திங்கள், 7 டிசம்பர், 2009

பூமியில் தென்றல் பொன்னாடை போடுது...

 • இன்றைய செய்தித் தாளை மேய்ந்து கொண்டிருந்த போது படித்த இரண்டு விஷயங்கள் கவனத்தைக் கவர்ந்தன. முதலாவது, மேட்டூரில் மாநகராட்சி சரியாக குடி நீர் சப்ளை வழங்கவில்லை என்று கோபப் பட்ட மக்கள் போராடிய பிறகு ஊழியர்கள் அடைப்பு ஏதாவது இருக்கிறதா என்று ஆராய்ந்த போது, புங்கன் மரம் குடிநீர் சப்ளை செய்யும் குழாயில் நேரடியாகப் புகுந்து நீரை உறிஞ்சியதைக்.கண்டு பிடித்தார்களாம்.. பின்னர் அந்தப் பன்னிரண்டு அடி வேரை வெட்டி எடுத்தார்களாம்.
 • இரண்டு, ஓசோன் லேயரில் ஓட்டை. அதனால் புவி வெப்பம்...துருவப்ரதேசங்கள் உருகி நீர் மட்டங்கள் உயர்ந்து நிலப் பரப்பு சுருங்கி, மொத்தத்தில் புவி வெப்பமாகி.....என்று போகும் ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை. இதைப் பற்றி நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் முன்வைத்த கருத்துக்கள் இங்கே....
 • முதலாவது புங்கன் மர விஷயம்...
 • எந்த மரத்தின் வேரும் ஈரப்பதம் உள்ள இடங்களை நோக்கி நீண்டு வளர்ந்து ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்டது. தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாவிட்டால் தென்னை மரத்தின் வேர் நீண்டு பக்கத்து வீடுகளின் கிணறுகளை நாடுவதைப் பார்த்துள்ளோம். வேப்ப மரத்தின் வேர்கள் நம் கட்டிட அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்ப்பதையும் பார்த்துள்ளோம். கோவில் கோபுரங்கள் மீது பறவைகள் சாப்பிட்டு எச்சமிட்ட பழ விதைகள் காரணமாக ஆல, அரச வேம்பு மரக் கிளைகள் வளரத் தொடங்கி விரிசல் விட்டிருப்பதையும் பார்த்திருக்கிறோம்.
 • மரங்களின் இயல்பு அது. அந்தக் குழாய் எப்போதோ விரிசல் விட்டிருக்க வேண்டும். கவனிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட 'பொறுப்பான' நபர்கள் இதை கவனிக்காமலோ சோம்பேறித்தனத்தினாலோ விட்டிருக்க வேண்டும்.
 • புங்கனுக்கு ஒரு பொதுக் குணம் உண்டு. நோய்த்தொற்றுக் கிருமிகளை எதிர்த்து அழித்து நோய்களிருந்து காக்க வல்லது அது என்று சொல்வார்கள். சிலபல வருடங்களுக்கு முன்னால் உடை அணியாக் குழந்தைகள் அரையில் புங்கைக்காய் தடுப்பு (மறைப்பு) அணிந்திருப்பதை பார்த்த ஞாபகம் இருக்கும்! இன்னொரு உபயோகமும் புங்கைக்கு உண்டு என்று சொல்வார்கள்...'பேய் விரட்டும்' சக்தி இந்த மரத்துக்கு உண்டு என்பதுதான் அது... எனவே,
 • அந்த கிராம மக்கள் மீது கருணை கொண்ட இந்த மரம் நோய்களை தடுக்கவும், பேய்களை விரட்டவும் மக்கள் வீடுகளில் உள்ள தண்ணீரில் கலக்க முடிவு செய்து இந்த வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம்....!                                              
 • இரண்டாவது, ஓசோன் மேட்டர்.
 • ஓசோன் லேயர் ஓட்டை ஏன் உஷ்ணப் பிரதேசங்களை விட்டு விட்டு துருவங்களில் மட்டும் விழுகிறது? பூமியின் காந்த புலன்களுக்கும் அதற்கும் ஏதும் தொடர்பு உண்டா?
 • துருவங்களில் உறைபனி என்பது பூமியுடன் புதைந்து வேரூன்றி உள்ளதா அல்லது மிதக்கிறதா?
 • ஏன் இந்தக் கேள்வி என்று புரிகிறதா? மண்ணில் ஆழ்ந்துள்ளதோ, மிதக்கிறதோ, அதனது கன பரிமாணம், எடை ஆகியவை ஏற்கெனவே கடல் நீரில் ஏற்கப் பட்டுள்ளது. எனவே அது உருகிய பிறகு அது பரவ அதிகப் படியான இடம் தேவை இல்லை.
 • அது மண்ணில் ஆழ்ந்துள்ளதாக கொள்வோம். அதனது கன பரிமாணம் காரணமாக ஏற்கெனவே கடல் நீர் கரையை மீறி வழிந்திருக்கும். சுற்று சூழ் ஆர்வலர்கள் முன்மொழிவது போல காலநிலை மாற்றத்தால்தான் அது நடக்கும் என்பது சரி அல்ல. மக்களுக்கு பழைய ஞாபகங்கள் இருக்குமானால் கடற்கரைகளில் கடந்த பல வருடங்களில் நிகழ்ந்து கொண்டிருந்த மாற்றங்களை கவனித்திருப்பார்கள். (திருவல்லிக்கேணி, ராமேஸ்வர வாசிகள் இந்த விஷயத்தில் இன்னும் நிறையப் பேச முடியும்..)
 • இதை எளிதாகக் கணிக்க ஒரு கண்ணாடி குவளையை எடுத்துக் கொள்வோம். குளிர் சாதனப் பெட்டியிலிருந்து ஐஸ் கட்டிகள் எடுத்து அந்தக் குவளையில் இட்டு அதை ஒரு குச்சியால் அதை அடியிலேயே பிடித்துக் கொள்வோம். தண்ணீர் அளவை அப்போதும் ஐஸ் கரைந்த பிறகும் கவனித்துப் பார்ப்போம்
 • ஆதி காலத்தில் பூமியில் நிலப் பரப்பு இப்போது இருப்பதை விட அதிகமாக இருந்து படிப்படியாகக் குறைந்து கொண்டே வருவதை கணக்கீடுகளில் அறிகிறோம். இந்த சுருங்குதலினால் பூமிக்கடியில் உள்ள 'டெக்டானிக்' தட்டுகள் இடம் மாறுவதில் ஏற்படும் அழுத்தத்தில் எரிமலைகள் தோன்றுகின்றன.
 • பல்வேறு தாதுக்களை தோண்டி எடுத்து உலோகங்களை பூமியில் பயன்படுத்தும் போது அதன் ஆக்சைடுகள் அதிகமாகி பூமியில் புதைக்கப் படும்போது நிலப் பரப்பு இன்னும் அதிகமாகும் சாத்தியக் கூறுதான் அதிகம்..
 • உலகம் அழிகிறது என்று வைத்துக் கொள்வோம்...எந்தெந்த காரணங்களினால் அழியக் கூடிய சாத்தியங்கள்...?
 • ஒரு மகாப் பிரளயம் வந்தால் அழியும் என்றால் மேற்சொன்ன காரணங்களினால் பூமி முழுகும் சாத்தியம் குறைகிறது.
 • வெப்பம் அதிகமாகும்போது காற்றில் ஈரப்பதம் உறிஞ்சப்படும் என்றால் அதிகமாகும் வெப்பத்தின் காரணமாக கடல் நீரும் ஆவியாக உறிஞ்சப் படத்தானே வேண்டும்? அப்போது அதன் அளவும் குறையுமே...
 • சுற்றிக் கொண்டிருக்கும் பூமி நிற்க வேண்டும் என்றால்.........
 • கட்டிடங்களையும் மனிதர்கள், மற்றும் உயிரினங்களையும் பூமி விழுங்க வேண்டும் என்றால்.....!

11 கருத்துகள்:

 1. இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்கன்னு உங்களை முந்தின பதிவில் யாரோ ரேக்கிக் கொண்டிருந்தால், நீங்கள் இங்கே பொன்னாடை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே!

  பதிலளிநீக்கு
 2. பிரமாதமான கட்டுரை. பெரிய விஷயங்கள் எளிய நடையில் எழுதப் பட்டிருக்கின்றன. ஆக்சைடுகளால் நிலப் பரப்பு அதிகமாகும் என்பதும், ஏன் துருவப் பிரதேசங்களில் மட்டும் ஓசோனில் ஓட்டை என்பதும் சிந்திக்க வைக்கிற வரிகள். வட துருவத்தில் மட்டும் என்றால் என்னிடம் விடை இருக்கிறது. கார்பன் மொனாக்சைட் மற்றும் கார்பன் டை ஆக்சைடு சூடான எமிஷன்களால் வருவது. சூடான காற்றுக்கு மேலேறும் தன்மை(அடர்த்திக் குறைவால்) உண்டு.

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 3. விருந்துகளில் ஐஸ் க்ரீம் பரிமாற ஒரு அட்டைப் பெட்டியில் ட்ரை ஐஸ் எனப்படும் திடமாக்கப் பட்ட கார்பன் டை ஆக்சைட் வைத்து அதன் மேல் ஐஸ் க்ரீம் நிரப்பிய கிண்ணங்களை வைத்துக் கொண்டு வருவர். ட்ரை ஐஸ் உருகும் போது [அது திரவமாக மாறாமல் அப்படியே வாயு ஆகிவிடும் தன்மை உடையதால் அட்டைப் பெட்டியை சுற்றி வந்து உள்ளே இன்னும் எவ்வளவு பாக்கி - இன்னொன்று கேட்டால் கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டு அங்கேயே டென்ட் அடிக்கும் குழந்தைகள் மூச்சுத் திணறி கஷ்டப் படக்கூடும் என்பதால் தான் விவரம் அறிந்த சப்ளையர்கள் மேஜைக்கு அடியில் ஒரு மின் விசிறியை ஓட விட்டிருப்பார்கள் ]

  இப்பொழுது சொல்லுங்கள் : நாம் கேள்விப் படும் கார்பன் டை ஆக்சைட் அதிகமாதல் என்பது பூமியின் சராசரி மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம் வரை உறுதி செய்யப்பட்டிருக்கிறது? சென்னையிலும் நீலகிரியிலும் ஒரே அளவுதானா? கடல் பகுதிகளிலும் அப்படியேதானா?

  ஒசோனை விட அடர்த்தி குறைந்த வாயுக்கள் அதற்கு மேல் இருக்கின்றனவா? மூன்று மிலியன் வருடங்களுக்கு முன் உருவாகிய ஐஸ் படிவங்களை ஆராய்ந்து குறைந்த அளவு கார்பன் டை ஆக்சைட் அதிகமாவதாலேயே வெப்பம் அதிகரிக்கும் என்கிறார்கள். அப்போது, இப்பொழுது நாம் கேள்விப்படும் விகிதாசாரங்கள் எல்லாம் ஒரு பொய்யான அடிப்படையில் உருவானவையா?

  ஒரு அப்பாவித் தனமான கேள்வி கேட்கப் படுவதுண்டு - "ஓர் நரி காட்டுக்குள் எவ்வளவு தூரம் ஓட முடியும்?" யாரையாவது கேட்டுப் பாருங்கள். பட்டென பதில் சொல்லி விடுவார்கள் - "கொடுத்த விவரம் போதாது." என்று அல்லது "பாதி தூரம்" என்று. அது போல் சூடான கற்று மேலே போகும் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவுக்கு மேலே போன காற்று குளிர்ந்த காற்றாக அதில் பாதி வழி இறங்கி வரவும் வைப்புகள் அதிகம்.

  பதிலளிநீக்கு
 4. முன் காலத்தில், அதாவது ஒரு நானூறு ஆண்டுகளுக்கு முன்பு என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆஸ்திரேலியாவில் மிருகங்கள் மட்டுமே இருந்தன. ஏதோ ஓரிரு மக்கள் கூட்டம் மிகவும் பின் தங்கிய நிலையில், உடைந்த கப்பல்களின் உபயத்தால் அல்லது திக்குத் தெரியாமல் கரையைத் தேடி அலைந்ததனால் வந்தவர்களாக இருக்கக் கூடும். இங்கிலாந்து நாட்டு மக்கள் தம் நாட்டில் தப்பு செய்தவர்களை தீவாந்தர சிக்ஷை என்ற பெயரில் ஆஸ்திரேலியாவில் கொண்டு விட்டு விடுவார்களாம். இப்படி ஒரு பாரம்பர்யத்தில் வந்தவர்களாக இருப்பதால் ஆஸ்திரேலியர்களை மற்றவர்கள் குற்ற பரம்பரை என்று கிண்டலடிப்பதும் உண்டு. இப்படி முற்காலத்தில் மக்கள் வாழ்ந்திராத பகுதியில் இப்போது மனிதர்கள் - அவர்களிடையே அல்ட்ரா வயலெட் கதிர்களால் உண்டாகும் தோல் வியாதிகள் அதிகம். பூமியிலிருந்து நூறு அல்லது இருநூறு கி மீ உயரத்தில் ஒரு பத்து மீட்டர் கனத்துக்கு மட்டும் ஓசோன் இருப்பதாகக் கொண்டால் அதன் நிறை பரிமாணங்களை நீங்களே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு துவாரம் [அது தானே இந்த இடுகையின் நாயகன்!] அது, ஓசோன் போதவில்லை என்பதனால் வந்த ஓட்டையா அல்லது வெப்ப மயமான மற்ற சில்லறை வாயுக்கள் வெளியேற செய்யப்பட்ட வாயிலா? கொஞ்சம் நீங்களும்தான் யோசியுங்களேன்.

  பதிலளிநீக்கு
 5. குரோம்பேட்டைக் குறும்பன்8 டிசம்பர், 2009 அன்று PM 12:39

  ஏதோ உள்குத்துகளை சமாளிக்க, வாசகர்களை விஞ்ஞானபூர்வமாகக் குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்!
  நாராயண, நாராயண!

  பதிலளிநீக்கு
 6. புலவரே! புங்கை மரம் பற்றி சொன்னவுடனே - எங்களை கிராமத்துப் பக்கம் ஆராய்ச்சி செய்பவர்கள்னு நெனச்சுட்டீங்களா!!
  நகரங்கள் பக்கமும் அடிக்கடி வருவோம்!

  பதிலளிநீக்கு
 7. நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 8. பரம சிவன் கழுத்தில் இருந்த பாம்பு சொன்னது ...என்று ஒரு பாடல் உண்டு. அது போல் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே. ஓசோன் நம் தலைக்கு மேலே ஐம்பது கி மீ உயரத்தில் இருக்கும் வரை தான் நமக்கு பாது காப்பு - தோட்டத்தில் மின் வெளி மாதிரி. நம் வசிப்பிடங்களில் ஓசோன் ஒரு அளவுக்கு மேல் அதிகமானால் விஷம் - புற்று நோய் முதல் எல்லா வகையான துன்பங்களுக்கும் காரணம் ஆகலாம். ஒவ்வொரு முறை பூமியை மின்னல் தாக்கும் போதும் உற்பத்தியாகும் ஓசோன் நாம் உபயோகித்த யூரியாவை மீண்டும் கார்பன் டை ஆக்சைட் ஆக மாற்றும் தன்மையுடையது என்று எங்கோ படித்த நினைவு. Emissions பற்றி பேசும்பொழுது எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கார்பன் டை ஆக்சைடும் கார்பன் மாநாக்சிடும் தான். ஆனால் பூமி மட்டத்தில் நைட்ரஸ் ஆக்சைட் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் புற ஊதாக் கதிர்களால் தாக்கப் படுவதால் ஓசோன் உற்பத்தியாகும் வாய்ப்பும் அப்படி உண்டாக்கப் பட்ட ஓசோன் நமக்குக் கேடு விளைவிக்கக் கூடும் என்பதே கரிசனத்துக்குக் காரணம்.

  பெரிய சோப்புக் குமிழ் ஊதிப் பார்த்திருக்கிறீர்களா? முதலில் வெறும் வெள்ளைக் குமிழ் - வண்ணங்கள் - மேலும் வண்ணங்கள் என்று அது மேலும் மேலும் கவர்ச்சி கரமாய் தெரிய ஆரம்பிக்கும் பொழுது - ஆ, அது என்ன ஒரு ஓட்டை! என்று நாம் பார்த்து சுதரிக்கும் முன்னேயே உங்கள் முகத்தில் சோப்பு நீர்த் திவலைகள்! அது மாதிரி ஓசோன் குமிழுக்குள் இருக்கும் சூடாக்கப்பட்ட மற்ற வாயுக்கள் வெளியேற ஒரு வழியாகவும் - அந்த வழி பூமியின் காந்தப் புலன் காரணமாக இங்கேதான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப் பெறுகிறது என்று கொண்டால், நாம் ஓசோன் ஓட்டைகளைப் பற்றி கவலை கொள்வதைத் தவிர்த்து எரிபொருள் சிக்கனத்தை நம்மால் முடிந்த வரை கடைப் பிடித்தல் நன்று.

  பதிலளிநீக்கு
 9. எளிமையாகத் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. எளிமையான பாராட்டுக்கு நன்றி வானம்பாடிகள்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!