திங்கள், 7 நவம்பர், 2011

எட்டெட்டு ப 4:: ஓ ஏ யின் ஹோட்டல் திட்டம்

       

மாயா சொல்லும் கதை தொடர்கிறது: 

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம், தஞ்சாவூர் அருகே, வல்லம். அகல் குளம் அருகேதான் எங்கள் வீடு. எட்டாம் மாதம், எட்டாம் தேதி பிறந்த எனக்கு, அப்பா Maaya என்று பெயர் வைத்தார். நியூமராலஜி என்று காரணம் கூறினார். என்னுடைய தோழிகள் எல்லோரும் என்னை 'கருப்பி' என்று செல்லமாகக் கூப்பிடுவார்கள். (கே வி வலது கட்டை விரலை அசைத்து, கருப்பியா? என்று நினைத்தார்) ஆமாம் - நான் கருப்பழகிதான். ஆனால், ஆவியுலகம் வந்தவுடன், எப்பொழுது நினைத்தாலும் உருவம், வடிவம், நிறம் எதை வேண்டுமானாலும் இஷ்டம்போல மாற்றிக் கொள்ளலாம். நான் நிறத்தை மட்டும், இன்று, இங்கு வருவதற்கு முன்பு விக்ரமாற்குடு கதாநாயகி நிறத்திற்கு மாற்றிக்கொண்டேன். 

எட்டு வயது வரை நான் கேட்டது எல்லாமே கிடைத்தது. 'பாவம், தாயில்லாக் குழந்தை' என்று எல்லோருமே என்னிடம் பரிவு காட்டினார்கள். 

எட்டிலிருந்து பதினேழு வரை, மிகவும் கண்டிப்பு காட்டி வளர்த்தார், என் அப்பா. பள்ளிக்கூட நாட்களிலேயே ஹிந்தி கற்றுக்கொண்டேன். பிறகு AMC யில் சேர்ந்து படித்தேன். கல்லூரி படிப்பு முடிந்தவுடன், கம்பியூட்டர் கொஞ்சம் தெரிந்துகொண்டேன். அப்பா என்னுடைய ஜாதகம் தயார் செய்ய, குலதெய்வம் கோவில் உள்ள ஊருக்குச் சென்றார். ஜாதகம் கணித்து வந்த அப்பா, அதற்குப் பிறகு உற்சாகம் இழந்து காணப்பட்டார். என்ன காரணம் என்று கேட்கும் பொழுதெல்லாம், 'ஒன்றும் இல்லை அம்மா' என்று சொல்லி பெருமூச்சு விட்டார்.  அப்பா எதையோ என்னிடம் மறைக்கிறார் அல்லது சொல்லவிரும்பவில்லை என்பது தெளிவானது. 

கல்யாணம் பற்றி நானும் ஒன்றும் பேசவில்லை. அப்பாவும் ஒன்றும் பேசவில்லை. அப்பாவின் நண்பர்கள் என்னுடைய திருமணம் பற்றி ஏதாவது விசாரித்தால் கூட அப்பா ஆர்வம் காட்டமாட்டார். 

இந்த நிலையில்தான் நான் ஓ ஏ வை சந்திக்க நேர்ந்தது. அவருடைய முழுப் பெயர், ஒல்லிவாலா அஜாய் என்பது. ஒல்லிவாலா என்பது ஊர் பெயரோ - வீட்டுப் பெயரோ ஏதோ ஒன்று சொன்னார். இந்தூரிலிருந்து, வல்லம் வரையில் வந்து, அகல் குளம் அருகே ஒரு இடத்தை வாங்கி, அங்கே ஹோட்டல் கட்டலாமா என்பதை ஆராய அவர் வந்திருந்தார். 

அவரை நான் சந்தித்ததே ஒரு விசித்திரமான சூழ் நிலையில். ஒரு வெள்ளிக் கிழமை மாலையில், கோவிலுக்குச் செல்வதற்கு முன்பு, அர்ச்சனைப் பொருட்கள் வாங்க கோவிலுக்கு அருகே உள்ள கடைக்குச் சென்றிருந்தேன். இவர் கடைக்காரரிடம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் கேட்டது எதுவுமே கடைக்காரருக்குப் புரியவில்லை. திரு திருவென விழித்துக் கொண்டிருந்தார். நான் இவரிடம் விவரம் கேட்டு, அதை மொழி பெயர்த்து, கடைக்காரரிடம் சொன்னேன். அவருக்கு கோக கோலா ஒரு முழு கேஸ் வேண்டுமாம். அதாவது, சினிமா தியேட்டர்களில் 'இடைவேளை' நேரத்தில் ஒரு மர / பிளாஸ்டிக் பெட்டியில் வைத்துக் கொண்டு 'சோடா .... கலேர் ...' என்று விற்பார்கள் அல்லவா - அது மாதிரி இருக்கின்ற பெட்டி ஒன்றில் வைத்து பத்து / பன்னிரண்டு பாட்டில்கள் வேண்டுமாம். 

கடைக்காரர் கொடுத்த கோக கோலாவை பெட்டியுடன் வாங்கிக் கொண்டு, கடைக்காரர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு, "தாங்க் யூ ..... மிஸ்....?" என்றார். "மாயா" என்றேன். "நைஸ் நேம்" என்றார்.

அடுத்த வெள்ளிக்கிழமை, அதே போன்று கோவிலுக்குப் போகும் முன்பு கடைக்குச் சென்றேன். கடை வாசலில் அவர் நின்றுகொண்டிருந்தார். "என்ன சார்? இன்னும் ஒரு கேசா?" என்று கேட்டேன். "இல்லை மிஸ் மாயா. என்னைப் பார்த்ததுமே கடைக்காரர் ஒரு கேஸ் கோக் எடுத்துக் கொடுத்துவிட்டார். நான் உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கின்றேன்." 
  
"என்ன விஷயம்?" 
  
"நீங்கள் கோவிலுக்குப் போய்விட்டு வரும் பொழுது, அகல் குளம் அருகே வந்து என்னை சந்திக்க முடியுமா?" 
   
மனம் லேசாக குறுகுறுத்தாலும், சரி என்று ஒப்புக் கொண்டு கோவிலுக்குச் சென்றேன். திரும்பி வரும்பொழுது, அகல் குளம் அருகே அவர் காத்துக் கொண்டிருந்தார். ஆனால், நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, அகல் குளம், அதன் சுற்றுப் புறங்கள், அங்குள்ள மனிதர்கள் பற்றி எல்லாம் கேட்டார். பிறகுதான் ஹோட்டல் பிராஜக்ட் பற்றி சொன்னார். நான் சொன்ன விவரங்களைக் கொண்டு, அங்கு ஹோட்டல் கட்டும் திட்டம் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்தார். அதை, அவருடைய அப்பாவுக்கு செல் ஃபோனில் கூறினார். 
      
பேசி முடிக்கும் பொழுது " ... அப்பா நான் ஆராய்ந்த விஷயங்களையும், இங்கே நம்பத் தகுந்த நண்பர் ஒருவர் கூறியதையும் வைத்துப் பார்க்கும் பொழுது, இந்த ஹோட்டல் திட்டம் ஒத்துவராது என்று தோன்றுகிறது. ...... ஆமாம். .... சரியாகச் சொன்னால், அது நண்பர் அல்ல, நண்பி. ...... ஆமாம் அப்பா .... அது சரி..   இல்லை, இன்னும் கேட்கவில்லை. கேட்டுப் பார்க்கிறேன் அப்பா. எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அதுவும் சாத்தியம் ......" 

போனில் பேசி முடித்த அவர், "மிஸ் மாயா - மிக்க நன்றி, உங்கள் உதவிக்கு. உங்கள் உதவியால், சட்டென்று ஒரு முடிவுக்கு வர முடிந்தது. உங்களைப் பற்றி சொல்லுங்கள்."

சொன்னேன். 

சுருக்கமாகச் சொல்வதானால், அவருக்கு என்னைப் பிடித்திருந்தது, எனக்கு அவரைப் பிடித்திருந்தது. ஆனால், அப்பாவுக்குத்தான் இது எதுவுமே பிடிக்கவில்லை. 'இந்தூர் மாப்பிள்ளையா? அதுவும் தமிழ் தெரியாதவரா? பணக்காரரா? வேண்டாம் மாயா - தயவு செய்து மறந்துவிடு.' என்றார். 


ஆனால் என்னால் மறக்க முடியவில்லை. 

(தொடரும்) 
              

9 கருத்துகள்:

 1. அட! ஆவி தன் கதையை அழகா சொல்லுதே! ஜாதகத்துல என்ன கோளாறா இருந்திருக்கும்? 'வேற்று மொழி பேசுபவன் வாழ்கை துணையாக வந்தால் மரணம் சம்பவிக்கும்' அப்படின்னு சொல்லி இருப்பாங்களா! சுவாரசியமா இருக்கு. தொடருங்கள், தொடர்கிறேன்!
  லேப்டாப்-ல இந்த பதிவோட படம் மட்டும் தெரியல. பெருசா என்னவோ போட்டிருக்கீங்க கட்டம் சொல்லுது. ஆனா, அது என்னன்னு தெரியலையே! மண்டை காயுது! ரெண்டு தடவ ரெப்ரெஷ் பண்ணி கூட பாத்தாச்சு.

  பதிலளிநீக்கு
 2. எங்கள் ப்ளாக்7 நவம்பர், 2011 அன்று AM 8:37

  படத்தில் இருப்பது வல்லம பகுதி மேப். அகல் குளம் எங்கே இருக்கின்றது என்பதைக் காட்ட. நன்றி கூகிள் ஆண்டவருக்கு.

  பதிலளிநீக்கு
 3. அகல் குலத்துக்குக் கூட நியூமராலகியில் எட்டு வருகிறதோ ?

  பதிலளிநீக்கு
 4. இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்ரமாற்குடு படத்தின் கதாநாயகிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  தலைவர்.
  அ உ அ ர ச

  பதிலளிநீக்கு
 5. அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 6. அமீர்பாஷாவோட வீடு எங்க இருக்குனு தெரிஞ்சுடுச்சு. இனி தூக்கம் வரும். (ஆவி தொந்தரவு இல்லாம இருந்தா)

  பதிலளிநீக்கு
 7. கல்யாணம் ஆகித்தானே மாயா ஆவியாகி இருக்கணும், ஆகவே இந்தக் கல்யாணம் நடந்திருக்கும். அப்பாவோட எதிர்ப்பையும் மீறி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!