திங்கள், 28 டிசம்பர், 2009

ஆவலைத் தூண்டும் புதிர்க்கதை பாகம் 2


சிறந்த பக்தர் சிறந்த குருவிடம் கேட்டது:

"சாமி, இப்படியே போய்க்கிட்டு இருந்தா இந்த நாட்டுக்கு விமோசனமே கிடையாதா? சாமி இதைப் பாத்துக்கிட்டு சும்மா இருக்கிறாரே அது நியாயமா? நீங்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா?"
குரு புன்னகை செய்து தலையை அனுதாபமாக ஆட்டினார். " சாமிக்கு எல்லாம் தெரிந்துதான் இருக்கும். அததுக்கு தகுந்த படி காலக் கிரமத்தில் நடக்கும். "

" சாமி, நான் சாமி என்று ஆண்டவனை சொல்லலை. உங்களைத் தான் சொன்னேன். நீங்க இதை எல்லாம் கண்டுக்காமே இருந்தா எப்பிடி? நீங்களும் இதில் தலையிட்டா நாமே திசை மாறிடுவோம்னு பயப்படறீங்களா? "
குருவின் புன்னகை இடிச் சிரிப்பாக மாறியது. " ஐயா நீங்கள் நினைப்பது போல் நான் பெரிய மந்திரவாதி இல்லை. வேண்டுமானால் உங்களுக்காக ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். என்ன வேண்டும் என்று திட்டமாகச் சொல்லுங்கள். "
சாமியார் வேண்டிக் கொண்டால் ஆண்டவன் செய்து விடுவார் என்று பக்தர் திடமாக நம்பியதால் தீவிர யோசனை செய்யத் தொடங்கினார். இரண்டு மூன்று விஷயங்கள் வேண்டிக் கொள்ளலாம். ஒன்று நாயும் நரியும் நட்பாகி விடவேண்டும். இரண்டு நாய் அல்லது நரி அல்லது இரண்டுமே நல்லவர்களாகி விடவேண்டும். -- இது சாத்தியமா என்ற சந்தேகம் அப்போதே அவருக்கு வந்து விட்டது. ஆண்டவனே ஆனாலும் இதுங்களை நல்லதா மாத்தறதாவது என்ற அவநம்பிக்கை. -- மூன்றாவதாக நாயையும் நரியையும் ஒருசேர ஒழித்துக் கட்டி விடவேண்டும்.
இதில் எது சரியான தீர்ப்பு? பக்தர் யோசனை தீவிரமாகியது.
நாமும் யோசிப்போமே இதில் என்ன கேட்டால் நல்லது? உங்கள் எண்ணம் என்ன?

12 கருத்துகள்:

 1. //ஒன்று நாயும் நரியும் நட்பாகி விடவேண்டும். இரண்டு நாய் அல்லது நரி அல்லது இரண்டுமே நல்லவர்களாகி விடவேண்டும். -- இது சாத்தியமா என்ற சந்தேகம் அப்போதே அவருக்கு வந்து விட்டது. ஆண்டவனே ஆனாலும் இதுங்களை நல்லதா மாத்தறதாவது என்ற அவநம்பிக்கை. -- மூன்றாவதாக நாயையும் நரியையும் ஒருசேர ஒழித்துக் கட்டி விடவேண்டும்.
  //

  நாயும் நரியும் நட்பாவது சாத்தியம் என்றால் இரண்டு வெவ்வேறு குணமுள்ள ஜீவன்களை கடவுள் படித்திருக்க வேண்டியதில்லை, எனவே, இது கேட்பதில் பொருள் இல்லை.
  நாயையும் நரியையும் ஒழித்துக் கட்டுவதும் கூட கடவுளின் விருப்பமாக இருக்காது. இவை இருந்தால்தான், இதன் மூலம், மற்றவர்களுக்கு நல்லது, கெட்டது புரிய வைக்க முடியும்.
  இரண்டையும் நல்லவர்களாக ஆக்கிவிட்டால் அது உண்மையிலேயே மக்களுக்கு நன்மையாகத் தான் முடியும் என்பதால், என்னுடைய தேர்வு, இரண்டாவது யோசனை தான்.

  பதிலளிநீக்கு
 2. புதிரெல்லாம் சரிதான்..நாங்கல்லாம் சாமியையே நம்பமாட்டோம். சாமியாரையா நம்புவோம்...

  பதிலளிநீக்கு
 3. //நாயும் நரியும் நட்பாவது சாத்தியம் என்றால் இரண்டு வெவ்வேறு குணமுள்ள ஜீவன்களை கடவுள் படித்திருக்க வேண்டியதில்லை, எனவே, இது கேட்பதில் பொருள்....//

  நம் அரசியல் அவலங்களுக்குக் கடவுளை [அவர் எங்கே இருந்தாலும் ] ஏன் பொறுப்பு ஏற்க வைக்கிறீர்கள்?
  கடவுளே மனிதனால் கண்டு பிடிக்கப் பட்ட சாதனம் என்னும் இடத்தில் கட்சிகளுக்குக் கடவுளைக் காரணமாக்குவது சரி என்று தோன்றவில்லை. அக்பர் - பீர்பால் பற்றிய கதைகளில் வருமே - சின்னக் கோட்டைத் தொடாமல் பெரிதாக்கும் முயற்சி - அது போல நாய் நரி இரண்டையும் விட மோசமான ஒரு பிராணியைப் படைத்து / உருவாக்கி விட்டீர்களானால் இவை இரண்டின் தரம் உயர்ந்து விடும் இல்லையா?

  பதிலளிநீக்கு
 4. இப்படி அந்த பக்தர் யோசிச்சுக்கிட்டே நின்னதால என்ன ஆச்சு?

  நாயும், நரியும் சேர்ந்து அவரை சாப்பிட்டு விட்டன! லாஜிக் படி இதை இப்படித் தான் முடிக்க முடியும்!

  இப்படியெல்லாம் சாமியார் வழிகாட்டுவார், தெய்வம் வந்து வழி காட்டும்னு சோம்பிக் கிடப்பவருக்கு தெய்வங்கள் துணை வருமா என்ன?!

  பதிலளிநீக்கு
 5. நீங்க சொன்ன மூணுமே கதைக்குதவாது.புதிர் தெரிஞ்சு சரிப்பண்ணியிருந்தாங்கன்னா நான் ஏன் இங்கயிருந்து உங்க புதிரை அவிழ்க்க என்ன வழின்னு யோசிச்சிட்டிருப்பேன் !

  பதிலளிநீக்கு
 6. இதிலிருந்து சோம்பேறி மனிதன் என்றே தெரிகிறது ஏன்னா பாருங்க எனக்கு யோசிக்க கூட முடியலை...!

  பதிலளிநீக்கு
 7. கதைக்கு கால் உண்டா என்பார்கள். கதையை கதையாகத் தான் பார்க்க வேண்டும். இதில் லாஜிக் எல்லாம் பார்த்து தேர்வு செய்தால் எப்படி? இப்படி நடந்தால் என்ன ஆகும் என்று கற்பனை செய்வது தானே கதை? ரொம்ப சரி பார்க்க ஆரம்பித்தால் நாய் ஆள்வதாவது நரி போட்டி போடுவதாவது என்று ஆகிவிடாதா?

  பேசாமல் ஒவ்வொரு ஆப்ஷனையும் செயல் படுத்திப் பார்த்தா என்ன என்று எனக்குத் தோன்றுகிறது!!

  பதிலளிநீக்கு
 8. என்ன இருந்தாலும் இந்த சீரியல் சினிமா சாமியார்களுக்குதான் அபார ஆற்றல் உண்டே, நிச்சயம் அவர் ஒரு அற்புதத்தை நடத்திக் காட்டலாம் என்று நான் நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. அய்யா சாமி, கற்பனையிலாவது ஒரு விடுதலை வருதான்னு பார்க்கலாம்னா விடமாட்டாங்க போல இருக்கே.

  பதிலளிநீக்கு
 10. கற்பனையிலாவது விடுதலை கிடைக்குமா என்று ஏங்கும் ராமன்களுக்கு:

  அவன்-

  பட்டு வேட்டி பற்றிய கனாவில் இருந்தான்
  கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது!

  இது வைரமுத்து என்ற கவிஞர் கொஞ்சம் லட்சியக் கனவுகளோடும், கவிதையோடும் இருந்த ஆரம்ப நாட்களில் எழுதிய கவிதை.

  பதிலளிநீக்கு
 11. சாத்வீகமான வழியைத் தெரிவு செய்கிறீர்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை...
  -------------------------------

  புலிகேசி,
  சாமியாராலேயே பதில் சொல்ல முடியவில்லை...சிஷ்யன் இன்னும் என்னென்ன கேள்விகள் கேட்பானோ?
  ---------------------------------
  k_rangan,
  புதிய சிந்தனை...
  ---------------------------------

  கிருஷ் சார்,
  நம்பிக்கை நம்மை காப்பாற்றும்னு சொல்வாங்களே... இது கையறு நிலை போல...
  ----------------------------------

  ஹேமா,
  நீங்களே சிஷ்யனா மாறி கேள்வி கேட்டுடுங்க...
  -----------------------------------

  வசந்த்,
  சோம்பேறி மனிதர்கள் விடைகளைக் கண்டுபிடிக்க குருவை நியமித்து விடுகிறார்கள்...!
  ----------------------------------

  அனானி,
  ஆராய்ச்சி மனம் உங்களுக்கு...
  ----------------------------------

  ராமன், கிருஷ் சார்,
  ராமனுக்குக் கிருஷ்ணன் பதில் சொன்னால் கிருஷ்ணனுக்கு யார் பதில் சொல்வது?
  ------------------------------------------

  பதிலளிநீக்கு
 12. நாயும் கெட்டது நரியும் கெட்டது என்றால், இரண்டும் சமாதானமாகப் போவதில் நாட்டுக்கு என்ன லாபம்?
  "Good governance is not to be tweeted" என்று SM Krishna சொல்லியிருக்கிறாரே, ஒருக்கால் "not to be tooted" என்று சொன்னதை இப்படிப் போட்டு விட்டார்களோ?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!