திங்கள், 4 ஜூலை, 2011

பேசாம காரை உங்களுக்கே விற்றிருக்கலாம்! (K 11)

                                  
அத்தியாயம் பதினொன்று: "பேசாம காரை உங்களுக்கே விற்றிருக்கலாம்!"

சோபனாவிற்கு, சோணகிரியிடமிருந்து, ஃபோன். 

சோ: "பாஸ்?... மாருதி வொர்க் ஷாப்பில், காரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோரையும் படம் எடுத்துவிட்டேன். விவரங்களும் சேமித்துவைத்துள்ளேன். "

கா சோ: "வெரி குட். இந்தக் கேஸ் வெற்றிகரமாக முடிந்தால், உங்கள் பெண் ஈஸ்வரி கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்திவிடலாம். அந்த அளவுக்கு போனஸ் தருகிறேன் !" 

சோ: "தாங்க் யூ பாஸ். நான் இந்தப் படங்களை என்ன செய்வது?"

கா சோ: "கார்த்திக்கிடம் எல்லா படங்களையும் காட்டி, அதில் காரை ஓட்டிச் சென்ற இருவர் இருக்கின்றார்களா என்று கேட்டு, இருந்தால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்."

சோ: "அப்படியே ஆகட்டும் பாஸ். அப்புறம் ரமேஷ் சார் வொர்க் ஷாப்புக்கு நாம் கேட்ட கருப்பு நிறக் கார் ஒன்று வந்துள்ளது. அந்த ஓனரிடம், நாளை மாலை வந்து வண்டியை டெலிவரி எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார் ரமேஷ்."

கா சோ: "ஓ அப்படியா? நல்லதாகப் போயிற்று! ரமேஷிடம், அந்தக் காரில், பொன்னுசாமி பார்த்த அந்த போலி பதிவு எண் பலகைகளை மாட்டைச் சொல்லுங்கள். எ சா இப்போ அங்கே வருவார். அந்தக் காரில் உங்களை ஏற்றி கார்த்திக் வீட்டிற்கும், பிறகு குண்டு வெடித்த ஸ்பாட்டுக்கும் போய், சில படங்கள் எடுப்பார். அதன் பிறகு, இன்றே அந்தக் காரை திருப்பிக் கொடுத்துவிடலாம்."

கேட்டுக் கொண்டிருந்த எ சாமியார், உடனே அலுவலகக் காரை எடுத்துக் கொண்டுக் கிளம்பத் தயாரானார். 

கா சோ: "சாமீ - மாருதி வொர்க் ஷாப் போய், அங்கு இருக்கின்ற கருப்பு நிற மாருதி எஸ்டீம் காரில் சோணகிரியை ஏற்றிக் கொண்டு, கார்த்திக் வீட்டிற்குப் போய் அவருக்குப் படம் காட்டிவிட்டு, பிறகு நம்ப கெம்பா ஸ்பாட்டுக்குக் காரைக் கொண்டு போய் நிறுத்தி, அதை எல்லா கோணங்களிலும் நிறைய படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பயன்படும்." 

எ சா: "சரி சோபனா - பொன்னுசாமியை டீக்கடை ஃபோனுக்கு அழைத்து, குண்டு வெடிப்பில் சேதமடைந்த கார் போல இன்னொன்று அங்கு வரும், அதற்குச் சரியான இடத்தை அடையாளம் காட்ட வேண்டும் என்றும் சொல்லிவிடு." 

கா சோ: "ஓ கே சாமீ.நாளை காலையில், நாம் தீனதயாளின் விலாசத்திற்குச் செல்வோம்."

#################### 

சோணகிரி கறுப்புக் காரை, தானே ஓட்டுவதாகச் சொன்னார். சரி என்று கூறி, எ சா காரில் முன்னால் கோ-டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். கார்த்திக்கின் வீடு வந்ததும், எ சா முதலில் இறங்கிக் கொண்டு, சோணகிரியை, காரை, பத்திரமாக பார்க் செய்து விட்டு உள்ளே வருமாறு கூறிவிட்டு, வீட்டிற்குள் சென்றார். 

கார்த்திக்: "வாங்க சாமி வாங்க. காரை ஓட்டிச் சென்றவர்களைக் கண்டு பிடித்துவிட்டீர்களா?" 

எ சா : "ஓட்டிச் சென்றவர்களைக் கண்டு பிடிப்பதைவிட, அவர்களை அம்பாக எய்தவர்கள் யார் என்பதைக் கண்டு பிடிப்பது சுலபமான செயல் என்று தோன்றுகிறது. இப்போ ஒருவர் வருவார், அவர் கிட்ட ...."

(தொடர்ந்து எ சா பேசுவதற்குள், சோணகிரி வீட்டினுள் நுழைகிறார். ) 

கார்த்திக்: "ஹலோ - நீங்களா? நான் பேசாமல் காரை உங்களுக்கே விற்றிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், இன்றைக்குப் பல பிரச்னைகள் இல்லாமப் போயிருக்கும். உங்க பேரு என்ன சொன்னீங்க? சம்பத் தானே?" என்றவாறு சோணகிரிக்கு அருகே வந்தார். 
     
சோணகிரி திடுக்கிட்டு, கார்த்திக்கைப் பார்த்து, "என் பெயர் சோணகிரி.. சம்பத் யாரு?" என்றார். கார்த்திக், அவரை அருகிலே வந்து பார்த்ததும் குழம்பிப் போய் " .... ஓ சாரி. நீங்க அவரு இல்லை. நான் தப்பாக நினைத்துவிட்டேன் - மன்னியுங்கள்." என்று சொல்லி, எ சா பக்கம் திரும்பி, "சாமீ இவர் யார்? நீங்க சொல்ல வந்தது இவரைப் பற்றியா?" என்று வினவினார். 

எ சா: "இவர் பெயர் சோணகிரி - எங்கள் அலுவலக மேனேஜர். இவர் மாருதி வொர்க் ஷாப்பில் உங்கள் கார் என்று சொல்லப்பட்ட காரைப் பார்க்க வந்தவர்களை படம் எடுத்துள்ளார். அந்தப் படங்களை எல்லாம் நன்றாகப் பார்த்து, அதில் காரை ஓட்டிச் சென்ற இருவரில் யாராவது இருக்கிறார்களா என்று சொல்லுங்கள். இவரை முதலில் பார்த்தபொழுது, இவரை யார் என்று நினைத்தீர்கள்?"

கார்த்திக்: " அதுவா? காரைப் பார்வையிட முதலில் ஒருவர் வந்தார், அவருடைய பெற்றோருக்காக காரை விலை குறைத்துக் கேட்டார் என்று சொல்லி இருந்தேனே, அவர் இவரைப் போலவே இருந்தார். ஒரு வாரம் கழித்து மீண்டும் ஃபோன் செய்யச் சொல்லியிருந்தேன். ஏனோ அவர் அதற்குப் பிறகு கால் செய்யவில்லை. ஒருவேளை அவருக்கு, அவர் இஷ்டப்பட்ட வகையில் விலை குறைவாக கார் ஏதாவது கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றேன்." 

எ சா: "இவர் அவர் இல்லை என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?"

கார்த்திக்:"இவருக்கு தலையில் ஆங்காங்கே நரை முடிகள் காணப்படுகிறது. தவிர, இவருக்கு வயது அதிகம் போலத் தெரிகிறது."

எ சா: "சம்பத் இவருடைய தம்பி என்றாலோ, அல்லது இவருக்குத் தலையில் கோத்ரேஜ் டை அடித்துவிட்டால், இவர்தான் சம்பத் என்றோ நம்புவீர்களா?"

கார்த்திக்: "சம்பத் இவருடைய தம்பி என்றால் நம்புவேன்; ஆனால் டை அடித்தால் நம்ப மாட்டேன் - அவருடைய குரலும், இவருடைய குரலும் முற்றிலும் மாறுபட்டு உள்ளன."

பிறகு சோணகிரி காட்டிய எல்லாப் படங்களையும் பார்த்தார். 'அந்த இருபத்தைந்து படங்களில் எதுவுமே பார்த்த முகமாக இல்லை' என்றார். 

எ சா & சோணகிரி விடை பெற்று, கெம்பா ஸ்பாட்டுக்குக் கிளம்பினர்.
=========================

கெம்பா ஸ்பாட்டில், பொன்னுசாமி உதவியுடன் காரை குண்டு வெடித்த அதே இடத்தில் நிறுத்தி, பல கோணங்களில் படங்கள் எடுத்தார், எ சா. 
                     
"சாமீ நான் செஞ்ச ஒரே உருப்படியான வேலை, இந்தக் கார் கிடைக்கும் வரை வொர்க் ஷாப்பில் காத்திருந்து, இதற்குப் போலி நம்பர் ப்ளேட்கள்  தயார் செய்து, அவைகளை மாட்டி, இங்கே ஓட்டி வந்ததுதான். அதனால, என்னைக் காரின் பக்கத்தில் நிறுத்தி, கொஞ்சம் படம் எடுங்க." என்றார். கேட்டுக் கொண்டபடி, படம் எடுத்தார், சாமியார். 

அதே போல பொன்னுசாமியும் இந்த வழக்கில் தன்னால் கொஞ்சம் துப்புத் துலங்கி இருக்கின்றது என்பதைக் காட்ட, காருடன் சேர்ந்து சில படங்கள் எடுத்துக் கொண்டார். அங்கு நடந்தவைகள் எல்லாவற்றையும், அருகிலிருந்த டீக்கடையிலிருந்து, ஒரு ஜோடிக் கண்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தன. 
                 
பிறகு, காரை மாருதி வொர்க் ஷாப்பிற்குத் திருப்பிக் கொடுத்துவிட்டு, ரமேஷுக்கு நன்றி சொல்லிவிட்டு, எ சா + சோணகிரி, அலுவலகம் திரும்பி, சோபனாவிடம் நடந்தவைகள் எல்லாவற்றையும் கூறினார்கள். 
                   
(தொடரும்) 
                            

10 கருத்துகள்:

  1. சுவையாக விறுவிறுப்பாகச் செல்கிறது. கார் தொடர்ந்து ஓடட்டும்.

    பதிலளிநீக்கு
  2. காரில் (கதையில்) இப்போ தான் வேகம் வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
  3. குரோம்பேட்டைக் குறும்பன்4 ஜூலை, 2011 அன்று 4:14 PM

    இடது சைடு பாரில். கீழே 'அடிக்கடி நாங்க மேய்வது' பகுதியில் என்னுடைய வலைப்பூ வைக காணோமே?

    பதிலளிநீக்கு
  4. கு கு - தலைப்பைப் படிக்கவில்லையா நீங்க? அவை யாவும் 'நாங்க' அடிக்கடி மேயும் வலைப பூக்கள். 'நீங்க' அடிக்கடி மேயும் வலைகள் இல்லை! - ஹி ஹி சும்மாச் சொன்னோம். உங்கள் வலை பெயர், சுட்டி ஆகியவை அனுப்பவும்.

    பதிலளிநீக்கு
  5. என்னது திகில் கதையெல்லாம்.. எப்போவிலேருந்து..?

    பதிலளிநீக்கு
  6. தேனம்மை - திகில் கதையா? எங்கே? நாங்க எல்லோரும் ரொம்ப பயந்த சுபாவம் இருக்கறவங்க. இந்தப் பதிவில், படம் மட்டும்தான் திகில். மீதி பதின்மூன்று அத்தியாயங்களும் (இடது பக்கத்தில் சுட்டிகள் பார்க்கவும்) வெறும் பிகில்தான்!

    பதிலளிநீக்கு
  7. ஜோடிக் கண்கள் இவையா? பயமாக இருக்கிறதே?!

    பதிலளிநீக்கு
  8. அங்கு நடந்தவைகள் எல்லாவற்றையும், அருகிலிருந்த டீக்கடையிலிருந்து, ஒரு ஜோடிக் கண்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தன. //

    பார்க்கலாம்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!