் மறுமுனையில் யாரும் ஃபோனை எடுக்கவில்லை என்று அலுத்துக் கொண்டார்."

எ சா: "பிறகு?"

ம க கா: "ஃபோனை மீண்டும் மீண்டும் பயன் படுத்துவதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, ஒரு கிழவர் சாகக் கிடக்கிறார். என்னுடைய டூட்டி முடிந்து நான் போவதற்குள், அவரைக் கவனித்துக் கொள்ள, வரப் போகின்ற புதிய நபர் ஒருவரிடம் விவரங்கள் கூறிவிட்டு, எனக்கு ஒரு அவசர வேலை இருப்பதால், நான் செல்லவேண்டும். ஆனால் இந்த ஆள் வீட்டிலும் இல்லை, அவரிடம் மொபைலும் இல்லை, இன்னும் ஒரே ஒரு கால் - டாக்டரிடம் பேசிவிட்டு, நான் கிளம்புகிறேன். உங்கள் நேரத்தை வீணாக்கியதற்கு, இந்த நூறு ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி நூறு ரூபாய் கொடுத்தார்."

எ சா: "பிறகு டாக்டருக்கு ஃபோன் செய்தாரா?" 

ம க கா: "ஆமாம். டாக்டரிடம் பேசியதும், ஒருவாறாக நிம்மதியடைந்து காணப்பட்டார். பிறகு, என்னிடம். அப்பாடி ஒரு கவலை தீர்ந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒருவர் இந்தக் கடைக்கு வருவார். அவர் கிழவர் உடல்நிலை பற்றியும், அடுத்த வேளை மருந்து எப்பொழுது என்றும் கேட்டுக் கொண்டு போய், அதற்குத் தகுந்தாற்போல் செய்துவிடுவார். ஆனால் வருபவர் யார், எப்படி இருப்பார் என்று எனக்குத் தெரியாது. யாராவது வந்து, 'கிழவர் மருந்து குடித்தாரா? அடுத்த வேளை மருந்து எத்தனை மணிக்கு?' என்று கேட்டால், அவருக்கு நான் பதில் சொல்கிறேன்.' என்றார்."

கா சோ: "அப்புறம்" 

ம க கா: "அதற்குச் சற்று நேரம் கழித்து, இந்த ஆள் வந்தார். அவரைப் பார்த்ததும், ஒரு அம்ருதாஞ்சன் பாட்டிலை எடுத்துக் கொண்டே, என்ன வேண்டும்? என்று கேட்டேன். ஆனால், அவர், 'கிழவர் மருந்து குடித்தாரா? அடுத்த வேளை மருந்து எத்தனை மணிக்கு?' என்று கேட்டார். நான் உடனே, அந்தப் புதியவரைப் பார்த்தேன். அவர், 'கிழவர் மருந்து குடித்து வருகிறார், அடுத்த வேளை மருந்து, இன்று இரவு ஏழு மணிக்கு' என்றார். உடனே, இவரும் நானும், ஒரே நேரத்தில் வாட்சைப் பார்த்தோம். அப்பொழுது மாலை மணி நான்கு." 

எ சா: "அதற்குப் பிறகு என்ன நடந்தது?"

ம க கா: "இவர் உடனே அவசரம் அவசரமாக வீட்டை நோக்கிச் சென்றார். அதற்குப் பின் இவர், சற்று நேரம் கழித்து, ஒரு ஆட்டோவில் இந்தப் பக்கம் சென்றதைப் பார்த்தேன்."

கா சோ: "டெலிஃபோன் செய்ய வந்தவர்?"

ம க கா: "அவர், தகவல் சொன்னதும், உடனே கிளம்பி சென்றுவிட்டார்." 

எ சா: "சரி என்னுடைய செல்லில் உள்ள சில ஃபோட்டோக்களைக் காட்டுகின்றேன். அவர்களில் யாரையாவது நீங்க இந்தப் பக்கம் அடிக்கடி பார்த்திருக்கின்றீர்களா என்று பார்த்துச் சொல்லுங்கள்." என்று சொல்லி, கார்த்திக் வீட்டுப் பக்கம், மாருதி வொர்க் ஷாப் பக்கம் வந்தவர்களை, சோணகிரி எடுத்த ஃபோட்டோக்கள் எல்லாவற்றையும் காட்டினார். 

ம க கா: எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்தபின் -- "ஊம் ஹூம் - இவர்களில் யாரையும் நான் இந்தப் பகுதியில் பார்த்ததில்லை... சார் - கொஞ்சம் இருங்க! இது எல்லாம் என்ன ஃபோட்டோ?" என்று கேட்டார், எ சா வேகமாக விரலால் தள்ளிய சில ஃபோட்டோகளைப் பார்த்து. 

எ சா: "இந்த ஃபோட்டோ எல்லாம் நாங்க ஒரு கார் விபத்து நடந்த இடத்தில், நேற்று எடுத்தவை. இதுல இருக்கறவங்க எல்லோரையும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்."

ம க கா: "சார் இதோ இந்தக் காருக்குப் பக்கத்தில் நிற்பது யாரு?"

எ சா: "ஏன் கேட்கிறீர்கள்?" 

ம க கா: "சார் அந்த வெள்ளிக் கிழமை, இங்கே வந்திருந்து, கிழவர் உடல் நிலை பற்றிக் கூறி, அடுத்த வேளை மருந்து பற்றிக் கூறி, எனக்கு நூறு ரூபாய் கொடுத்துச் சென்றவர், இவர்தான்" என்றார், சோணகிரியின் படத்தைக் காட்டி. 

கா சோ உடனே, கடைக்கு சற்றுத் தள்ளி, அந்தப் பக்கம் போய் சோணகிரியை ஃபோனில் அழைத்து, அவரிடம் ஐந்து நிமிடங்கள் ஏதோ பேசினார். சோணகிரி அலுவலகத்தில் இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்திக்கொண்டார். 
          
             
அதற்குப் பிறகு, கா சோ, இன்ஸ்பெக்டர் ரங்கனை ஃபோனில் அழைத்து, "ஆபீஸ்ல இருக்கற சோணகிரியை, உடனே பிடித்து லாக் அப்பில் போடுங்க. அவருடைய வீட்டுக்கு காவலாக இரண்டு போலீஸ்காரர்களை மஃபடியில் அனுப்பி, சந்தேகப் படும்படி யாரு அவர் வீட்டருகில் நடமாடினாலும் அவர்களை கைது செய்து போலீஸ் லாக் அப்பில் வையுங்கள். அவருடைய பெண் ஈஸ்வரிக்கு ஃபுல் போலீஸ் ப்ரொடெக்ஷன் கொடுங்க. முழு விவரங்களும் பிறகு ஃபோனில் சொல்கிறேன்" என்றார்.   
                    
(தொடரும்) 
                       

5.7.11

நான்தான் தீனதயாளன்! :: K 12

                             
அத்தியாயம் 12: "நான்தான் தீனதயாளன்!"

காலையில், ஹெட் லைன்ஸ் டுடேயில், பிரம்மகுமாரி - சகோதரி ஷிவானி கூறியதைக் கேட்டு, பார்த்து முடித்ததும், வீட்டைவிட்டு கிளம்பினார், எ சாமியார். வழியில், கா சோ தன வீட்டு வாசலில், காத்திருந்தார். அவர் காரில் ஏறிக்கொண்டதும், கார், நேரே கெம்பா இடத்திற்கு அருகே சென்று, டூட்டி முடித்திருந்த பொன்னுசாமியை காரில் ஏற்றிக் கொண்டார்கள். 

தீனதயாளின் விலாசத்தை, தன்னுடைய ஜி பி எஸ் மொபைலில் பார்த்தவாறு, எங்கே திரும்பவேண்டும் என்று எல்லாம் வழி சொல்லிக்கொண்டு வந்தார் சோபனா. 

அந்த விலாசத்திற்கு. வந்தாயிற்று. அமைதியாக இருந்தது வீடு. அக்கம் பக்கம் நடமாட்டம் எதுவும் இல்லை. அங்கே ஒரு அமானுஷ்யமான அமைதி குடியிருந்ததாகத் தோன்றியது. 

கதவுக்கு அருகே இருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு, காத்திருந்த நேரத்தில், கா சோ வும் எ சா வும், 'யார் வந்து கதவைத் திறப்பார்களோ? அவர்களுக்கு தீனதயாள் இறந்தது தெரியுமா அல்லது தெரியாதா? விவரத்தை சொன்னவுடன் அதிர்ச்சி அடைவார்களோ?' என்றெல்லாம் பலவித எண்ணங்கள் மனதை அரிக்க .... 

கதவு திறந்தது. நடுத்தர வயதுடன், முன் வழுக்கையுடன், லுங்கியணிந்த அந்த குண்டு மனிதரைப் பார்த்தபடி ... 

எ சா: "இங்கே, தீனதயாள் என்று ......"

க தி: "உள்ளே வாங்க, நான்தான் தீனதயாளன். உங்களுக்கு என்ன வேண்டும்?"

எ சா & கா சோ - சொல்வதறியாமல் திகைத்து நின்றனர். 

பொன்னுசாமி:"நாங்க தேடிவந்த தீனதயாள், ஒல்லியான உருவம், பார்க்க சோளக்கொல்லை பொம்மை போல இருப்பார்."

தீ த: "ஓ? நீங்க தீனா தம்பியைக் கேக்குறீங்களா? அவரு மாடியில குடி இருக்காரு. ரொம்ப நல்ல தம்பி, தங்கக் கம்பி."

எ சா: "அந்தத் தங்கக் கம்பி இன்னமும் வீட்டுலத்தான் இருக்குதா அல்லது கம்பி நீட்டிடுச்சா?"

தீ த: "பெரியவரே அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். அவரு ரொம்ப தரும சிந்தனை இருப்பவர், யார் வந்து என்ன கேட்டாலும், ஜாதி மத இன வித்தியாசம் பார்க்காமல் வாரி வழங்குபவர். அவரு அடிக்கடி வெளியூர்  போயிடுவாரு. ஒரு மாதத்தில் பத்துப் பதினைந்து நாட்கள் வெளியூர் டூர் போயிடுவாரு. இப்பவும், எங்கேயோ போயிருக்காரு; இன்னும் கொஞ்ச நாளில் திரும்பி வருவாரு."

எ சா: "அவரு என்ன வேலை பார்க்கிறார்?"

தீ த: "மோட்டார் மெக்கானிக்."

எ சா: " உறவு, சொந்த பந்தங்கள்?"

தீ த: "எதுவும் கிடையாது."

எ சா: "அவருடைய அடையாள் அட்டையை, நீங்க பாத்திருக்கீங்களா?"

தீ த: "இதெல்லாம் ஏன் நீங்க கேட்குறீங்க? நீங்க யாரு? போலீசா?"

கா சோ & எ சா தங்கள் அடையாள அட்டையை காட்டுகிறார்கள். "பிரைவேட் டிடெக்டிவ்ஸ், போலீஸ் ஆசீர்வாதமும் இருக்கிறது. இன்ஸ்பெக்டர் ரங்கன் அனுப்பினார்." 

தீ த: "உட்காருங்க. அவருடைய அடையாள அட்டையை, தூரத்திலிருந்து பார்த்திருக்கின்றேன் அது வந்து, ....."

பொன்னு: "பச்சைக்கிளி கலர்ல இருக்கும்."

தீ த: "ஆமாம்! உங்களுக்கு எப்படித் தெரியும்?"

பொன்னு: "அவரு கார் விபத்தில் செத்துப் போவதற்கு முன்பு, பார்த்தேன்."

தீ த: "ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கார் தீப்பிடித்து எரிந்து போனதாக பேப்பரில் படித்தேனே - அதில் ஒருவர் ... ஓ மை காட்! ஓ மை காட்! (கண்ணீர் துளிர்க்கிறது, தீ த கண்களில்.) "இருங்க - அவருடைய மாடி போர்ஷன் சாவி ஒன்று என்னிடமும் இருக்கு. அவருடைய புகைப் படம் ஒன்று மேசையின் மீது இருப்பதைப் பார்த்திருக்கின்றேன். அதைப் பார்த்து, அவர்தானா இறந்தது என்று உறுதி செய்துகொள்வோம்." 

மாடி அறை திறக்கப்பட்டது. 

அறையின் உள்ளே, எல்லாம் வெகு நேத்தியாக மடித்து வைக்கப் பட்டிருந்தது. பேப்பர் பொசுங்கிய மனம் லேசாக வந்தது. அந்த மணத்தையும் அமுக்கி, அம்ருதாஞ்சன் வாடை, அந்தப் போர்ஷன் முழுவதும் வியாபித்திருந்தது. அலமாரியில், பல காலி அம்ருதாஞ்சன் பாட்டில்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. எந்த நேரமும், காலி செய்துகொண்டு கிளம்பத் தயாராக இருந்தது போல ஒரு தோற்றம். 
        
மேசை மீது இருந்த படத்தைப் பார்த்த பொன்னுசாமி, சோபனாவிடம், 'அவர்தான். சந்தேகமே இல்லை' என்றார். மேசை மீது ஃபோட்டோவுக்குப் பக்கத்தில், ஒரு சிறிய இயந்திரம் இருந்தது. பார்த்ததுமே தெரிந்தது - அது ஒரு பேப்பர் ஸ்ரெட்டர் மெஷின்.   
                     

அறையில் விளக்குகளை ஆன் செய்து, தீனாவின் போட்டோவை, பல கிளிக்குகள் கிளிக்கிக் கொண்டனர், எ சா & கா சோ. 

எ சா: "சரி, ஆழமாக அறையை சோதனை இட, எங்களுக்கு உரிமை இல்லை; போலீஸ் தடவியல் ஆட்கள் அதைப் பார்த்துக்கொள்வார்கள். வா சோபனா - போகலாம்." 

++++++++++++++++++++++++++++++

வெளியில் வந்ததும் கா சோ கேட்டார். 

கா சோ: "என்ன சாமி? அடுத்தது என்ன? "

எ சா: "தீனா தம்பி, அருகில் எந்தக் கடையில் அடிக்கடி அம்ருதாஞ்சன் வாங்கினார் என்று பார்த்து, அந்தக் கடையில் கொஞ்சம் விசாரணை செய்யவேண்டும்." 

காரில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த அவர்கள் கண்ணில், வீதி திரும்பியதுமே, 'ராஜலக்ஷ்மி மெடிக்கல்ஸ்' என்னும் கடை தென்பட்டது. "பொன்னுசாமி நீங்க காரிலேயே உட்கார்ந்திருங்க. நாங்க போயி விசாரிச்சுட்டு வர்றோம்"  சரி என்றார், பொன்னுசாமி. 

கடைக்காரர், இவர்கள் இருவரையும் பார்த்து ஆவலுடன், 'என்ன வேண்டும்? என்று கேட்டார்.. 

எ சா : (தீனா படத்தைக் காட்டி), "இவரை நீங்க பார்த்திருக்கின்றீர்களா?" 

க கா: "ஆமாம்"

கா சோ: "அடிக்கடி வருவாரா?" 

க கா: "ஆமாம். "

கா சோ: "இவரை, எப்போ கடைசியாகப் பார்த்தீர்கள்?"  

க கா : "ஒரு வாரம் முன்பு, ஒரு வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு."

(தொடரும்) 
                 

4.7.11

பேசாம காரை உங்களுக்கே விற்றிருக்கலாம்! (K 11)

                                  
அத்தியாயம் பதினொன்று: "பேசாம காரை உங்களுக்கே விற்றிருக்கலாம்!"

சோபனாவிற்கு, சோணகிரியிடமிருந்து, ஃபோன். 

சோ: "பாஸ்?... மாருதி வொர்க் ஷாப்பில், காரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோரையும் படம் எடுத்துவிட்டேன். விவரங்களும் சேமித்துவைத்துள்ளேன். "

கா சோ: "வெரி குட். இந்தக் கேஸ் வெற்றிகரமாக முடிந்தால், உங்கள் பெண் ஈஸ்வரி கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்திவிடலாம். அந்த அளவுக்கு போனஸ் தருகிறேன் !" 

சோ: "தாங்க் யூ பாஸ். நான் இந்தப் படங்களை என்ன செய்வது?"

கா சோ: "கார்த்திக்கிடம் எல்லா படங்களையும் காட்டி, அதில் காரை ஓட்டிச் சென்ற இருவர் இருக்கின்றார்களா என்று கேட்டு, இருந்தால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்."

சோ: "அப்படியே ஆகட்டும் பாஸ். அப்புறம் ரமேஷ் சார் வொர்க் ஷாப்புக்கு நாம் கேட்ட கருப்பு நிறக் கார் ஒன்று வந்துள்ளது. அந்த ஓனரிடம், நாளை மாலை வந்து வண்டியை டெலிவரி எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார் ரமேஷ்."

கா சோ: "ஓ அப்படியா? நல்லதாகப் போயிற்று! ரமேஷிடம், அந்தக் காரில், பொன்னுசாமி பார்த்த அந்த போலி பதிவு எண் பலகைகளை மாட்டைச் சொல்லுங்கள். எ சா இப்போ அங்கே வருவார். அந்தக் காரில் உங்களை ஏற்றி கார்த்திக் வீட்டிற்கும், பிறகு குண்டு வெடித்த ஸ்பாட்டுக்கும் போய், சில படங்கள் எடுப்பார். அதன் பிறகு, இன்றே அந்தக் காரை திருப்பிக் கொடுத்துவிடலாம்."

கேட்டுக் கொண்டிருந்த எ சாமியார், உடனே அலுவலகக் காரை எடுத்துக் கொண்டுக் கிளம்பத் தயாரானார். 

கா சோ: "சாமீ - மாருதி வொர்க் ஷாப் போய், அங்கு இருக்கின்ற கருப்பு நிற மாருதி எஸ்டீம் காரில் சோணகிரியை ஏற்றிக் கொண்டு, கார்த்திக் வீட்டிற்குப் போய் அவருக்குப் படம் காட்டிவிட்டு, பிறகு நம்ப கெம்பா ஸ்பாட்டுக்குக் காரைக் கொண்டு போய் நிறுத்தி, அதை எல்லா கோணங்களிலும் நிறைய படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பயன்படும்." 

எ சா: "சரி சோபனா - பொன்னுசாமியை டீக்கடை ஃபோனுக்கு அழைத்து, குண்டு வெடிப்பில் சேதமடைந்த கார் போல இன்னொன்று அங்கு வரும், அதற்குச் சரியான இடத்தை அடையாளம் காட்ட வேண்டும் என்றும் சொல்லிவிடு." 

கா சோ: "ஓ கே சாமீ.நாளை காலையில், நாம் தீனதயாளின் விலாசத்திற்குச் செல்வோம்."

#################### 

சோணகிரி கறுப்புக் காரை, தானே ஓட்டுவதாகச் சொன்னார். சரி என்று கூறி, எ சா காரில் முன்னால் கோ-டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். கார்த்திக்கின் வீடு வந்ததும், எ சா முதலில் இறங்கிக் கொண்டு, சோணகிரியை, காரை, பத்திரமாக பார்க் செய்து விட்டு உள்ளே வருமாறு கூறிவிட்டு, வீட்டிற்குள் சென்றார். 

கார்த்திக்: "வாங்க சாமி வாங்க. காரை ஓட்டிச் சென்றவர்களைக் கண்டு பிடித்துவிட்டீர்களா?" 

எ சா : "ஓட்டிச் சென்றவர்களைக் கண்டு பிடிப்பதைவிட, அவர்களை அம்பாக எய்தவர்கள் யார் என்பதைக் கண்டு பிடிப்பது சுலபமான செயல் என்று தோன்றுகிறது. இப்போ ஒருவர் வருவார், அவர் கிட்ட ...."

(தொடர்ந்து எ சா பேசுவதற்குள், சோணகிரி வீட்டினுள் நுழைகிறார். ) 

கார்த்திக்: "ஹலோ - நீங்களா? நான் பேசாமல் காரை உங்களுக்கே விற்றிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், இன்றைக்குப் பல பிரச்னைகள் இல்லாமப் போயிருக்கும். உங்க பேரு என்ன சொன்னீங்க? சம்பத் தானே?" என்றவாறு சோணகிரிக்கு அருகே வந்தார். 
     
சோணகிரி திடுக்கிட்டு, கார்த்திக்கைப் பார்த்து, "என் பெயர் சோணகிரி.. சம்பத் யாரு?" என்றார். கார்த்திக், அவரை அருகிலே வந்து பார்த்ததும் குழம்பிப் போய் " .... ஓ சாரி. நீங்க அவரு இல்லை. நான் தப்பாக நினைத்துவிட்டேன் - மன்னியுங்கள்." என்று சொல்லி, எ சா பக்கம் திரும்பி, "சாமீ இவர் யார்? நீங்க சொல்ல வந்தது இவரைப் பற்றியா?" என்று வினவினார். 

எ சா: "இவர் பெயர் சோணகிரி - எங்கள் அலுவலக மேனேஜர். இவர் மாருதி வொர்க் ஷாப்பில் உங்கள் கார் என்று சொல்லப்பட்ட காரைப் பார்க்க வந்தவர்களை படம் எடுத்துள்ளார். அந்தப் படங்களை எல்லாம் நன்றாகப் பார்த்து, அதில் காரை ஓட்டிச் சென்ற இருவரில் யாராவது இருக்கிறார்களா என்று சொல்லுங்கள். இவரை முதலில் பார்த்தபொழுது, இவரை யார் என்று நினைத்தீர்கள்?"

கார்த்திக்: " அதுவா? காரைப் பார்வையிட முதலில் ஒருவர் வந்தார், அவருடைய பெற்றோருக்காக காரை விலை குறைத்துக் கேட்டார் என்று சொல்லி இருந்தேனே, அவர் இவரைப் போலவே இருந்தார். ஒரு வாரம் கழித்து மீண்டும் ஃபோன் செய்யச் சொல்லியிருந்தேன். ஏனோ அவர் அதற்குப் பிறகு கால் செய்யவில்லை. ஒருவேளை அவருக்கு, அவர் இஷ்டப்பட்ட வகையில் விலை குறைவாக கார் ஏதாவது கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றேன்." 

எ சா: "இவர் அவர் இல்லை என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?"

கார்த்திக்:"இவருக்கு தலையில் ஆங்காங்கே நரை முடிகள் காணப்படுகிறது. தவிர, இவருக்கு வயது அதிகம் போலத் தெரிகிறது."

எ சா: "சம்பத் இவருடைய தம்பி என்றாலோ, அல்லது இவருக்குத் தலையில் கோத்ரேஜ் டை அடித்துவிட்டால், இவர்தான் சம்பத் என்றோ நம்புவீர்களா?"

கார்த்திக்: "சம்பத் இவருடைய தம்பி என்றால் நம்புவேன்; ஆனால் டை அடித்தால் நம்ப மாட்டேன் - அவருடைய குரலும், இவருடைய குரலும் முற்றிலும் மாறுபட்டு உள்ளன."

பிறகு சோணகிரி காட்டிய எல்லாப் படங்களையும் பார்த்தார். 'அந்த இருபத்தைந்து படங்களில் எதுவுமே பார்த்த முகமாக இல்லை' என்றார். 

எ சா & சோணகிரி விடை பெற்று, கெம்பா ஸ்பாட்டுக்குக் கிளம்பினர்.
=========================

கெம்பா ஸ்பாட்டில், பொன்னுசாமி உதவியுடன் காரை குண்டு வெடித்த அதே இடத்தில் நிறுத்தி, பல கோணங்களில் படங்கள் எடுத்தார், எ சா. 
                     
"சாமீ நான் செஞ்ச ஒரே உருப்படியான வேலை, இந்தக் கார் கிடைக்கும் வரை வொர்க் ஷாப்பில் காத்திருந்து, இதற்குப் போலி நம்பர் ப்ளேட்கள்  தயார் செய்து, அவைகளை மாட்டி, இங்கே ஓட்டி வந்ததுதான். அதனால, என்னைக் காரின் பக்கத்தில் நிறுத்தி, கொஞ்சம் படம் எடுங்க." என்றார். கேட்டுக் கொண்டபடி, படம் எடுத்தார், சாமியார். 

அதே போல பொன்னுசாமியும் இந்த வழக்கில் தன்னால் கொஞ்சம் துப்புத் துலங்கி இருக்கின்றது என்பதைக் காட்ட, காருடன் சேர்ந்து சில படங்கள் எடுத்துக் கொண்டார். அங்கு நடந்தவைகள் எல்லாவற்றையும், அருகிலிருந்த டீக்கடையிலிருந்து, ஒரு ஜோடிக் கண்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தன. 
                 
பிறகு, காரை மாருதி வொர்க் ஷாப்பிற்குத் திருப்பிக் கொடுத்துவிட்டு, ரமேஷுக்கு நன்றி சொல்லிவிட்டு, எ சா + சோணகிரி, அலுவலகம் திரும்பி, சோபனாவிடம் நடந்தவைகள் எல்லாவற்றையும் கூறினார்கள். 
                   
(தொடரும்) 
                            

1.7.11

தீனதயாளின் விலாசம் K 10

                                           
அத்தியாயம் 10: தீனதயாளின் விலாசம்! 

கா சோ: என்ன சாமீ - காரை ஓட்டிச் சென்றவர்கள் நிச்சயம் இவர்கள் இல்லை. யாரோ மாஸ்டர் பிளான் போட்டு, அதே இலவச விளம்பரங்கள் பேப்பரில் வந்திருந்த இவர்கள் பெயரையும், செல் எண்களையும் சொல்லிவிட்டு, காரைக் கிளப்பிக் கொண்டு போயிருக்கிறார்கள். 

எ சா: நீ சொல்வது சரிதான் சோபனா. அந்த இருவரும் இப்பொழுது வேறு ஊரில் அல்லது மாநிலத்தில் அல்லது வேறு நாட்டில் கூட இருக்கலாம். 

கா சோ: அப்போ வேறு கோணத்தில் இந்தக் கேஸை அணுகலாம் என்று தோன்றுகிறது. கார் காணாமல் போன இடத்திலிருந்து நமக்கு வேறு ஒன்றும் பிடி கிடைக்கவில்லை. கார் நின்றிருந்த இடத்திலிருந்து, கொஞ்சம் துப்பறியலாம். 

எ சா: சரி - கம்பியூட்டரில், நாம் வரிசையாக நமக்குத் தெரிந்த பாயிண்டுகளை எழுதலாம். 

- கார்த்திக் தன காரை விற்க விளம்பரம் கொடுக்கிறார்.

- காரை விளம்பரம் வெளியான அன்றே முதலில் ஒருவரும், பிறகு இருவரும் வந்து பார்வை இடுகிறார்கள். 

- இரண்டாவதாக வந்த இருவர், வேறு பெயர்கள், எண்கள் (அதே பேப்பரில் வேறு விளம்பரத்தில் வந்திருந்த விவரங்கள்) கொடுத்து,  கார்த்திக் எதிர் பார்ப்பதை விட அதிக பணம் கொடுத்து காரை ஓட்டிச் செல்கிறார்கள். ஆனால் டாக்குமெண்ட்ஸ் வாங்கிக்கொள்ளாமல், கார்த்திக்கிடமே விட்டுச் செல்கிறார்கள். 

- ஞாயிறு அன்று கார்த்திக்கிடமிருந்து ஓட்டிச் செல்லப்பட்ட கார், வேறு நிறம் வேறு பதிவு எண் மாற்றப்பட்டு, புதன் அன்று மாலையில் ஊருக்கு வெளியில் நிறுத்தப்படுகிறது. 

- அந்தக் காரில் வெள்ளியன்று வெடிகுண்டு பொருத்தப்படுகிறது. சற்று நேரத்தில் வெடிக்கிறது. 

கா சோ: சரி. இப்போ சில கேள்விகள்: 

# காரின் இரண்டாவது சாவி யாரிடம் உள்ளது? (எ சா - கார்த்திக்கிடம் ஃபோனில் பேசிவிட்டு, இரண்டாவது சாவி, கார்த்திக்கிடமே உள்ளது என்று உறுதி செய்துகொள்கிறார்)  
          

# காரை ஓட்டிச் சென்றவர்களிடமிருந்து, தீனதயாள் கைக்கு, காரின் சாவி எப்படி கிடைத்தது? 
   
# தீனதயாள் குண்டு வெடிப்பில் இறந்ததற்குப் பிறகு ஏன் இதுவரை யாரும் அவரைத் தேடவில்லை? 


எ சா: கார் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட நேரத்திலிருந்து, அதை தீனதயாள் வந்து தீண்டும் வரை இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. காரை ஓட்டிச் சென்றவர்கள், உடனே அந்தக் காரையும், அதன் சாவியையும் யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்றால், நேரே சென்று தீனதயாளிடம் இரண்டையும் கொடுத்துவிட்டு, கண்காணாத இடத்திற்குச் சென்றிருக்கலாம். ஆனால், இங்கோ காரை நிறுத்திவிட்டு, சாவியைக் கொண்டு போய் ......

கா சோ: சாமீ - திரும்பவும் இந்த சீக்வென்சை சொல்லுங்க? 

எ சா: (சொல்கிறார்.) 

கா சோ : சாமீ உடனே கிளம்புங்க. கார் நின்றிருந்த இடத்துக்குப் போவோம். நாம் அந்த இடத்திற்குப் பக்கத்தில் உள்ள கூரியர் செண்டர்களைப் பார்த்து கொஞ்சம் விவரங்கள் சேகரிக்க வேண்டும். 

+++++++++++++++++
    
முதல் கூரியர் கம்பெனி - கார் நின்றிருந்த இடத்திற்குப் பின்னால் ஐநூறு மீட்டர்கள் தள்ளி ஒரு சந்தில் இருந்தது. புதன் கிழமையன்று அதில் யாரும் வந்து லோக்கல் கூரியர் எதுவும் அனுப்பவில்லை என்று தெரிந்தது. 

இன்னொரு கூரியர் கம்பெனி, கார் நின்றிருந்த இடத்திற்கு முன்னால், முன்னூறு மீட்டர் தொலைவில், மெயின் ரோடிலேயே, இருந்தது. ஆமாம். அந்த புதன் கிழமை, மாலை ஏழு மணி சுமாருக்கு, இரண்டு பேர் வந்து, தீனதயாள் என்பவர் பெயருக்கு, ஒரு கார் சாவியை கூரியர் அனுப்பினார்கள். 
                       
"அது கார் சாவி என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" 

"நாங்க கூரியர் கவர் பெற்றுக் கொள்ளும் பொழுது, அது கடிதமா அல்லது பொருளா - பொருளாக இருந்தால் ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருளா என்றெல்லாம் கேட்டு வைத்துக் கொள்வோம். நாளை எங்களுக்கு ஒன்றும் பிரச்னை வரக்கூடாது அல்லவா? அதனால்தான். " 

"நான்தான் தீனதயாள் - எனக்கு அந்த கார் சாவி வந்து சேரவில்லை. அதில் என்னுடைய சரியான விலாசம்தான் எழுதி இருந்தார்களா என்று பார்க்கவேண்டும். அந்த கூரியர் ரசீதின் உங்கள் நகலைக் காட்டுங்கள்?" 
        
கூரியர் கம்பெனி ரசீதில் இருந்த தீனதயாளின் விலாசத்தை காசு சோபானாவின் அலைபேசி காமிரா ஒரு கிளிக் செய்து கொள்கிறது. அந்த விலாசத்தை வாய்விட்டுப் படித்த எ சா - "அட - டோர் நம்பர் தப்பாக - பழைய நம்பர் எழுதி இருக்கிறார்கள். - புதிய நம்பர் எழுதவில்லை. அதனால்தான் கார் சாவி எனக்கு வரவில்லை. சரி - நான் போய் இந்த விலாசத்திலிருந்து, அதைப் பெற்றுக்கொள்கிறேன். நன்றி."என்று சொன்னார் எ சா. பிறகு, அங்கிருந்து கிளம்பினர், கா சோ & எ சா.  
     
(தொடரும்)