செவ்வாய், 29 மே, 2012

அபிராமி....அபிராமி....


சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திருக்கடையூர்.

உறவினர் ஒருவரின் அறுபதாம் கல்யாணம்.


பெரிய மாற்றம் எதுவுமில்லை. பேட்ச் பேட்ச் ஆக நின்று வரிசையாக உள் நுழைந்து யானையின் (அபிராமி) தலைமையில் உள் சென்று அறுபதாம் கல்யாணம், பீமரத சாந்தி, சதாபிஷேகம் செய்து திரும்புகிறார்கள். முன்னர் இருந்த அபிராமி இல்லையாம் இவள். புதிய யானை.அபிராமிக்கு ஓயாத வேலை, உழைப்பு. சளைக்காமல் உள்ளுக்கும் வெளிக்கும் நடந்து 60, 70, 80 ஆம் கல்யாணங்கள் செய்து கொள்ள வந்திருப்போரை உள்ளே அழைத்துச் சென்று விட்டு விட்டு அடுத்தவரை அழைக்க வாசலுக்கு வந்து.....மதியம் ரெஸ்ட். அப்போது சம்பாதிக்கும் வேலையிலும் உணவு உண்ணும் வேலையிலும் பிசி!


குரங்கார் ஒருவர் அங்கிருந்த கடையிலிருந்து ஒரு சீப்பு வாழைப் பழத்தை நொடியில் கவர்ந்து கோவில் மதிலில் ஏறினார்..(ஏறினாள்!).


படமெடுப்பதைப் பார்த்ததும் இன்னும் மேலேறிச் சென்று விட்டாள்.

வாசலில் அமர்ந்திருக்கும் யாசகர்கள் ஒரு சிறப்பு வார்த்தை உபயோகித்து அட்டாக் செய்து யாசகம் கேட்கிறார்கள். "நீங்க அமோகமா இருப்பீங்க.... உங்க குடும்பமே அமோகமா இருக்கும்..."குரங்கைப் படமெடுக்கும்போது முதலில் ஒரு யாசகர், அப்புறம் ஒருவர், அப்புறம் ஒருவர் என்று பெரிய கும்பலால் சூழப் பட்டேன்."இவ்வளவு பேர் இருக்கோமேன்னு பார்க்கறீங்களா... ஒருத்தர் கிட்டக் குடுங்க... நாங்க பிரிச்சிப்போம் சாமி....அமோகமா இருப்பீங்க...!"

தங்குமிடத்திலிருந்து சாப்பாடு வரை எல்லாம் வியாபாரம்!

அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள நந்தவனம்....திருமணத்தை வீடியோ எடுப்பது, படமெடுப்பது எல்லாம் செய்தாக வேண்டுமென்பதால் உள்ளே கேமிரா எடுத்துப் போவதில் சிரமமில்லை. படமெடுக்கவும் தடையில்லை. நாங்கள் சென்றிருந்த நேரம் நடிகை ரேவதி சங்கரன் வந்திருந்தார்.

பிரகாரம்...

கேமிரா ரீசார்ஜ் பேட்டரி சரியாக வேலை செய்யவில்லை. டியூரசெல் பேட்டரிக்கு அலைந்தால் அப்புறம்தான் தெரிந்தது அங்கிருக்கும் மளிகைக் கடைகள் எல்லாவற்றிலும் கிடைக்காத விஷயமே இல்லை. டியூரசெல்லில் இருபது படங்கள்தான் எடுக்கமுடிவது ஒரு சோகம்!


அபிராமியின் (யானை)அருகிலிருந்து கோபுரம்....

அம்மன் சன்னதி...


கஜபூஜை போல கோ பூஜை....


ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுக்க முடிகிறது. மாடியுடன் சேர்த்து பத்தாயிரம் ரூபாய் வாடகை. கீழே ஹால் முழுக்க A/C. மாடியில் இரண்டு அறைகள் A/C. அங்கு ஒரு ஹால். மேலும் கீழும் சேர்த்து எழுபது எண்பது பேர் வரை தங்கலாம்! கீழேயும் இரண்டு அறைகள்.  இது போலத் தங்குமிடங்கள் நிறைய அங்கு!  லாட்ஜுகளும் உண்டு. 


பூஜையில் வைக்கப் பட்ட மரகத லிங்கம்....


தங்கியிருந்த இடத்திலிருந்து பக்கவாட்டில் கோபுரம்.திருக்கடையூர் செல்லும் வழியில் அண்ணன் பெருமாள் கோவில் என்ற முப்பத்தெட்டாவது திவ்ய தேசம் பற்றி தனிப் பதிவில்!


18 கருத்துகள்:

 1. புகைப்படங்கள், தகவல்கள் எல்லாமுமே நன்கிருக்கின்றன. ரொம்ப நாளைக்குப்பிறகு தஞ்சை மவட்ட விஜயம் நன்கிருந்ததா?

  பதிலளிநீக்கு
 2. படங்களும் தகவல்களும் அருமை.. அதுவும் நந்தவனம் அள்ளுது :-)

  பதிலளிநீக்கு
 3. எல்லாமே வியாபார மயமாகி விட்டதோடு தரமும் குறைந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அபிராமி பட்டரோட வீட்டைப் போய்ப் பார்த்தீங்களா? நாங்க ஒருதரம் போனது தான்; மறுபடி போகணும்னு நினைச்சாலும் எங்கே? அந்தப் பக்கமாவே போயிட்டுத் திருக்கடையூர் போகாமல் வரோம். பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 4. திருக்கடையூர் அருகிலுள்ள மயானம் கோயில் மிகவும் பார்க்க வேண்டியது; நாங்க போனப்போ அதைப் பத்தித் தெரியாமல் போச்சு. அதுக்காகவாவது இன்னொரு தரம் போகணும்.

  பதிலளிநீக்கு
 5. Though this place is near our native, we are yet to go to this place.

  பதிலளிநீக்கு
 6. //கேமிரா ரீசார்ஜ் பேட்டரி சரியாக வேலை செய்யவில்லை.//

  இதான் காரணம் போலிருக்கிறது.
  சிலருக்கு அதில்லாமல் கையும் ஓடாது, காலும் ஓடாது. எல்லாம் பதினாறாய் இருக்கும் திருக்கடையூர் கோயில் பற்றி அந்த தங்கும் 'குடில்'களைப் பற்றி, சாப்பாடு வசதிகளைப் பற்றி இன்னும் நிறைய சொல்லியிருக்கலாம்.

  கொசுறு: எனது சஷ்டியப்த பூர்த்தி திருக்கடையூர் அம்மன் சந்நிதியில் தான் பத்து வருடங்களுக்கு முன்னால்
  நடைபெற்றது. 'குமுதம் ஜங்ஷன்' இதழில் புகைப்படங்களும், கட்டுரையும் பிரசுரமாகியிருந்தன.

  பதிலளிநீக்கு
 7. அருமையான நகைச்சுவையுடன் கூடிய தகவல்கள் + படங்கள்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 8. படங்களுடன் பகிர்வு அருமை.

  பக்கவாட்டில் கோபுரமும் ஏழாவது படமும் அழகு.

  தொடர்ந்து கேமராவை ஆன் செய்தே வைத்திருந்தாலும் சீக்கிரம் பேட்டரி செயலிழக்கும்.

  பதிலளிநீக்கு
 9. புகைப்படங்கள் பிரமாதம். சஷ்டியப்தம் கண்டவருக்கு வணக்கங்கள்.
  திருக்கடையூர் வீட்டு வாடகை பத்தாயிரமா?!

  புகைப்படங்கள் பிரமாதம். சஷ்டியப்தம் கண்டவருக்கு வணக்கங்கள்.
  திருக்கடையூர் வீட்டு வாடகை பத்தாயிரமா?

  ஆவா வவவுவ இ ஆவே ஏ ஏ இக்க்ய்யு எஆஅ?

  (வேறே ஒண்ணுமில்லே.. பத்தாயிரத்துக்குப் பிளந்த வாயை மூட நேரமாச்சு.. கேட்க வந்தது: ஆமாம் படத்துல இருக்குற மாட்டுக்கு என்ன பேரு? லட்சுமியா?)

  பதிலளிநீக்கு
 10. படங்களும் தகவல்களும் அருமை!

  அபிராமியின் அழகே அழகு! பாவம் குழந்தை எப்போதும் பிஸி.

  எல்லாம் வியாபாரமாகி விட்ட திருத்தலம்:(

  தனிப்பதிவுக்குக் காத்திருக்கின்றேன். அண்ணனை சீக்கிரம் பதிவு செய்யுங்க.

  பதிலளிநீக்கு
 11. அண்ணன் பெருமாள் கோயில்? புதுசா இருக்கே... சீக்கிரம் வெளியிடுங்க. படங்கள் எல்லாமே அழகு. பேசுகின்றன.

  பதிலளிநீக்கு
 12. எங்கள் பிளாக்30 மே, 2012 அன்று 7:36 PM

  நன்றி மனோ மேடம்... பேக்கேஜ் டூர் போல இங்கு மட்டும் சென்று விட்டு வரும்படி ஆகி விட்டது. தஞ்சைக்குச் செல்ல முடியவில்லை!

  நன்றி அமைதிச்சாரல்... நந்தவனம் எங்கோ பார்த்த மாதிரி இல்லை?!

  நன்றி கீதா மேடம்... மயானம் கோவில், அபிராமி பட்டர் வீடு ரெண்டுமே பார்க்கலை. சஷ்டியப்த பூர்த்தி முடித்து உடனே திரும்பி சதாபிஷேக வேலைகளில் இறங்க வேண்டியதிருந்தது. எனவே வேறெங்கும் செல்லவில்லை! அடுத்த முறை செல்லும்போது பார்க்கணும்!

  நன்றி மோகன் குமார்... ஒருமுறை சென்று வாருங்கள்.

  நன்றி ஜீவி சார்... எல்லோருக்கும் தெரிந்த இடம்தானே என்று ரொம்ப விவரம் எல்லாம் எழுதவில்லை! குமுதம் ஜங்க்ஷன் இதழிலா...நமஸ்காரங்களுடன் பாராட்டுகள்! இந்த உறவினர் விசேஷமும் அம்மன் சன்னதியில்தான் நடந்தது. அம்மன் சன்னதியில் நடப்பதற்கும் சுவாமி சன்னதியில் நடப்பதற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?

  நன்றி வைகோ சார்.

  நன்றி ராமலக்ஷ்மி... வ.வா. பாராட்டுக்கு நன்றி! கேமிரா தேவைப் படாத நேரங்களில் ஆஃப் செய்து ஆஃப் செய்து உபயோகித்தும் அந்த நிலைமைதான்!. கேமிரா ரொம்பப் பழசு!

  நன்றி அப்பாஜி... கரண்ட், தண்ணீர் எல்லாம் சேர்த்து பத்தாயிரம் வந்து விடுகிறது. வீட்டின் அளவுக்குத் தகுந்தாற்போல வாடகை மாறும்! அந்த "கோ" கோவில் "கோ" வா என்று தெரியவில்லை!

  வாங்க துளசி மேடம்... நன்றி. சீக்கிரம் பதிவிட முயற்சிக்கிறோம்.

  வாங்க கணேஷ்...நன்றி.

  பதிலளிநீக்கு
 13. //ஆவா வவவுவ இ ஆவே ஏ ஏ இக்க்ய்யு எஆஅ?

  (வேறே ஒண்ணுமில்லே.. பத்தாயிரத்துக்குப் பிளந்த வாயை மூட நேரமாச்சு.. கேட்க வந்தது..//

  அப்பாஜி இருக்குமிடத்திலெல்லாம் தவறாது நகைச்சுவை இருக்கும்; இல்லை, நகைச்சுவை இருக்குமிடமெல்லாம் தவறாது அப்பாஜியும் இருப்பாரா, தெரியாது!

  அது குடில் என்று பெயர் தானே தவிர, நமக்கே ஒதுக்கி விடப்படப்பட்ட தனி வீடு அப்பாஜி! அத்தனை வசதிகளும் அங்கு உண்டு! அதுவும் ஒரு கல்யாண பார்ட்டி என்றால் வெளியூரிலிருந்து வந்தாலும் குறைந்தபட்சம் 15 பேர் தேறிவிடுவார்கள். அதுவும் முதல் நாள் மாலையே வந்து விடுவார்கள். அடுத்த நாள் மாலை அதே நேரத்திற்கு தான் ஒரு நாள் கணக்கு. அத்தனை பேரும் அங்கு உண்டு, உறங்கி, உருண்டு.. பத்து வருஷத்திற்கு முன்னும் இப்பவும் பத்தாயிரம் என்பது ஆச்சரியம் தான்! அதுவும் ஒரு கல்யாண பார்ட்டிக்கே தனிப்பட்ட வசதிகளுடன், தனி வீடு என்றால் குறைவு தான் என்று தோன்றுகிறது..

  //ஆமாம் படத்துல இருக்குற மாட்டுக்கு என்ன பேரு? லட்சுமியா?)//

  ஹஹ்ஹஹ்ஹா... எங்கே போறீங்கன்னு புரிஞ்சது அப்பாஜி! அந்த மாட்டைப் பார்க்கையில் எனக்குக்கூட தோணலை.. எங்கேயிருந்து, எங்கே!
  என்ன தீட்சண்ய பார்வை உங்களது!
  சுவாரஸ்யம் அப்பாஜி, சுவாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
 14. எங்கள் பிளாக்31 மே, 2012 அன்று 5:39 AM

  ஜீவி சார்!
  அருமையான விளக்கம் அளித்தீர்கள்.

  அப்பாஜியின் பார்வை எங்கே போகுதுன்னு உங்களை விட யார் 'சட்'டெனக் கண்டு பிடிக்க முடியும்?!!

  பதிலளிநீக்கு
 15. குரோம்பேட்டை குறும்பன்31 மே, 2012 அன்று 4:33 PM

  எங்கள் பிளாக் said...
  ஜீவி சார்!
  ......
  அப்பாஜியின் பார்வை எங்கே போகுதுன்னு உங்களை விட யார் 'சட்'டெனக் கண்டு பிடிக்க முடியும்?!!

  "நேற்று நீ சின்னப் பப்பா;
  இன்று நீ அப்பப்பா(ஜி)"

  பதிலளிநீக்கு
 16. ஜீவி சார் :) all in jest.

  பத்து வருசத்துக்கு முன்னமே பத்தாயிரமா! நம்பவே முடியவில்லை. demand இருப்பதானால் தானே இப்படி.? i guess it is okay.

  சமீபத்தில் ஒரு அறுபதாம் விழாவுக்கு அங்கே போயிருந்தபோது யானைப்பாகனுக்கு பத்து ரூபாய் அதிகம் கொடுப்பதா வேண்டாமா என்று சிலர் விவாதித்தது நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 17. படங்களுக்கு ரொம்ப நன்றி. அபிராமியைப் பாடத்தெரியும் பார்த்ததில்லை.
  நீங்கள் அந்தக் குறையைத் தீர்த்து வைத்தீர்கள். அந்தப் பத்தாயிரம் வீடு மாதிரி நிறைய பேர் வாடகைக்குக் கொடுக்கிறார்களா.ஷடிஅப்த பூர்த்தி செய்து கொண்டவர்க்கு எங்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. //யானைப்பாகனுக்கு பத்து ரூபாய்..//

  யாருக்கும் பைசா தரவேண்டாம். அங்கேயே விசிடிங் கார்டோடு இதையெல்லாம் ஏற்பாடு செய்ய தகுந்த நபர்கள் இருக்கிறார்கள். பேக்கேஜ் மாதிரி இவ்வளவு என்று நிர்ணயித்து எல்லாம் முடிந்து நாம் கிளம்பும் பொழுது வாங்கிக் கொள்கிறார்கள். ஓரளவு அட்வான்ஸ் பேமண்ட் உண்டு.

  ரயிலில் வந்து இறங்கும் பொழுது மாயவரத்திலேயே கல்யாண பார்ட்டியை அழைத்துச் செல்ல வேன்
  காத்திருக்கிறது. திரும்பும் பொழுதும் மாயவரம் ரயிலடிக்கு வேன் ஏற்பாடு உண்டு. சாப்பாட்டுச் செலவு மட்டும் தனி. மீல்ஸ், டிபன் என்று ஹோம்லியாக கிடைக்கிறது. கடைசியில் கிளம்பும் பொழுது தான் பேமண்ட். வேளாவேளைக்கு நம்மைச் சேர்ந்தவர்கள் சாப்பிட்டு வரவேண்டியது தான். இப்படி பார்ட்டி பார்ட்டியாக நிறைய குரூப்புகள் சாப்பிட்டுப் போகிறார்கள். இந்த குரூப்புக்கு இவ்வளவு என்று எப்படித்தான் கணக்கு வைத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை.
  கணக்கில் ஒரு பைசா தவறு கிடையாது. கட்டுச்சாத கூடை போல கிளம்பும் பொழுது என்ன வேண்டுமோ அதை பார்ஸலாகக் கட்டியும் தருகிறார்கள். சென்னைப் பக்கம் என்றால் இரவு நேர ரயில் தான் ஆகையால் கட்டி வாங்கிக் கொள்ளும் இட்லி, எண்ணையிலிட்ட மிளகாய்ப் பொடி என தூள் தான் போங்கள்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!