புதன், 6 ஜூலை, 2011

சோணகிரியை லாக்கப்புல போடுங்க! :: K13

                                   
அத்தியாயம் 13: "சோணகிரியை லாக்கப்புல போடுங்க" 

மருந்துக் கடைகாரரிடம், தங்களை அறிமுகப் படுத்திக்கொண்ட கா சோ வும் எ சா வும், தங்கள் விசாரணையைத் தொடர்ந்தனர். 

கா சோ: "அது எப்படி கிழமை, நேரம் எல்லாம் அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்?"

ம க கா: "இந்தப் படத்துல இருக்கற மனிதர், அடிக்கடி இந்தக் கடையில் அம்ருதாஞ்சன் வாங்குவார். தலைவலியா என்று கேட்டால் - இல்லை அம்ருதாஞ்சன் வாசனை தனக்குப் பிடிக்கும் என்பார். தவிர, அவர் இந்தக் கடையிலிருந்துதான் அடிக்கடி ஃபோன் பேசுவார்."

எ சா: "என்ன பேசுவார் யாருக்குப் பேசுவார் என்பது ஏதேனும் ஞாபகம் இருக்கின்றதா?"

ம க கா: "ரொம்பச் சின்னக் குரலில் பேசுவார். இவர் அதிகம் பேசமாட்டார். எதிர் முனையில் இருப்பவர் பேசுவதை உன்னிப்பாகக் கவனிப்பார், சில சமயங்களில், தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருக்கும் சிறிய குறிப்பு நோட்டில் குறிப்பு எழுதிக்கொள்வார்."

கா சோ: "அந்த வெள்ளிக்கிழமை என்ன நடந்தது?"


ம க கா: "அன்று மாலை மணி மூன்றுக்கு மேல் இருக்கும். மூன்றரை கூட ஆகி இருக்கும். அப்போ ஒருவர், இந்தக் கடைக்கு ஃபோன் செய்ய வந்தார். அவரை இந்த ஏரியாவில் இதுவரைப் பார்த்ததில்லை. ரொம்பப் பதற்றத்தில் இருந்தவர் போல காணப்பட்டார்."

எ சா: "அப்புறம்?"

ம க கா: "அவர் யாருக்கோ ஃபோன் செய்ய மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டு இருந்தார். ஆனால் மறுமுனையில் யாரும் ஃபோனை எடுக்கவில்லை என்று அலுத்துக் கொண்டார்."

எ சா: "பிறகு?"

ம க கா: "ஃபோனை மீண்டும் மீண்டும் பயன் படுத்துவதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, ஒரு கிழவர் சாகக் கிடக்கிறார். என்னுடைய டூட்டி முடிந்து நான் போவதற்குள், அவரைக் கவனித்துக் கொள்ள, வரப் போகின்ற புதிய நபர் ஒருவரிடம் விவரங்கள் கூறிவிட்டு, எனக்கு ஒரு அவசர வேலை இருப்பதால், நான் செல்லவேண்டும். ஆனால் இந்த ஆள் வீட்டிலும் இல்லை, அவரிடம் மொபைலும் இல்லை, இன்னும் ஒரே ஒரு கால் - டாக்டரிடம் பேசிவிட்டு, நான் கிளம்புகிறேன். உங்கள் நேரத்தை வீணாக்கியதற்கு, இந்த நூறு ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி நூறு ரூபாய் கொடுத்தார்."

எ சா: "பிறகு டாக்டருக்கு ஃபோன் செய்தாரா?" 

ம க கா: "ஆமாம். டாக்டரிடம் பேசியதும், ஒருவாறாக நிம்மதியடைந்து காணப்பட்டார். பிறகு, என்னிடம். அப்பாடி ஒரு கவலை தீர்ந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒருவர் இந்தக் கடைக்கு வருவார். அவர் கிழவர் உடல்நிலை பற்றியும், அடுத்த வேளை மருந்து எப்பொழுது என்றும் கேட்டுக் கொண்டு போய், அதற்குத் தகுந்தாற்போல் செய்துவிடுவார். ஆனால் வருபவர் யார், எப்படி இருப்பார் என்று எனக்குத் தெரியாது. யாராவது வந்து, 'கிழவர் மருந்து குடித்தாரா? அடுத்த வேளை மருந்து எத்தனை மணிக்கு?' என்று கேட்டால், அவருக்கு நான் பதில் சொல்கிறேன்.' என்றார்."

கா சோ: "அப்புறம்" 

ம க கா: "அதற்குச் சற்று நேரம் கழித்து, இந்த ஆள் வந்தார். அவரைப் பார்த்ததும், ஒரு அம்ருதாஞ்சன் பாட்டிலை எடுத்துக் கொண்டே, என்ன வேண்டும்? என்று கேட்டேன். ஆனால், அவர், 'கிழவர் மருந்து குடித்தாரா? அடுத்த வேளை மருந்து எத்தனை மணிக்கு?' என்று கேட்டார். நான் உடனே, அந்தப் புதியவரைப் பார்த்தேன். அவர், 'கிழவர் மருந்து குடித்து வருகிறார், அடுத்த வேளை மருந்து, இன்று இரவு ஏழு மணிக்கு' என்றார். உடனே, இவரும் நானும், ஒரே நேரத்தில் வாட்சைப் பார்த்தோம். அப்பொழுது மாலை மணி நான்கு." 

எ சா: "அதற்குப் பிறகு என்ன நடந்தது?"

ம க கா: "இவர் உடனே அவசரம் அவசரமாக வீட்டை நோக்கிச் சென்றார். அதற்குப் பின் இவர், சற்று நேரம் கழித்து, ஒரு ஆட்டோவில் இந்தப் பக்கம் சென்றதைப் பார்த்தேன்."

கா சோ: "டெலிஃபோன் செய்ய வந்தவர்?"

ம க கா: "அவர், தகவல் சொன்னதும், உடனே கிளம்பி சென்றுவிட்டார்." 

எ சா: "சரி என்னுடைய செல்லில் உள்ள சில ஃபோட்டோக்களைக் காட்டுகின்றேன். அவர்களில் யாரையாவது நீங்க இந்தப் பக்கம் அடிக்கடி பார்த்திருக்கின்றீர்களா என்று பார்த்துச் சொல்லுங்கள்." என்று சொல்லி, கார்த்திக் வீட்டுப் பக்கம், மாருதி வொர்க் ஷாப் பக்கம் வந்தவர்களை, சோணகிரி எடுத்த ஃபோட்டோக்கள் எல்லாவற்றையும் காட்டினார். 

ம க கா: எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்தபின் -- "ஊம் ஹூம் - இவர்களில் யாரையும் நான் இந்தப் பகுதியில் பார்த்ததில்லை... சார் - கொஞ்சம் இருங்க! இது எல்லாம் என்ன ஃபோட்டோ?" என்று கேட்டார், எ சா வேகமாக விரலால் தள்ளிய சில ஃபோட்டோகளைப் பார்த்து. 

எ சா: "இந்த ஃபோட்டோ எல்லாம் நாங்க ஒரு கார் விபத்து நடந்த இடத்தில், நேற்று எடுத்தவை. இதுல இருக்கறவங்க எல்லோரையும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்."

ம க கா: "சார் இதோ இந்தக் காருக்குப் பக்கத்தில் நிற்பது யாரு?"

எ சா: "ஏன் கேட்கிறீர்கள்?" 

ம க கா: "சார் அந்த வெள்ளிக் கிழமை, இங்கே வந்திருந்து, கிழவர் உடல் நிலை பற்றிக் கூறி, அடுத்த வேளை மருந்து பற்றிக் கூறி, எனக்கு நூறு ரூபாய் கொடுத்துச் சென்றவர், இவர்தான்" என்றார், சோணகிரியின் படத்தைக் காட்டி. 

கா சோ உடனே, கடைக்கு சற்றுத் தள்ளி, அந்தப் பக்கம் போய் சோணகிரியை ஃபோனில் அழைத்து, அவரிடம் ஐந்து நிமிடங்கள் ஏதோ பேசினார். சோணகிரி அலுவலகத்தில் இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்திக்கொண்டார். 
          
             
அதற்குப் பிறகு, கா சோ, இன்ஸ்பெக்டர் ரங்கனை ஃபோனில் அழைத்து, "ஆபீஸ்ல இருக்கற சோணகிரியை, உடனே பிடித்து லாக் அப்பில் போடுங்க. அவருடைய வீட்டுக்கு காவலாக இரண்டு போலீஸ்காரர்களை மஃபடியில் அனுப்பி, சந்தேகப் படும்படி யாரு அவர் வீட்டருகில் நடமாடினாலும் அவர்களை கைது செய்து போலீஸ் லாக் அப்பில் வையுங்கள். அவருடைய பெண் ஈஸ்வரிக்கு ஃபுல் போலீஸ் ப்ரொடெக்ஷன் கொடுங்க. முழு விவரங்களும் பிறகு ஃபோனில் சொல்கிறேன்" என்றார்.   
                    
(தொடரும்) 
                       

28 கருத்துகள்:

 1. எல் கே - ஹூம் நாங்க ஒண்ணும் சொல்றத்துக்கு இல்லே! :-(

  பதிலளிநீக்கு
 2. தமிழ் உதயம் - ஒருத்தர்தானா?

  பதிலளிநீக்கு
 3. சார்! இந்தக் 'கே' யைத் தேடியை நான் தொடர்வதற்கு மிஸ் பண்ணிவிட்டேன். கொஞ்சம் மு.க.சுருக்கம் போட்டீங்கன்னா நல்லா இருக்கும். ;-))

  பதிலளிநீக்கு
 4. ஆர் வி எஸ் சார்.
  முன்னுரையாக இரண்டு பதிவுகளும், பிறகு எட்டு அத்தியாயங்கள் எழுதி ஒரு கேப் விட்டு, ஒன்பதாவது அத்தியாயத்தில் ஒரு முன் கதை சுருக்கம் எழுதி, கதையைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். வலைப்பதிவின் பிரதான பக்கத்தில், இடது பக்க சைடு பாரில் 'கே யைத் தேடி' கதையின், எல்லா பதிவுகளின் சுட்டியும், வரிசைக் கிரமமாகக் கொடுத்துள்ளோம். அந்த சுட்டிகளின் மீது சொடுக்கினால், அந்தந்த அத்தியாயங்களைப் படிக்கலாம். ஆர்வத்திற்கு எங்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. ஆனாலும்
  இவ்வளவு அநியாயத்துக்கு
  ரகசியம்
  காக்கப்படாது சார் நீங்க

  பதிலளிநீக்கு
 6. ஏ ஆர் ஆர் சார் - அநியாய ரகசியம் எது? சோணகிரி சமாச்சாரமா?

  பதிலளிநீக்கு
 7. அம்ருதாஞ்சன் பூசுறவங்க இல்ல அந்த வாசனை வாற பக்கமெல்லாம் விசாரிக்கப்போறீங்க !

  பதிலளிநீக்கு
 8. ஹேமா - தீனதயாள் என்கிற தீனா என்கிற தீவிரவாதி, அவருக்கு வருகின்ற கடிதங்களைப் படித்ததும், அவற்றை பேப்பர் ஸ்ரெட்டேர் மெஷினில் விட்டுப் பொடிப் பொடியாக்கி, அந்தப் பேப்பர் துண்டுகளையும் தீ இட்டு எரித்துவிடுவார். (யாருக்கும் எந்த நேரத்திலும் எந்த ஆதாரமும் கிடைக்கக் கூடாது என்பதால்.) அவருடைய அறையில் அவர் பேப்பர்களை எரிக்கும் பொழுதெல்லாம், அந்த பேப்பர் பொசுங்கும் வாடை வெளியே பரவாமல் இருக்க, அம்ருதாஞ்சனை ஆங்காங்கே தடவி, அந்த வாசனை அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வார். இதுதான் அம்ருதாஞ்சன் ரகசியம்.

  பதிலளிநீக்கு
 9. விறு விறுப்பான நடைக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. கதை நல்ல விறுவிறுப்பு, அமிர்தாஞ்சன் தடவிக் கொண்டது போல! அடுத்த பதிவையும் உடனே போட்டுடுங்க.

  பதிலளிநீக்கு
 11. பதிவாசிரியருக்கு ஒரு மெயில் அனுப்பினோம். "அடுத்த அத்தியாயம் எங்கே?"

  அவர் ஒரு மெயில் அனுப்பினார்: "சென்ற பதிவிற்கும், இந்தப் பதிவிற்கும் இன்னும் அப்பாதுரை கமெண்ட் போடவில்லை. அவர் கமெண்ட் போட்டால்தான் அடுத்த அத்தியாயம் அனுப்புவேன். இல்லையேல் மீதிக் கதையை வெள்ளித் திரையில் - சாரி வெறும் திரையில் காண்க .... அல்லது காணாமல் போங்க!"

  (அப்பாதுரை எங்கே இருந்தாலும் மேடைக்கு அழைக்கப்படுகிறார்!)

  பதிலளிநீக்கு
 12. சில பேருக்கு அப்படி ஒரு முகராசி! அப்ப இன்ஸ்பெக்டர் ரங்கனை முதல்ல அப்பாதுரையை தேடி கொண்டார சொல்லுங்க. கதை நகர வேண்டாமா! சந்தடி சாக்குல சோணகிரி தப்பிச்சுட போறாரு.

  பதிலளிநீக்கு
 13. மீனாக்ஷி ஒரு ஜோக் ஞாபகம் வருது.
  ஒரு மெக்கானிகல் இஞ்சினியர், எலெக்ட்ரிகல் இஞ்சினியர், ஒரு பி ஏ (எகனாமி) படித்த எகனாமிஸ்ட் எல்லோரும் ஒன்றாக ஒரு ஆளில்லாத தீவில் மாட்டிக் கொண்டர்ர்களாம். அவர்களிடம் ஒரு உணவுப் பொருள் கொண்ட தகர டப்பா இருந்தது. அதைத் திறப்பதற்கான உபகரணங்கள் ஏதும் இல்லை. மெக்கானிகல் இஞ்சினியர், மூன்று கற்களை அடுப்பு போல அமைத்து, சருகு இலைகளை அதில் போட்டு, அதன் மீது டப்பாவை வைத்து, சருகுகளுக்கு தீ மூட்ட சிக்கி முக்கி கற்கள தேடிச் சென்றாராம். வெப்பம் தாங்காமல் டப்பா வெடித்துத் திறக்கும் என்பது அவர் தியரி.
  எலெக்ட்ரிகல் என்ஜினியர், தன்னிடமிருந்த டார்ச் லைட், செல் ஃபோன் இவற்றின் பாட்டரிகளிலிருந்து எப்படியாவது நெருப்பு / உஷ்ணம் ஏற்படுத்த முடியுமா என்று முயற்சி செய்துகொண்டிருந்தார்.

  எகனாமிஸ்ட் - ரொம்ப கூலாக சொன்னார்: "Assume a tin opener."
  (ஒரு தகரத் திறப்பான் நம்மிடம் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்வோம்...) :))

  அந்த வகையில், அப்பாதுரை கமெண்ட் போட்டுவிட்டதாக அஸ்யூம் செய்துகொள்ளுங்கள் என்று சொன்னால், பதிவாசிரியர் செவிசாய்க்க மாட்டேன் என்கிறார். அப்பாதுரை - சட்டுன்னு வாங்க. இல்லையேல், 'என்ன ஆகுமோ?, ஏது ஆகுமோ?' என்று இந்தக் கதையைப் படிக்கின்ற அஞ்சாறு பேருங்க கவலையில் இளைத்துப் போய்விடுவார்கள் போலிருக்கு!! :))

  பதிலளிநீக்கு
 14. நல்ல வேளை. "கொஞ்சம் இருங்க. நான் இந்த டப்பா கிட்டே பேசிப் பார்க்கிறேன்" என்று சொல்லவில்லை !

  பதிலளிநீக்கு
 15. நல்ல கதைதான்! :)
  // 'என்ன ஆகுமோ?, ஏது ஆகுமோ?' என்று இந்தக் கதையைப் படிக்கின்ற அஞ்சாறு பேருங்க கவலையில் இளைத்துப் போய்விடுவார்கள் போலிருக்கு!! :))//
  நானாவது, இப்படி எல்லாம் இளைக்கறதாவது! சான்சே இல்லை! :)))

  பதிலளிநீக்கு
 16. சரி, கதையைப் படிக்கிற நாலஞ்சு பேருங்க(!) கவலையில் இளைச்சுப் போயிடுவாங்க .... :))))

  பதிலளிநீக்கு
 17. என்னங்க! அதுக்குன்னு என்னை இப்படி கழட்டி விட்டுடீங்க!
  கதையை படிக்கற அஞ்சாறு பேர்ல நாலைஞ்சு பேர் இளைச்சு போய்ட போறாங்கன்னு எழுத கூடாதா?
  (ரொம்பத்தான் படுத்தறேனோ! சரி, இதோட நிறுத்திக்கறேன்! :) )

  பதிலளிநீக்கு
 18. சரி,
  கதையை படிக்கற அஞ்சாறு பேர்ல, நாலைஞ்சு பேர் இளைச்சு போய்ட போறாங்க....
  துரை, துரை, துரை - சாட்சிக் கூண்டுக்கு வரவும் ... :))

  பதிலளிநீக்கு
 19. சரி, படிக்கிற நாலைந்து பேர்ல ஒரு ஐந்தாறு பேர் இழைப்பதாகவே கொள்வோம். அதனாலென்ன ?

  பதிலளிநீக்கு
 20. பத்மநாபன் சார். நாங்க சமாதானம் சொல்லி, பதிவாசிரியரை, மீதியுள்ள மூன்று அத்தியாயங்கள் எழுதிக் கொடுக்கச்சொல்லி, கூப்பிட்டு வந்து உட்கார வெச்சோம். ஆஹா பேஷ் பேஷ் - இருபத்து நான்காவது கமெண்ட் என்று ஆசையோடு கிளிக்கிப் பார்த்த பதிவாசிரியர், உங்க கமெண்ட் படித்தவுடன், வெறுத்துப் போய் ஓடிவிட்டார். அப்பாதுரை எங்கே இருந்தாலும், உடனே .....

  பதிலளிநீக்கு
 21. கே யை பொறுத்த வரை அப்பாதுரை வெகு தூரம் ஓடிவிட்டார் ..நீங்கள் கூப்பிட கூப்பிட இன்னமும் வேகம் எடுப்பது போல் தெரிகிறது... விடாதீர்கள் கே யை தேடுகிறீர்களோ இல்லையோ அப்பாதுரையை முதலில் பிடிப்போம்....

  பதிலளிநீக்கு
 22. நீங்க குமரன் குன்றம்ன்றீங்க.. எனக்கென்னவோ மேற்கு வர்ஜினியா காட்டுக்குள்ளாற கே ஜாடையில மனுசனையோ கரடியையோ மனுசக்கரடியையோ கரடிமனுசனையோ பாத்தாப்புல..

  கொஞ்சம் காணாமப் போனா நான் தான் கேனுடுவீங்களோனு பயம்.. வா இப்படி, வந்தேன்.

  பதிலளிநீக்கு
 23. கதை அளக்கும் ஆசிரியரே - அப்பாதுரை வந்தாச்சு, கருத்தும் பதிஞ்சாச்சு - அப்புறம் என்ன? உம்ம்ம்ம்ம் - மேலே எழுதுங்க!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!