வியாழன், 10 நவம்பர், 2011

எட்டெட்டு ப 5:: மாயா, ஓ ஏ மற்றும் பிங்கி.


மாயா தொடர்கிறார்: 
          
வாழ்க்கையில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தும் முடிவுகளை, நாம் ஒரு நொடிப்பொழுதில் எடுத்து விடுகின்றோம். நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் பெரிய திருப்பங்களை ஏற்படுத்துவதில்லை. அப்படித்தான் ஆயிற்று என் வாழ்க்கையிலும். 
    
அப்பா எங்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஓ ஏ ஹோட்டல் திட்டம் ஒன்றை ஆய்வு செய்ய, தஞ்சை செல்வதாகவும், ஒரு வாரத்திற்குள் தஞ்சையிலிருந்து, இந்தூர் செல்வதாகவும் கூறினார். நான் அவருடன் இந்தூர் செல்லத் தயாராக இருந்தால், தஞ்சைக்கு அடுத்த வார இறுதியில் சென்று, அவரைச் சந்திக்க வேண்டும் என்றார். என்னிடம், என் அப்பா பெயரில், ஐந்து லட்ச ரூபாய்க்கு செக் ஒன்றைக் கொடுத்து, நான் என் அப்பாவை விட்டு வருவதாக இருந்தால், ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, இந்தூர் விலாசம், ஃபோன் நம்பர் இவைகளுடன், இந்த காசோலையையும் விட்டு வரவேண்டும். என்று சொன்னார். 
     
அப்பொழுதுதான் நான் ஒரு உடனடி முடிவு எடுத்தேன். வரதட்சணை கேட்டுக் கொடுமைப் படுத்தும் எத்தனையோ ஆண்களுக்கு நடுவில், இந்த மாதிரி ஐந்து லட்ச ரூபாய் கொடுத்துத் திருமணம் செய்து கொள்கின்ற ஒருவர் நிச்சயம் நல்லவராகத் தான் இருப்பார் என்று தைரியமாக, அவருடன், அப்பொழுதே கிளம்பத் தயார் ஆகிவிட்டேன்.ஒரு காகிதத்தில், சுருக்கமாக சில வரிகள் எழுதினேன். 
     
"அன்புள்ள அப்பாவுக்கு, 
இந்தக் கடிதம் உங்கள் கைகளில் கிடைக்கும்பொழுது, நான் அஜோயுடன் தஞ்சைக்குச் சென்று கொண்டிருப்பேன். அங்கிருந்து இந்தூர் சென்றவுடன், அவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் முன்னிலையில்தான் திருமணம். இந்தூரில் என்னுடைய விலாசமும், ஃபோன் எண்ணும், இந்தக் கடிதத்தில், கடைசியில் உள்ளது. உங்கள் மாப்பிள்ளை, மிகவும் நல்லவராக இருக்கின்றார்.உங்களையும் என்னுடன் இந்தூருக்கு அழைத்து வரவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். நீங்கள் எப்பொழுது வந்தாலும் எங்கள் வீட்டுக் கதவுகள் உங்களுக்காகத் திறந்தே இருக்கும். உங்கள் பெயருக்கு உங்கள் மாப்பிள்ளை அளித்த செக் இதோடு இணைத்துள்ளேன். 
என்றும் அன்புடன்,
மாயா. " 
   
இந்தக் கடிதத்தை ஒரு கவரில் வைத்து, கோவிலுக்கு வந்த பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கொடுத்து, அப்பாவிடம் சேர்ப்பிக்கச் சொல்லிவிட்டு, ஓ ஏ யுடன், தஞ்சைக்குக் கிளம்பிவிட்டேன். 
             
எங்கள் வல்லம் வீட்டில் ஃபோன் கிடையாது. ஆனால், எதிரில் இருந்த மளிகைக் கடையில் ஃபோன் இருந்தது. அங்கே ஃபோன் செய்து அப்பாவைக் கூப்பிடச் சொன்னால், கூப்பிடுவார்கள். தஞ்சையிலிருந்தும், இந்தூரிலிருந்தும் - நான் அந்தக் கடைக்கு ஃபோன் செய்த போதெல்லாம், அப்பா என்னுடன் பேச மறுத்துவிட்டார். அப்பா, அவர் பெயருக்குக் கொடுக்கப்பட்ட செக்கை, காஷ் செய்யவில்லை என்று என் கணவர் தன் பாங்க் கணக்கை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார்.  நான் எழுதிய கடிதங்களுக்கும் அப்பாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. 
               
என்னுடைய மாமியார் உயிருடன் இல்லை. எங்கள் கல்யாணத்திற்குப் பிறகு, நான், என் கணவர், மாமனார், சொன்ன வேலையைச் செய்ய , வேலைக்காரர்கள் என்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். இவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. அவருக்குப் பிடித்த நிறம் கருப்பு. அதனால்தானோ என்னவோ தினமும் காலை ஒரு கோக்க கோலா குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். சில நாட்களில், அதில் ஆஸ்பிரின் மாத்திரை போட்டு குடிப்பார்.எங்களுக்குக் குழந்தை இல்லையே என்ற ஒரே குறை மட்டும்தான். அதை சரி செய்யும் வகையில், வீட்டுக்கு அருகிலேயே க்ரஷே (Creche) (குழந்தைகள் காப்பகம் )ஒன்று தொடங்கி, அதில் என்னுடைய முழு நேரத்தையும் செலவிட்டேன். நாள்தோறும் குழந்தைகளைப் பார்க்கையில், அவர்களின் மழலை மொழிகளைக் கேட்கையில், எனக்கு என்று ஒன்று பிறக்கவில்லையே என்ற குறையை மறந்திருந்தேன். 
               
என்னுடைய மாமனார் உயிருடன் இருந்தவரை, மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். சந்தோஷ வாழ்க்கை திருமணமான நாளிலிருந்து, எட்டு வருடங்கள்தான் தொடர்ந்தது. என் மாமனார் இறந்த பிறகு, ஓ ஏ வின் போக்கில் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. இதே நேரத்தில் எங்கள் சந்தோஷ வாழ்க்கையில் குறுக்கிட்டாள் பிங்கி.
    
(தொடரும்) 
       

4 கருத்துகள்:

 1. கடைசியில் தத்துவம் பேசும் மாயாவை நினைத்துக் கவலையாகதான் உள்ளது. பிங்கியை சந்திக்கக் காத்திருக்கிறோம். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 2. நானும் பிங்கியை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
 3. முற்பகுதிகளைப் படித்து விட்டு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. சரிதான் பிங்கிதான் வில்லியா? :( ஆஸ்பிரினைக் கோக்கில் போட்டுக் கலந்து குடிக்கையிலேயே வந்திருக்க வேண்டிய சந்தேகம்! :(

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!