வெள்ளி, 24 செப்டம்பர், 2010

ஹரியுடன் நான், கேபி, எம் எஸ் வி..

ஜெயா டிவி. 'ஹரியுடன் நான்' இசை நிகழ்ச்சி. இது, நான் அவ்வப்போது விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. ஹரிஹரன், ஜேம்ஸ் வசந்த், சரத் மூவரும் நடுவர்களாய் பாடுபவர்களைக் கிழித்துத் தோரணம் கட்டி விமர்சனம் செய்து, அவர்களைத் திரும்பத் திரும்ப 'க'ல தப்பு, 'ப' வை திரும்பப் பாடு, என்றெல்லாம் படுத்தி, இப்போது கிட்டத் தட்ட கடைசி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில், நல்ல பாடகர்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள்..  இதில் ஜெயிக்கப் போகும் நபர் ஹரிஹரனுடன் பாடப் போவதாகத் தெரிகிறது.  

சில வாரங்களுக்கு முன் ஒரு வாலிபர் மழை பற்றிய பாடல் ஒன்றைப் பாட நமக்கு 'நல்லாதானே இருக்கு' என்று தோன்றிய பாடல், நடுவர்களால் கிழிக்கப் பட்டு, அவரை பாதியிலேயே திருப்பி அனுப்பி...  கடைசியில் அந்தப் பாடல் சரத் கம்போஸ் செய்தது என்றும், அந்தப் பாடலை சரத் பாட, அந்தப் பாடலில் மயங்கி அது என்ன படம், என்ன பாடல் என்று நெட்டில் தேடி, தோல்விதான் கிட்டியது.  

இப்போது சொல்ல வருவது, இந்த வாரம் (வியாழன், வெள்ளி, சனி இந்திய நேரப் படி இரவு ஒன்பது மணி) பாலச்சந்தர் எம் எஸ் வி கூட்டணியில் உருவான பாடல்களைப் பாட, நடுவர்கள் லிஸ்ட்டில் அவர்கள் இருவரும் வந்து அமர்ந்திருந்தார்கள். 

யூ குழாய் சுட்டி (இங்கே கிளிக்குக!)ஹரியுடன் நான் 23-09-10

இளமை இயக்குனர், புதுமை இயக்குனர் என்று அறியப் பட்ட கே பி யை க்ளோஸ் அப்பில் காட்டிய போது, அவர் கைச் சுருக்கங்கள் அவர் வயதைக் கூறின. அவரிடம் தான் நடிக்க முடியாத குறையை ஆதி சொன்ன போது அவர் இயக்கத்தில் (இந்த நிகழ்ச்சியில்) தான் நடிப்பதை நினைத்து ஆறுதலடையச் சொன்னவர் "பார்ப்போம்... I am only 80.." என்றார். 


உடன் உட்கார்ந்திருந்த எம் எஸ் வி யின் முதுமை கண்களுக்குத் தெரிந்தாலும் அவர் பாடல்களின் கட்டுக் குலையாத இளமை, நிகழ்ச்சியில் பாடப் பட்ட பாடல்களில் தெரிந்தது.   இருவருமே கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே அமர்ந்திருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியை பார்க்காத ரசிகர்களுக்கு நான் பார்த்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

சரண்யா என்ற பெண் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' பாடலைப் பாடினார்.  சிறப்பு விருந்தினர் இயக்குனர் வசந்த் இந்தப் பாடலில்தான் 'ஸ்லோ மோஷன்' காட்சிகள் முதன்முதலில் தமிழில் அமைக்கப் பட்டதாய், தான் பின்னர் தெரிந்து கொண்டதைக் கூறினார்.  கே பி குறுக்கிட்டு 'ரிவர்ஸ்' காட்சியும் இதில்தான் முதல் என்று நினைவுக்கு வருவதாய்க் கூறினார்.

வெங்கடேஷ் என்பவர் 'அங்கும் இங்கும் பாதை உண்டு' பாடலைப் பாடினார். வசந்த், டிவி இல்லாத அந்தக் காலத்தில் ரேடியோவில் வந்த விளம்பரம், "கமல் அவர்கள், சுஜாதா அவர்கள், ரஜினி அவர்கள், எம் எஸ் வி அவர்கள் கே பியின் அவர்கள்" என்று சொல்லும் விளம்பரம் காதில் ஒலிப்பதாய்க் கூறினார். எம் எஸ் வி அந்தப் பாடல் ஒரு விழா மேடையில் கண்ணதாசனையும் எம் எஸ் வீயையும் ஒரு சேரப் பார்த்த கே பி தனக்கு அவசரமாய் மறு நாளுக்கு ஒரு பாடல் தேவைப் படுவதாகவும், இவர்களை சேர்ந்து பிடிக்க சிரமம் என்பதால் ரசிகர்களைப் பொறுமையாக இருக்கச் சொல்லி அங்கேயே சிச்சுவேஷன் சொல்லி கண்ணதாசன் எழுத, எம் எஸ் வி ட்யூன் சேர்க்க மறு நாள் ஒளிப் பதிவானதாம்.

அனுஷ் என்பவர் 'கனாக் காணும் கண்கள் மெல்ல' பாடல் பாட, ஹரிஹரன் அதில் இரு குறைகள் கண்டு பிடித்தார்!  கே பி இந்தப் பாடல் காலத்தால் அழியாதது, கணவன் மனைவி எல்லோரும் மிகவும் ரசிக்கும் பாடல் என்றார். எம் எஸ் வி, இயக்குனர் அவரை இந்தப் பாடலின் போதும் கசரத் வாங்கியதை நினைவு கூர்ந்தார். பாடலின் நடுவே வசனங்கள் ஸ்ருதியுடன் சேர்ந்து வரவேண்டும் என்று எதிர் பார்ப்பதாகக் கூற,  வேறு யாரையாவது பாட வைக்கலாம் என்று சொன்ன போது சரிதாவே நல்ல குரல் வளம் கொண்டவர் என்று சொல்லினவரை பாட வைத்ததைச் சொன்னார்.

நிரஞ்சன் என்பவர் 'இலக்கணம் மாறுதோ' பாடலை பாடினார். பாடல்கள் அதிகம் இல்லை, பொறுத்துக் கொள்ளச் சொன்னாராம் கேபி எம் எஸ் வீயிடம்.  அதனால்தான்  இரு பாடல்களை இருபது பாடல்களுக்கு சமமாய் போட்டுத் தந்தாராம் எம் எஸ் வி. நடுவே இந்தப் பாடல் 'சாரங்கா' ராகம் பேஸ் தானே என்றார் ஹரிஹரன்.  அவர் ஹிந்துஸ்தானி ராகம் ஒன்றையும் இழுத்துக் காட்டினார்.  எம் எஸ் வி சொன்னார், "இந்த ராகம், அந்த ராகத்தில் என்றெல்லாம் யோசித்து எந்தப் பாடலும் கம்போஸ் செய்ததில்லை.  அவ்வப்போது மனதில் வரும் ட்யூன்தான் .." என்றார்.

லஷ்மி என்ற பெண் 'ஏழு ஸ்வரங்களுக்குள்' பாடல் பாடினார்.  கே பி சிச்சுவேஷன் சொன்னதுமே பல்லவி தயாராகி விட்டதாம்.  அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் கீழே ஷூட்டிங் முடித்து வந்த கேபிக்கு இருபத்தைந்து சரணங்கள் பாடிக் காட்டப் பட்டதாம்.  நேஷனல் அவார்ட் வாங்கியது அந்தப் பாடல் என்று சொல்லி அந்தப் பாடல் கேட்கும் போது கண்கள் கலங்கி விடும் என்றார் கேபி. 

இன்றும் நாளையும் தொடரப் போகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்க எல்லோரையும், குறிப்பாக அப்பாதுரை, சாய்ராம் கோபாலன், மீனாக்ஷி எல்லோரையும் அழைக்கிறேன்.  நேரமிருந்தால் பார்த்து மகிழுங்கள்!

கேபி, எம் எஸ் வீயை 'விசு' என்றுதான் அழைப்பாராம்.

'என்னை அழ விடுகிறீர்கள்' என்றார், ஒவ்வொரு பாடலும் கேட்டவுடன்.

வரவிருக்கும் நிகழ்ச்சியாக என்று சொல்லி 'நினைத்தாலே இனிக்கும்' பாடலை ஒருவர் பாடிய உடன், இது என் படம் அல்ல, உங்கள் படம் என்று கேபி, எம் எஸ் வீயிடம் சொன்னார்.  
   

19 கருத்துகள்:

 1. தகவலுக்கு நன்றி.
  (சிறிய வேண்டுகோள்:ரைட் சைடில் இருக்கும் follow - ஐகான், வேறு எங்காவது மாற்றுங்களேன், படிக்கும்போது
  எழுத்துக்களை மறைக்கிறது, நன்றி)

  பதிலளிநீக்கு
 2. ஆஹா.. சூப்பர் கவரேஜ்! பேசாம மூணு நாளும் உங்க போஸ்டு படிச்சா போறுமே. டீவீ பார்க்க வேண்டாம்! அவ்ளோ அருமையா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. ஒரு நாள் இதைப் பார்த்தேன். ஜேம்ஸ் கிழித்துவிட்டார் ஒருவரை. பாவமாக இருந்தது.

  அப்புறம், சை.கொ.ப சொல்வதைப்போல சைடுல உங்க பதிவை படிக்க முடியலை. அத வேறு எங்காவது போடுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. நான் மிஸ் பண்ணிவிட்டேன். நேராக உட்கார்ந்து நிகழ்ச்சி பார்த்தது போல இருந்தது. நன்றி.

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  பதிலளிநீக்கு
 5. நிகழ்ச்சியைப் பார்த்த திருப்தி உங்கள் பதிவைப் படித்ததும் கிடைத்தது. மூன்று நாட்களும் தொடர்ந்து எழுத முடியுமா? என்னைப் போல இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியாத MSV ரசிகர்களுக்கு உதவியாய் இருக்கும்.--கீதா

  பதிலளிநீக்கு
 6. கீதா மேடம்
  பதிவில் ஒரு you tube *சுட்டி* கொடுத்துள்ளோமே - அதை கிளிக்கி குறிப்பிட்டுள்ள ஹரியுடன் நான் (23-09-10) மூன்று பகுதிகளையும் (ஒவ்வொன்றும் பதினைந்து நிமிடங்கள்) பார்த்து, கேட்கலாமே! முயற்சி செய்யவில்லையா?

  பதிலளிநீக்கு
 7. விருப்பம் இருந்தும் வசதி இல்லைங்க... இணையத்துல/பதிவுல பாத்து தெரிஞ்சுக்குறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 8. குரோம்பேட்டைக் குறும்பன்24 செப்டம்பர், 2010 அன்று 4:31 PM

  பரப்பிசை, கரப்பிசை போன்ற சொற்கள் இல்லாமல், வருகின்ற எந்த விமரிசனமும் இசை நிகழ்ச்சிகளின் விமரிசனமாக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்!

  பதிலளிநீக்கு
 9. 'peak performance under pressure': நினைத்தாலே இனிக்கும் படத்தில் 'விசு'வின் அபார உழைப்பில் உணர முடிந்தது.

  பதிலளிநீக்கு
 10. நான் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பார்க்கிறேன்.ஜேம்ஸிடம் இவ்வளவு திறமை இருப்பதை இந்த நிகழ்ச்சியில்தான் அறிந்தேன்.தமிழும் அவரும் ஒன்றாகவே வசிப்பார்களோ !

  யூ குழாய் சுட்டி....அழகு தமிழ்ப்பெயர்ப்பு !

  பதிலளிநீக்கு
 11. எங்கள் ப்ளாக் - ப்ளாகிலிருந்து விடுவித்து செல்லலாம் என்று இருந்த என்னை இதை போட்டு கொக்கி போட்டு இழுத்துவிட்டீர்களே - என் பெயர் சொல்லி அழைத்து !! பாடியவர்கள் பாடியதை விட, உடனே ஒரிஜினலை கேட்ட தூண்டிய உன்னத பாடல்கள் !! அவர்களை குறை சொல்லவில்லை - ஒரிஜினல் அப்படிப்பட்ட குரல் வளம் கொண்டவர்களால் பாடப்பட்ட எடேர்னல் பாடல்கள்.

  பாடியவர்களின் குரலையும் ஒவ்வொரு இசைக்கருவிக்கும் தனி அந்தஸ்து கொடுத்த ஒரே இசை பேரரசர் அவர் தான்.

  இப்போதைய படங்களின் பாடல் காட்சிகள் ஏன் என்றே தெரியாமல் வைப்பதுப்போக - இயக்குனர் சிகரம் கே.பி சார் அவர்கள் படத்தின் ஒவ்வொரு பாடல்களையும் எவ்வளவு யோசித்து சிசுவேஷன் சொல்லி கண்ணதாசனிடம் வரிகளை வாங்கி - எம்.எஸ்.வியிடம் டியூனை வாங்கி - அமேசிங் ட்ரியோ அவர்கள்.

  பதிலளிநீக்கு
 12. நல்ல பதிவு. நடுவர்கள் நிறைய குறை சொல்வதால் பொதுவாக இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை. கே.பி. / எம். எஸ். வி எபிசோடு-களை யூ குழாயில் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 13. இப்பத்தான் பார்த்தேன்.. இத்தனை திறமை வாய்ந்த இளமையா? எத்தனை அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள்!
  கேபி/எம்எஸ்வி பேசும் பொழுதும் இளைஞர்கள் குரலைக் கேட்ட போதும் அடிக்கடி நெஞ்சடைத்துக் கண் கலங்கினேன்... ரொம்ப நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 14. தமிழில் இத்தனை அழகாகவும் தெளிவாகவும் பாடும் இவர்கள் ஏஆர்ஆர் கண்களுக்குப் புலப்படவேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கென்னவோ நண்பர் எஸ்பிபியை விட நன்றாகப் பாடுவது போல் தோன்றியது - கனாக் காணும் கண்கள் பாடல். அவரைக் குறை சொன்ன கோட்டான் யார்? இமெயில் அனுப்பித் திட்டத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 15. அநன்யா மஹாதேவன் said...

  ஆஹா.. சூப்பர் கவரேஜ்! பேசாம மூணு நாளும் உங்க போஸ்டு படிச்சா போறுமே. டீவீ பார்க்க வேண்டாம்! அவ்ளோ அருமையா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!


  ..... :-)

  பதிலளிநீக்கு
 16. சில வாரங்களுக்கு முன் ஒரு வாலிபர் மழை பற்றிய பாடல் ஒன்றைப் பாட நமக்கு 'நல்லாதானே இருக்கு' என்று தோன்றிய பாடல், நடுவர்களால் கிழிக்கப் பட்டு, அவரை பாதியிலேயே திருப்பி அனுப்பி... கடைசியில் அந்தப் பாடல் சரத் கம்போஸ் செய்தது என்றும், அந்தப் பாடலை சரத் பாட, அந்தப் பாடலில் மயங்கி அது என்ன படம், என்ன பாடல் என்று நெட்டில் தேடி, தோல்விதான் கிட்டியது.

  http://download.tamilwire.com/songs/__F_J_By_Movies/June_R/Mazhayemazhaye.mp3

  Movie June R, song I think this one

  பதிலளிநீக்கு
 17. ரொம்ப ரொம்ப நன்றி krubha... தரவிறக்கிக் கொண்டோம் !

  பதிலளிநீக்கு
 18. www.techsatish.net enkira websites ellam tv programmesum kodukkuthu.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!