செவ்வாய், 7 செப்டம்பர், 2010

என் நினைவுகள்.

By அப்பாதுரை 
என் பத்தாம் வகுப்புத் தமிழாசிரியர் சுந்தரேசன்.  அண்ணாதுரை போலவே முகத்தோற்றம்.  வேண்டுமென்றே அண்ணாவைப் போல் வழுக்கை முடிக்கற்றை, மூக்குக் கண்ணாடி.  அண்ணா, நெடுஞ்செழியனைப் போலவே நிமிடத்துக்கொரு தரம் குதிகாலை உயர்த்தி ஒரு எழுச்சி.  வாயைத் திறந்தால் தமிழ்த் தேன்.  சில சமயம் தமிழ்ச் சாராயம்.  'ஏனையோர் மாணவர், மாணவி. நீ மாணாக்கன்' என்பார் என்னிடம்.  நான் அவர் பெட்.  செல்லம். சும்மா மூச்சு விட்டுக்கொண்டிருப்பேன், 'எனக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கிறான் அப்பாத்துரை' என்று ஏதாவது சொல்வார். என்னுடன் படித்த ஒரு குறிப்பிட்டப் பெண்மணிக்கு வயிற்றெரிச்சலாய் இருக்கும் (நான் தான் இன்றைக்குப் பொறாமைப் படவேண்டும் அந்தக் குரோம்பேட்டைக் கலைமாமணி மேல்).  என்னவோ தெரியவில்லை, அந்த வருடத்தோடு சுந்தரேசனையும் தொலைத்தேன்; தமிழையும் தொலைத்தேன்.  சுந்தரேசன் இன்னும் இருக்கிறாரா தெரியவில்லை. ஒரு முறை சுரேஷ் என்ற மாணவனை ஏதோ சொல்லப்போய் அவன் அவரைத் தாம்பரம் ரெயில்வே ஸ்டேஷனில் வைத்து வேட்டியை உருவி பெல்டால் அடித்து விட்டான்.  பாவம், சுந்தரேசன்.  தமிழாசிரியர்கள் நிலை எல்லா கழக ஆட்சிகளிலும் திண்டாட்டம் தான்.  

இன்னொரு ஆசிரியர் இந்திரமோகன்.   இன்றைக்கு நான் சிறையிலோ கழகக் கண்மணியாகவோ இல்லாமல் பிழைத்தமைக்காக அவருக்கு நன்றி சொல்லவேண்டும் (குறை சொல்ல வேண்டும்?).  ரஜினியை ஸ்டைல் மன்னன் என்கிறோம்; இந்திரமோகன் ஸ்டைலில் ரஜினி ஸ்டைலை எல்லாம் கட்டி அடிக்க வேண்டும், அப்படி ஒரு ஸ்டைல் அந்த ஆளிடம்.  அவரும் எத்திராஜ் என்று இன்னொரு ஆசிரியர் (க்ளார்க் கேபில் போல் சிகை) இரண்டு பேரும் ராதா என்ற ஒரு டீச்சரைத் துரத்தித் துரத்தி ஜொள் விடுவார்கள்.  ராதா டீச்சரும் தான்.  இந்திரமோகன்-ராதா டீச்சர் விவகாரம் (அல்லது வதந்தி) குரோம்பேட்டை அரசினர் பள்ளியில் எழுபதுகளின் தொடக்கத்தில் படித்தவர்களுக்குத் தெரியும்.  இந்திரமோகனை எண்பதுகளில் ஒரு முறை பழவந்தாங்கல் ரெயில்வே ஸ்டேஷனில் சந்தித்தேன்.  ராதா டீச்சரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் போய்விட்டது.  

மங்கலமன்னன் இன்னொரு தமிழாசிரியர். இன்னொரு என்பது சரியாகத் தோன்றவில்லை.  முதலும் முடிவுமான தமிழாசிரியர் என்று சொல்வேன்.  எனக்கிருக்கும் தமிழறிவுக்கும்  ஆர்வத்துக்கும் காரணம் மங்கலமன்னன் தான்.  பாரதியாரை விட அழகான மீசை.  கண்களில் மை தீட்டிய (எங்களுக்குத் தெரியாது என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார்) தீட்சண்யம், கம்பீரம்.  எத்தனையோ கறுப்பு சிவப்பு வேட்டிகள் பள்ளிக்கூடத்தில் திரிந்தாலும் மங்கலமன்னன் குரலுக்கும் தமிழுக்கும் இணையாகவில்லை.  சுந்தரேசனின் தமிழில் கவர்ச்சி இருந்தது;  மங்கலமன்னன் தமிழில் கலாட்டா இருந்தது.  சுந்தரேசன் தமிழில் கொஞ்சுவார்; மங்கலமன்னன் தமிழில் அதட்டுவார். கல்லூரி போனதும் இவருடனும் தொடர்பு விட்டுப் போனது.

மங்கலமன்னன், சுந்தரேசன், இந்திரமோகனைத் தெரிந்தவர்கள் யாராவது சந்தித்தால் இந்த அப்பாதுரையின் வணக்கத்தைச் சொல்லுங்கள். நன்றி.
     

17 கருத்துகள்:

 1. வித விதமான அனுபவங்கள். இந்த வதந்திகளில் பசங்களுக்கு இருக்கும் சாமர்த்தியம் பெண்களுக்கு உண்டோ தெரியாது. க்ளார்க் கேபிள்
  படம் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 2. தம் நினைவுகளை அழகாக பகிர்ந்து கொண்டுள்ளார் அப்பாதுரை .

  பதிலளிநீக்கு
 3. வித்தியாசமான இடுகை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நல்ல நனவோடை.:). பாழாப்போற வதந்தியால எங்க பள்ளி தமிழ் வாத்திக்கும், கிட்டத்தட்ட பாதி வயது மாணவிக்கும் கலியாணம் பண்ற அளவுக்குப் போச்சு.:(

  பதிலளிநீக்கு
 5. அப்பாதுரை, அண்ணாதுரை - பெயரையும், படத்தையும் பார்த்துவிட்டு மிகவும் ஆர்வத்துடன் பதிவை படிச்சா, சும்மா படத்தை போட்டு படம் காட்டிடீங்களே! :) இருந்தாலும் அவரின் நினைவலையில் நானும் நனைந்தேன். சுவாரசியமாக இருந்தது பதிவு.

  வானம்பாடிகளின் பின்னூட்டத்தை படித்ததும் மனம் கனத்து விட்டது. இது மிகவும் கொடுமை. அந்த பெண்ணின் நிலையை நினைக்கும்போது மனதை என்னவோ செய்கிறது. இது போல நிறைய நானும் கேள்விபட்டிருக்கிறேன். உலையை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாதுன்னு சும்மாவா சொல்லி இருப்பாங்க.

  பதிலளிநீக்கு
 6. நினைவலைகளில் நனைய வைத்தீர்கள்.பழைய நினைவுகள்தான் இளமையாக வாழவைக்கும் என்பார்கள்.

  பதிலளிநீக்கு
 7. தனது வாத்தியார்கள் பற்றிய அப்பாதுரை வாத்தியாரின் கட்டுரை அருமை. :))))

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  பதிலளிநீக்கு
 8. omg! எத்திராஜ் போலவே இருக்கிறாரே கேபிள்?!
  பாரதியாரை விட அழகு கம்பீரம்னு சொன்னா, எவனோ பொறம்போக்கைப் படம் பிடிச்சுப் போட்டீங்களே, நியாயமா அண்ணா?
  விடுங்க, அண்ணாதுரையும் கேபிளும் சூபர். ரஜினி சுமார். ஆகமொத்தம் பாஸ் மார்க்.
  நான் எழுதி அனுப்பினதையும் பதிவு செஞ்சீங்க, அந்த துணிச்சலுக்கும் சகிப்புத்தன்மைக்கும் இருபது மார்க் போனஸ்.
  எல்லோருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வானம்பாடிகள் சொன்ன வாத்தி யாருக்கும் பாவமா தோணலையே ஏன்?
  பெண்களானாலும் ஆண்களானாலும் சரி வதந்தியோட தாக்கத்தை உணர்ந்து தான் நடக்கிறாங்க. பத்து வயசுலயும் அப்படித்தான் என்பது என் கருத்து. வயதுக்கு வந்த ஒரு வருடத்துக்குள் பெண்களின் உலக அறிவு சமவயது ஆண்களை விட எங்கேயோ ஆகாயத்துக்கு உயர்ந்து விடுகிறது. வதந்திகளை பல சமயம் மறைமுகமா ஆதரிக்கவும் செய்யுறாங்க.ஆம்பிளையை மடக்கிப் போட்ட சாமர்த்திய பெண்களையும் நாம் பாத்திருக்கோம்; அயோக்கிய ஆம்பிளைங்களை நினைவு வைக்கிற நாம் சாமர்த்திய பொம்பிளங்களை மறந்துடறோம்.

  பதிலளிநீக்கு
 10. அப்பாதுரை said...
  // பாரதியாரை விட அழகு கம்பீரம்னு சொன்னா, எவனோ பொறம்போக்கைப் படம் பிடிச்சுப் போட்டீங்களே, நியாயமா அண்ணா?//

  என்னது? பொறம்போக்கா? ஐயோ என்னுடைய சொந்தக்காரருங்கோ!

  பதிலளிநீக்கு
 11. // அப்பாதுரை said... அண்ணாதுரையும் கேபிளும் சூபர். ரஜினி சுமார். ஆகமொத்தம் பாஸ் மார்க்....துணிச்சலுக்கும் சகிப்புத்தன்மைக்கும் இருபது மார்க் போனஸ்.//

  அப்பாதுரை சார் கணக்கு எங்கியோ இடிக்குதே! மொத்தம் நாலு படங்கள். அதுல ரெண்டு சூப்பர் (25 + 25 = 50)
  ரஜினி படம் சுமார் (12/25 so 50 + 12 =62)
  போனஸ் = 20 மார்க்.
  மொத்தம் = 62 + 20 = 82.
  82% மார்க் எடுத்திருக்கின்றோம்; அதுக்குப் போயி பாஸ் என்று சொன்னால் எப்புடி? பார்த்து ஒரு டிஸ்டிங்க்ஷன் போட்டுக் கொடுங்க சாமி!

  பதிலளிநீக்கு
 12. எண்பத்துரெண்டா? நீங்க சொன்னா சரிதான். நான் கணக்குல பாதி நேரம் பெயிலுங்க..அதை ஷோ கேசு வேறு போட்டுக் காட்டணுமாக்கும்..

  பதிலளிநீக்கு
 13. நன்றி அப்பாதுரை சார். (ஹூம் அப்போ கூட டிஸ்டிங்ஷன் என்று ஒரு வார்த்தை பாராட்ட மனசு வருகிறதா உங்களுக்கு!)

  பதிலளிநீக்கு
 14. //எவனோ பொறம்போக்கைப் படம் பிடிச்சுப் போட்டீங்களே, நியாயமா அண்ணா?//
  அவர் ஒரு நல்ல குணமும், மனமும் கொண்ட மனிதராக இருக்கலாம் அல்லவா! தெரியாத ஒருவரை பற்றி இப்படி விமர்சிப்பது நியாயமா!

  பதிலளிநீக்கு
 15. இன்னொருவருடைய இடத்தை/சொத்தை அனுமதியில்லாமல் ஆக்கிரமித்துக் கொள்வதற்கு பொறம்போக்குத்தனம் என்று பெயர். மங்கலமன்னன் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டவரை எப்படி அழைப்பது meenakshi ?

  பதிலளிநீக்கு
 16. அப்பாதுரை சார் - திரும்பவும் மாட்டிக்கிட்டீங்க!
  மங்கலமன்னன் இடத்தைப் பிடித்தவர், பொ.போ என்றால், நீங்கள் குறிப்பிட்டிருக்கின்ற மூன்று ஆசிரியர்கள் இடத்தையும் (அவர்கள் படம் கிடைக்காத காரணத்தால்,) வேறு யார் யாரோதானே பிடித்திருக்கின்றார்கள்? அவர்களை எல்லாம் என்ன சொல்லப்போகின்றீர்கள்?
  ம் ம் ம் ம் ம் ம்மாட்டிக்கிட்டீங்க!

  பதிலளிநீக்கு
 17. வார்த்தைகள் அதை உபயோகிக்கிகும் இடத்தையும், தன்மையையும் கொண்டு அதன் அர்த்தங்களும் மாறுபடும் என்பது உண்மைதான். நான் இந்த வார்த்தையை எங்கள் பேட்டையில் நிறைய பேர் கோபத்தை வெளிப்படுத்தும் பொழுதெல்லாம் மட்டும்தான் உபயோகித்து கேட்டிருக்கிறேன், அதனால்தான்.

  வம்புப் பையன்!சரியான பெயர்தான்!:)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!