Friday, June 29, 2018

வெள்ளி வீடியோ 180629 : நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ..


 
வேலை இல்லா திண்டாட்டத்தை வைத்து 1980 நவம்பரில் இரண்டு படங்கள் வெளிவந்தன.  ஒன்றுக்கு இளையராஜா இசை.  நிழல்கள் திரைப்படம். திராபை படம்.  இன்னொன்று மெல்லிசை மன்னர்.  படம் வறுமையின் நிறம் சிவப்பு. 
'வறுமை' படத்தில் மெல்லிசை மன்னர் ஒரு புதுமை செய்திருந்தது எல்லோருக்கும் தெரியும்.  


தந்தன தத்தன தையன தத்தன தான தந்தன தன்னானா...


இந்தப் படத்தில் கமல் ஒரு பாரதிப்பித்தர்.  அவ்வப்போது பாரதியார் கவிதை சொல்லிக்கொண்டே இருப்பார்!  நிழல்கள், வறுமையின் நிறம் சிவப்பு இரண்டு படத்தில் இதுதான் நல்ல படம் (ஒரே கதையமைப்பை உடைய இந்த இரண்டு படங்களில்)நேற்றைய பதிவில் பகிர்ந்திருந்த முகநூல் பதிவில் உள்ள கேஜி ஜவர்லால் மிக அருமையாகப் பாடுவார்.  அவர் இந்தப் படத்தின் நல்லதோர் வீணை செய்தே பாடலை ஒருமுறை  அலுவலகத்தில் பாடியதாய்ச் சொல்லி பாடிக்காட்டி பரவசப்படுத்தினார்.

இரண்டு பாரதியார் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது "தீர்த்தக் கரையினிலே..."  ரொம்பவே பிடிக்கும்.  


தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில் 
செண்பகத் தோட்டத்திலே 
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே 
பாங்கியோடென்று சொன்னாய் 
வார்த்தை தவறி விட்டாய் - அடி கண்ணம்மா 
மார்பு துடிக்குதடி..
பார்த்த இடத்திலெல்லாம் உனைப்போலவே 
பாவை தெரியுதடி...  ஆ...  பாவை தெரியுதடி..

மேனி கொதிக்குதடி...  தலை சுற்றியே வேதனை செய்குதடி..
வானின் இடத்தை எல்லாம் அந்த வெண்ணிலா 
வந்து தழுவுது பார்..
மோனத்திருக்குதடி இந்த வையகம் 
மூழ்கித் துயிலினிலே 
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் 
நரகத்துழலுவதோ...

நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் 
நரகத்துழலுவதோ...

தீர்த்தக் கரையினிலே....  தெற்கு மூலையில்...

காத்திருக்கும் வேதனை எஸ் பி பி குரலில் கொண்டு வந்திருப்பார்.  இதை நான் கேட்கும்போதெல்லாம் என் அப்பா அவருக்குப் பிடித்தமான டி ஆர் மகாலிங்கம் குரலில் இதே படலைச் சொல்லி அதையும் போடச் சொல்லிக் கேட்டு பரவசப்படுவார்.  எனக்கு எஸ் பி பி தான் பிடிக்கும்.  என் மாமா ஒருவர் (எபி ஆசிரியர்களில் ஒருவர் அல்ல)  இதே பாடலை தனிப்படலாக உன்னி கிருஷ்ணன் பாடிய பாடலை ரசிப்பார்.

120 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க..

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் ,கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

துரை செல்வராஜூ said...

நல்லதோர் வீணை....

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

துரை செல்வராஜூ said...

என்னது?..
ஒருத்தரையும் காணோம்!...

ஸ்ரீராம். said...

// நல்லதோர் வீணை....//

அதைவிட, அடுத்த பாடல்! காத்திருந்து... காத்திருந்து காலங்கள் போன பாடல்!!!

ஸ்ரீராம். said...

என்னது?..
ஒருத்தரையும் காணோம்!...

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா கொஞ்சம் லேட்டாகிப் போச்சு. எழுந்தது வழக்கம் போல்...ஆனா கிச்சன் வேலை...6 மணிக்கு எல்லாம் ரெடியாகணும் அதான்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வந்துட்டேன் துரை அண்ணா இன்னிக்கு உங்க கூட போட்டி போட முடியலை ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

காபி ஆத்தறவங்களைத்தான் காணவே மாட்டேங்குது...திடீர்னு ஒரு நாள் வந்துட்டு என்ன யாரையுமே காணலையே போட்டி இல்லைஅனா போர் அப்படிம்பாங்க...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கீதா

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். கல்யாணம் முடிஞ்சா மறுநாள் காலி வீட்டைப் பார்த்த ஃபீலிங்.. இன்று நானும் துரை ஸாரும் மட்டும் இங்கு இருந்தபோது!

காபி ஆத்தறவங்க கமலாக்கா தளத்தில் இருக்காங்க!

Geetha Sambasivam said...

எப்போவோ வந்துட்டேனே! என்ன ஒரு நாள் கொஞ்சம் லேட்டாத் தான் போவோமேனு மற்றப் பதிவுகளைப் படிச்சேன். அப்புறம் எழுந்துட்டா நேரம் இருக்காது. படிக்க விட்டுப் போயிடும். எ.பி. தான் இருக்கவே இருக்கு. அதான் மெதுவா வந்தேன். வறுமையின் நிறம் சிவப்புப் படத்தில் எனக்குப் பாடல்கள் மட்டுமே பிடிக்கும். மற்றபடி பாலச் சந்தரையோ இந்தப் படத்தையோ பிடிக்காது! :)

Thulasidharan V Thillaiakathu said...

அழகான பாடல் ஸ்ரீராம். பல முறை அப்போது கல்லூரி காலத்தில் கேட்டதுண்டு. இந்தப் படம் வள்ளியூரில் பாட்டி தாத்தா வீட்டில் இருந்தப்ப உறவினர்கள் வந்த போது வீட்டுக்குப் பின்னாடி இருந்த தியேட்டரில் வந்தப்ப கூட்டிப் போனார்கள்.
அப்படிப் பார்த்த படம். இல்லை என்றால் சினிமா பார்க்கும் வாய்ப்பெல்லாம் சுத்தமா கிடையாது அப்ப..
கீதா

ஸ்ரீராம். said...

வாங்க கீதாக்கா.. எனக்கும் பாலச்சந்தரைப் பிடிக்காது. அவருக்கு யாரும் சந்தோஷமா இருந்தாலே பிடிக்காது!!! எனக்கும் பாடல்கள்தான், இந்தப் படத்தில் என்றில்லை, பெரும்பாலான திரைப்படங்களில், பிடிக்கும்.

ஸ்ரீராம். said...

கீதா... படம் பார்ப்பது என்பதைவிட பாடல் கேட்பதுதான் எனக்கு அன்றும் இன்றும் என்றும் வழக்கம்!!!

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். கல்யாணம் முடிஞ்சா மறுநாள் காலி வீட்டைப் பார்த்த ஃபீலிங்.. இன்று நானும் துரை ஸாரும் மட்டும் இங்கு இருந்தபோது!//

ஹா ஹா ஹா நல்ல உதாரணம் ஸ்ரீராம் உண்மைதான். எனக்கும் சில சமயம் அப்படி இங்க வந்துட்டு ஒரு வெறிச் ஃபீலிங்க் வரும்...போய்ட்டு அப்புறம் வந்து பார்த்த எக்கச் சக்கமா கமென்ட்ஸ் இருக்கும். பதிவு பார்த்து..... ஒவொன்னா பார்த்து கமென்ட்ஸ்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹை கீதாக்கா வந்துட்டீங்களா...ஓ கமலாக்கா போட்டுருக்காங்களா...இதோ நானும் அங்க போறேன்....திருப்பதில மலை மேல நிக்கறோம் கோவிலுக்குக் க்யூர் ஆரம்பிச்சுருச்சா?!!!!ஹா ஹா ஹா ஹா

கீதா

ஸ்ரீராம். said...

கீதா..

// நல்ல உதாரணம் ஸ்ரீராம் உண்மைதான்.//

நான் நேற்றைய கமெண்ட் மழை முடிந்த நிலையைக் குறிப்பிட்டிருக்கிறேன்!!!!

கமலாக்கா உங்கள் பெயரையும் இழுத்திருக்கிறார்கள்!

Bhanumathy Venkateswaran said...

அனைவருக்கும் காலை வணக்கம்

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் பானு அக்கா.

வெங்கட் நாகராஜ் said...

நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்!

பாரதியாரின் வாவ் பாடல்கள் - வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும். இந்த இரண்டு பாடல்கள் என்னுடைய பிடித்த பாடல்கள் வரிசையில் உண்டு!

நன்றி.

கோமதி அரசு said...

அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
இரு பாடல்களும் கேட்டேன் . எனக்கும் பிடித்தபாடல்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல பாடல்.மிகவும் ரசித்தேன். எஸ் பி பி குரல் இனிமை மறக்க முடியாதது. அந்த படத்தில் பாட்டுக்கள் பிரசித்தி பெற்றவை. இந்த படம் தொலைக் காட்சியில் (ஒரு ஞாயிற்றுக்கிழமை எப்படா வரும்னு உக்கார்ந்திருப்போம்) பார்த்திருக்கிறேன் அப்போதெல்லாம்
திரையரங்குகள் போய் பார்த்தது குறைவு.
இப்போது தொலைக்காட்சியும் பார்ப்பதே இல்லை.

எ. பியில் கமெண்ட்ஸ் மழை பார்த்து பிரமித்தேன். மழை விட்டும் தூறலாய் தங்கள கமெண்ட்ஸ் என் பதிவில்...ஹா ஹா. நன்றி. மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் வெங்கட்.

இவை உங்களுக்கும் பிடித்த பாடல்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் கோமதி அக்கா... மகிழ்ச்சி.

ஸ்ரீராம். said...

வாங்க கமலாக்கா... நீங்கள் ரசித்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி.

நெ.த. said...

இரண்டு பாடல்களுமே அருமையான செலெக்‌ஷன்.

பாலசந்தர் கொஞ்சம் பெர்வர்ட் மைன்ட். கடைசியா பிரகாஷ்ராஜ் தயாரித்த படத்திலும், படம் தோல்வியுறணும் என்று நினைத்து கதை முடிவைக் கொண்டுபோயிருப்பார்.

ஶ்ரீராம்... படங்கள் பார்க்கும்போது எப்போவும் பாடல்கள் பார்க்கமாட்டேன், ஓட்டிவிடுவேன். ஹாஹாஹா

KILLERGEE Devakottai said...

இப்பாடலை பிடிக்காதவர் இருக்க முடியுமா ? எனது ஃபேவரிட் பாடல்.

அந்நேரத்தில் நிழல்களைவிட இப்படம் புரட்சிகரமானதே...

KILLERGEE Devakottai said...

மேலும் இசையை குறைத்து பாடல் வரிகளை உச்சத்தில் கொண்டு வந்து வைத்த பாடலும்கூட...

KILLERGEE Devakottai said...

மேலும் நெல்லைத்தமிழரின் க.க. நாயகியும்கூட...

G.M Balasubramaniam said...

எனக்கு வரும்சந்தேகம் பாரதியார் பாடல் எழுதியபோது ராகமும்குறிப்பிடுவார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் குறிப்பிட்ட பாடல்களுக்கு என்ன மெட்டமைத்தாரோ

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ ஸ்ரீராம்: எனக்கும் பாலச்சந்தரைப் பிடிக்காது.//

ஏன், மய்யத்தை அறிமுகப்படுத்தியதாலா !

ஸ்ரீராம். said...

வாங்க நெ.த

படங்கள் பார்க்கும்போது நிறையபேர் தம்மடிக்க எழுந்து வெளியே போவார்கள்! நான் படங்கள் அதிகம் பார்க்கா விட்டாலும் பாடல்களுடன் அதிக பரிச்சயம் வைத்துக்கொள்வேன்!!

ஸ்ரீராம். said...

வாங்க கில்லர்ஜி... அதானே... இந்தப் பாடலைப் பிடிக்காதவர் இருக்க முடியுமா? நிழல்கள் போர். இசையைக் குறைத்து... ஆமாம். குறிப்பாக 'தீர்த்தக் காறையினிலே பாடலில்...

ஸ்ரீராம். said...

வாங்க ஜி எம் பி ஸார்.. ஆமாம். பாரதியார் ராகத்துடன் குறிப்பிடுவார். ஆனால் அதே ராகத்தில் இருக்காது திரைப்பாடல்கள்.

ஸ்ரீராம். said...

வாங்க ஏகாந்தன் ஸார்... மய்யத்தை அவர் அறிமுகப்படுத்தினால் என்ன? அவர் படங்களையே நாம் நிராகரிக்கிறோம்!!!

திண்டுக்கல் தனபாலன் said...

இனிக்கும் பாடல் - என்றும்...!

நெ.த. said...

ஏகாந்தன் சார்.... வரலாற்றுப் பிழை வரலாமோ? ஏவிஎம் அல்லவா உலக்கையை அறிமுகப்படுத்தியது?

இன்னொரு விஷயம்... கமலின் தந்தை, சாருஹாசனிடம், கமல் திரையுலகில் கோடி கோடியா சம்பாதிப்பார், நீ வழக்கறிஞரா சம்பாதிக்கறதெல்லாம் ஒண்ணுமே இல்லை என்று அப்போவே சொன்னாராம் (கமல் தந்தை a man of vision)

Thulasidharan V Thillaiakathu said...

கீதா..

// நல்ல உதாரணம் ஸ்ரீராம் உண்மைதான்.//

நான் நேற்றைய கமெண்ட் மழை முடிந்த நிலையைக் குறிப்பிட்டிருக்கிறேன்!!!!

கமலாக்கா உங்கள் பெயரையும் இழுத்திருக்கிறார்கள்!//

ஓ நான் அதன் பின் வர முடியலை அப்போதான் மழை போல அதிரடி ஏஞ்சல் வந்தாங்க போல எனக்கு அப்புறம் வர முடியலை ஜல்பு கண்ணுல தண்ணினு ஸோ அப்ப்டியே போய்ட்டேன் துளசியின் கமென்ட் கூடப் போடல அங்க. இப்பதான் போடப் போறேன்.

கமலாக்கா இழுத்துருக்காங்களா ஹா ஹா ஹா பார்க்கறேன்

கீதா

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ நெ.த : வரலாற்றுப் பிழை வரலாமோ?//

வந்துவிட்டதே! க.க.-வை மறந்துவிட்டேன்.

..கமல் தந்தை a man of vision. //

பிள்ளையாண்டானோ - a man of complications !

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் ஸ்ரீராம் ஜிஎம்பி ஸார், நீங்க குறிப்பிட்டது போல் பாரதியார் ராகங்கள் குறிப்பிடுவது வழக்கம்.

அதே போல் திரைப்படப் பாடல்கள் அந்த ராகத்தில் அமைவதுமில்லை.

இதில் தீர்த்தக்கரைதனிலே பாடல் சிந்துபைரவி ராகம்...

நலல்த்

எனக்கு ஏனோ இந்தப் படம் பிடிக்கவில்லை. பாலச்சந்தரின் டைரக்ஷன் நன்றாக இருக்கலாம் ஆனால் ஏனோ எனக்கு சோகம் பிடிக்காது எனவே பிடிக்கவில்லை

கீதா

Geetha Sambasivam said...

//ஏன், மய்யத்தை அறிமுகப்படுத்தியதாலா !// நான் சொல்ல நினைத்ததை நெல்லைத் தமிழர் சொல்லிட்டார். பாலச்சந்தரால் தான் சமூகம் கெட்டுப் போனது என்பது என் தாழ்மையான கருத்து! எவ்வளவு வக்கிரமான கருத்துகள் உண்டோ அத்தனையையும் அவர் படத்தில் புரட்சி என்னும் பெயரில் கொண்டு வந்திருப்பார்! :(

Thulasidharan V Thillaiakathu said...

இரண்டு பாடல்களுமே அருமையான பாடல்கள் எனக்கூ மிகவும் பிடிக்கும்

நீங்கள் சொல்லியிருப்பது போல் எஸ்பிபி சோகத்தை நன்றாக வெளிப்டுத்தியிருப்பார். தீர்த்தக்கரைதனிலெ ம்யூசிக் இல்லாமல் செமையா இருக்கும்...

கீதா

துரை செல்வராஜூ said...

1982 ல் நான் சிங்கப்பூரில் இருந்தேன்..

அப்போது ஒருநாள் சிங்கப்பூர் ஒளிவழியில்(தொலைக்காட்சி - அங்கே அப்படித்தான் சொல்வார்கள்)
வநிசி படத்தைப் போட்டார்கள்...

மறுநாள் வேலையிடத்தில் தலை காட்டமுடியவில்லை...

என்ன..லா!.. உங்க ஊர்ல இப்டித்தான் ஆப்பிள் தின்னுவீங்களா?.. - எங்கும் ஏளனக் குரல்கள்..

வசனங்கள் மொழிமாற்றம் செய்யப்படுவதால்
சீன, மலாய் மக்களும் தமிழ்ப் படங்களைப் பார்ப்பார்கள்..

அதற்குப் பிறகு, பானா சானா.. வை பிடிப்பதேயில்லை...

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ கீதா சாம்பசிவம்:.. பாலச்சந்தரால் தான் சமூகம் கெட்டுப் போனது என்பது என் தாழ்மையான கருத்து! //

இதில் ’தாழ்மை’ எங்கிருந்து வந்தது - சொல்லவேண்டிய சிம்பிள் கருத்துதானே அது!

மனித உறவுகள் சார்ந்த மனதின் இருண்ட பகுதிகளில், தன் படங்களின் பாத்திரங்கள் வழி வெளிச்சம் பாய்ச்ச பாலசந்தர் முயன்றது தமிழ்ப் படவுலகில் அப்போது புது முயற்சிதான். எளிதான வேலையல்ல அது. இருப்பினும் அவரது படங்களை சராசரிகள் (இதில் நமது அரைவேக்காட்டுப் பத்திரிக்கைகள், சினிமா விமரிசகர்கள் அடக்கம்) ஓவராக பாராட்டி, ஒரேயடியாக அவரை உயரப் பிடித்துவிட்டார்கள்.

புதுமையைப் புகுத்துதலும், புரட்சி என்பதும் - to be distinctly different from the mundane and to rebel against established theories - போன்றவற்றை வெளிநாட்டு படைப்பாளிகள், எழுத்தாளர்கள் பார்க்கும் விதம் வேறு; விளைவான, அவரது படைப்பாக்கங்களின் தரம் வேறு. இத்தகைய விஷயங்கள் நமது ஆசாமிகளுக்கு அவ்வளவாகப் புரிவதில்லை - என்னதான் வெளிநாட்டு புத்தகங்களை - அதாவது அவற்றின் பாடாவதி மொழிபெயர்ப்புகளை- விழுந்து விழுந்து படித்தாலும், படங்களை முழித்து முழித்துப் பார்த்து ’லோகசினிமா’ பற்றி ஒன்னுந்தெரியா தமிளனுக்காக புக்கு எழுதினாலும்.

இலக்கியத்திலும் இப்போது சில தேவாங்குகள் அபத்தமாக, அசிங்கமாக எழுதிக்கொண்டு, புதிய இலக்கிய வகைமையைத் தாங்கள்தான் தோற்றுவித்ததாகவும், தங்களுக்கு நிகராக புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள்கூட இல்லை என்றெல்லாம்கூட புலம்பிக்கொண்டிருக்குகள் ! சுரணையில்லா எருமைகள் பெருகி, சுற்றிச் சுற்றி வருகின்றன நம் தமிழ்நாட்டில். என் செய்வது?

நெ.த. said...

ஏகாந்தன் சார் - //பிள்ளையாண்டானோ - a man of complications !// - a man of contradictions இன்னும் பொருத்தமா இருக்காதோ.

கீதா ரங்கன் - //பாலச்சந்தரின் டைரக்ஷன் நன்றாக இருக்கலாம் // - சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன். பாலசந்தர் சிறந்த டைரக்டர் கிடையாது. அவரது படங்கள் extended dramas. Stage மாதிரியே இருக்கும். ஆனால் பாரதிராஜாவின் படைப்புகள் ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் ஆக இருக்காது. இன்னும் இயற்கையாக இருக்கும். விஷுவல் மீடியாவை இன்னும் நல்லா உபயோகப்படுத்தியது மணிரத்னம் (ஆனால் அவரும் பாலசந்தரின் ஃபார்முலாக்களைத் தொடர்கிறார்.. குழந்தை பிறக்கப்போகும் ஸ்டேஜில் கல்யாணம் போன்ற புரட்சிக் கருத்துகள்)

Geetha Sambasivam said...

//ஆனால் பாரதிராஜாவின் படைப்புகள் ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் ஆக இருக்காது.// அது காமிராமேன் அமைந்த காரணமாய் இருக்கலாமோ! பாரதிராஜாவும் சமூகப் புரட்சி என்னும் பெயரில் மறைமுகமாகக்குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கி இருப்பார். என்ன, கொஞ்சம் மென்மையாக செய்தது தெரியாதபடிக்குச் செய்திருப்பார். இப்போ மாதிரி மேடை போட்டுக் கத்தியதில்லை. படங்கள் மூலமாக அவர் செய்ததைத் தான் இப்போ மேடை போட்டும் தொலைக்காட்சிகள் மூலமும் சொல்கிறார். பாரபட்சமான கருத்துகள். :(

Geetha Sambasivam said...

மணிரத்னம் நான் அதிகம் பார்த்ததே இல்லை. ஷாலினி,மாதவன் நடிச்ச ஒரு படம், அலைகளா? சுஜாதா எழுதிய சிறுகதை ஒன்றை விவரித்துப் படமா எடுத்திருப்பாங்க!அந்தச் சிறுகதை வந்த தீபாவளி மலர் என்னிடம் கூட இருந்தது. யாரோ வாங்கிட்டுப் போயிட்டுத் திருப்பிக் கொடுக்கலை! :))))) வசனம் கூட சுஜாதாதான்னு நினைக்கிறேன். இன்னொன்று சிம்ரன், மாதவன் பார்த்திபனின் பெண் கீர்த்தனா? நடிச்சது. இரண்டு படமும் தொலைக்காட்சி உபயம் தான்! பெயர் தான் மறந்து போச்சு! :)))))))

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ நெ.த.: ..a man of contradictions இன்னும் பொருத்தமா இருக்காதோ.//

அப்படியும் பார்க்கலாம் அவரை! ஜெனிவாவில் நான் இருந்தபோது நிறைய ஸ்விஸ் வாட்ச்சுகள், அதன் தயாரிப்பு, புகழ் என்றெல்லாம் தகவல் சேர்ப்பதில் மும்முரம் காட்டிய காலம். நிறைய வாங்கியும் இருக்கிறேன். அப்போது ஒரு புகழ்பெற்ற ஸ்விஸ் ப்ராண்ட் -பெயர் அவ்வளவு சீக்கிரம் சிக்கமாட்டேன் என்கிறது- அவர்களது விளம்பரத்தில் ஒரு வரி - tag line - Master of Complications என்று வரும். அந்தக் கடிகாரமும் உங்களைக் குழப்புவதிலேயே குறியாக இருக்கும். கிட்டக்க நெருங்க முடியாத விலை. அந்த விளம்பரம் நினைவுக்கு வந்ததால் அப்படி எழுதினேன்ன் - சரியாகவும் தான். அவரது வாழ்க்கை, உறவுகள் எனக் கவனியுங்கள்.

..குழந்தை பிறக்கப்போகும் ஸ்டேஜில் கல்யாணம் போன்ற புரட்சிக் கருத்துகள்//

இதெல்லாம்தான் தமிழ்நாட்டில், படைப்பாளிகளின் சிந்தனையில் - ’புரட்சி’ என்பது!

ஸ்ரீராம். said...

கீதா..

// இதில் தீர்த்தக்கரைதனிலே பாடல் சிந்துபைரவி ராகம்...//

இந்தப் படத்தில்... டி ஆர் மகாலிங்கம் வேறு ராகத்தில் பாடியிருப்பார்!

ஸ்ரீராம். said...

துரை செல்வராஜூ ஸார்... பா ச வைப் பிடிக்காததற்கு வித்தியாசமான காரணம்!

ஸ்ரீராம். said...

கீதாக்கா.. ஏகாந்தன் ஸார்.. பாலச்சந்தரால் சமூகம் கெட்டுப்போனதா என்று தெரியாது. கெட்டுப்போகிறவர்களுக்கு சினிமா ஒரு சாக்கு. நான் பாலச்சந்தருக்கு குடைபிடிக்கவில்லை. பொதுவாகச் சொல்கிறேன்!

பாரதிராஜா பற்றி நான் சொல்ல நினைத்ததை கீதாக்கா சொல்லி இருக்கிறார். அலைகள் ஓய்வதில்லை, வேதம் புதிது போன்ற படங்கள்... அவர் எடுத்த சிவப்பு ரோஜாக்கள் படத்தைப் பார்த்துதான் தான் கொலைகள் செய்ததாய் ஆட்டோ சங்கர் சொல்லியிருந்தான். இந்த வகையில் பாக்யராஜும் அப்போது நேரத்துக்காக ஒரு படம் எடுத்தார். இது நம்ம ஆளு!

ஸ்ரீராம். said...

கீதாக்கா நீங்கள் சொல்லும் படங்கள் அலைபாயுதேவும், கன்னத்தில் முத்தமிட்டால்!

ஸ்ரீராம். said...

ஏகாந்தன் ஸார்..

// அப்போது ஒரு புகழ்பெற்ற ஸ்விஸ் ப்ராண்ட் -பெயர் அவ்வளவு சீக்கிரம் சிக்கமாட்டேன் என்கிறது- அவர்களது விளம்பரத்தில் ஒரு வரி - tag line - Master of Complications என்று வரும். /

கூகுள் செய்து பார்த்தால் Frank Muller என்று வருகிறது!!!

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் நேற்று என்னை இழுத்திருப்பது பானுக்கா ஹா அ ஹாஹாஹா

கீதா

Geetha Sambasivam said...

//அவர் எடுத்த சிவப்பு ரோஜாக்கள் படத்தைப் பார்த்துதான் தான் கொலைகள் செய்ததாய் ஆட்டோ சங்கர் சொல்லியிருந்தான்.// ஒத்துக்கறீங்க இல்லையா, சினிமாவின் தாக்கம் என்பதை! இது பாலச்சந்தருக்கும் முற்றிலும் பொருந்தும். அதே போல் ஜெயபிரகாஷ் என்றொரு இளைஞன் பாரதிராஜாவின் ஏதோ ஒரு படத்தைப் பார்த்துட்டுத் தான் தன் சொந்த சகோதரி, சகோதரி குடும்பம் என ஒன்பது பேரைக் கொலை செய்தான்.அப்போ இளைஞன். 22 வயசிருக்கும்! வயசினால் ஆயுள் தண்டனையாகக்கொடுத்த நினைவு. அப்போ 20,22 வயசிருக்கும். இப்போ 60க்கு மேல் இருக்கலாம்.

Thulasidharan V Thillaiakathu said...

நேற்றைய பதிவில் பகிர்ந்திருந்த முகநூல் பதிவில் உள்ள கேஜி ஜவர்லால் //

ஸ்ரீராம் அவர் அனுமதியுடன் கதம்பத்தில் பகிரலாமே அவரது பாடியதை..

கீதா

ஸ்ரீராம். said...

// ஸ்ரீராம் அவர் அனுமதியுடன் கதம்பத்தில் பகிரலாமே அவரது பாடியதை..//

அது அவர் நாங்கள் கூடியிருந்தபோது நேரில் பாடியது கீதா..

ஸ்ரீராம். said...

// ஒத்துக்கறீங்க இல்லையா, சினிமாவின் தாக்கம் என்பதை! //

கோடியில் ஒருவர்! ஜெயப்ரகாஷ் கதையும் கேள்விப்பட்டிருக்கேன் கீதாக்கா.

நெ.த. said...

கீசா மேடம் - //சினிமாவின் தாக்கம் என்பதை// - இதெல்லாம் எப்படி உண்மையா இருக்கும்? சினிமாவில், 'குடிப் பழக்கம்', 'சிகரெட்' போன்றவை எல்லோராலும் காண்பிக்கப்படுவதால் அது சாதாரண பழக்கம் என்று எல்லோரும் (இளைஞர்கள்/இளைஞிகள்) நினைக்க ஆரம்பித்து அதனால் அந்தக் கெட்ட வழக்கம் எல்லோரிடமும் வரலாம். ஆனால் 'கொலை' போன்றவற்றிர்க்கு, ஐடியா எடுத்துக்கொள்ளலாமே தவிர, அந்த மாதிரி எண்ணம் சினிமாவினால்தான் வந்தது என்பதை எப்படி ஒத்துகொள்ளமுடியும்? ஒருவேளை ஆட்டோ சங்கர், பாரதிராஜாவை பேச்சுத் துணைக்காக ஜெயிலில் தன்னுடன் போடுவார்கள் என்று சொன்னாரோ என்னவோ. இதேதான் ஜெயப்ப்ரகாஷ் கதையிலும். ஹா ஹா ஹா

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ Sriram: கூகுள் செய்து பார்த்தால் Frank Muller என்று வருகிறது!!!//

சரிதான். Franck Muller ! இந்த ஸ்விஸ் கம்பெனியின் ஒரு புகழ்பெற்ற மாடலான ’Crazy Hours’ வாட்ச்சில் டயலில் நம்பர்கள் தாறுமாறான பொசிஷனில் இருந்து தலையைச் சுத்தவைக்கும். இதற்குப்பெயர்தான் காசு கொடுத்தும் காண்டுக்கோல் என்பது! இந்த வாட்ச், தனது 15-ஆவது பிறந்தநாளை சமீபத்தில் சிங்கப்பூரில் கொண்டாடியதாம். Its a pure combination of poetry,science and engineering என்று பெருமைப்படுகிறது தன் புகழ்பெற்ற கடிகாரத்தைப்பற்றி இந்த நிறுவனம்! இன்னும் இப்படி விசித்திரங்கள் பல உண்டு அந்த ப்ராண்டில்.

Thulasidharan V Thillaiakathu said...

//பாலச்சந்தரின் டைரக்ஷன் நன்றாக இருக்கலாம் //

நெத டைரக்ஷன் என்றால் சில காட்சி அமைப்புகள் எனக்குப் பிடிக்கும்.

கீதா

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ ஸ்ரீராம்: கீதாக்கா.. ஏகாந்தன் ஸார்.. பாலச்சந்தரால் சமூகம் கெட்டுப்போனதா என்று தெரியாது. //

பாலச்சந்தர் சமூகத்தைக் கெடுத்தே விட்டார் என்று நான் சொல்லவில்லை! ’..சமூகம் கெட்டுப் போனது என்பது என் தாழ்மையான கருத்து!’ என்று கீதா சாம்பசிவம் சொல்லியிருப்பதில், ‘தாழ்மையான’ வேண்டாமே. சும்மா சிம்பிளா சொல்லிட்டுப்போங்களேன் என்றேன். அவ்வளவுதான்!

Geetha Sambasivam said...

ஏகாந்தன், என்னோட தனிப்பட்ட கருத்துனு சொல்லி இருக்கணும் போல! :) இங்கே ஶ்ரீராமும், நெ.த.வும் சொல்றதைப் பார்த்தால் அப்படித் தான் தோணுது!இவங்க அடிமட்ட ரசிகர்கள் பத்திக் கேள்விப் பட்டிருப்பாங்க. ஆனால் நெருங்கிப் பார்த்திருக்க மாட்டாங்க! நடிகரைப் போலவே அனைத்தையும் செய்ய ஆசைப்படும் இளைஞர்கள் பலர் உண்டு. ஆட்டோ சங்கர் சொன்னது பற்றி நிச்சயமாத் தெரியாது. ஆனால் ஜெயப்பிரகாஷ் குறிப்பிட்ட சினிமாவின் பெயரைச் சொல்லி அதைப் பார்த்ததும் ஏற்பட்ட உந்துதலில் கொன்றேன் என நீதிபதியிடமே வாக்குமூலம் கொடுத்திருந்தான்.

Thulasidharan V Thillaiakathu said...

கீதாக்கா.. ஏகாந்தன் ஸார்.. பாலச்சந்தரால் சமூகம் கெட்டுப்போனதா என்று தெரியாது. கெட்டுப்போகிறவர்களுக்கு சினிமா ஒரு சாக்கு. நான் பாலச்சந்தருக்கு குடைபிடிக்கவில்லை. பொதுவாகச் சொல்கிறேன்!/

யெஸ் நானுமிதே கருத்துதான். உறவுகளை விடுங்கள்...பல தாதா படங்கள், எல்லாமே பல ஹைடெக் திருட்டுத்தனங்களைச் சொல்லுகிறது. கொலைகளைச் சொல்லுகிறது. ஆனால் உலகில் வேறு எங்கோ ஒரு பகுதியில் நடக்கவும் செய்கிறது. சமூகத்தி இப்படி எல்லாம் நடக்குமா என்று சினிமாவைப் பார்த்து கேட்பதுண்டுதான் நாம். ஆனால் அப்படியும் ஏற்கனவே நடந்திருக்கும். இது முட்டையிலிருந்து கோழியா கோழியிலிருந்து முட்டையா என்பதுதான்..பொதுவான கருத்தே... என்பதே எனது தாழ்மையான கருத்து

கீதா

Geetha Sambasivam said...

அது போலத் தான் குடிப்பழக்கம், சிகரெட் பழக்கம் போன்றதும்! ஏதோ ஒரு படத்தில் ரஜினி சிகரட்டை ஸ்டைலாகத் தூக்கிப் போட்டுப் பிடிப்பார் என அப்படியே முயன்ற பலரை எங்க அருகாமையிலேயே சுற்றம், நண்பர் வட்டத்திலேயே பார்த்திருக்கேன். சிவாஜி, சே, ஜிவாஜி ஒரு படத்தில் முன் தலையில் வளைவு வர மாதிரி ஹேர்ஸ்டைல் பண்ணி இருந்தார்னு அதே மாதிரி வைத்துக் கொண்ட பலரை அறிவேன். எம்ஜிஆர் என்றால் பெண்கள் பைத்தியமாய் இருந்து பார்த்திருக்கேன். எம்ஜிஆர் சினிமா நடக்கும் தியேட்டரில் பெண்கள் பகுதியில் உட்கார்ந்து விட்டோமெனில் (அப்போல்லாம்மதுரையில் பெண்களுக்கெனத் தனிப்பகுதி இருக்கும்) கேட்கவே வேண்டாம். காதல் காட்சிகளில் பக்கத்தில் இருப்பவர் யாரென்று கூடத் தெரியாமல் அவங்களை அடிச்சுச் சங்கடப் படுத்திக் காதல் காட்சிகளைச் சிரிப்போடும் பல்வேறு விதமான விமரிசனங்களோடு ரசிப்பதும்! ரொம்ப அருவருப்பாத் தெரியும் எனக்கு! அதுக்காகவே காசு கொடுத்து சினிமா போனாலும் பால்கனிக்கே போகணும்னு பிடிவாதமா இருப்பேன். இப்படி எத்தனையோ இருக்கு! நிச்சயமாய்த் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் மக்கள் மனதில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை! :)))))))

Geetha Sambasivam said...


//பாலச்சந்தர் சமூகத்தைக் கெடுத்தே விட்டார்.// எனக்குத் தீர்மானமான கருத்து! :))))

Thulasidharan V Thillaiakathu said...

நல்லதோர் வீணி செய்தே பாட்டு திலங் ராகம். நல்ல ஹேண்ட்லிங்க் ஸ்ரீராம் இந்த ராகத்தை நல்லா ஹேண்டில் பண்ணிருக்கார். கொஞ்சம் தப்பினாலும் சலநாட்டை தொடும். அதைத் தொடுகிறதோ என்ற ஒரு ஐயமும் வரும்....

டி ஆர் மகாலிங்கம் பாடியிருப்பதைக் கேட்கிறென் ஸ்ரீராம் என்ன ராகம் என்று தெரிஞ்சுக்க மறந்து போச்சு...பாட்டு. எஸ்பிபிதான் நினைவில்.

கீதா

Bhanumathy Venkateswaran said...

இதோ நானும் வந்துட்டேன் விவாதத்தில் பங்கேற்க.

என் குழந்தைகளுக்கு கே.பி யைப் பிடிக்காது. எல்லா படங்களிலும் ஒரே மாதிரி உத்தி. தலையை சாய்த்து கண்களை படபடக்கும் கதா நாயகி பேசும் பொழுது இரெண்டு கைகளாலும் மாற்றி மாற்றி முகத்தை மூடிக் கொள்வாள். திடீர் திடீரென்று ஹிந்தியில் பேசுவாள். மலையாளம் பேசும் ஓர் பாத்திரம். இப்படி எல்லாம் சொன்னாலும் தமிழ் திரை உலகை ஒரு புதிய பாதைக்கு திருப்பினார் என்பதை மறுக்க முடியாது.

அவரிடம் நான் வியந்த ஒரு விஷயம், அதுவரை சோக நாயகியாக அறியப்பட்ட சௌகார் ஜானகியை நகைச்சுவை வேடத்திலும், நகைச்சுவை நடிகரான நாகேஷை சோகமாகவும் நடிக்க வைத்த தைரியம். மேலும் அவர் படத்தில் வரும் இயல்பான நகைச்சுவை மிகவும் பிடிக்கும். கே.பி.படத்தில் பாடல் கட்சிகளும் நன்றாக இருக்கும்.

அவரால் சமுதாயம் கெட்டுப் போச்சா? இது என்ன புதுக் கதை? அவருடைய நூற்றுக்கு நூறு படத்தை பார்த்து விட்டுத்தான் தான் ஆசிரியராக ஆக வேண்டும் என்று விருப்பப்பட்டதாகவும், அதன்படி இப்போது ஆசிரியராக இருப்பதாகவும் நீயா நானாவில் ஒருவர் கூறினார். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

Geetha Sambasivam said...

//அதன்படி இப்போது ஆசிரியராக இருப்பதாகவும் நீயா நானாவில் ஒருவர் கூறினார். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?// பானுமதி, ஆக சினிமாவின் தாக்கம் மக்களிடம் இருப்பதை ஒத்துக் கொள்கிறீர்கள் அல்லவா? அதோடு அவரால் அவருடைய புரட்சிகரமான சில கருத்துக்களால் சமூகம் பாதிக்கப்பட்டது!

Bhanumathy Venkateswaran said...

நிழல்கள் படத்தில் பாடல்கள் அருமையாக இருக்கும்.

எனக்கு எஸ்.பி.பி.யின் சோகப்பாடல், பக்திப் பாடல்கள் கேட்கப் பிடிக்காது. துள்ளலும், குழைவுமான அவர் குரலுக்கு அந்த genre சரிபடாது.

Geetha Sambasivam said...

அப்படிப் பார்த்தால் பூவா, தலையா கூட நல்ல படம் தான். எதிர்நீச்சல், நவகிரஹம் போன்றவையும் பரவாயில்லை ரகம். இரு கோடுகளும் தேவலை! தாமரை நெஞ்சம் ஓகே! கண்ணா நலமாவும் ஓகே! புன்னகை சத்யகாமின் அப்பட்டமான காப்பி! தில்லு முல்லு/கோல்மாலின் காப்பி! நீர்க்குமிழி/ஆனந்தின் காப்பி!அவருடைய பிற்காலப்படங்கள்< சிந்து பைரவி பார்த்து ஏமாந்தேன். மற்றச் சில படங்கள் பார்க்கவில்லை. பிடிக்கலை!

ஸ்ரீராம். said...

வாங்க பானு அக்கா.. கதா நாயகிகளை அதுவரை இல்லாத அளவு அழகாக காட்டுவார். ஆனால் எந்தக் கதாநாயகியையும் சந்தோஷமாக இருக்க விட்டதில்லை கேபி! அரங்கேற்றம், சிந்துபைரவி, அவள் ஒரு தொடர்கதை...

// அவருடைய நூற்றுக்கு நூறு படத்தை பார்த்து விட்டுத்தான் தான் ஆசிரியராக ஆக வேண்டும் என்று விருப்பப்பட்டதாகவும், //

கீதாக்கா சொன்னதாகட்டும், இந்த விஷயமாகட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும்தான். அதனால் சமுதாயமே கெட்டுப்போனது என்று சொல்ல முடியாது என்றுதான் தோன்றுகிறது! நடிகர்களை பார்த்து நடை ஹேர்ஸ்டைல் அதே மாதிரி செய்வதை எல்லாம் இந்தக் கணக்கில் சேர்க்க முடியாது. !!!!

Geetha Sambasivam said...

ச்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அரங்கேற்றத்தில் ஆரம்பித்த அவருடைய பின்னடைவு கடைசி வரை தொடர்ந்தது! :))))))

Bhanumathy Venkateswaran said...

/கமல் தந்தை a man of vision. //
அந்த விஷன் ஜோதிடம் தந்ததாக இருக்குமோ? ஏனென்றால், கமல் பிறந்தவுடனேயே அவர் ஜாதகத்தைக் குறித்த ஜோதிடர் இந்த குழந்தை சகலகலா வல்லவனாக விளங்கும், பல விருதைகளும், பேரும், புகழும் பெறும் என்றெல்லாம் கணித்துக் கொடுத்தாராம். அதனால் வந்த தைரியமோ? என்னவோ?

Thulasidharan V Thillaiakathu said...

கதா நாயகிகளை அதுவரை இல்லாத அளவு அழகாக காட்டுவார். ஆனால் எந்தக் கதாநாயகியையும் சந்தோஷமாக இருக்க விட்டதில்லை கேபி! அரங்கேற்றம், சிந்துபைரவி, அவள் ஒரு தொடர்கதை... //

ஆமாம் ஸ்ரீராம்....அழகாகக் காட்டுவார்...தைரியமாகவும் காட்டுவார் அதாவது ஓவர் தைரியமாக...ஆனால் கண்ணீர் சொரிய வைப்பார்..அதுதான் எனக்கு முரணாகத் தெரியும். பெண்கள் என்றாலே அழுகைதான்...என்பது போல்...அதே போல் நீங்கள் சொல்லியிருக்கும் //அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும்தான். அதனால் சமுதாயமே கெட்டுப்போனது என்று சொல்ல முடியாது என்றுதான் தோன்றுகிறது! // கருத்து.... இவர் சினிமா என்றில்லை எந்தச் சினிமாவாக இருந்தாலும்...

//நடிகர்களை பார்த்து நடை ஹேர்ஸ்டைல் அதே மாதிரி செய்வதை எல்லாம் இந்தக் கணக்கில் சேர்க்க முடியாது. !!!!// ஹா ஹா ஹா ஹா இது ஏதோ செதி சொல்லுதே!!! ஸ்ரீராம் யார் ஸ்டைலேனும் ஃபாலோ செஞ்சதுண்டா அந்தக் காலத்தில்? ஹிஹிஹிஹிஹி...(இது புகே ஆகிடுச்சோ?!!!! ஆஆஆஆ

கீதா

G.M Balasubramaniam said...

பின்னூட்டக் கருத்துகள் சிலரது மனப் போக்கை அடையாளம் காட்டுகிறது நடிப்பை ரசிக்க வேண்டும் நடிகனை அல்ல என்பது என் தாழ்மையான கருத்து

Thulasidharan V Thillaiakathu said...

சகலகலா வல்லவனாக// சோதிடர்? ஒரு வேளை அதை வைத்துத்தான் ஒரு படத்தின் பெயராகவும் இதை வைச்சாங்களோ? ஹா ஹா ஹா...அதுவும் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லா கமல்!!! ஆனா பொதுவா சினிமாக்காரர்கள் பூஜை போடுவதிலிருந்து பெயர் வைத்து ரிலீஸ் செய்வது வரை நாள் கிழமை நட்சத்திரம் ராசி, ஜோதிடம் எல்லாம் பார்ப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்...

கீதா

Bhanumathy Venkateswaran said...

கீதா அக்கா, சரித்திரத்தில் பிழை வரக்கூடாது என்று நெல்லை தமிழன் கூறுவதால் சொல்கிறேன். ஜெயப்ரகாஷ் என்னும் சைக்கோ ஒன்பது கொலைகள் செய்தது, பாரதிராஜாவின் படத்தை பார்த்து விட்டு அல்ல, மணிவண்ணன் இயக்கிய 100வது நாள் படத்தை பார்த்து விட்டுதான். அந்த பப்லிசிட்டி அந்த படத்தை நன்றாக ஓட வைத்தது.

Thulasidharan V Thillaiakathu said...

நடிப்பை ரசிக்க வேண்டும் நடிகனை அல்ல என்பது என் தாழ்மையான கருத்து//

சரியான கருத்து ஜிஎம்பிஸார். டிட்டோ. நடிப்பு என்பது திறமை.

கீதா

Geetha Sambasivam said...

//மணிவண்ணன் இயக்கிய 100வது நாள் படத்தை பார்த்து விட்டுதான். அந்த பப்லிசிட்டி அந்த படத்தை நன்றாக ஓட வைத்தது. //ஆமாம், நினைவு இருக்கு! அதைச் சொல்ல விட்டுப் போச்சு! :( மணிவண்ணனும் இந்தக் குட்டையில் ஊறிய மட்டை தானே! மணிவண்ணன், பாக்யராஜ், சுந்தரராஜன் எல்லோரும் பாரதிராஜாவின் குழுவில் இருந்தவர்களே! இன்னொருத்தர் கூட உண்டு. பெயர் வழக்கம் போல் மறந்துட்டேன்.

Geetha Sambasivam said...

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டுக் கொண்டு ஓடி வந்த பல பெண்கள், இளைஞர்கள் பற்றிய பத்திரிகைச் செய்திகளை நிறையப் படிச்சிருக்கேன். அதிலும் பெண்கள் வந்து மாட்டிக் கொண்டால்! :(சினிமாவைப் பொழுதுபோக்காகப்பார்க்காமல் அதை உண்மை என நம்பி ஏமாந்து போகும் பலரையும் பார்த்திருக்கேன். சொன்னாலும் புரியாது! புரிந்து கொள்ள மறுப்பார்கள். அப்படி எல்லாம் இல்லை என்பார்கள். தங்கள் உயிருக்கும் மேலான நடிகரைப் பற்றிய உண்மையை அவர்கள் மனம் ஏற்க மறுக்கும். இதற்கு உதாரணமாக ஸ்பைடர் மேன் தொடரைச் சொல்லலாம். அதைப் பார்த்து அதே மாதிரி செய்ய முயற்சித்து உயிரை விட்ட இளம் சிறார்கள் நிறைய! இப்போதும் லிரில் விளம்பரத்தில் இது நிபுணர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு எடுத்தது, யாரும் இதைப் போல் முயல வேண்டாம் என்று போடுகின்றனர். அந்த அளவுக்குப் பித்து மக்களை ஆட்டி வைக்கிறது. நீங்கள் ஆனால் எங்கேயோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம் எனச் சொல்கிறீர்கள்! :(

Angel said...

ஆஅவ் !!இன்னிக்கு ரொம்ப லேட்டாகிடுச்சி நான் வர :)
அதுக்குள்ள நிறைய டிஸ்கஷன்ஸ் :)

முக்கியமான வேலையா இருந்தேன் ..பெரிய விஷயம் நல்லபடியா முடிஞ்சது :) ப்லாகில்தான் சொல்லுவேன் :)

Angel said...

ஆவ் ! மயில் எவ்ளோ கியூட் ..
எனக்கு என்னமோ வ.நி .சி பிடிக்கலை பிக்காஸ் பொதுவாவே ஏழ்மை கஷ்டம் துன்பமிலாம் பார்த்தா பல வருஷம் மனசில் நின்னுடும்.
தீர்த்த கரையினில் பாட்டு பாடல் வரிகளை எஸ் பி பி உருகி உணர்ந்து பாடியிருப்பார் சிப்பியிருக்குது பாட்டும் ரொம்ப பிடிக்குமே

Angel said...

ஆட்டோ சங்கர் செஞ்சதெல்லாம் சிகப்பு ரோஜாக்கள் உபயத்தால்ன்னு படிச்சிருக்கேன்

Angel said...

/சிவாஜி, சே, ஜிவாஜி ஒரு படத்தில் முன் தலையில் வளைவு வர மாதிரி ஹேர்ஸ்டைல் பண்ணி இருந்தார்னு அதே மாதிரி //

அக்கா அக்கா ப்ளீச் இதெல்லாம் சொன்னா ஸ்ரீராம் தேடிபுடிச்சி அந்த ஸ்டைல் வச்ச பாட்டை போட்ருவார் :)))

Geetha Sambasivam said...

//அக்கா அக்கா ப்ளீச் இதெல்லாம் சொன்னா ஸ்ரீராம் தேடிபுடிச்சி அந்த ஸ்டைல் வச்ச பாட்டை போட்ருவார் :)))// ஹிஹிஹி, இது வேறே இருக்கோ? நினைப்பிலே இல்லை! :)))))

Angel said...

பாலசந்தரின் ஒரு படம் டிவிடில பார்த்தது முதல் சீனில் எல்லா நடிகர்களையும் சிலுவையில் அறைந்த மாதிரி காட்டி இருப்பாங்க அதில் ஒருவர் வீட்டை விட்டு வர காரணம் இவர் லவ் பண்ற பொண்ணோட அம்மாவை கல்யாணம் பண்ணி லவரை சிஸ்டராக்கியிருப்பார் :) அப்போ அதைப்பற்றி விவாதம் வந்தப்போ சொன்னார் அவர் சுற்று வட்டத்தில் ஒரு இன்ஸிடன்ஸ் நடந்ததாம் அதனால் நான் படமா எடுத்தேன்னு . இதை எல்லா பணக்கார தந்தைகளும் செய்ய முடியுமா ??
clandestine affair / ட்ரிங்க்ஸ் எல்லாத்தையும் நியாயப்படுத்தமாதிரி எடுத்திருப்பார் .47 நாட்கள்னு ஒரு படம் டிவில போட்டாங்க கல்யாணம் என்ற பெயரில் அப்பாவி பொண்ணு பிரான்சில் மாட்டிக்கும் .அதைப்போன்ற பல சம்பவங்கள் உண்மையாக நடந்திருக்கு .
இவர் சீரியல் ஒன்றில் யாரோ ஒரு அம்மா மகனோடு சரிசமமா கட்டிங் போட்டா எல்லா அம்மாவும் தண்ணி அடிக்கிறாங்கன்னு நினைச்சா அது நிஜமில்லையே .ஆனால் சினிமா பல கெட்ட செய்திகளை பலர் மனங்களில் விதைத்திருக்கு என்பது மறுக்க இயலா உண்மை .புதியபாதை பார்த்து ரவுடிங்களை திருத்தறேன் பேர்வழின்னு குழியில் விழுந்தவர்களை நானறிவேன் .திருமண மேடை /சர்ச் சர்வீஸ் வந்து ஆயர் கேட்கும்போது இந்த திருமணத்தில் விருப்பமில்லைனு கமல் பட ஸ்டைலில் சொன்ன bride உம தெரியும்
மூட்டை தூக்கியாவது போன்ற வரலாற்று புகழ் மிக்க வசனங்க;ளை சொல்லி டீனேஜர்களின் மனதை கெடுத்தும் சினிமாதான் இதை இந்த டைரக்டர்ஸ் உணரும் காலம் தூரமில்லை ..என்னை பொறுத்தவரை சினிமா பொழுதுபோக்கு அவ்வளவே அதை தூக்கி சுமக்கவோ கொண்டாடவோ அவசியமில்லை இதை மக்கள் புரிஞ்சிகிட்டா போதும் .
சினிமாதான் மக்களை கெடுத்தது என்று முற்றிலும் சொல்ல முடியாது ஆனால் மக்களை உணர்ச்சிவசப்படவைக்கவும் விபரீத முடிவுகளையெடுக்க வைக்கவும் சினிமாவால் இடியட் பாக்ஸால் முடியும் ..
இவ்ளோ ஏன் சீரியல்ஸ் பார்த்து தன கணவருக்கு இரண்டாவது திருமணம் தானே பெண் பார்த்து வச்ச முட்டாள் பெண்களும் இருக்காங்க னு நியூஸில் படிச்சேன் .

Angel said...

//மாதவன் பார்த்திபனின் பெண் கீர்த்தனா? நடிச்சது. இரண்டு படமும் தொலைக்காட்சி உபயம் தான்! பெயர் தான் மறந்து போச்சு! :)))))))//

kannathil muthamittaal

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ Angel: ..அதை தூக்கி சுமக்கவோ கொண்டாடவோ அவசியமில்லை இதை மக்கள் புரிஞ்சிகிட்டா போதும்//

தமிழன் அல்லது தமிழி இதைப் புரிந்துகொள்ளவே மாட்டான்/ள். தமிழ் மக்களுக்கு சினிமா தான் உயிரோட்டம், வாழ்க்கை. நடிக, நடிகைகள்தான் தேவர்கள், அப்ஸரஸ்கள்! அப்படியிருந்தாத்தான் மனசுக்கு சுகமா இருக்கு !

Angel said...

ஹாஹாஆ :) ஏகாந்தன் சார் ..
நானும் நாகர்கோயில் ப்ளஸ் மதுரை தமிழ் தான் :)
நான் எதையும் ஒரு அளவோடு வைக்க பழகிட்டேன் .வீட்டில் தமிழ் சானல்ஸ் கனெக்சன் கூட இல்லியே .யாரவது சொன்னா யூ டியூபில் படம் பார்ப்பதோடு சரி .இந்த படங்களை பார்த்து ப்ரெஷர் ஏறி கன்னாபின்னானு குதிப்பதை விட பாக்காம இருப்பதே மேல் .தற்போதைய பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியை கூட திட்டி விகடனில் பின்னூட்டமிட்டேன் ஆனா என் கமெண்டை பப்லிஷ் பண்ணலை :) இவற்றை பார்ப்பதால் நாம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறோம் என்று சினிமாக்காரங்க நினைச்சிக்கிறாங்க :)

வல்லிசிம்ஹன் said...

ஹூஒஷ். விமர்சனங்களும் கருத்துகளும் தூள்.
கீதா இவ்வளவு அக்கறையாகக் கருத்துகள்
சினிமாவைப் பற்றிச் சொல்லி இருப்பது
வியக்க வைக்கிறது. பாலச்சந்தரின், எதிர் நீச்சல், மேஜர் சந்திரகாந்த்,
இருகோடுகள் எல்லாம் பிடிக்கும்.
இந்தப் படத்தில் எஸ்பீபீ தான் ஹைலைட்.
நேற்று மதியம் பாட்டு ஒண்ணு பாடு தம்பி
பசியைக் கொஞ்சம் மறந்திருப்போம் கேட்டுக் கொண்டிருந்தேன்,.
நீங்கள் தூக்கத்தில் கேட்டுவிட்டீர்களோ.

தீர்த்தக் கரை வந்துவிட்டதே .

உள்ளே இருந்த அரக்கன் வெளியே வரச் சொல்லும் காரணங்கள்.
அவர்களும் எடுக்க வேண்டாம்.
இவர்களும் ஃபாலோ செய்ய வேண்டாம்.

பாசவின் பல படங்களில் காட்சிகள் ஆங்கிலப் படங்களில் வந்தவையாக இருக்கும். முக்கியமாகப் பாடல் காட்சிகள்.
எடுத்து சொல்ல தள்ளவில்லை.
நல்ல ஒரு அலசல். அனைவருக்கும் நன்றி.
ஏஞ்சல் சொல்லி இருப்பதை உணர முடிகிறது.

நடிகர்களின் ஹேர்ஸ்டைல் அந்தக் காலத்திலிருந்து
எல்லோரும் செய்து கொள்வார்கள்.
என் பள்ளித்தோழி சரோஜா தேவி மாதிரியே
இரட்டை ஜடை போடுவாள். இன்னொருத்தி கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாள். நாங்கள் சேர்ந்து அடக்குவோம்.

சங்கம் சினிமா பார்த்து வைஜயந்திமாலா கொண்டை.
தேவ் ஆனந்த நடை.எண்ணிக்கையில்லாமல் காப்பி. சினிமா
ஒரு பெரும் மயக்கத்தை ஏற்படுத்துவது உண்மையே.

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ Angel: ..திட்டி விகடனில் பின்னூட்டமிட்டேன் ஆனா என் கமெண்டை பப்லிஷ் பண்ணலை //

எப்படிப் போடுவார்கள் உங்கள் கமெண்ட்டை? நீங்கள்தான் திட்டிவிட்டீர்களே! அவர்களுக்கு ஆஹா, ஓஹோ, அடடா, உங்களை மாதிரி உண்டா -வகைக் கமெண்ட்டுகளே பிடிக்கும். மற்றது குறிப்பாக க்ரிட்டிசிஸம், ஜெரிக்காது!

தமிழ் இந்துவில் ‘நோபாலன்’ என்கிற பேர்வழி எழுதிய ஒரு கிரிக்கெட் ஆர்ட்டிக்கிளில் factually incorrect and absurd விஷயம் இருந்ததை உடனே சுட்டிக்காட்டி ‘ எழுதத் தெரியவில்லை என்றால் ஏன் எழுதுகிறீர்கள்?’ என்றுவேறு சூடாகக் கேட்டுவிட்டேன்! அரைமணி நேரத்தில் நைஸாக அதனைச் சரி செய்துவிட்டது தி இந்து. ஆனால், என் கமெண்ட்டை இருட்டடிப்பு செய்தது! இதுதான் நமது பத்திரிக்கா தர்மம். கோழைகள்!

சினிமாவைத் தாக்குவதோடு, பத்திரிக்கைகளையும் சமயம் கிடைக்கும்போது ஒரு வாங்கு வாங்குவோம்!

ஸ்ரீராம். said...

ஏஞ்சல்...

//அக்கா அக்கா ப்ளீச் இதெல்லாம் சொன்னா ஸ்ரீராம் தேடிபுடிச்சி அந்த ஸ்டைல் வச்ச பாட்டை போட்ருவார்//

ஹா... ஹா... ஹா... ஏஞ்சல்.. அக்கா வசந்தமாளிகை சிவாஜியைச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீராம். said...

//ஹா ஹா ஹா ஹா இது ஏதோ செதி சொல்லுதே!!! ஸ்ரீராம் யார் ஸ்டைலேனும் ஃபாலோ செஞ்சதுண்டா //

இல்லை கீதா... பொதுவான அந்தக் காலத்து ஸ்டைலான ஸ்டெப் கட்டிங்கில் இருந்திருக்கிறேன்! நடிகர்களை பார்த்து காபி செய்து எதுவும் செய்ததில்லை.

Angel said...

ஹாஹா :) ஆமா ..நான் பழக்க தோஷத்தில் திட்டிட்டேன் இங்கே லண்டனில் ப்ரைமினிஸ்டரை ஸ்வீர் வார்த்தையால் திட்டினாலும் பொறுமையோடு ஏற்கும் மனப்பக்குவம் இருக்கு நம் நாடு முன்னேறணும் இந்த விஷயத்தில் .
உண்மைதான் பத்திரிகைகளையும் வாங்கணும் நல்லா

ஸ்ரீராம். said...

// ஆனால், என் கமெண்ட்டை இருட்டடிப்பு செய்தது! இதுதான் நமது பத்திரிக்கா தர்மம். கோழைகள்!//

பத்திரிகா தர்மம்!!!!! அவர்களுக்கென்று ஜால்றா போட ஒரு குறிப்பிட்ட வாசகர் வட்டம் உண்டு.

ஸ்ரீராம். said...

வாங்க வல்லிம்மா தேவ் ஆனந்தே ஒரு ஆங்கில நடிகரின் ஸ்டைலில்தான் இருப்பார். இல்லையா?

ரிஷி கபூர் எழுதி இருக்கும் வெளிவர இருக்கும் புத்தகம் ஒன்றில் வைஜயந்தி மாலா - ராஜ்கபூர் பற்றி ஒரு கிசுகிசு இருக்கிறதாம். சமீபத்தில் படித்தேன்.

// இன்னொருத்தி கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாள். நாங்கள் சேர்ந்து அடக்குவோம்.//

ஹா... ஹா... ஹா... என் பாஸின் தோழி ஒருத்தி குஷ்பூ போல தான் இருப்பதாக அவர் தோழிகள் சொல்வதாக பெருமைப்பட்டுக்கொள்வதோடு, ஒலியும் ஒளியும் முடிந்த மறுநாள் வகுப்புக்கு வந்து "கமல் என்னை இப்படிக்கு கட்டிப்புடிச்சார், கார்த்திக் என்னை இப்படிக்கு கட்டிப்புடிச்சார்... எனக்கு கோபம்" என்றெல்லாம் கடுப்பேற்றுவாராம்!

ஸ்ரீராம். said...

ஏஞ்சல்..

// பாலசந்தரின் ஒரு படம் டிவிடில பார்த்தது முதல் சீனில் எல்லா நடிகர்களையும் சிலுவையில் அறைந்த மாதிரி காட்டி இருப்பாங்க //

வானமே எல்லை!

// புதியபாதை பார்த்து ரவுடிங்களை திருத்தறேன் பேர்வழின்னு குழியில் விழுந்தவர்களை நானறிவேன் .//

இது ரொம்ப ஓவர்!

ஸ்ரீராம். said...

ஏஞ்சல்...

// இவ்ளோ ஏன் சீரியல்ஸ் பார்த்து தன கணவருக்கு இரண்டாவது திருமணம் தானே பெண் பார்த்து வச்ச முட்டாள் பெண்களும் இருக்காங்க//

ஆமாம். சீரியல்கள் ரொம்பப்ப்ப மோசம். கீதாக்காவின் கருத்தை இது சம்பந்தமாக அறிய விரும்புகிறேன். அவர் கவனத்தை ஈர்க்கிறேன்!!!

ஸ்ரீராம். said...

ஏஞ்சல்..

// ஆட்டோ சங்கர் செஞ்சதெல்லாம் சிகப்பு ரோஜாக்கள் உபயத்தால்ன்னு படிச்சிருக்கேன் //

புன்னகை படத்தில் நல்ல கருத்து சொல்லியிருப்பார். பொதுவாகவே நல்ல கருத்துகளை யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லையா, அப்படிப் பின்பற்றினால் ஊடகங்கள் அதை வெளியில் சொல்வதில்லையா தெரியவில்லையா?

ஸ்ரீராம். said...

ஏஞ்சல்..

// முக்கியமான வேலையா இருந்தேன் ..பெரிய விஷயம் நல்லபடியா முடிஞ்சது :) ப்லாகில்தான் சொல்லுவேன் :)//

எப்போ சொல்வீங்க...

Angel said...

புன்னகை //

பார்க்கில்லையே நான் தேடி பார்த்து சொல்றேன் :)

ஸ்ரீராம். said...

// மணிவண்ணனும் இந்தக் குட்டையில் ஊறிய மட்டை தானே! மணிவண்ணன், பாக்யராஜ், சுந்தரராஜன் எல்லோரும் பாரதிராஜாவின் குழுவில் இருந்தவர்களே! இன்னொருத்தர் கூட உண்டு. பெயர் வழக்கம் போல் மறந்துட்டேன்.//

கீதாக்கா... பார்த்திபன்?

Angel said...

எப்போ சொல்வீங்க...//


எழுத்திட்டிருக்கேன் :)

Angel said...

ஆமாம். சீரியல்கள் ரொம்பப்ப்ப மோசம். கீதாக்காவின் கருத்தை இது சம்பந்தமாக அறிய விரும்புகிறேன். அவர் கவனத்தை ஈர்க்கிறேன்!!!//

ஆஹா :) உங்க ஐடியா புரிஞ்சிருச்சி :)

Angel said...

இப்போதைய சினிமாக்களால் 80% பிப்லி கரேஷ் கள் மட்டுமே பெருகி வராங்க :)
(பேரை மாத்திட்டேன் :)
பூஸார் லாங்க்வேஜ்ல் சொல்லனும்னா என்னையெல்லாம் யாரும் பேய்க்காட்ட முடியாதே :)

ஸ்ரீராம். said...

// 80% பிப்லி கரேஷ் கள்//

யாராயிருக்கும்?

Angel said...

//யாராயிருக்கும்?//

naan solla maatten :)

ராஜி said...

நல்ல பாடல். எப்பவும் என் ஃபேவரிட் பாடல்

ஸ்ரீராம். said...

நன்றி ராஜி சகோ..

Geetha Sambasivam said...

//கீதாக்கா... பார்த்திபன்?// பார்த்திபன் பாக்யராஜிடம் இருந்தார் என நினைச்சேனே! சரியா நினைவில்லை.

Geetha Sambasivam said...

பார்த்திபன், பாண்டியராஜன் இவங்கல்லாம் பாக்யராஜின் நேரடி சிஷ்யர்கள்னு நினைக்கிறேன்.

//ஆமாம். சீரியல்கள் ரொம்பப்ப்ப மோசம். கீதாக்காவின் கருத்தை இது சம்பந்தமாக அறிய விரும்புகிறேன். அவர் கவனத்தை ஈர்க்கிறேன்!!!// ஏற்கெனவே இது பத்திப் பேசி எழுதி எல்லாம் ஆச்சு! :)))))

Thulasidharan V Thillaiakathu said...

இந்தப் பாடல்கள் அருமையான பாடல்கள் ஸ்ரீராம்ஜி. வழக்கம் போல் சொல்லுகிறேன் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கேட்டேன்.

எனக்கு வறுமையின் நிறம் சிகப்பு பார்த்ததும் கருத்து ஓகே ஆனால் கொஞ்சம் மிகைப்படுத்தல் என்று தோன்றியது. காட்சி அமைப்புகள் நன்றாக இருக்கும்.

பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

ஏகாந்தன் அண்ணா, ஏஞ்சல், ஸ்ரீராம், கீதாக்கா

சீரியல்கள் படு படு மோசம்..அதைப்பற்றி எழுதக் கூடத் தகுதியில்லாதவை.

ஆமாம் பத்திரிகைகளையும் விளாசலாம் தான் பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருக்கா என்ன? எல்லாம் ஜால்ரா தான் ஸ்ரீராம் சொல்லுவது போல். ஏஞ்சல் மிகவும் சரியே அங்கெல்லாம் உயர்பதவி ஆட்களைக் கேலி செய்தாலோ, திட்டினாலோ கூட ஏற்று வெளிப்படுத்தவும் முடியும். ஆனால் இங்கு அப்ப்டி இல்லை. தரமான கதைகள் செய்திகள் அனுப்பினாலே பத்திரிகைகள் வெளியிடுவதில்லை அப்புறம் இல்லையா திட்டி எழுதுவது....

ஊடகம் எல்லாமே ஆன்மீக சேனல்கள், பத்திரிகைகள், உட்பட எல்லாமே வியாபரம்....நெப்போட்டிஸம் நிறைந்தவை. கேவலமா இருக்கு எல்லாமே

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பூஸாரைக் காணலியே....புறாவைப் பார்த்ததும் கிடைக்குமானு பார்த்துட்டு ஓடிட்டாங்க போல!!! ஹா ஹா ஹா....ஹாலிடேயோ?!!

கீதா

Asokan Kuppusamy said...

தேனமுது பாடல்கள் பாராட்டுகள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இரண்டுமே எனக்கு பிடித்த பாடல்கள். பாரதியின் பாடல் வரிகள்,எஸ்பிபி யின் தேன்குரல் எம் எஸ் வி யின் இசை உள்ளம் உருக வைக்கின்றன. எந்த சூழலாக இருப்பினும் அத்ற்கேற்ற பாரதி பாடல்கள் இருப்பது ஆச்சர்யம். பாரதி ஒரு புதையல்

ஸ்ரீராம். said...

நன்றி முரளிதரன்.

ஸ்ரீராம். said...

நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!