வியாழன், 28 அக்டோபர், 2010

விரல் (பே)ரிங்

நாகையில் அறுபதுகளில் நீங்கள் இருந்திருந்தால், உங்களுக்கு சட்டையப்பர் கோவில் மேல வீதியில் பட்டறை வைத்திருந்த மெக்கானிக், (ஆல் இன் ஆல் அழகு ராஜா ரேஞ்சு)  மணியைக் கட்டாயம் தெரிந்திருக்கும். அவர் வாயாலேயே சொல்லக் கேட்டவற்றில் அவர் எலிசபத் ராணியின் இந்திய விஜயத்தின் போது ஓட்டுனராக இருந்தது மிகப் பிரசித்தம். கல்யாண ஜானவாசம் நிகழ்ச்சிகளுக்கு கார் ஓட்டும் (ஓட்டைக் கார்) ரங்கநாதன் கூட மணி வொர்க் ஷாப்பில் தான் வழக்கமாக தன் காரை ரிப்பேர் செய்துகொள்வார்!  
   
உங்களுக்குப் பொழுது போக வில்லை என்றால் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மணியின் பட்டறைக்குப் போகலாம். அங்கிருக்கும் பொருள்களைக் கையில் எடுத்துப் பார்த்தால் அதே இடத்தில், கூடுமான வரை தலை, வால் எல்லாம் எடுத்த போது இருந்த மாதிரி வைத்து விட்டால் அவர் கோபிக்கவே மாட்டார்.  அவர் வேலை செய்யும் பொழுது ஏதேனும் பேசிக்கொண்டேதான் வேலை செய்வார். எவ்வளவு சதவிகிதம் ரியல், எவ்வளவு சதவிகிதம் ரீல் என்பதைத் தெரிந்துகொள்வது கேட்பவரின் ஐ கியூவைப் பொறுத்த விஷயம்.
   
ஒரு நாள், நான், தண்டு, ஜெயராமன் எல்லோரும அங்கே போய் வழக்கம் போல் கொட்டமடித்துக் கொண்டிருந்தோம். ரோலிங் மில் மணி அய்யரின் கார் - எப்பொழுதும் டிக்கியில் புல் கட்டுடன் சுற்றி வருமே அதில் பாட்டரி சரியாக சார்ஜ் ஆகவில்லை என்று டைனமோவைக் கழட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தவர், மீண்டும் ஒரு முறை தன சுயசரிதையின் இங்கிலாந்து ராணிக்குக் கார் ஒட்டிய பகுதியை விவரிக்க ஆரம்பித்தார்.  திடீரென பேசுவதை நிறுத்தி விட்டுக் குனிந்து, பின் மேஜை மேலிருந்த பொருள்களை எல்லாம் நகர்த்தி வைத்து எதையோ தேடியவர், நம் பக்கம் திரும்பி, "இங்கே ஒரு மாக்னேடோ பேரிங் வைத்திருந்தேனே, யாரும் பார்த்தீர்களா?" என்று கேட்டார். நாங்கள் எல்லோரும் தலையை இடமும் வலமும் அசைத்தோம். 
   
தண்டு கண்ணில் தளும்பிய கண்ணீரைக் கண்ட மணி, "என்ன கையில் ஏதாவது காயம் பட்டிடுச்சா?" என்று அக்கறையுடன் விசாரிக்க, மெதுவாக அவன் இடது கையை தோல் பட்டை உயரத்துக்குத் தூக்கிக் காட்டினான். மணி தேடிக் கொண்டிருந்த மாக்னெட்டோ பேரிங் தண்டு கை விரலில் மோதிரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.. ஜெயராமன் "தண்டு அப்படியே கிருஷ்ண பரமாத்மா மாதிரியே இருக்குடா" என்றான். மணி, "அட நான் இதைத்தானே அப்போலேந்து தேடிக்கொண்டிருக்கேன்." என்று கையை நீட்ட, தண்டு அழ ஆரம்பித்தான்.  பிறகு மணி, தண்டுவின் விரலில் கொஞ்சம் எண்ணை விட்டுப் பின் இழுத்துப் பார்த்தார். ஊம் ஹும் பேரிங் அசைவதாக இல்லை.  
               
அதற்குள் பூப்போட்ட சட்டை போட்ட பையன் ஒருவன் வந்து " கார் எப்போ ரெடியாகும்? சாயங்காலம் சிக்கல் போகணும்." என்று பரபரத்தான். மணி, "ஒரு அரை மணியில் ரெடியாயாயிடும்னு அப்பா கிட்டே சொல்லு" என்றார்.  ஜெயராமன் "தண்டு, நீ ஒன் மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்தால் தான் கார் நகரும் " என்றான். தண்டு பலமாக அழ ஆரம்பிக்கவும், மணி அவனைத் தட்டிக் கொடுத்து, "எல்லாம் கழட்டி விடலாம். பயப்படாதே" என்றார். 

எங்களுக்கு சற்றுப் பயம் - மணி ஹாக்சா வைத்து அறுக்கப் போவது பேரிங்கை என்றால், அரை மணியில் கார் எப்படி ரெடியாகும்? விரலை வெட்டி பேரிங்கை எடுத்துக் கொள்வாரோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தோம். மணி, ஒரு ஒயர் எடுத்துக் கொண்டு தண்டுவிடம் வந்து கையைக் காட்டச் சொன்னவுடன் "ஒ, இப்போ மணி பேரிங்கைப் பிடித்துக் கொண்டு, ஒயரை மின்சார சப்ளையில் இணைத்த உடன் தண்டு தன கையை அதிர்ச்சியில் உதறி பேரிங்கிலிருந்து விடுபடப் போகிறான்" என்றெண்ணி சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.  ஒயரின் ஒரு முனையை பேரிங் மீது வைத்து விரல் நுனி நோக்கி அடுக்கி சுற்றினார்.  
            
பின், பேரிங் முனையிலிருந்து ஒவ்வொரு சுற்றாக எடுத்தவுடன் பேரிங்கை முன்புறம் நகர்த்த, அதுவும் நகர்ந்தது!   இப்படி ஆறு [மறந்து விடாதீர் - ஆறு] சுற்று எடுப்பதற்குள் விரலின் எலும்பு இணைப்பு தாண்டி விட்டதால், பேரிங் சுலபமாக வெளியே வந்து விட்டது.
                           
'நானும் அந்த நாள் முதல் இந்த நாள் வரை காத்திருக்கிறேன். யாராவது பேரிங் கழட்ட முடியவில்லை என்று வந்தால் என் திறைமையைக் காட்ட' என்று சொன்னது தான் தாமதம், எதிர்த்த வீட்டு மாமா அவரது மின்விசிறியை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் - நல்ல வேளை ! ஒரு எஸ்கேப் ரூட் இருக்கு!
           

12 கருத்துகள்:

  1. //சாயங்காலம் சிக்கல் போகணும்.//

    சிக்கிக்கொண்ட 'சிக்கல்' போனால்தான் 'சிக்கல்' (ஊர்) போகமுடியும்

    Interesting Message towards the end.

    பதிலளிநீக்கு
  2. KgG சார், இன்ட்லில என்ன ஃபாலோ பண்ணுறீங்க.. ஆனா ஒட்டு போடுறதில்லையோ.. முடிஞ்சா ஒட்டு போடுங்க சார். நன்றி. என்னையும் கொஞ்சம் பிரபலமாக்குங்க.--- madhavan73

    பதிலளிநீக்கு
  3. நல்லா இருக்கு சார் பதிவு. நாங்க புரிஞ்சுக்கணும்னு படமும் போட்டு. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கலன்னா, இது தான் கதி.

    பதிலளிநீக்கு
  4. மாதவன் உங்கள் வலைப பக்கங்கள் விசிட் செய்து, படிக்கும் பொழுதெல்லாம், உடனே ஒரு இன்டலி வோட்டுப் போட்டு விடுவேன். சமீப காலங்களில், கூகிள பிரச்னை கொஞ்சம் விரல்களில் தட்டுப் படுகிறது. அதனால் ப்ளாக் ஆக்டிவிடீஸ் கொஞ்சம் பாதிக்கப் பட்டிருந்தது. இப்போ படிச்சுப் பார்த்து, வோட்டுப் போட்டுவிட்டேன். எங்கள் வோட்டு நண்பர்களுக்கே!

    பதிலளிநீக்கு
  5. நன்றி kgg சார். இன்ட்லியில் உங்கள் ஓட்டினை பார்த்துவிட்டு உங்கள் வலைப் பக்கம் வந்தேன், கமெண்டையும் படித்தேன். மிக்க நன்றி.

    //இப்போ படிச்சுப் பார்த்து, வோட்டுப் போட்டுவிட்டேன்.//

    படிக்கணும்னு அவசியமில்லை... ஒட்டு கண்டிப்பாக போடுங்கள் :-)

    பதிலளிநீக்கு
  6. சூப்பர் பதிவு. தெளிவா எடுத்து சொல்லப் படம் வேறு போட்டிருக்கிறீர்கள்.

    நகபட்டினமா நீங்க? நான் நிறைய வாட்டி அங்கே போயிருக்கிறேன். ஆடிட் செய்ய.

    பதிலளிநீக்கு
  7. தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

    பதிலளிநீக்கு
  8. நகைச்சுவை இழையோட நீங்கள் எழுதும் மலரும் நினைவு பதிவுகள் ஸ்வாரஸ்யமானவை .--கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!