புதன், 9 டிசம்பர், 2009

துள்ளித் திரிந்தது ஒரு காலம்....

சிறு வயதில் இருக்கும் நண்பர்கள் எண்ணிக்கை வளர்ந்த பிறகு இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படிக்கும் காலத்தில் பெற்றோர்களின் ஊர் மாற்றம், பள்ளிப் படிப்பு முடிந்தபிறகு வேறு ஊரில் அல்லது அதே ஊரில் இருந்தாலும் வெவ்வேறு கல்லூரிகள் என்று மாறும் போது நண்பர்கள் வட்டம் பிரிந்து விடுகிறது, சுருங்கி விடுகிறது, அல்லது வெவ்வேறு வட்டங்களில் பழகும்போது முதலில் இருந்த நெருக்கமான நட்புகள் பிறகு வாய்ப்பதில்லை.  இன்னும் சில இடங்களில் திருமணம் ஒரு பிரிக்கும் புள்ளியாக வந்து விடுகிறது. இவற்றையும் தாண்டிப் புனிதமாக தொடரும் நட்புகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. (நாகை நண்பர்கள் வட்டம் இதற்கு விதிவிலக்கு)

ஆரம்பப் பள்ளி நாட்களில் தொடங்கும் கள்ளமில்லா நட்பு எச்சில் பார்க்காது...வித்யாசம் பார்க்காது...மறு உறவுகளாகத் தோற்றம் கொடுக்கும். அழுகையும் சிரிப்பும் கலந்த நட்பு நாட்கள் அவை. அந்த இடத்திலிருந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி நிலை என்று மாறும்போது மனதில் சிறு கள்ளம் புகுந்து, உயர்ந்த நட்பு, தாழ்ந்த நட்பு என்றும் நெருங்கிய வட்டம், வெளி வட்டம் என்றும் மாறுபாடுகள் தெரியத் தொடங்கும் காலம். அதையும் தாண்டி கல்லூரிப் பருவம் வந்த பிறகு தேர்ந்தெடுத்த பாடத் திட்டங்களின் தகுதி காரணமாகவும், அந்தஸ்து புரியத் தொடங்கிய காலம் காரணமாகவும் நட்பு வட்டம் பெரிதாவதோ சுருங்குவதோ உண்டு. சில சமயங்களில் காதல் பிரச்னை நண்பர்களையும் காட்டும், கூட்டும். எதிரிகளையும் சேர்க்கும். பிரிந்து, சேர்ந்து சண்டை இட்டு, சமாதானமாகி ஒரு முடிவுக்கு வரும் காலம்...

படிப்பு முடிந்து, வேலை தேடும் வரை இருக்கும் நேரம் நண்பர்கள் வட்டம் பெரிய வரப்பிரசாதம். ஏதோ ஒரு வகையில் வீட்டுடன் ஒரு மௌனப்பகை நிலவும் நேரத்தில் நண்பர்கள் பெரிய ஆறுதலாகத் தெரிவார்கள்.வீட்டுடன் மௌனப் பகையாக தெரிவது வயதின் காரணமாக இருக்கலாம்...அல்லது ஒரு விதக் குற்ற உணர்வின் காரணமாக இருக்கலாம். குழுவில் முதலில் வேலை கிடைத்த நண்பர்கள் ஒன்று மற்றவர்களுக்கு உதவியாக, ஆறுதலாக இருப்பார்கள்...அல்லது மெல்ல மெல்ல விலக ஆரம்பிப்பார்கள். அவர்களே நமக்குப் பாடமாகவும் இருப்பார்கள்.     நமக்கும் வேலை கிடைத்தபின் மேலே சொன்ன இரண்டு வகையில் ஏதாவது ஒன்றில் நாமும் சேர்ந்து விடுவோம்...!

காதலித்தோ, வீட்டில் பெண் பார்த்தோ...திருமணம் செய்யும் வயது...நண்பர்களுடன் கலந்து பேசி சினிமா கடற்கரை பார்க் என்று நண்பர்களுடன் சுற்றி, பெண்களைப் பற்றி பேசி ஒருவழியாக திருமண நேரம் வரும்....நண்பர்களுடன் திட்டமிடுதல் நடக்கும். யாரை அழைப்பது...பழைய நண்பர்கள் பெயர்கள்...எப்படி புதுமையாக அழைப்பு அச்சடிக்கலாம்...வரவேற்பில் என்ன புதுசாகச் செய்யலாம்...நண்பர்கள் வட்டம் வேலைகளைப் பகிர்ந்து தலைமேல் போட்டுக் கொண்டு செய்து முடிக்கும். அன்ன ஆகாரம் இன்றி டிரஸ் பற்றி கவலை இன்றி கிடைத்த இடத்தில் தூங்கி கிடைத்ததைச் சாப்பிட்டு...ஒரு வழியாக திருமணமும் நடக்கும். மனைவியுடன் அறிமுகங்கள்...."சிஸ்டர் எங்காளை உங்க கிட்ட கண்ணுபோல ஒப்படைக்கிறோம் கண் கலங்காமப் பார்த்துக்கோங்க..." டைப் வசனங்கள்....க்ரூப் போட்டோ...

பிறகு ஒரு நீண்ட இடைவெளி...."மச்சான், சாரிடா...டயமே இல்லை...நான் யார் கூடவாவது பேசினாலே கோச்சுக்கரா...  பயங்கர பொசசிவ் தெரியுமா அவ..."

இதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து ஒவ்வொரு நண்பனாக கல்யாணம் ஆகும் போது மற்ற நண்பர்கள் ஓடியாடி வேலை பார்க்க,  திருமணமான நண்பர்கள் மனைவியுடன் கெத்தாக வந்து பரிசு கொடுத்து விட்டு காணாமல் போவார்கள்...ஒரு நீண்ட இடைவெளியில் எல்லோரும் இந்த அனுபவங்களுக்கு ஆட்பட்டபின் பழைய நட்பை நினைவுக்குக் கொண்டு வந்து தொடரும் நேரம் வரும்...

வேலைகளிருந்து ஓய்வு பெற்றபின் ஒரு காலகட்டம்.  ஏதோ தனிமைப் படுத்த பட்டது போல ஒரு உணர்வு சிலருக்கு தோன்றும்.  அப்போது பெரும்பாலும் உறவுகளை விட நண்பர்களைதான் மனம் அதிகம் தேடும். இந்த கால கட்டத்தில் நினைத்துப் பார்க்கும்போது பல்வேறு கால கட்டத்தில் கிடைத்த பல்வேறு  நண்பர்கள் நினைவில் நிற்பார்கள். சிறுவயது முதல், கோலிகுண்டு விளையாடிய நாள் முதல் இந்த நாள் வரை எத்தனை நண்பர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தோமானால் சுவாரஸ்யமாக இருக்கும். இடையில் கல்லூரிக் காலத்திலும், வேலை செய்யுமிடத்து நண்பர்களும்.....

இதற்குப் பின் எத்தனை நண்பர்களுடன் நாம் இன்னும் தொடர்பு வைத்துள்ளோம்? இவர்களில் எத்தனை பேர் நம் பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்பவர்கள்? பிறகு அறிமுகமானாலும் நெருங்கியவர்கள் எத்தனை பேர்? இந்த அனுபவங்கள் சற்றே முன்பின் மாறுபட்டாலும் எல்லோருக்கும் பொதுதானே...

நமக்கு எத்தனை நண்பர்கள் என்பதை வைத்து நம்மை எடை போடலாமா...?
நாம் எத்தனை பேருக்கு நண்பராக இருக்கிறோம் என்பது வித்யாசமான ஒன்றா?   

9 கருத்துகள்:

 1. //இதற்குப் பின் எத்தனை நண்பர்களுடன் நாம் இன்னும் தொடர்பு வைத்துள்ளோம்? இவர்களில் எத்தனை பேர் நம் பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்பவர்கள்? பிறகு அறிமுகமானாலும் நெருங்கியவர்கள் எத்தனை பேர்? இந்த அனுபவங்கள் சற்றே முன்பின் மாறுபட்டாலும் எல்லோருக்கும் பொதுதானே..//

  ஆண்டவன் கருணையில் என் பள்ளித் தோழர்கள் பதினைந்து பேருடன் இன்னும் எனக்கு தொடர்பு உள்ளது.
  கடைசியாக ஒரு நண்பனை மீட்டெடுத்த கதை இங்கே பார்க்கவும்.
  http://ulagamahauthamar.blogspot.com/2009/12/blog-post.html

  பதிலளிநீக்கு
 2. 6-லிருந்து 60-வரை நட்பு...நன்றாக இருந்தது...

  பதிலளிநீக்கு
 3. எனக்கு மூவர் நெருங்கிய சிநேகிதிகள்.ஒருத்தி கனடா போனாள்.
  அப்புறம் தொடர்பில்லை.ஒருத்தி ஊரில்தான்.போர் காரணமாக இடங்கள் மாறி இருப்பதால் எங்கென்றே தெரியவில்லை.ஒருத்தி பிரான்சில் இருக்கிறாள்.அடிக்கடி பேசிக்கொள்வோம்.அடிக்கடி இல்லாவிட்டாலும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கண்டுகொள்வோம்.

  பதிலளிநீக்கு
 4. //6-லிருந்து 60-வரை நட்பு...நன்றாக இருந்தது..//
  அதற்குப் பின் கசக்குமோ என்ன?
  6-லிருந்து 60-வரை என்ன நூறு வரையும் இனிக்குமே!

  பதிலளிநீக்கு
 5. சமீபத்து டி வி இசை நிகழ்ச்சி ஒன்றில் ஒரு கேள்வி கேட்டாங்க: ' கல்லூரி கடைசி நாள் விழா' கொண்டாட்டங்களில், பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித் திரிந்த பறவைகளே' தவிர, பாடுவதற்கு இதுவரையிலும் வேறு ஏதாவது நல்ல பாடல் வந்திருக்கிறதா?' என்று. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க.

  பதிலளிநீக்கு
 6. நட்பு என்பது 'ஆறிலிருந்து அறுபது வரை' என்று பொருள்படும்படி புலவன் புலிகேசி அவர்கள் எழுதியிருப்பதில் ஓர் உண்மை இருப்பதுபோல் தோன்றுகிறது. அறுபது வயதுக்கு மேற்பட்ட, எங்கள் பிளாக் வாசகர்கள் (யாராவது இருந்தால்!) அறுபது வயதுக்கு பிறகு அவர்கள் பெற்ற 'புதிய' நண்பர் / நண்பி யார் என்றும், அந்த நட்பைப் பற்றியும் எங்களுக்குச் சொல்லவும்.

  பதிலளிநீக்கு
 7. சில பல காரணங்களால் பலரால் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியவில்லை. அந்த காரணங்கள் நாம் ஏற்படுத்திக் கொண்டதாகக் கூட இருக்கலாம்.

  தல...இந்த முஸ்தபா...முஸ்தபா...டோன்ட் வொர்ரி முஸ்தபா பாட்டை சொல்றாய்ங்க...:-)

  பதிலளிநீக்கு
 8. நண்பர்கள் எனக்கு சரிவர அமைய வில்லை என்று கூட எனக்கு சில சமயம் தோன்றும். இதற்கு காரணம் எந்த ஒரு ஊரிலும் நான் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் படிக்க வில்லை என்பதாக இருக்கலாம். கொஞ்சம் நெருங்கிப் பழகியவர்களிடம் இருந்த சில பழக்கங்கள் எனக்கு அவர்களை அன்னியமாக்கியது என்றால், என் சில நடவடிக்கைகள் அவர்களை என்னிடமிருந்து தொலைப் படுத்தி இருக்க வேண்டும். இப்போது என்னுடன் உறவாடும் சிலர் வேறு ஒரு தளத்தில் இருந்து பழகுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. தோள் மேல் கை போட்டு உறவாடும் பாந்தவ்யம் வரவில்லை யாருக்கும் என்னுடன் அல்லது எனக்கு எவருடனும்! நான் கற்பனையில் வைத்திருந்த தளத்தில் சிலர் இல்லை. சிலர் சுத்த மண்டுகளாகவோ அல்லது வீண் கர்விகளாகவோ இருக்கக் கண்டேன். இதைச் சொல்லும் போது, ஐயா குறை அங்கு இல்லை உங்களிடம் இருக்கக் கூடுமல்லாவா என்று கேட்பதில் உள்ள நியாயத்தையும் உணர்ந்து கொள்கிறேன். நண்பர் என்பவர் என்ன செய்யவேண்டும்? கேட்ட போது கடன் கொடுக்க வேண்டும். ஜாலியாக என்னுடன் விஸ்கி சாப்பிட வேண்டும்? என்னுடன் சினிமா சுற்றுலா வர வேண்டும்? அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவரைக் கண்ட விடத்து நானும் என்னைக் கண்டபோது அவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். இதுதான் அளவுகோல் என்றால் எனக்கும் இரண்டு மூன்று நல்ல நண்பர்கள் உண்டு. யாவரும் என் அலுவலக அறிமுகம். அவ்வளவே.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!