சனி, 4 செப்டம்பர், 2010

ஆசிரியர்கள் பலவிதம்!

ஆசிரியர் தினம் என்றால் நல்லது, பொல்லாதது இரண்டையும் எண்ணிப் பார்ப்பதிலும், எழுதுவதிலும் தவறில்லையே? (!)   
அந்தக் காலத்து ஆசிரியப் பிரான்களில் இந்தி வில்லன் நடிகர் பிரான் மாதிரி சிலரும் உண்டு.  நூறு தோப்புக் கரணம்,  மணிக்கட்டில் ஸ்கேலால் அடி, அசாதாரணமான பலம் கொண்ட குட்டு, அறை இப்படி சித்திரவதை  ஸ்பெஷலிஸ்டுகள் பலப் பலர்.  அதில் ஒரு சிலர் சொல்லிக் கொடுப்பதில் வல்லவர்களாக இருந்து தம் கொடுமைக்கு காம்பென்செட் செய்தனர்.  மற்றும் சிலர் கொடுமையே மட்டும் அடையாளமாக விளங்கி பேர் தெரியாமல் மறக்கப் பட்டனர்.

வைரமணி,  தங்கக் கிரிடம் என்று போற்றத் தக்க சில ஆசிரியர்களையும் நான் பெறும் பேறு பெற்றிருந்தேன்.  மாணவர் திறனைப் பாராட்டி ஒரு சாக்கட்டி பரிசு வழங்கி கௌரவிப்பார், திரு ரங்கசாமி நாட்டார்.  (அந்தக் காலத்தில் ஜாதி பெயர்கள் தவறாகக் கருதப் படவில்லை. மாறாக ராவ் ஸார்,  முதலியார் ஸார் என்று அடையாளம் சாதாரணமாக சொல்லப்படும். )  மன நலம் குன்றிய என் உறவினருக்கு வெகு சிரத்தையாக மருந்து சிபாரிசு செய்து, வீட்டில் மிச்சம் இருந்த மருந்து பாட்டிலையும் கொடுத்த மகான் இவர். யாரையும் திட்டுவதோ அடிப்பதோ கிடையவே கிடையாது. அப்பா கூட கண்டிப்பாக இருப்பார், ஒரு மாமா போல இதமாக சரி செய்ய முயலும் நல்ல மனிதர்.  மாணவர்களும் அவரை கடவுளுக்கு சமமாக வைத்துப் போற்றினர்.
  
திரு குருசாமி ஐயர் எனக்கு ஏழாம் வகுப்பு கிளாஸ் டீச்சர்.  ராமகிருஷ்ண பரம ஹம்சரின் பரம பக்தர். குழந்தைகள் இல்லாதவர். சாப்பிடாமல் வகுப்புக்குச சென்று மயங்கி விழுந்த மாணவனுக்கு தம் சொந்த சொலவில் இட்டிலி வாங்கி ஊட்டி விட்டவர். பாடம் சொல்லிக் கொடுப்பதில் மகா சமர்த்தர்.  மழை மேகம் கவிந்த ஒரு நாளில் " நீங்கள் வீட்டுக்குப் போங்கள் அதுவரை மழை வராது " என்று சொல்லி அசலாக மழை வராமல் எங்களை பிரமிக்க வைத்த நல்லவர். 

திரு சங்கர ஐயர் தமிழ் ஆசான். தினசரி சிறு இலக்கியச் சுவை சொற் பொழிவு பிரார்த்தனைக்குப் பின் நிகழ்த்துவார். அரிய பெரிய விஷயங்களை அறிய நான் ஆவல் கொள்ள காரணகர்த்தர்.  

திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அந்த மகா வித்துவான் போலவே தமிழ் அறிஞர்.  ஆசு கவி வகையைச் சேர்ந்தவர். நானும் கவிதை (?!!) எழுத ஊக்கம் கொடுத்த உதாரண புருஷர்.  தமிழ்ப் பாடத்தை மிகவும் சுவைபட சொல்லித்தரும் வித்தகர்.

சௌந்தரராஜ ஐயங்கார், சம்பூரணம் ஐயர் என இரு ஆசிரியர்கள் ஆங்கிலம், கணக்கு சொல்லிக் கொடுத்தவர்கள். மாணவர்களை உண்மையிலேயே தம் பிள்ளைகளைப் போல நடத்தியவர்கள்.  மனப் பாடம் எளிதில் செய்ய சாதாரணமான சம்மரி,  புத்திசாலி மாணவர்கள் எழுத ஸ்டைல் சம்மரி என்று இரண்டு விதமாக சொல்லிக் கொடுத்தவர்  திரு சௌந்தரராஜ ஐயங்கார்.  கணக்கு ஆசிரியர் சம்பூரணம் ஐயர் என் பதினோராம் வகுப்பு கணக்கு மார்க்கை கண்டபின் எனக்கு முன்பே சரியாக கவனம் எடுத்து சொல்லிக் கொடுக்க வில்லையே, நூறு மார்க் வந்திருக்குமே என்று வருந்தி என் வியப்பையும், மதிப்பையும பெற்றார்.

திரு EVS என்று அறியப் பட்ட சுப்ரமணிய ஐயர் ரசிகர், அறிஞர், நேயமிக்கவர்.  ஏழை மாணவர்களின் பள்ளிக் கட்டணத்தை தாமே கட்டிவிடுவார்.  திருப்பிக் கொடுக்க வசதி வந்து, இருந்து, கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்வார். மனித தெய்வம் என்று போற்ற வேண்டிய இயல்புகள் அனைத்தும் ஒருங்கே அமைந்தவர்.  அவர் ஆசியால் மட்டுமே தாம் நன்கு முன்னுக்கு வந்ததாக அவருடைய மாணவர் பலரும் நம்புவர்.  'மாலி புல்லாங்குழல் கேள், நன்றாக இருக்கும்' என்பதுவரை மாணவர்களுக்கு பல நல்ல விஷயங்களைச் சொல்லும் பண்பாளர்.
  
ஆசிரியர் தினம் என்றவுடன் என் நினைவில் வந்தவர்கள் இவர்கள்தான். 

5 கருத்துகள்:

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!