செவ்வாய், 5 ஜூலை, 2011

நான்தான் தீனதயாளன்! :: K 12

                             
அத்தியாயம் 12: "நான்தான் தீனதயாளன்!"

காலையில், ஹெட் லைன்ஸ் டுடேயில், பிரம்மகுமாரி - சகோதரி ஷிவானி கூறியதைக் கேட்டு, பார்த்து முடித்ததும், வீட்டைவிட்டு கிளம்பினார், எ சாமியார். வழியில், கா சோ தன வீட்டு வாசலில், காத்திருந்தார். அவர் காரில் ஏறிக்கொண்டதும், கார், நேரே கெம்பா இடத்திற்கு அருகே சென்று, டூட்டி முடித்திருந்த பொன்னுசாமியை காரில் ஏற்றிக் கொண்டார்கள். 

தீனதயாளின் விலாசத்தை, தன்னுடைய ஜி பி எஸ் மொபைலில் பார்த்தவாறு, எங்கே திரும்பவேண்டும் என்று எல்லாம் வழி சொல்லிக்கொண்டு வந்தார் சோபனா. 

அந்த விலாசத்திற்கு. வந்தாயிற்று. அமைதியாக இருந்தது வீடு. அக்கம் பக்கம் நடமாட்டம் எதுவும் இல்லை. அங்கே ஒரு அமானுஷ்யமான அமைதி குடியிருந்ததாகத் தோன்றியது. 

கதவுக்கு அருகே இருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு, காத்திருந்த நேரத்தில், கா சோ வும் எ சா வும், 'யார் வந்து கதவைத் திறப்பார்களோ? அவர்களுக்கு தீனதயாள் இறந்தது தெரியுமா அல்லது தெரியாதா? விவரத்தை சொன்னவுடன் அதிர்ச்சி அடைவார்களோ?' என்றெல்லாம் பலவித எண்ணங்கள் மனதை அரிக்க .... 

கதவு திறந்தது. நடுத்தர வயதுடன், முன் வழுக்கையுடன், லுங்கியணிந்த அந்த குண்டு மனிதரைப் பார்த்தபடி ... 

எ சா: "இங்கே, தீனதயாள் என்று ......"

க தி: "உள்ளே வாங்க, நான்தான் தீனதயாளன். உங்களுக்கு என்ன வேண்டும்?"

எ சா & கா சோ - சொல்வதறியாமல் திகைத்து நின்றனர். 

பொன்னுசாமி:"நாங்க தேடிவந்த தீனதயாள், ஒல்லியான உருவம், பார்க்க சோளக்கொல்லை பொம்மை போல இருப்பார்."

தீ த: "ஓ? நீங்க தீனா தம்பியைக் கேக்குறீங்களா? அவரு மாடியில குடி இருக்காரு. ரொம்ப நல்ல தம்பி, தங்கக் கம்பி."

எ சா: "அந்தத் தங்கக் கம்பி இன்னமும் வீட்டுலத்தான் இருக்குதா அல்லது கம்பி நீட்டிடுச்சா?"

தீ த: "பெரியவரே அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். அவரு ரொம்ப தரும சிந்தனை இருப்பவர், யார் வந்து என்ன கேட்டாலும், ஜாதி மத இன வித்தியாசம் பார்க்காமல் வாரி வழங்குபவர். அவரு அடிக்கடி வெளியூர்  போயிடுவாரு. ஒரு மாதத்தில் பத்துப் பதினைந்து நாட்கள் வெளியூர் டூர் போயிடுவாரு. இப்பவும், எங்கேயோ போயிருக்காரு; இன்னும் கொஞ்ச நாளில் திரும்பி வருவாரு."

எ சா: "அவரு என்ன வேலை பார்க்கிறார்?"

தீ த: "மோட்டார் மெக்கானிக்."

எ சா: " உறவு, சொந்த பந்தங்கள்?"

தீ த: "எதுவும் கிடையாது."

எ சா: "அவருடைய அடையாள் அட்டையை, நீங்க பாத்திருக்கீங்களா?"

தீ த: "இதெல்லாம் ஏன் நீங்க கேட்குறீங்க? நீங்க யாரு? போலீசா?"

கா சோ & எ சா தங்கள் அடையாள அட்டையை காட்டுகிறார்கள். "பிரைவேட் டிடெக்டிவ்ஸ், போலீஸ் ஆசீர்வாதமும் இருக்கிறது. இன்ஸ்பெக்டர் ரங்கன் அனுப்பினார்." 

தீ த: "உட்காருங்க. அவருடைய அடையாள அட்டையை, தூரத்திலிருந்து பார்த்திருக்கின்றேன் அது வந்து, ....."

பொன்னு: "பச்சைக்கிளி கலர்ல இருக்கும்."

தீ த: "ஆமாம்! உங்களுக்கு எப்படித் தெரியும்?"

பொன்னு: "அவரு கார் விபத்தில் செத்துப் போவதற்கு முன்பு, பார்த்தேன்."

தீ த: "ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கார் தீப்பிடித்து எரிந்து போனதாக பேப்பரில் படித்தேனே - அதில் ஒருவர் ... ஓ மை காட்! ஓ மை காட்! (கண்ணீர் துளிர்க்கிறது, தீ த கண்களில்.) "இருங்க - அவருடைய மாடி போர்ஷன் சாவி ஒன்று என்னிடமும் இருக்கு. அவருடைய புகைப் படம் ஒன்று மேசையின் மீது இருப்பதைப் பார்த்திருக்கின்றேன். அதைப் பார்த்து, அவர்தானா இறந்தது என்று உறுதி செய்துகொள்வோம்." 

மாடி அறை திறக்கப்பட்டது. 

அறையின் உள்ளே, எல்லாம் வெகு நேத்தியாக மடித்து வைக்கப் பட்டிருந்தது. பேப்பர் பொசுங்கிய மனம் லேசாக வந்தது. அந்த மணத்தையும் அமுக்கி, அம்ருதாஞ்சன் வாடை, அந்தப் போர்ஷன் முழுவதும் வியாபித்திருந்தது. அலமாரியில், பல காலி அம்ருதாஞ்சன் பாட்டில்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. எந்த நேரமும், காலி செய்துகொண்டு கிளம்பத் தயாராக இருந்தது போல ஒரு தோற்றம். 
        
மேசை மீது இருந்த படத்தைப் பார்த்த பொன்னுசாமி, சோபனாவிடம், 'அவர்தான். சந்தேகமே இல்லை' என்றார். மேசை மீது ஃபோட்டோவுக்குப் பக்கத்தில், ஒரு சிறிய இயந்திரம் இருந்தது. பார்த்ததுமே தெரிந்தது - அது ஒரு பேப்பர் ஸ்ரெட்டர் மெஷின்.   
                     

அறையில் விளக்குகளை ஆன் செய்து, தீனாவின் போட்டோவை, பல கிளிக்குகள் கிளிக்கிக் கொண்டனர், எ சா & கா சோ. 

எ சா: "சரி, ஆழமாக அறையை சோதனை இட, எங்களுக்கு உரிமை இல்லை; போலீஸ் தடவியல் ஆட்கள் அதைப் பார்த்துக்கொள்வார்கள். வா சோபனா - போகலாம்." 

++++++++++++++++++++++++++++++

வெளியில் வந்ததும் கா சோ கேட்டார். 

கா சோ: "என்ன சாமி? அடுத்தது என்ன? "

எ சா: "தீனா தம்பி, அருகில் எந்தக் கடையில் அடிக்கடி அம்ருதாஞ்சன் வாங்கினார் என்று பார்த்து, அந்தக் கடையில் கொஞ்சம் விசாரணை செய்யவேண்டும்." 

காரில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த அவர்கள் கண்ணில், வீதி திரும்பியதுமே, 'ராஜலக்ஷ்மி மெடிக்கல்ஸ்' என்னும் கடை தென்பட்டது. "பொன்னுசாமி நீங்க காரிலேயே உட்கார்ந்திருங்க. நாங்க போயி விசாரிச்சுட்டு வர்றோம்"  சரி என்றார், பொன்னுசாமி. 

கடைக்காரர், இவர்கள் இருவரையும் பார்த்து ஆவலுடன், 'என்ன வேண்டும்? என்று கேட்டார்.. 

எ சா : (தீனா படத்தைக் காட்டி), "இவரை நீங்க பார்த்திருக்கின்றீர்களா?" 

க கா: "ஆமாம்"

கா சோ: "அடிக்கடி வருவாரா?" 

க கா: "ஆமாம். "

கா சோ: "இவரை, எப்போ கடைசியாகப் பார்த்தீர்கள்?"  

க கா : "ஒரு வாரம் முன்பு, ஒரு வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு."

(தொடரும்) 
                 

7 கருத்துகள்:

  1. இதை எந்த ஆசிரியர் எழுதறார்னு மட்டும் சொல்லுங்க. அவர் வீட்டு முன்னாடி போராட்டம் பண்ணி முழுக் கதையும் vaangidaren

    பதிலளிநீக்கு
  2. இதை எழுதுபவர் யார் என்று, ஐந்து ஆசிரியர்களும் ஒருவரை ஒருவர் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓர் ஆசிரியரின் நெருங்கிய நண்பர் எழுதுகிறார் என்றும் ஒரு வதந்தி.

    பதிலளிநீக்கு
  3. ஓர் ஆசிரியரின் நெருங்கிய நண்பர் எழுதுகிறார் என்றும் ஒரு வதந்தி.////

    நல்லா கதையும் எழுதறிங்க. நல்லா கதையும் விடறிங்க.

    பதிலளிநீக்கு
  4. சுவாரஸ்யமான கதைக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. //இதை எழுதுபவர் யார் என்று, ஐந்து ஆசிரியர்களும் ஒருவரை ஒருவர் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓர் ஆசிரியரின் நெருங்கிய நண்பர் எழுதுகிறார் என்றும் ஒரு வதந்தி.///

    நம்மள இப்படி குழப்பத்திலேயே வைக்க ஏன் இப்படி ஆசைப்படுறிங்க தலைவரே, உங்களைத் தானே நம்பி இருக்கோம்

    பதிலளிநீக்கு
  6. இராஜராஜேஸ்வரி - நன்றி.
    ஏ ஆர் ராஜகோபாலன் - எழுதுபவர் யார் என்பதில்தானே குழப்பம்? கதையில் ஒன்றும் குழப்பம் இல்லையே?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!