புதன், 9 மே, 2012

எட்டெட்டு பகுதி 17:: பெரியவர் சென்றது எங்கே?

                       
                    

போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து முடித்ததும், கே வி அங்கிருந்து 
கிளம்பத் தயாரானார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியவரிடம், 'நீங்க போகலாம்' என்று கூற, பெரியவரும் அங்கிருந்து கிளம்பினார். தானும் கே வி யுடன், 'வாடகை காரில் வரலாமா' என்று கேட்டார் ஹோட்டல் பெரியவர். 
    

"ஓ அதற்கென்ன? தாராளமாக வாருங்கள். இந்த ஊரில் எனக்கு எந்த வழியும் தெரியாது. நீங்கதான் காரோட்டிக்கு நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி சொல்ல வேண்டும்."

      

"எனக்கு இந்த இந்தூரில் எல்லா சந்து பொந்துகளும் தெரியும். நான் செல்ல வேண்டிய இடம் வந்ததும் காரை நிறுத்தி, இறங்கிக் கொள்கின்றேன்."


    
வாடகை காரில், பெரியவர் சொன்ன வழிகளில் காரோட்டி காரை ஓட்டி வந்தார். 
              
கே வி: "பிங்கி தற்கொலையா? எப்படி?"
                   
பெரியவர்: "அதுதான் எனக்கும் புதிராக இருக்கின்றது. அந்தப் பொண்ணு எங்க ஹோட்டலுக்கே முதலாளியம்மா ஆகப போறாங்கன்னு நெனச்சுகிட்டு இருந்தேன். ஆனா இப்படி ஆயிடுச்சு என்பது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கின்றது. "
                   
அந்த நேரத்தில் எனக்கு (கே வி) என்ன தோன்றிற்று என்றால், 'தன்னிலை
 அறியும்' மாத்திரையை கோக்க கோலா தம்ளரில் நான் போட்டதை ஓ ஏ 
குடித்து, உடனே அவர் தன்னிலை அறிந்து, பிங்கியிடம் ஒட்டுதல் இல்லாமல் பேச ஆரம்பித்திருப்பார். அதனால் பிங்கி மனம் வெறுத்து தற்கொலை செய்துகொண்டிருக்கக் கூடும் என்பதுதான்.
                     
ஆனால் ஓ ஏ, பிங்கி விவகாரங்கள் எல்லாமே எனக்குத் தெரிவித்தது, 
மாயாவின் ஆவி. இதை யாரிடமும் என்னால் சொல்ல முடியாது; சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். அதனால் அந்தப் பெரியவரிடம் மிகவும் ஜாக்கிரதையாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, பேசினேன்.
                 
கே வி: "பெரியவரே நீங்க நேற்று மாலையிலிருந்து, இன்று காலை வரை, எங்கு சென்றிருந்தீர்கள், என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"
                    
பெரியவர்: "நான் மன அமைதிக்காக ஒரு இடத்திற்குச் சென்று, அங்கு இரவும்,அதிகாலையும் தியானம் செய்து கொண்டிருந்துவிட்டு, பிறகு ஹோட்டலுக்குத் திரும்பினேன். ஹோட்டலுக்கு நான் திரும்ப வந்த போது, காலை ஒன்பது மணி ஆகிவிட்டது. ஹோட்டலே மிகவும் பரபரப்பாக இருந்தது. ஓ ஏ வின் பி ஏ தற்கொலை செய்துகொண்டு விட்டாள் என்பதுதான் பரபரப்புக்குக் காரணம்.காலு சிங் என்னிடம், நீங்கள் கொடுத்துச் சென்ற, என்னுடைய அறையின் சாவியைக் கொடுத்தான். அதற்குப் பிறகு போலீஸ் வந்து, என்னுடைய அறை, காலு சிங்கின் அறை எல்லாவற்றையும் சோதனை செய்தார்கள். எங்கள் இருவரையும் மத்தியானம், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். 
எங்கள் இருவரிடமும், நேற்று மாலை முதல், இன்று காலை வரை, நாங்கள் எங்கே இருந்தோம், என்ன செய்தோம் என்ற விவரங்களைக் கேட்டு, அதைப் பதிவு செய்து கொண்டார்கள்." 

              
கே வி: "நேற்று நீங்க சென்ற இடம் எது? ஏதாவது கோவிலா?" 
              
பெரியவர்: "இதோ நான் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. இந்த 
இடத்திற்குத்தான் நான் உங்களிடம் பெற்றுக் கொண்ட நூறு ரூபாயில் எண்பது 
ரூபாய்க்கு பூ வாங்கிக் கொண்டு, மீதி இருபது ரூபாயில் ஆட்டோ பிடித்து 
வந்து சேர்ந்தேன். இப்போ இங்கே சென்று சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு, 
பிறகு ஹோட்டலுக்குப் போய்விடுவேன். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி 
வரதராஜன் சார்!" 

கே வி: "ஓஹோ - இந்த இடத்திற்குத்தான் வந்திருந்தீர்களா? நேற்று நான் தங்குவதற்கு நீங்கள் 
செய்த உதவிக்கு மிகவும் நன்றி. உங்கள் அறையில் தங்கியதால்தான், என்னுடைய 
அலுவலகப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்தது. உங்கள் பெயரைக் கூட 
நான் இதுவரைக் கேட்கவில்லை. உங்கள் பெயர் என்ன பெரியவரே?" 
     
பெரியவர்: "கோவிந்தராஜன்." 
      
(தொடரும்)
                 

8 கருத்துகள்:

 1. அறுபது ரூபாய்க்கு பூ வாங்கியிருந்தால் காலையில் காவல் நிலையத்துக்குக் கூட ஆட்டோவிலேயே போயிருக்கலாம். ஆட்டோவின் எங்களைக் கூட்டினால் கூட எட்டு வந்திருக்கணுமே ?

  பதிலளிநீக்கு
 2. // k_rangan said...
  அறுபது ரூபாய்க்கு பூ வாங்கியிருந்தால் காலையில் காவல் நிலையத்துக்குக் கூட ஆட்டோவிலேயே போயிருக்கலாம். ஆட்டோவின் எண்களைக் கூட்டினால் கூட எட்டு வந்திருக்கணுமே ?//
  எண்பது ரூபாய் கூட்டுத் தொகை எட்டு வருகின்றது அல்லவா - அதனால் எண்பது ரூபாய்க்கு பூ வாங்கினார்! அதையும் தவிர அவர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றது, ஹோட்டலிலிருந்து, போலீஸ் ஜீப்பில். ஆட்டோ பதிவு எண் எட்டு .. அடாடா ஒரு சான்ஸ் போயிடுச்சே!!

  பதிலளிநீக்கு
 3. குரோம்பேட்டை குறும்பன்10 மே, 2012 அன்று முற்பகல் 8:57

  கோவிந்தராஜன்?
  மாயாவினுடைய அப்பாவா?

  பதிலளிநீக்கு
 4. ஓஓ>.. கதை நல்லா போகுது...
  நன்றி...
  வினொத்

  பதிலளிநீக்கு
 5. //ஓ ஏ வின் பி ஏ தற்கொலை செய்துகொண்டு விட்டாள்
  ஏ ஓ.

  பதிலளிநீக்கு
 6. ஆஹா, மாயாவின் அப்பாவே தான். நான் சொல்ல நினைச்சதை கு.கு. முந்திக் கொண்டு சொல்லிட்டாரே! வடை போச்சே! :(

  பதிலளிநீக்கு
 7. ippo இப்போ ஒரு கேள்வி .. என்ன மாயாவின் ஆவி .. கே வி உதவியுடன் தன்னிலை அறியும் மருந்தை எஒ வுக்கு கொடுத்து..
  பிங்கிய பழி வாங்கிடுது .. பிங்கி தற்கொலை பண்ணி ஆவிஆனவுடன் பிங்கி ஆவி மாயா ஆவிய பார்த்து பேசியதா, சக்களத்தி சண்டை போட்டதா.. பழி வாங்க திட்டம் போட்டதா ?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!