திங்கள், 10 அக்டோபர், 2011

நொந்த அனுபவம் ...

   
இது நம்பிக்கையா, மூட நம்பிக்கையா இல்லை குருட்டு நம்பிக்கையா?


___ வெபாலமுரளி ____

நான் என் தொழிற்சாலைக்கு ஒரு Store Keeper – ஐத் தேடிக் கொண்டிருந்தேன். 
    

(தொழிற்சாலை என்ன வெங்காயத் தொழிற்சாலை! 50 பேர் பணி புரியும் ஒரு எவர் சில்வர் பட்டறை). நான் மணல்கயிறு எஸ். வி. சேகர் போல, எட்டு கண்டிஷனெல்லாம் போடவில்லை. மூன்றே மூன்று தான் போட்டேன். Basic Accounting &, Computer Knowledge மற்றும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற நெர்ர்ர்ர்ர்ர்ர்ர்றைய ஆர்வம். அவ்வளவுதான் (ம்க்கும்….இது போதாதாக்கும்?). 
           
என்னுடன் வேலை செய்யும் ஒரு பொறியாளர் தன்னுடைய நணபர் கடந்த 2 வருடங்களாக வேலை இல்லாமல் சிரமப்படுவதாகவும், அவருக்குத் திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார்.
                      
“திருமணமாகி, அந்த மனைவி மூலமாக குழந்தைகள் இருக்கிறதா?” என்று நம்ப முடியாமல் கேட்டேன் ( Yes. ஆப்பிரிக்காவில் குழந்தை பெற்றுக்க் கொள்வது பெரிய விஷயமில்லை. ஆனால் “திருமணம்” செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வது அசாதாரணமான விஷயம்).
                
என் கேள்வியைப் புரிந்து கொண்ட என் பொறியாளர் தன் நண்பர் ஒரு நல்ல குடும்பஸ்தர் என்றும் ரொம்பப் பொறுப்பானவர் என்றும் சான்றிதழ் கொடுத்தார்.
                 
இரண்டுமே இங்கு பெரிய விஷயம் என்பதால் அவரை, உடனே Interview- விற்கு வரச் சொன்னேன்.
                   
அவரும் வந்தார். சிறிது நேரம் பேசினோம். நான் எதிர்பார்த்த எல்லா விஷயமும் அவரிடம் இருந்ததாகத் தோன்றியது. 
                            
சினிமா படங்களில் வரும் MD போல (ம்க்கும்….அது வேறயா?) குரலை வைத்துக் கொண்டு "You are appointed, gentle man!" என்று சொல்லி விட்டு அவர் முகத்தில் சந்தோஷ ரேகையைத் தேடினேன்.
                 
அவர் மிகவும் Casual –ஆக, Sir, நான் உங்கள் கம்பெனியில் சேர வேண்டுமென்றால் ஒரு கண்டிஷன் என்றார். 
           
“இதென்ன கலாட்டா” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, 'சொல்லுங்க' என்றேன்.
                  
"நான் மிகவும் மதப் பற்றுள்ளவன்" என்றார்.
                  
"குட்" என்றேன். 
                  
"எங்கள் சர்ச்சில் உள்ள சர்வீஸ் கமிட்டியில் நான்தான் லீடர்" என்றார்.  
              
"வெரி குட்" என்றேன். 
.
"எந்த ஒரு சனிக் கிழமையும் என்னால் கடவுளைப் பிரார்த்திக்காமல் இருக்க முடியாது" என்றார்.  
                    
நான் கண்கள் கலங்கி உணர்ச்சிவசப்பட்டு "சனிக்கிழமை பிரார்த்தனைதானே, நன்றாகப் பிரார்த்தியப்பா. எனக்கும் சேர்த்து வேண்டிக்கொள்.  இதில் என்ன பிரச்சினை?" என்றேன்.

அவர் உடனே லலிதா ஜூவல்லரி விளம்பரத்தில் வரும் பிரகாஷ்ராஜ் போல "அதுதான் விஷயம், அதில்தான் விஷயம்" என்றார்.  
             
அவரைக் குழப்பத்தோடு பார்த்தேன்.
    
"சனிக்கிழமை நான் காலை 8 மணிக்கெல்லாம் சர்ச்சுக்குப் போய்விடுவேன்" என்றார்.

நான் பரிதாபமாக "அப்போ வேலை….. "என்று இழுத்தேன்.  
                 
"நான் சனிக்கிழமை வேலைக்கு வரமுடியாது. நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.  
             
எனக்கு தேவர் மகன் கமல் சொன்னது போல உள்ளே இருக்கும் மிருகம் லேசாக எட்டிப் பார்த்தது.
                     
"ஏம்பா கடவுளுக்குச் சமமாக கடமையும் முக்கியமில்லையாப்பா" என்று சொல்லி விட்டு நம்ம 'கொக்கென நினைத்தாயா கொங்கணவா' கதையை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன். 
                
அவருக்கு என்ன புரிந்ததோ…."சாரி சார் எனக்கு சர்ச் ரொம்ப முக்கியம்" என்றார் (ஒரு வேளை நம்ம கதையைக் கேட்டு பயந்து விட்டாரோ?).
                          
நான் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, "ஒருவேளை நான் உங்க கண்டிஷனுக்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் என்ன செய்வீர்கள்?" என்றேன்.
.
அவர் சிறிதும் அசராமல் "உங்கள் வேலையே வேண்டாமென்று போய்விடுவேன்" என்றார்!
           
நான் பொறுமையிழந்து, "சார், கடவுள் பெயரைச் சொல்லி நீங்க வேண்டுமானால் பசியோடு இருக்க உரிமை இருக்கலாம். ஆனால் அந்தக் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு உங்க மனைவியையும், குழந்தைகளையும் பட்டினி போட உங்களுக்கு அந்த உரிமையைத்தந்தது யாரு?" என்றேன் மனோகரா கண்ணாம்பாள் ஸ்டைலில் (நெஜ்ம்மாகவே டென்ஷன் ஆயிருச்சுங்க)
                     
அவர் கொஞ்சம் கூட அசராமல் "உங்களுக்குக் கூட (?????????) தெரிந்த இந்த அல்ப விஷயம் ஜீசஸுக்குத் தெரியாதா…..அவர் பார்த்துக் கொள்வார்'" என்று சொல்லி விட்டு என் கையை குலுக்கி விட்டுப் போய் விட்டார்.

அன்று இரவு எனக்குக் கொஞ்சம் கூடத் தூக்கம் வரவில்லை. நல்ல ஒரு Candidate –ஐ விட்டு விடோமே என்பதற்காக அல்ல. மஜா படத்தில் விக்ரம் பேசுவதாக ஒரு வசனம் வரும் “இது என்ன ஜென்மம்டா” என்று-... அதை நினைத்து!  
                
நண்பர்களே…. இப்போது, மேலே உள்ள இந்தக் கதையின் தலைப்பை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு, எனக்கு உங்கள் பதிலைச் சொல்லுங்கள்.  
                          

17 கருத்துகள்:

  1. அதீத நம்பிக்கை... என்ன இல்லாத ஒன்றின் மீது!

    பதிலளிநீக்கு
  2. இன்னும் அந்த போஸ்ட் காலியாக இருக்கிறதா? தெரிந்தவர் ஒருவர் வேலை தேடிக்கொண்டிருக்கிறார். இவரும், ’நல்ல’ குடும்பஸ்தர்; முக்கியமாக, சனிக்கிழமை நிச்சயம் வேலைக்கு வருவார். நான் கேரண்டி!! :-)))))

    பதிலளிநீக்கு
  3. நல்ல அனுபவம் உங்களுக்கு! தொழிலில் உழைப்பு என்பது எந்த விதக் குறுக்கீடுகளும் இல்லாமல் இருப்பது முக்கியம். உங்கள் முடிவு சரியானதே! தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தை வாட விடும் எந்த நம்பிக்கையும் நமக்கு மட்டுமல்ல, மற்ற‌வர்களுக்கும் மகிழ்வைத் தராது!

    பதிலளிநீக்கு
  4. எல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துப்பான்..
    -- பங்கேற்பு கவுண்டமணி, பயில்வான் ரங்கநாதன்..

    பதிலளிநீக்கு
  5. மணல்கயிறு, சனிக்கிழமை, ஜூவல்லரி, தேவர் மகன், மனோகரா, மஜா-- இந்த வார்த்தைகள் எல்லாம் வருகிற மாதிரி ஒரு கதை எழுத வேண்டுமென்று யாரோ உங்களிடம் கண்டிஷன் போட்ட மாதிரித் தெரியுது..

    பதிலளிநீக்கு
  6. பிராக்டிகல் ஆக இல்லாமல் பிழைப்புக்கும் மேலே வழிபாட்டைக் கொண்டு வைப்பது சரிதானா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் அப்படிச் செய்ய மாட்டேன். என் கடவுள் என் பிரார்த்தனையை கிழமை நேரம் வைத்துப் பார்க்க மாட்டார் என்று நான் திடமாக நம்புபவன்.

    பதிலளிநீக்கு
  7. நம்பிக்கை என்பதே ஆதாரமில்லாத விஷயம்தான். குருட்டு நம்பிக்கை குருடு அல்லாத நம்பிக்கை என்ற பாகுபாடு பொருந்தாது. அறிந்ததும் நம்புவதும் எதிரெதிர் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  8. கடவுள் நம்பிக்கையையும் வேலையையும் ஏந்தான் இப்படிகுழப்பிக்கொள்கிரார்களோ? நல்லா சொல்லி இருந்தீங்க. அந்தகாலி போஸ்ட்டுக்கு வேர ஆள் கிடைச்சாங்களா?

    பதிலளிநீக்கு
  9. ரெம்ப ஸிம்பிள்ங்க்ண்ணோவ், சரிதான் சனிக்கிழமை லீவு எடுத்துக்கோ ஞாயித்திக் கிழமை வந்துடுன்னு சொல்ல வேண்டியதுதானே?

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  10. நல்ல அனுபவம.கடவுள் நம்பிக்கை முக்கியம் ஆனால் மூட நம்பிக்கை கூடாது.

    பதிலளிநீக்கு
  11. ஆம் நண்பரே சூப்பரா சொல்லிருக்கீங்க

    பதிலளிநீக்கு
  12. படமெடுக்குறதோட நிறைய படமும் பாப்பார் போல பாலமுரளி.

    பதிலளிநீக்கு
  13. கடமைதான் கடவுள். இந்த மாதிரி கண்மூடிகளை திருத்தவே முடியாது. திருந்தவும் மாட்டாங்க.
    சரி! அந்த வேலைக்கு வேற ஆள் கிடைச்சாங்களா?

    பதிலளிநீக்கு
  14. பணியாற்றுவது கடவுளைப்பணிவதற்கு சமமானது என்று ஒரு சொற்பொழிவாற்றி அவரது மனத்தை மாற்றி இருக்கலாமே!

    பதிலளிநீக்கு
  15. நன்றி சூர்யஜீவா .டி ஆர் மகாலிங்கம் பாடிய 'இல்லாததொன்றில்லை' கேட்டிருக்கீங்களோ...... உங்கள் வரிகளைப் படித்ததும் அந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.

    "நல்ல" குடும்பஸ்தர் என்றால்....?! நன்றி ஹுஸைனம்மா .

    நன்றாகச் சொன்னீர்கள் மனோ சாமிநாதன் மேடம்....

    நன்றி மாதவன்....இதுவும் 'அது' மாதிரி இல்லையே....?!!

    நன்றி ஜீவி சார்....அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!

    நன்றி ராமன்...

    நன்றி லக்ஷ்மி மா...வேற ஆள் கிடைச்சாங்களா இல்லையான்னு பாலமுரளிதான் சொல்லணும்!!

    சரியான யோசனை ஜவஹர்ஜி....இது தோணாமப் போச்சே...!

    சரியான கருத்து RAMVI. நன்றி.

    நன்றி வைரை சதிஷ்.

    நன்றி அப்பாதுரை...ஜீவி கருத்தை வழிமொழியறீங்க...!

    நன்றி meenakshi. நல்லாச் சொன்னீங்க...மறுபடியும், உங்கள் கேள்விக்கும் பாலமுரளிதான் பதில் சொல்லணும்!

    முதல் வருகைக்கு நன்றி லலிதாமிட்டல். செய்யும் தொழிலே தெய்வம்! இல்லையா...அடிக்கடி வாங்க....

    பதிலளிநீக்கு
  16. நன்றி...மக்கா....
    இப்போ recent ஆத்தான் அந்த வேலைக்கு ஒரு ஆளை அமர்த்தினேன்.
    மறுபடியும் KGS சாருக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  17. நன்றி...மக்கா....
    இப்போ recent ஆத்தான் அந்த வேலைக்கு ஒரு ஆளை அமர்த்தினேன்.
    மறுபடியும் KGS சாருக்கு நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!