அறிவு ஜீவிக்கு அன்று திருமண நாள்.
அவருடைய நண்பராகிய, குரோம்பேட்டைக் குறும்பன் தலைமையில், ஒரு விழாக் குழு, (ஒரு மாதத்திற்கு முன்பே) அமைக்கப் பட்டது.
விழாக் குழு, தங்களுக்கே உரிய சரச சாம தான பேத தண்ட வழிகளில், ஒரு பெரிய தொகை வசூல் செய்தார்கள்.
மாம்பலத்தில் உள்ள ஒரு பிரபல நகைக் கடைக்குச் சென்றார்கள். அறிவு ஜீவியின் மோதிர விரல் அளவை எடுத்துச் சென்றிருந்தனர். விரல் அளவுக்குத் தகுந்த வைர மோதிரம் வாங்கி, அவருக்குப் பரிசளிப்பது என்பது திட்டம்.
குரோம்பேட்டைக் குறும்பனுடன் சென்றிருந்த தில்லைநாயகம் என்பவருக்கு, அந்த நகைக் கடைக்காரர் நெருங்கிய நண்பர். ஏதோ ஒருவகையில் தூரத்து உறவினரும் கூட.
அறிவு ஜீவியின் விரல் அளவுக்குத் தகுந்த மோதிரங்களைப் பார்வையிட்ட குழு, ஒரு வைர மோதிரத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அதை பேக் செய்வதற்கு முன்பு, கடைக்காரரிடம், கு கு ஒரு கேள்வி கேட்டார். 'சார் இது ஒரிஜினல் வைரம் தானே?'
'ஆமாம்! உங்களுக்கு அதிலென்ன சந்தேகம்?' என்று கேட்டார் கடைக்காரர்.
"எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் யாருக்குப் பரிசளிக்கப் போகின்றோமோ, அவர் ஒரு அசகாய சூரர். வைரம் ஒரிஜினலா அல்லது போலியா என்பதை சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்."
"ஹாங் - அது எப்படி? எங்களாலேயே சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாததை உங்க அறிவு ஜீவி கண்டுபிடிப்பார்? சற்றுப் பொறுங்கள். நான் இப்பொழுது கொண்டு வருகின்ற மோதிரக் குவியலிலிருந்து, அவர் விரல் சைசுக்கு ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் ஏற்கெனவே எடுத்த மோதிரத்திற்கு மட்டும் பணம் கட்டிச் செல்லுங்கள். நீங்கள் ஏற்கெனவே எடுத்ததையும், இப்பொழுது எடுக்கப் போவதையும், அவரிடம் கொடுங்கள். அவர் ஒரிஜினல் எது என்று தேர்ந்தெடுப்பதை, அவரே வைத்துக் கொள்ளட்டும். போலி வைரம் உள்ள மோதிரத்தை, எங்களிடம் திருப்பிக் கொடுத்தால், நாங்கள் நீங்கள் கொடுத்த பணத்தில் பாதியைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம்" என்றார் கடைக்காரர்.
பிறகு குழு தேர்ந்தெடுத்த மோதிரம், எல்லாவகையிலும் முதல் மோதிரத்தைப் போலவே இருந்தது. இரண்டு மோதிரங்களையும், ஒரே பெட்டியில் போட்டு, கிஃட் பேப்பர் சுற்றிக் கொடுத்தார், கடைக்காரர்.
அதற்குப் பிறகு, அந்த வைர மோதிரங்கள் உள்ள பார்சலை, குழுவினரிடம் கொடுத்துவிட்டு, அலுவலக வேலையாகச் சென்றுவிட்டார், கு கு.
அறிவு ஜீவியை மொபைலில் கூப்பிட்டு, திருமண நாள் பரிசு பற்றிய விவரங்களை சுருக்கமாகக் கூறி விட்டு, தான் அலுவலகத்திலிருந்து இரவு வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக சொல்லி விட்டுச் சென்றார்.
==============
தன வீட்டிற்கு வந்த விழாக் குழுவினரை வரவேற்று, எல்லோருக்கும் காபி கொடுத்து உபசரித்தார், அறிவு ஜீவி. விழாக் குழுவ்னருடன், நகைக் கடையில் நடந்த விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பேசியபடி, அந்த மோதிரங்களை எடுத்து, இரண்டு கைகளிலும் கைக்கு ஒன்றாக மோதிர விரலில் அணிந்துகொண்டார்.
பேசிக் கொண்டிருந்த நேரத்தில், தன்னுடைய காபி ஆறிப் போயிருந்ததால், திருமதியிடம், சூடாக வேறு காபி கேட்டார். சூடான, ஆவி பறக்கும் காபி வந்தது. காபி டம்ப்ளரை சற்று நேரம் கைகளில் பிடித்து, அதிலிருந்து போகும் ஆவியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அறிவு ஜீவி, சட்டென்று காபியை அருந்தி முடித்து, தன்னுடைய இடது கையில் இருந்த வைர மோதிரத்தைக் கழற்றி, "இதோ இதுதான் போலி வைரம் உள்ள மோதிரம். இதைக் கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்து, நீங்க கொடுத்த பணத்தில் பாதியைத் திருப்பி வாங்கி வாருங்கள்" என்றார்.
இரவு, வீட்டிற்கு வந்த கு கு - அறிவு ஜீவி, அணிந்திருப்பது, தங்கள் குழு முதலில் தேர்ந்தெடுத்த ஒரிஜினல் மோதிரம்தான் என்பதைப் பார்த்துத் தெரிந்துகொண்டார்.
==================
எங்கள் கேள்வி ரொம்ப சிம்பிள் : "அறிவு ஜீவி, தான் இப்போது அணிந்திருக்கும் மோதிரத்தில் உள்ள வைரம்தான் ஒரிஜினல் என்பதை எப்படித் தெரிந்துகொண்டார்?"
சரியான பதில் சொல்பவர்களுக்கு, அறிவு ஜீவி ஏதேனும் பரிசு கொடுப்பாரா என்பதை கேட்டுச் சொல்கிறோம்.


