வெள்ளி, 4 டிசம்பர், 2009

இசையில் மயங்கியே, துன்புறும் அனானியே !

மார்கழி என்றாலே - அதிகாலை வேளையில், எங்கள் ஊர் சட்டையப்பர் கோவில் ராமமடத்தில் கை தாளம் போட்டு, குழுவினரோடு  பஜனைப்  பாடல்கள் பாடியது ஞாபகம் வருது.  அட, அவ்வளவு ஞானமா என்று அதிசயிக்காதீர்கள் - 'கூட்டத்துல கோவிந்தா ' தான் போடுவேன்! ஒரு குறிப்பிட்ட பாடல் வரும்பொழுது ஆர்வம் அதிகமாகும். (பொங்கல் வரும் நேரம் இது....!) பெரும் குரலில் பாடி, பிறகு, வைத்தா கையால் சுடச் சுட ஓருருண்டை பொங்கல் பெற்று, வலது உள்ளங்கையைச் சுட்டுக்கொண்டு,  அந்த சூடான உருண்டையை, இடது கைக்கு மாற்றி, இடது உள்ளங்கையையும் சுட்டுக்கொண்டு, பிறகு நேரே வாய்க்குள் போட்டு, நாவையும் சுட்டுக்கொண்ட, சூடான, சுவையான நாட்கள் ஞாபகம் வருகின்றன.


நாகையிலிருந்து சென்னை வந்ததும், மார்கழி அனுபவம் வேறுவிதம் ஆகிவிட்டது.  புரசை வாழ் ரிக்ஷாக்கார அண்ணாச்சிகள் - அய்யப்ப பூஜை / பஜனைப் பாடல்கள் உரத்த குரலில் காலையில் பாட ஆரம்பிப்பார்கள். அவர்கள் சரணம் சொல்லுவது கேட்க வித்தியாசமாக இருக்கும். ஆனால் என்ன, அவர்களின் பாடல்களைக் கேட்கலாம், பார்க்கக்கூடாது! ஏன்? ஒரு நாள் அலுவலகப் பேருந்து வருவதற்கு கொஞ்சம் முன்னதாகவே வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டேன். எனவே சென்னை மார்கழி எப்படியிருக்கிறது என்று கொஞ்சம் அருகிலே சென்று விசாரித்து வரலாம் என்று - பஜனைப் பாட்டு ஆரிஜின் பார்த்து நடந்தேன். அங்கே போய்ப் பார்த்தால், 'கடவுளே, கடவுளே,' என்று திரும்பத் திரும்பச் சொல்லவேண்டிய நிலைமை - ஒரு சாமி ஃபுல் இன்ப்லூயன்சில், 'சாமியே ஏஏஎ ......ய' என்று இழுக்க - அவருக்கு முன்னே மூன்று பீடிப் புகை சாமிகள், 'சரணம் ஐயப்ப' என்று சுருக்கமாக அவரைக் கட் செய்து சொல்லிக்கொண்டிருந்தார்கள்.  அவர்களுக்கு ஒரு மைக் செட், லவுட் ஸ்பீக்கர்! ஒரே ஒரு ஆரஞ்சுக் கலர் வேட்டி சாமி மட்டும் - அங்கே ஒரு ஐயப்பன் படத்திற்கு மலர் அலங்காரம் செய்துகொண்டிருந்தார். 


மார்கழியில் நம்ப ஊருல இருந்திருந்தா எப்பிடி இருந்திருக்கும் என்று ஒரு சோகம் மனதைக் கவ்விற்று. அப்போ ஊரிலேருந்து வந்த என் அப்பா, 'என்னடா இவ்வளவு அசடாப் போயிட்டியே, இந்த மார்கழி சீசன்லே மெட்ராஸ்ல இருக்கறத்துக்குக் கொடுத்து வெச்சிருக்கணும்.' என்றார்.  'என்ன விஷயம் அப்பா?' என்று கேட்டேன். நீ இன்றைக்குச் சாயந்திரம் - ஆபீஸ்லேயிருந்து வரும்பொழுது, நேரே நுங்கம்பாக்கம் சித்தப்பா வீட்டுக்கு வந்துடு; நானும் என் தம்பி சேஷுவும், உன்னை மியூசிக் அகாடமிக்குக் கூப்பிட்டுக்கொண்டு போகிறோம் என்றார். மறுநாள் கிருஸ்துமஸ் லீவு, எனவே அன்று கம்பெனியில் ஒன்னரை  மணிக்கே 'வீட்டுக்கு பெல்' அடிச்சுட்டாங்க. நுங்கம்பாக்கம் போயிட்டு, அப்பாவுடனும், சித்தப்பாவுடனும், அகாடமி அறிமுகம் செய்துகொண்டேன். கச்சேரிகள், கேண்டீன் இரண்டுமே சூப்பராக இருந்தது. சித்தப்பா நாங்க மாலையில் திரும்பி வரும்பொழுது, நடந்தே வரும்படிக் கூறி, மயிலாப்பூரைச் சுற்றிக் காட்டினார் - அங்கே மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அருகே, ஒரு வீட்டு அருகே சென்று வீட்டு வாசலில் இருக்கும் பெயர்ப்பலகையைப் படிக்கச் சொன்னார். படித்தேன், மதுரை மணி ஐயர். பிறகு நுங்கம்பாக்கம் ஹைரோடில் (கதீட்ரல் சாலை?)- ஒரு வீட்டு வாசலில் இருந்த பெயர்ப் பலகையை - கணேசன் என்று படித்தேன். ஜெமினி கணேசன் என்றார் சித்தப்பா. அடுத்த ஆண்டு(2010), அந்த சேஷு சித்தப்பாவின் நூற்றாண்டு.அப்போ சித்தப்பா அறிமுகம் செஞ்சி வெச்ச அகாடமியை, அந்த நாள் தொடங்கி, ஒவ்வொரு சீசனுக்கும், தொடர்ந்து - சீசனில் ஒரு நாளைக்காவது, சென்று தரிசித்து, அங்கு உள்ள வித்வான் படங்களை, நான் / என் உறவினர்கள் பிறந்த ஆண்டில் யார் சங்கீத கலாநிதி விருது பெற்றவர், என்றெல்லாம் சிந்தித்தபடி பார்த்து, அங்குள்ள ஸ்டால்களை ஆசைதீரப் பார்வையிடுவேன். (பார்வை ஒன்றே போதுமே, பர்சை தொட மாட்டேனே!) பகல் நேரக் கச்சேரிகளை (அதாவது பதினைந்து, மூன்று கச்சேரிகளை - ஆமாமுங்க - ஒ சி ) கேட்டு, மூன்றாம் பாட்டில், சீட்டில் தூங்கி, ஐந்தாம் பாட்டில் எழுந்து - அடுத்த சீட்டில் உள்ள அண்ணன் ராமனை, பாகவதர் பாடுவது என்ன ராகம் என்று கேட்டால், அவர் உறக்கத்திலிருந்து கண் விழித்து, பசுபதிப்ரியா என்று சொல்லி மீண்டும் கண் அயருவார்.
  
அப்பா, சித்தப்பா காலம் எல்லாம் போயிடிச்சு. இப்போ அவர்களுடைய பையன்கள் சிலர்தான் விடாப்பிடியாக சென்னை இசைவிழாக் கச்சேரிகள் நேரில் சென்று, கேட்டு வருகிறோம். (தியாகு - இந்த சீசனுக்கு எனக்கும் சேர்த்து ஓ சி பாஸ் கெடச்சுடும்தானே?) அடுத்த தலைமுறைக்கு, இந்த அளவுக்கு, அதாவது சபாக்கள் தேடிப்போய் கேட்கும் அளவுக்கு, இசையில் ஆர்வம் இருக்குமா என்று இன்னும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. (விதிவிலக்குகள் உண்டு - பிரம்பை எடுத்துக்கொண்டு பின்னூட்டமிட வராதீர்கள் - சு, ச போன்றோர்)

16 கருத்துகள்:

 1. நிறையப்பேர் கேண்டீன் சுவையில் மயங்கியே அங்கே போய்வந்ததாக அல்லவா கேள்விப் பட்டிருக்கிறேன்:-))

  பதிலளிநீக்கு
 2. ஆமாம் கிருஷ் சார் அந்தக் காலத்துல கேண்டீன் பொருட்கள் யாவும் சுவையாகத்தான் இருந்தன. ஐம்புலன்களில் நாலு புலன்களாவது திருப்தியடையும், மியூசிக் அகடெமி காம்பவுண்டில்!

  பதிலளிநீக்கு
 3. இப்போ இது போன்ற இசை சபாக்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டதாகவே நினைக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 4. வசந்த் சார் - இந்தக் காலத்திலும் சென்னையில் சபாக்கள் சிறப்பான பல கச்சேரிகளை மேடை ஏற்றிக் கொண்டுதான் உள்ளன. மார்கழி என்றாலே சென்னை (இசை) விழாக் கோலம் பூண்டுவிடுகிறது.

  பதிலளிநீக்கு
 5. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே திரு வள்ளுவர் "செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் " என்றார். நம் சபாக்களில் நல்ல சிற்றுண்டி கிடைப்பது என்பது ...

  பதிலளிநீக்கு
 6. கே ரங்கன் சார் - செவிக்கு உணவு இல்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் என்பது உண்மைதான்.
  ஆனா சில சமயங்களில், சில சில்லரை சபாக்களில் கற்றுக் குட்டிகள் பாடும்பொழுது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போல் இருக்கும், அப்போ நாம், வயிற்றுக்கு(ம்) 'ஈய'ப்பட வெளியே ஓடிவந்துடுவோம்!

  பதிலளிநீக்கு
 7. மியூசிக் அகாடெமி இன்னும் இருக்கிறதா? எத்தனை வருசமாச்சு! போட்டோவையாவது காட்டினீங்களே? நன்றி, அன்பரே. இன்னொரு அரங்கமும் உண்டு - நாரத சபா?

  பனிரெண்டு வயது வாக்கில் என் மாமா என்னை சீனிவாஸ் என்று ஒரு பையன் மேண்டலின் வாசிப்பதைப் பார்க்கவும் கேட்கவும் மியூசிக் அகாடெமிக்கு அழைத்துப் போனார். வழியெல்லாம் கிடைத்த 'உன்னை விடச் சின்னவன்' அர்ச்சனையால் சீனிவாஸ் மேல் ஒரு பொறாமை. அதற்கு மேல் மேண்டலின் என்றால் என்னவென்றே தெரியாது என்கிற எரிச்சல். சீனிவாசுக்குப் பிறகு இன்னும் இருவர், அதற்குப் பிறகு சினிமாப்பாட்டு பாடும் ஜேசுதாஸ் கச்சேரி செய்யத் தொடங்கியிருப்பதாக அவருடைய பாட்டு, அதற்குப் பிறகு அன்றைய ஸ்பெசல் லால்குடியோ ரமணியோ யாரோ some big name artistன் perfomance - ஆக அன்றைய நாள் முழுதும் classical music immersion. நினைவில் நிற்பதென்னவோ முறுமுறு மெதுவடையும், சட்டினியும், பூசணிக்காய் அல்வாவும் தான்.

  பதிலளிநீக்கு
 8. comment, part 2:
  மெதுவடையை சிலர் கோந்து போல் செய்வார்கள்; சிலர் ஒரேயடியாக பச்சை சிவப்பு மிளகாயைப் போட்டு அது எண்ணையில் கருகிக் கண்றாவியாகச் சுவைக்கும். சிலர் ஒரேயடியாக வறுத்துத் தள்ளி விடுவார்கள்;எண்ணைச் சுரங்கம் போல் இருக்கும். சிலர் ஏதோ ஒரு வடிவத்தில் செய்து விடுவார்கள். சிலர் வட்டமாக நடுவில் ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டை போட்டு ரிங்க் விளையாட வைப்பார்கள். அன்றைக்கு நான் சாப்பிட்டது, மெதுவடைக்கான quality benchmark. அளவான உளுந்தும் அரிசியும் பொட்டுக்கடலையும் சேர்த்து அரைத்திருந்தார்கள். இஞ்சியை கல் கல்லாகப் போடாமல் சீவியிருந்தார்கள். மிளகு, பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை வகையறாக்களை நெய்யில் பொறித்து வடைமாவில் கலந்திருந்தார்கள். இரண்டு இஞ்ச் உயரத்துக்கும், compass வைத்து விட்டம் செய்தாற்போல் மூன்றரை இஞ்சுக்கு வட்டமாகப் பொறித்திருந்தார்கள். விரலால் பிடிப்பதற்கே தவிர நுழைப்பதற்கல்ல என்பது போல், நடுவில் தெரிந்தும் தெரியாமலும் கண். மாமிகள் அணிந்திருந்த தங்க நகைகளுக்கு வெட்கம் வருவது போல் அப்படி ஒரு கலரோ கலர். தொட்டால் முறுமுறுப்பு. பிட்டால் மென்மை. நாவில் பட்டால் சுவை. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கைகள் விரைந்தாலும், மெள்ள மெள்ள என்று நாவும் வயிறும் அனுபவிக்கக் கெஞ்சும். தேங்காய், காரமிளகாய் சட்டினியில் தொட்டுத் தொட்டு தேடிக் கொண்ட சொர்க்கம். பூசணிக்காய் அல்வாவைப் பற்றி எழுத இரண்டு பக்கம் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 9. comment, part 3:
  "என்னடா, எப்படி இருந்தது இசை விழா?" என்ற மாமாவின் கேள்விக்கு பதில் சொல்லப் போய் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டேன். 'ஞான சூன்யம்' என்று தொடங்கி வீடு வரை தொடர்ந்தது அர்ச்சனை.

  பல வருடங்களுக்குப் பிறகு சென்னையில் வேலை பார்த்த டிசம்பர்களில் இசைவிழாவுக்குச் சென்றாலும், முதல் அனுபவத்தின் இனிமை கிடைக்கவில்லை. இப்போதெல்லாம் முன்பே தயார் செய்யப்பட்ட பாகெட்டுகளில் கொடுக்கிறார்களாமே?

  பதிலளிநீக்கு
 10. Appadurai Said: "பனிரெண்டு வயது வாக்கில் என் மாமா என்னை சீனிவாஸ் என்று ஒரு பையன் மேண்டலின் வாசிப்பதைப் பார்க்கவும் கேட்கவும் மியூசிக் அகாடெமிக்கு அழைத்துப் போனார்"

  உங்கள் பனிரெண்டு வயது - அவர் பிறந்து விட்டாரா !!!

  நாராயணா நாராயணா !!

  - சாய்ராம் கோபாலன்

  பதிலளிநீக்கு
 11. கட்டுரையும் சுவாரஸ்யம், அப்பாதுரையின் பின்னூட்டங்களும் சுவாரஸ்யம்!

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 12. //"ஒரு சாமி ஃபுல் இன்ப்லூயன்சில், 'சாமியே ஏஏஎ ......ய' என்று இழுக்க - அவருக்கு முன்னே மூன்று பீடிப் புகை சாமிகள், 'சரணம் ஐயப்ப' என்று சுருக்கமாக அவரைக் கட் செய்து சொல்லிக்கொண்டிருந்தார்கள்"//

  உண்மைதான் ஐயா...

  நான் கூட ரொம்ப Feel பண்ணிய விஷயம் அது. இந்தக் காலத்தில் கோவிலுக்குள்ளேயே இதெல்லாம் நடக்கிறது. புகழ்பெற்ற அந்தக் கோவிலில் இது மாதிரி மூன்று பேர் புகைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியில் என் கையில் இருந்த பீர் பாட்டில் கீழே விழுந்து விட்டதுன்னா பார்த்துக்குங்க...

  பதிலளிநீக்கு
 13. அப்பாதுரையார், சாட்டர்டே சமையல் பகுதியை, பின்னூட்டத்தில் புகுத்தி, புதுமை செய்துவிட்டார். அவரைப் பாராட்டி, Dr தொண்டி வடை என்றொரு பட்டம் கொடுக்க, அகில உலக வடை ஆராய்ச்சியாளர் சங்கத்திற்கு பரிந்துரை அனுப்பவுள்ளோம்!

  பதிலளிநீக்கு
 14. சாய்ராம் சரியான பிடி பிடித்துள்ளார்! மாண்டலின் ஸ்ரீனிவாஸ் வயதையும், அப்பாதுரை சார் வயதையும், ஒப்பிட்டு நோக்க எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம். துரை சார் - உங்களுக்கு கேட்குதா சாய் கேள்வி?

  பதிலளிநீக்கு
 15. ஜவஹரோடு சேர்ந்து, நாங்களும் அப்பாதுரை கருத்துக்களை மிகவும் ரசித்தோம்.

  பதிலளிநீக்கு
 16. // கோவிலில் இது மாதிரி மூன்று பேர் புகைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியில் என் கையில் இருந்த பீர் பாட்டில் கீழே விழுந்து விட்டதுன்னா பார்த்துக்குங்க..//

  L O L (வா வி சி) :-)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!