Saturday, December 24, 2011

நானும் கச்சேரிக்குச் சென்றேன்...!நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலைச் சேர்ந்த மாருதி சபாவில்  21-12 புதன் கிழமை அன்று அபிமான காயத்ரி வெங்கட்ராகவன் கச்சேரி . இலவசம் என்பதால் இயன்றவரை வேகமாகச் சென்று விட்டேன்.    

போக்குவரத்து நெரிசலில் சிக்கி அங்கு அடையும்போது பதினைந்து நிமிடம் தாமதம் என்றாலும் காயத்ரி சமர்த்தாக நான் சென்று சேர்ந்த பிறகுதான் கச்சேரி தொடங்கினார்! நெகிழ்ந்து போனேன். அருகிலிருந்தவர் சொன்னார். "அவங்களே லேட்...கூட, தம்பூரா வேற மக்கர் பண்ணுது..." ச்சே...!
   
நடுவில் ரெண்டு முறை தம்பூராவைத் திருகித் திருகி சரி செய்து கொண்டுதான் கச்சேரி தொடர்ந்தது.   
   
சம்பிரதாயமாக நாட்டையில் பஞ்சரத்ன கீர்த்தனையின் முதல் பாடல் ஜெகதானந்தகாரகா வில் தொடங்கினார். தொடர்ந்து ஹம்சநாதம், கரகரப்ப்ரியா, வசந்தா என்று சரசரவென முன்னேறினார். கனராகமாக சந்காபரணம் எடுத்துக் கொண்டு மென் நடையில்  தொடங்கி ஜாலம் காட்டி முடித்தார். தனியில் உடனிருந்தவர்கள் கலக்கினார்கள். பெயர் விவரம் எல்லாம் கேக்கக் கூடாது! வயலின் எம் எஸ் அனந்தராமன் என்று சொன்னார் அருகிலிருந்த ஆர்வலர்.மிருதங்கம் கடம் யார் என்று அவருக்கும் நினைவுக்கு வரவில்லையாம்!
               
அப்புறம் பாடிய தேஷ் ராகமும், 'அயோத்தியக் கோமானைப்  பாடிப்பர' வும் மனத்தைக் கொள்ளை கொண்டன. ராகமாலிகை ஒன்று பாடி குறிஞ்சியில் நிறைவு செய்தார்.
               
தேஷ் பாடும்போது அருகிலிருந்த ஆர்வலர் (ரொம்ப ஆர்வம் போலும் கச்சேரிக்கு வரும் ஆர்வத்தில் பல் கூட விளக்காமல் வந்திருந்தார் என்பது ஒவ்வொரு பாடலுக்கும் அவர் அருகில் வந்து விளக்கம் சொல்லி சிலாகித்தபோது தெரிந்தது!)நாடோடி படத்தில் வரும் அன்றொருநாள் இதே நிலவில் பாடல் தேஷ்தான் என்றதும் ஏன் இந்தப் பக்கம் இருந்த சீனியர் "வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தில் வருமே, சிங்காரக் கண்ணே உன் அந்தப் பாடல் கூட தேஷ் தான்" என்றார். ஆர்வலர் முதலில் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பின்னர் அந்தப் பக்கம் திரும்பி பாடிப் பார்த்து விட்டு பெருந்தன்மையாக  ஒத்துக் கொண்டார்.
                 
நானும் என் அறிவைக் காட்ட எண்ணி, "எனக்கு இதில் முத்திரைப் பாடல் துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ' பாட்டுதான் சார்...மேலும் கனவே கலையாதே என்றொரு சமீபப் பாடல் கூட இருக்கு" என்றேன்.
                  
ஆமோதித்தவர் "பொல்லாதவன் படத்துல வரும் சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா பாட்டு கூட தேஷ்தான்" என்றார்.
                    
நான் இந்தப் பக்கம் திரும்பி பாடிப் பாடிப் பார்த்தும் சரியாகவரவில்லை. "அப்படியா" என்றேன் சந்தேகத்தோடு. 
                   
"ஆமாம் சார்...எம் எஸ் வி மன்னன் சார்....அந்தப் பாட்டுலேயே BGM பிரிந்தாவன சாரங்கா" என்றதும் சற்று தளளி அமர்ந்து கொண்டேன். இவ்வளவு புலமை எனக்கில்லை!
                              
ராகமாலிகையில் ரேவதி ராகம் வரும்போது "தீர்க்கசுமங்கலி படத்துல கடைசிப் பாட்டு தீர்க்க சுமங்கலி வாழ்கவே ரேவதி சார்...அப்படியே அழுதுடுவேன்" என்றார். எனக்கே அழுகை வரும் போல இருந்தது.    

கரகரப்ப்ரியாவும் வசந்தாவும் அவர் கண்டுபிடிக்கும் முன்பே நான் கண்டு பிடித்து விட்டேன் ன்பதில் எனக்குள் கொஞ்சம் பெருமை! நாங்களும் சொல்வோமில்லே...!

(இது இந்தக் கச்சேரியில் பாடியது அல்ல)   
மறுநாள் ஹைதராபாத் பிரதர்ஸ். போகவில்லை. சனிக்கிழமை சௌம்யா. வாய்ப்பு இல்லை. ஞாயிறு சாகேதராமன், போக வேண்டும். ஆர்வலர் கண்ணில் பட்டால் வேறு இடத்தில் அமர வேண்டும். என்ன ராகம் என்று என்னை என்னை கேட்கிறார். எனக்கு ரசிக்க மட்டும்தான் தெரியும்! 
     
பெரிய ஆட்கள் கச்சேரியை இலவசமாகத் தருவதால் மாருதி சபாவுக்கு எங்கள் பாராட்டுகள்!
    
அங்கு உணவு ஏற்பாடு அறுசுவை அரசு நடராஜன். கச்சேரிக்கு இடையில் எழ மனமில்லாததால் முடிந்ததும் வந்து பார்த்தால் வெறும் தோசையும் ஊத்தப்பமும் மட்டுமே கிடைத்தது. அபபடி ஒன்றும் சுகமில்லை!   

முதல் படம்  உதவி : நன்றி கூகிள், 'த ஹிந்து' 
                   

20 comments:

ராமலக்ஷ்மி said...

அறிவைக்காட்ட நானெல்லாம் எண்ணவே முடியாது. அப்படியொரு புலமை:)! அருமையாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்:)!

ராம்ஜி_யாஹூ said...

nice write up

தமிழ் உதயம் said...

தொடரட்டும் உங்கள் இசை சேவை.

Gopi Ramamoorthy said...

நைஸ். கொஞ்சம் காதில் புகை வருது:-)

கீதா சாம்பசிவம் said...

next subbudu?

ஹேமா said...

இசை மழையா இன்று.நனைந்தேன் !

கணேஷ் said...

கர்நாடக சங்கீதத்திற்கும் எனக்கும் ரொம்ம்ம்ப தூரம் ஸ்ரீராம் சார். அழகா சொல்லிருக்கீங்கன்றது மட்டும் புரியுது.

Ramani said...

சங்கீதம் குறித்து எதுவுமே தெரியாது
தங்கள் பதிவைப் படிப்பதற்கு அது தடையாய் இல்லை
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள் த.ம 5

shanmugavel said...

அனுபவத்தை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்,நன்று

ஜீவி said...

தேஷ் தானே?.. பேஷ்! பேஷ்!

குரோம்பேட்டையில் திருவையாறா?..

meenakshi said...

இப்பொழுது பிரபலமாகி கொண்டு வரும் நிறைய பேர் மிகவும் அருமையாக பாடுகிறார்கள். கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது. பதிவு உங்கள் பாணியில் கலக்கலாக இருக்கிறது. 'சீதம்மா, மாயம்மா' சூப்பர்! இந்த பாடலை எம்.எஸ். அவர்கள் பாடியதை கேட்கும் பொழுதெல்லாம் மனம் உருகி விடும்.

அப்பாதுரை said...

இப்பத்தான் முதல் தடவை கேட்கிறேன். நல்ல குரல் வளம்.
அறிமுகத்துக்கு நன்றி.

அப்பாதுரை said...

பங்க்லா தேஷுக்கும் இதுக்கு ஏதாவது சம்மந்தம் உண்டானு கேக்கச் சொன்னாங்க..

எங்கள் said...

ஈடுபாட்டோட தேஷ் பாடினா பங்களா கார் எல்லாம் கிடைக்கும்னு சொன்னாங்க....!

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

//"நானும் கச்சேரிக்குச் சென்றேன்...!"//

நானும், எங்கள் பிளாக், படிச்சேன்..

வானம்பாடிகள் said...

good one. :)

Lakshmi said...

அனுபவம் ரசனையுடன் சொல்லி இருக்கீங்க. இடையில் நகைச்சுவையும் கூட இருக்கு சீதம்ம மாயமா கண்ணை மூடிண்டு ரசிக்க வேண்டிய சுகானுபவம்.

குமரி எஸ். நீலகண்டன் said...

உங்கள் இசையார்வமும் இசையறிவும் உங்களின் செறிவான எழுத்தில் வெளிச்சம்.

HVL said...

எனக்கு இசையில் பரிட்சயம்கிடையாதுஎன்றாலும் படிப்பதற்கு சுவாரஸ்யமாய் இருந்தது

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!