வெள்ளி, 28 அக்டோபர், 2011

தலைப்'பூ'(க்)கள்

                        
சமீபத்தில் எங்கேயோ ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' தலைப்பு எவ்வளவு அழகு என்று சிலாகிக்கப் பட்டதைப் படித்தது ஞாபகம் வர, நான் படித்த, கேள்விப்பட்ட புத்தகங்களின் தலைப்பு எவை எவை மனதில் நிற்கின்றன என்று யோசித்துப் பார்த்தேன்.
கொஞ்சம் இலக்கிய டச் இருக்க வேண்டும். வித்தியாச வார்த்தைக் கோர்ப்பாக, ஏதோ ஒரு காரணத்தால் மனதில் பதியும் வண்ணம், புதிய சிந்தனைகளை, நம் அனுபவங்களைத் தூண்டும் வண்ணம் இருக்கும், தலைப்புகளை எண்ணிப் பார்க்கிறேன்!

மணியனின் 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'மோகம் முப்பது வருஷம்'.
ஜெயகாந்தனின் 'அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்'. ஆனால் இந்தத் தலைப்பின் அருமை கதையைப் படித்தால்தான் தெரியும். 'கருணையினால் அல்ல', 'யாருக்காக அழுதான்', 'யுக சந்தி', 'சுய தரிசனம்' தலைப்புகள் நம் மனதில் வேறு சிந்தனைகளைத் தோற்றுவிக்கும், அல்லது ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கும்!

ஒரு தலைப்பு இப்படி நம் மனதில் தோற்றுவிக்கும் சிந்தனைக்கும் அல்லது எதிர்பார்ப்பிற்கும் மாறாக அந்தப் படைப்பு இருந்தால் என்ன செய்வோம்? சில சமயம் பிடிக்காமலும், சில சமயம் அதனாலேயே பிடித்தும் போகலாம்!
    
சுஜாதாவின் 'வானமெனும் வீதியிலே', 'பிரிவோம் சந்திப்போம்', 'கனவுத் தொழிற்சாலை', 'கரையெல்லாம் செண்பகப்பூ'....
      
யோசித்துப் பார்க்கும்போது தலைப்பு வைப்பதில் சுஜாதா ஜித்தர் என்று தெரிகிறது. இன்னும் நிறைய நிறைய தலைப்புகள் இவரிடமிருந்து எடுக்கலாம்.
     
பாலகுமாரனின் 'இரும்புக் குதிரைகள்', 'மெர்க்குரிப் பூக்கள்'. பாலகுமாரன் அப்புறம் நிறைய புகழ் பெற்ற பாடல்களின் முதல் வரிகளைத் தலைப்பாக்கினார். ஒரே புத்தகத்தில் பாலகுமாரன் ஒரு புறம் 'ஏதோ ஒரு நதியில்' என்ற தலைப்பிலும், மறுபக்கம் சுப்ரமணிய ராஜு 'எங்கோ ஒரு இரவில்' என்ற தலைப்பிலும் எழுதினார்கள்.
      
தலைப்பு முதலில் மனதில் தோன்றி அதற்கு எழுதுவது என்பதை விட, மனதில் தோன்றிய கருவை எழுத்து வடிவமாக்கி அப்புறம் தலைப்பிடுவது பொருத்தமாய் இருக்கலாம் என்பது என் எண்ணம். இந்தத் தலைப்பில் எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதாவது ஒரு தலைப்பில் எழுதுவது பெரும்பாலும் சரி வராது என்று நினைக்கிறேன்.

நீல பத்மநாபனின் 'பள்ளிகொண்டபுரம்' தலைப்பு ஒரு அழகான உருவகம். நிறைய தலைப்புகள், படித்து முடித்த பின்தான் அர்த்தம் புரியும். அந்த வகையில் இந்தக் கதையை சேர்க்கலாம்.
  
லா.ச.ராவின் 'சிந்தா நதி' ஒரு அழகான தலைப்பு. படித்தாலும் பாதி (ஒரு கௌரவத்துக்கு பாதி என்று சொல்லிக் கொள்கிறேன்) புரியாத (எனக்கு...எனக்கு...) எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.

கல்கியின் 'பொங்குமாங்கடல்'.என்ன ஒரு வார்த்தைக்கோர்ப்பு.. என்ன தோன்றுகிறது?... பொங்கு மாக்கடல் குற்றாலத்தில் பேரருவி விழுந்து சிதறும் இடம். பொங்குமாங்கடல்.... சுனாமி? 'பொய்மான் கரடு' என்ற தலைப்பும் ஓர்  இடத்தைக் குறிப்பதுதான். தஞ்சையில் இருந்த போது சென்ற சிவகங்கைப் பூங்காவின் விளையாட்டு ரயில் நிற்கும் ஒரு 'ஸ்டேஷனின்' பெயர் கூட 'பொய் மான் கரடுதான் ! மற்றும் கல்கியின் 'கள்வனின் காதலி'
   
நாபாவின் 'சாயங்கால மேகங்கள்', 'ஆன்மாவின் ராகங்கள்', 'பொன் விலங்கு', 'நிசப்த சங்கீதம்', 'சமுதாய வீதி' (இது தலைப்பினாலா, படித்த கதையினாலா என்று தெரியாது.. முத்துக்குமாரனை மறக்க முடியாது, மாதவியையும்!).
  
ராஜம் கிருஷ்ணனின் 'முள்ளும் மலரும்'. குழந்தைகள் இல்லாத ராஜம் கிருஷ்ணன் கணவரின் மறைவுக்குப் பின் தற்சமயம் சென்னை விஸ்ராந்தி ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் இருப்பதாக தகவல்.
  
இந்திரா பார்த்தசாரதியின் 'குருதிப்புனல்',
  
தி ஜானகிராமனின் 'மோகமுள்', 'பிடிகருணை'.
  
லக்ஷ்மியின் கதவு திறந்தால்', (ஒரு எதிர்பார்ப்பு, என்ன என்ற கேள்வி) 'மீண்டும் வசந்தம்'. (கதையினால் தலைப்பு கவர்ந்திருக்கலாம்... ஒரு நம்பிக்கை..)
  
அப்துல் ரகுமானின் 'இல்லையிலும் இருக்கிறான்', ('அட!')
  
மு. மேத்தாவின் 'கண்ணீர்ப்பூக்கள்' (படிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதில் வரும் ஒரு புதுக் கவிதையை மறந்தவர்களும் இருக்க மாட்டார்கள்!), 'வெளிச்சம் வெளியே இல்லை'. (நிம்மதியை வெளியே தேடாதே என்பார்கள்... உள்ளேயே இருக்கிறது என்பார்களே அதை மாற்றி...)
   
புஷ்பா தங்கதுரையின் 'நீ நான் நிலா" (பு. த அந்த கால கட்டத்தில் எழுதிக் கொண்டிருந்த பாணியிலிருந்து மாறி எழுதிய ஒரு காதல் கதை)

சி ஏ பாலன் (என்று நினைவு) எழுதிய 'தூக்குமர நிழலில்' பயமுறுத்தும் தலைப்பு.

========================================
யோசனை ஓட்டத்தில் என் எண்ணத்தை எனக்குத் தெரிந்த அளவில் இங்கு பகிர்ந்துள்ளேன். பரந்த வாசகானுபவம் உடைய வாசகர்கள் தங்கள் எண்ணத்தையும் மன ஓட்டத்தையும் சொல்லலாமே...  
                       

8 கருத்துகள்:

 1. //யோசித்துப் பார்க்கும்போது தலைப்பு வைப்பதில் சுஜாதா ஜித்தர் என்று தெரிகிறது. //

  ஆம்,கொலையுதிர்காலம்,ரத்தம் ஒரே நிறம்,நடுப்பகல் மரணம்,
  தங்கமுடிச்சு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

  தலைப்புகள் பற்றி கலக்கலான அலசல்.

  பதிலளிநீக்கு
 2. சுவாரசியமான பதிவு.

  சுஜாதாவின் கதைத் தலைப்புகளில் எனக்குப் பிடித்தது, 'மேகத்தைத் துரத்தினவன்'.

  ஜெயகாந்தனின் 'கங்கை எங்கே போகிறாள்' தலைப்பு கதையைத் தேடிப் படிக்கத் தூண்டியது (தூண்டியதோடு சரி)

  இந்துமதியின் நிறைய கதைத் தலைப்புகள் பிடித்த நினைவிருக்கிறது. தலைப்பு மட்டும் எதுவும் நினைவில்லை :)

  புதுமைப்பித்தனின் நிறைய கதைத் தலைப்புகள் பிடிக்கும்.

  கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'.

  பாலசந்தர் படங்களில் எனக்குப் பிடித்த தலைப்புகள் 'நீர்க்குமிழி', 'நான் அவனில்லை', 'தப்புத் தாளங்கள்'.

  பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்', அதிசயித்த தலைப்பு. வருஷமோ என்னவோ ஓடிய படத்தை தியேடரிலிருந்து எடுக்கும் கடைசி நாளன்று பார்த்தேன்.

  மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' தலைப்பினால் ஈர்க்கப்பட்டு, படத்தைப் பார்த்து நொந்தேன்.

  மின்னல் மழை மோகினி. தலைப்பு நினைவிலிருக்கிறது, ஆசிரியர் மறந்துவிட்டது. ஜாவர் சீதாராமன்?

  . என்று ஒரு கதை ரொம்ப நாள் முன்பு குமுதத்தில் வந்தது. கதையோ எழுதியவரோ நினைவில்லை. புள்ளி மட்டும் நினைவிருக்கிறது.

  தினத்தந்தி என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும் - அதற்காகவே அந்தப் பத்திரிகையை வாங்கத் தோன்றும் (காசிருக்காது).

  கதைகளுக்குப் பெயர் வைக்கும் கலையில் எஸ்ஏபி ஜித்தர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. சுவையான பதிவு! எப்போதுமே பிடித்த எழுத்தாளர்களின் கதைகளைத்தான் படிப்பேன். அதிலும் சட்டென்று மனதிற்கு பிடித்த தலைப்புகளைத்தான் முதலில் படிப்பேன். வாஸந்தியின் 'வல்லினமே மெல்லினமே', இந்துமதியின் 'தொடுவான மனிதர்கள்', பாலகுமாரனின் 'தாயுமானவனுமாய்' , 'மெர்குரி பூக்கள் இப்படி நிறைய.
  'மரப்பசு' தற்செயலாக பார்த்து தலைப்பு மிகவும் பிடித்துபோய் நான் படித்த தி. ஜானகிராமனின் முதல் நாவல் இது. அடுத்து 'மோகமுள்' தலைப்புக்காக முதலில் படிக்க ஆரம்பித்து, இவரின் அற்புதமான எழுத்து நடையால் இன்னொருமுறை ரசித்து படித்தேன்.

  பதிலளிநீக்கு
 4. குரோம்பேட்டைக் குறும்பன்30 அக்டோபர், 2011 அன்று 9:51 AM

  இந்துமதி எழுதிய கதை 'தரையில் இறங்கும் விமானங்கள்?'

  பதிலளிநீக்கு
 5. கல்கி காலத்திலேயே தலைப்புகள் பிரதான இடத்தைப் பிடிக்க ஆரம்பித்தன.
  அவர் மகள் எழுதிய் ''மலைச்சாரல் மாதவி'' ஒரு தலைப்பு.ராஜேந்திர குமாரின் ''எப்படியடி காதலிப்பது''
  சேவல்கொடியோனின், பாரதியார் பாடல் வரிகள்''உன் கண்ணில் நீர் வழிந்தால்''
  என் கண்ணில் பாவையன்றோ''
  தமிழ்வாணனின் ''மணிமொழி நீ என்னை மறந்துவிடு''
  சுஜாதாவின் ''பத்துசெகண்ட் முத்தம்''

  பதிலளிநீக்கு
 6. மரப்பசு எனக்கும் பிடித்த தலைப்பு. கதையை இன்னும் படிக்கவில்லை - தலைப்புக்காக வாங்கிவைத்த புத்தகம்!
  முத்து காமிக்சின் பல தலைப்புகள் அட்டகாசமாக இருக்கும். எதுவுமே நினைவில்லை :)

  பதிலளிநீக்கு
 7. அப்பாஜி....!

  முத்துக் காமிக்ஸ் தலைப்புகள்

  நடுநிசிக் கள்வன்
  இயந்திரத்தலை மனிதர்கள்.
  விண்ணில் மறைந்த விமானங்கள்
  காற்றில் கரைந்த கப்பல்கள்
  சதிகாரர் சங்கம்
  நயாகராவில் மாயாவி

  அ. கொ.தீ.க தான் மெயின் வில்லன்! இந்த காமிக்ஸ் படிக்க ஒரு ப்ளாக் இருக்கே தெரியுமோ....!

  பதிலளிநீக்கு
 8. நல்ல கலெக்ஷன். அடிக்குறிப்புகளும் அருமை.

  கடைசியில் சொன்ன சி.ஏ.பாலனின் 'தூக்குமர நிழலில்' படித்திருக்கிறீர் களா? அனுபவித்த அவஸ்தைகள் ஆவணமாகியிருப்பதைப் பார்க்கையில், 'தூக்குமர வெயிலில்' என்று தான் சொல்ல வேண்டும்.

  'குருதிப்புனல்' படித்து வெறுப்பான வெறுப்பு, இ.பா.விடம். அந்த கசப்பில் தான் அவரைப் பற்றி எழுதாமலிருக்கிறேன்.

  'நீ'-- என்று தமிழில் முதலாக ஒற்றை எழுத்தில் தலைப்பிட்டு
  ஒரு நாவலை எழுதியவர்,
  எஸ்.ஏ.பி. அதற்கு முன் யாருமே தமிழில் ஒரு எழுத்தில் தலைப்பு வைத்ததில்லை. ரொம்ப வருஷத்திற்கு அப்புறம் சுஜாதா தன் நாவலொன்றிற்கு 'ஆ!' என்று ஒன்றை எழுத்தில் தலைப்பு வைத்தார். அது ஆனந்தவிகடனில் வெளி வந்தது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!