வியாழன், 24 நவம்பர், 2011

அலுவலக அனுபவங்கள் 1


அப்புறம் என்ன என்று சொல்லவும் வேண்டுமோ...!

ஹெட் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தான் சங்கரன். இன்றும் நாளையும் கிளை அலுவலகங்கள் ஐந்தையும் ஆடிட்டுக்காக அங்கு வரச் சொல்லியிருந்தார்கள்.  
  
இது, அவ்வப்போது வருகின்ற தவிர்க்கமுடியாத ஒரு தொல்லை.

ஆனால் இங்குள்ள அலுவலகத்துக்கு வந்து வாரக் கணக்கில் தலைவலியைத் தாங்குவதற்கு இது தேவலாம் என்றும் தோன்றும்!

கையில் தேவையான புத்தகங்கள், ஃபைல்களுடன் ரோடில் காத்துக் காத்து நின்றதுதான் மிச்சம். அங்கு நிற்கக் கூடிய பஸ்களைக் காணோம். வந்தாலும் கூட்டம் அலை மோதியது. 

ஷேர் ஆட்டோவில் ஏறலாம் என்றால் அதுவும் நிரம்பி வழிந்தது. ஒரு வழியாய் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி, இறங்கவேண்டிய இடம் வந்து, இறங்கும்போது பத்து ரூபாயை நீட்டினான். 

"இருபது ரூபாக் குடு சார்"

"ஒருத்தர்தான்பா..."

"ஆமாம்பா... இன்னிலேருந்து இருபது ரூபா... குடு.. லேட்டாகுது..."

வெறுப்புடன் கொடுத்து விட்டு நடந்தான். இன்னும் நடக்க வேண்டும். கை கனத்தது. 

வழியில் சக அலுவலக நண்பர்கள் ஒரு டீக்கடையில் கண்ணில் பட்டனர். கையசைத்தனர்.
    
ஆவணங்களுடன் ஹெட் ஆபீஸ் செல்லும் வழியில் சக நண்பர்கள். டீ குடித்து பேசிக் கொண்டிருக்க, அவர்களிடம் சென்று டீ, வடை, புகை, அரட்டை ஜோதியில் கலந்தான். உடன் உரையாடி சக நண்பர்கள் கிள்ள முயற்சிப்பதையும் பொருட்படுத்தாமல் ஏடாகூடமாக ஆடிட் பற்றி கமெண்ட்ஸ் அடித்து சிரித்து விட்டு ... 

"என்ன சார்... ரெண்டு வருஷத்துக்கு இவ்வளவுதான் நோட்டு, ஃபைலா...?" - நடராசன்.

ஷேர் ஆட்டோ வெறுப்பிலிருந்து கலையாமலிருந்தான் சங்கரன். வாயிலிருந்து சரளமாக கெட்ட வார்த்தை வெளிப் பட்டது.

"என்ன பெரிய நோட்டு, ஃபைலு... இதைக் காமிச்சாப் போதாதா..."

"எதாவது வேணும்னா திரும்பிக் கூட ஓடி எடுத்து வர முடியாதே..." சாலமன்.

"விடு.. சமாளிச்சிக்கலாம்..."

"எப்படி சமாளிப்பீங்க.." அவர்களுடன் நின்றிருந்த புதிய நண்பர். 

"இத்தனை பேர்ல நம்ம என்ன சொல்றோம்னு பார்க்கப் போறாங்களா... சமாளிச்சிக்கலாம்... நான் ஸ்டேஷனரி டிபார்ட்மென்ட் வேற போகணும்..." நடு நடுல மானே தேனே எல்லாம் போட்டுக்கோ என்பது போல கெட்ட வார்த்தைகளைத் தூவி பதில் சொன்னான் சங்கரன்.

"மாப்பிள்ளே... என் நோட்ஸ் எல்லாமும் வச்சிக்கிட்டு ஷோ காட்டிகிட்டு இரு... ஆடிட் ஆரம்பிக்கறதுக்குள்ள ஒரு வேலையை முடிச்சிட்டு வந்துடறேன்.."

"லன்ச்சுல போலாம்.. டைமாச்சு பாரு.." பாஸ்கர்.

"லஞ்ச்சுக்கு அப்போ விடுரானுங்களோ... பாவிங்க... அப்போ வேற ஒரு வேலை வேற வச்சிருக்கேன்... தோ வந்துடறேன்..."

"அவர் கிட்டயே ஒரு வார்த்தை சொலிட்டு போப்பா..."

"சொன்னாத்தான் கஷ்டம்.. அலட்டுவாங்க... ஓடி வந்துடறேன்.."

"சங்கரா... சங்கரா..." வெங்கடேசன் முழங்கையைப் பிடித்து இழுத்துக் கிள்ளுவதைப் பொருட்படுத்தாமல், 

"இவங்களைத் தெரியாதா...நாங்கள்ளாம் எவ்வளவு பாத்திருக்கோம்... வந்துடறேன்.." என்றபடி ஒரு பேப்பரை மட்டும் உருவி எடுத்துக் கொண்டு ஓடினான் சங்கரன். 


வேலையை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக ஆடிட் நடக்கும் இடத்துக்கு வந்த போது ஆடிட் ஆரம்பித்திருந்தது; அது அதிர்ச்சியாயில்லை. 
  
இவனுடன் சேர்ந்து டீ குடித்த நண்பர்கள் குழுவில் இருந்த இருவர்தான் ஆடிட்டர்கள் என்பதுதான் அதிர்ச்சியாயிருந்தது. 

தலைப்பை மறுபடியும் படிக்கவும்!
      

16 கருத்துகள்:

 1. அப்புறம் என்ன என்று சொல்லவும் வேண்டுமோ///

  வேறென்ன... கதை முடிஞ்சிருக்கும்.

  பதிலளிநீக்கு
 2. குரோம்பேட்டைக் குறும்பன்24 நவம்பர், 2011 அன்று 7:59 PM

  கதை கந்தலாகி இருக்கும்.

  பதிலளிநீக்கு
 3. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.எல்லாத்துக்கும் விலையிருக்கே! என்ன கொஞ்சம் கூடுதலாக செலவாகும்.

  பதிலளிநீக்கு
 4. அந்த சோகத்தை எங்க போய் சொல்லுறது...அதுக்கு தான் என்ன கோபம் வந்தாலும் தனியா போய் முட்டிக்கணும்.......இல்லேன்னா ........

  பதிலளிநீக்கு
 5. // அப்புறம் என்ன என்று சொல்லவும் வேண்டுமோ //

  அதற்குப் பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ ? -- என்று அம்புலிமாமா புத்தகக் கதை ஸ்டைலை காப்பியடித்தமாதிரி இருக்கு..

  பதிலளிநீக்கு
 6. திருடனுக்கு தேள் கொட்டின கதை தான்.

  பதிலளிநீக்கு
 7. ஏன் முதல்லயே சொல்லலைன்னு நண்பர்களுக்கு அப்றமா டோஸ் விழுந்திருக்குமோ :-))

  பதிலளிநீக்கு
 8. இப்பிடியான விஷயமெல்லாம் அந்தந்த நேர மனநிலை,அதிஷ்டத்தைப் பொறுத்தது !

  பதிலளிநீக்கு
 9. சில இலகாக்களில் ஆடிட்டுக்காக நன்கொடை அதாவது கட்டாய வசூல் செய்து ஆடிட் செய்பவர்களுக்கு பால் அபிஷேகம் பிரசாத நைவேத்யம் க்ஷேத்ரடனம் செய்து வைப்பது சகஜம். ஆடிட்டர்களும் வந்த உடனே " பக்கத்தில் என்ன சைட் சீயிங் இருக்கு " (அதாவது உல்லாச அல்லது புனித தலங்கள் வேறு சைட் அல்ல) என்று கேட்பர். சில பேர் கடமை உணர்ச்சியோடு பணியாற்றி டிபார்ட்மென்ட் சீர்கேடுகளை பிட்டுப் பிட்டு வைப்பதும் உண்டு.

  பதிலளிநீக்கு
 10. நச்...
  அடுத்த அனுபவத்துக்கு காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 11. அப்பறம்! அவ்வளவுதான்!!!!

  அடுத்த அனுபவம் எப்போது?

  பதிலளிநீக்கு
 12. //அப்புறம் என்ன என்று சொல்லவும் வேண்டுமோ...!//

  சொல்லவே வேண்டாம்.(2வது பின்னூட்டம்)... :))!

  பதிலளிநீக்கு
 13. என்னுடைய அலுவலகத்தில் முதல் ISO 9000 ஆடிட் முடிந்து, ஆடிட்டர்கள் அகன்ற பின், வில்லங்கத்துக்குப் பெயர் போன ஒரு டிபார்ட்மெண்டில் சில தொழிலாளர்கள் மானேஜரின் அறைக்கு வந்து சொன்னார்கள். "சார் அந்த ஆடிட்டர் பார்ப்பதற்கு 'சொங்கி' மாதிரி இருக்காரு - அவரைப் பார்த்து இப்படி பயப்படுறீங்களே! ஏதாவது ஏடா கூடமா கேட்டாருன்னா - மண்டையில ஒரு தட்டு தட்டினா தாராந்து பூடுவான் போல இருக்கற ஆளு கிட்ட இந்த எக்சிகியூடிவ்ஸ் எல்லாம் ஏன் அப்பா இப்படி பயப்படுறீங்க!" நல்ல வேளை - ஆடிட்டர் அந்த டிபார்ட்மெண்ட் விட்டு வெகு தூரம் சென்ற பின்தான் இந்த நிகழ்வு!

  பதிலளிநீக்கு
 14. சுவையாகச் சொல்லிட்டீங்க. அப்புறம் என்னவேணா ஆகியிருக்கலாம். நீங்களே சொல்லிடுங்கோ.:)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!