வியாழன், 20 செப்டம்பர், 2012

அலேக் அனுபவங்கள் 10 :: லஞ்ச எதிர்ப்பு!

                 
இது அசோக் லேலண்டு அனுபவம் இல்லை என்றாலும், அசோக் லேலண்டில் சேருவதற்காக, எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்ற வகையில் பகிர்கின்றேன். 
           
அசோக் லேலண்டு இண்டர்வியூ முடிந்து சில மாதங்கள் (!) கழித்து, என்னை, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன், டிசம்பர் இரண்டாம் தேதி (1971) வந்து பார்க்கும்படி, கடிதம் எழுதியிருந்தனர். 
 
ஒன்று: மார்புப் பகுதியின் எக்ஸ் ரே படம். 
இரண்டு : வாக்சினேஷன் சான்றிதழ். 
மூன்று : டிப்ளோமா சான்றிதழ் மற்றும் மார்க் ஷீட் ஒரிஜினல். 
                       
அண்ணனுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக, கீழ்ப்பாக் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலில், டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல், எக்ஸ் ரே (அதற்குரிய கட்டணத்துடன்தான்!)  எடுத்துக் கொண்டேன். நாங்கள் கேட்காமலேயே அதில் ஒரு ரிப்போர்ட் வேறு - கவர் மீது ஒட்டிக் கொடுத்துவிட்டார்கள். அதிலே பார்த்தால் - எனக்கு பிராங்கிடிஸ் இருப்பதாக கண்டுபிடித்து எழுதியிருந்தார் யாரோ ஒருவர். ('என்னை நீ முன்னே பின்னே பாத்துருக்கியா ஐயா? அப்புறம் ஏன் இந்தக் கொலை வெறி!') 
                  
நான் அந்த ரிப்போர்ட்டைப் பார்த்த பிறகு, என்னுடைய கனவில் அடிக்கடி வியட்நாம் வீடு சிவாஜி வந்து இரத்தம் கக்கியபடி " நா  ம ஒண்ணு நெனச்சா தெய்வம் வேறு நெனைக்குதே  .... நாம என்னப்பா பண்ணமுடியும், என்ன்ன்ன.......ப்ப்ப்பா பண்ண முடியும் ....." என்று வசனம் பேசி மார்பைப் பிடித்துக் கொண்டு 'லொக்கு லொக்கு ..' என்று இருமினார்! !   
                
சரி எப்படியோ போகட்டும் (எப்படிப் போனது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்!) - அடுத்த விஷயம் இன் தி அஜெண்டா ஈஸ் - வேக்சினேஷன் சான்றிதழ். 
                 
எனக்கு வேக்சினேஷன் செய்யப்பட்டது, கடலூரில் ரெட்டிச் சத்திரத் தெருவில், குடியிருந்த வீட்டில், நான் தவழ்ந்து முடிந்து, தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்திருந்த நாட்களில். அப்போ யாரோ வீட்டுக்கு வீடு வந்து, குழந்தைகள் எல்லோரையும் கட்டாயப் படுத்தி அம்மை ஊசி குத்தி சென்றார்கள் என்று அம்மா சொன்ன ஞாபகம். அது மட்டும் அல்ல, அம்மை ஊசி குத்தப்பட்ட இடம் கையில் (இரண்டு கைகளிலும்) புஜ பல பராக்கிரமன் போல வீங்கிக் கொண்டு, என்னுடைய அம்மா ரயில் ஓடு, மண்டை ஓடு என்று கிடைத்த ஓடுகளை எல்லாம் இழைத்து போட்டு அந்தக் காயங்களை ஆற்றினார்கள் என்பதும் வரலாறு. தினமும் நான் வலி பொறுக்காமல் அழும்போதெல்லாம், அம்மா அம்மை ஊசிக் குத்தியவர்களை அர்ச்சனை செய்துகொண்டே இருப்பார்கள். இப்போ போய் அவர்களைப் பார்த்து எனக்கு வேக்சினேஷன் சான்றிதழ் வேண்டும் என்று கேட்டால் - அவர்கள் என்னை துரத்தித் துரத்தி அடிக்க மாட்டார்களோ! 
           
புரசைவாக்கத்தில், எதிர் போர்ஷனில் குடியிருந்த எவர்சில்வர் கோபால் (பெரம்பூர் பாரக்ஸ் ரோடில் எவர்சில்வர் பாத்திரங்கள் செய்கின்ற சிறிய தொழிற்சாலை வைத்திருந்தார்) எளிய யோசனை ஒன்று கூறினார். 'கங்காதீஸ்வரர் டாங்க் பக்கத்தில் சென்னை கார்ப்பொரேஷன் ஹெல்த் செண்டர் ஒன்று இருக்கின்றது. அங்கே போய் சுலபமாக சான்றிதழ் பெற்று வரலாம்' என்றார். 
                   
நவம்பர் இருபத்தொன்பதாம் தேதி, திங்கட்கிழமை. காலை இராகு காலத்தில், அந்த அலுவலகம் சென்றேன். அங்கே ஒரு செவிலி உள்ளும் புறமும் வேகமாக நடந்துகொண்டே இருந்தார். எதையோ எடுத்து வருவார். அதை வைத்துவிட்டு வேறு எதையோ எடுத்துச் செல்வார். முகத்தில் ஒரு கடு கடு. என்னைப் பார்த்ததும், "என்ன வேண்டும்?" என்று கேட்டார், கடு கடு குறையாமல். 
            
நான் சற்றுத் தயக்கமாக, 'வேக்சினேஷன் சர்டிபிகேட்' என்றேன். 
"எப்போ அம்மை குத்திகிட்டே?"
"ரொம்ப நாள் (!) முன்னாடி."
"எங்கே?"
"கையில" 
"அத்த கேக்கல ... எந்த ஊருல?"
"க .. க ... கடலூருல ...."
"வெளையாடுறியா? இங்க குத்திகினாதான் நாங்க சர்டிபிகீட்டு அல்லாம் குடுப்போம்."
"சரி. குத்திக்கிறேன்."
" செத்த நேரம் குந்து. ஆபீசரு ஒம்பது மணிக்கு வருவாரு. அவரு சொன்னாதான் குத்துறது, சர்டிபிகேட்டு எல்லாம்...."
குந்தினேன். 
ஆபீசர் வந்தார். நீல பாண்ட் வெள்ளை சட்டை. நர்சிடம், என்னைக் காட்டி ஏதோ கேட்டார். நர்ஸ் ஏதோ ஜாடை காட்டி ரகசியமாக கூறினார். ஆபீசர் ஜாடை காட்டி என்னை தன் மேஜைக்கருகே அழைத்தார். சென்றேன். பேரு என்ன? எங்கேயிருந்து வாறீங்க? விலாசம்? போன்ற கேள்விகளுக்கு பதில் சுலபமாக சொல்லிவிட்டேன். 
"வேலை பாக்குறீங்களா?"
"இல்லை."
"எதுக்காக சர்டிபிகேட்டு?" 
(மாட்டிகிட்டேனோ? - அசோக் லேலண்டில் வேலையில் சேர என்று சொன்னால் - முதல் மாத சம்பளத்தை லஞ்சமாகக் கேட்பாரோ என்றெல்லாம் பயம் வந்துவிட்டது.) 
"வேலை தேடி அலைந்து கொண்டிருக்கின்றேன். இண்டர்வியூ செய்பவர்கள் என்னுடைய எல்லா சர்டிபிகேட்டுகளையும் பார்க்க ஆசைப் படுகின்றார்கள். வேக்சினேஷன் சர்டிபிகேட் மட்டும்தான் இல்லை; மீதி எல்லாம் இருக்கு. அதனாலத்தான் ..." என்றேன். அவர் நம்பியதாகத் தெரியவில்லை. 
"இங்கே யாரோடு தங்கி இருக்கின்றீர்கள்?" 
"அண்ணனோடு."
"அவர் எங்கே வேலை பார்க்கின்றார்?"
"கீழ்ப்பாக் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்."
"டாக்டரா?"
"இல்லை"
கொஞ்ச நேரம் என் முகத்தைப் பார்த்தார். நானும் பேசாமல் அவர் முகத்தைப் பார்த்தேன். சரி இந்த ஆளை வேறு விதத்தில் மடக்கலாம் என்று தீர்மானித்து விட்டார் போலிருந்தது. 
"இன்றைக்கு வேக்சினேஷன் போட்டுகிட்டா அடுத்த வாரம்தான் சர்டிபிகேட் கிடைக்கும்."
பதறிப் போய்விட்டேன். "இல்லை சார். எனக்கு இன்றைக்கே சர்டிபிகேட் வேண்டும்."
அவர் வெற்றிப் புன்னகையுடன், "அதற்கு பீஸ் கொடுக்கணும்" என்றார். 
"எவ்வளவு?" என்றேன். 
அவர் கண்களைத் தாழ்த்தி ... "ஏதோ நீங்க இஷ்டப்பட்ட அமௌண்ட்..." என்றார். 
அப்போதான் எனக்கு, 'இது சம்திங் விவகாரம்'  என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. சென்னை மாநகரத்திலே எனக்கு அறிமுகமான முதல் லஞ்ச லாவண்ய நிகழ்வு இதுதான். 
"ஓ கே" என்றேன். 
அவர் சந்தோஷமாக, "போய் வாக்சினேஷன் குத்திக்குங்க. நான் சர்டிபிகேட் தாறேன்." என்றார். 
என் சட்டைப் பையில் அப்பொழுது இருந்தது ஒரே ஒரு எட்டணா காசுதான். ஆனாலும் என்ன தைரியம்! 
நான் ஆறாம் கிளாஸ் படிக்கும் பொழுது கூட அம்மை ஊசி குத்திக் கொண்டது அப்போ ஞாபகம் வந்தது. கையில் முழங்கை பகுதி மடியும் இடத்தில், இரண்டு இடங்களில் ஓரங்குல இடைவெளியில் அம்மைப் பால் வைப்பார்கள். பிறகு சின்னச் சின்ன ஊசியாக கால் அங்குல வட்டத்தில் அமைந்த ஓர் ஊசியை அம்மைப் பால் புள்ளிகளுக்கு மேலே வைத்து, கொஞ்சம் அமுக்கி ஒரே ஒரு சுற்று சுற்றுவார்கள். லேசாக எறும்பு கடித்தது போல இருக்கும். அவ்வளவுதான். 
கடு கடு நர்சும் இப்படிச் செய்வார் என்று (நம்பி) கையை நீட்டினேன். 
இரண்டு சொட்டு அம்மைப் பால் வைக்கும் வரை எல்லாம் எதிர்பார்த்தபடி நடந்தது. 
அப்புறம் ..... ஐயோ கொடுமை! கூரான கோணூசி (போன்ற) ஒன்றை எடுத்துக் கொண்டு, 'சைக்கோ' படத்தில் நடக்கின்ற கொலை போல, 'சதக், சதக், சதக்' என்று ஒவ்வொரு இடத்திலும் ஐந்து சதக்குகள் ... குத்திவிட்டார் கடு கடு. 
   
'ஹூம் முன்பாவது எட்டணா கொடுக்கலாம் என்று நினைத்தேன் - பாவிகளா - இந்த சைக்கோ கொலைக்கு நான் ஒன்றும் தரமாட்டேன்' என்று முடிவெடுத்தேன். 
நர்ஸ் சென்று, ஆபீசர் தயாராக வைத்திருந்த சர்டிபிகேட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். 
             
அதை நான்காக மடித்து, பாண்ட் பைக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டு, "தாங்க்ஸ்" என்று கூறியபடி, வாயிலை நோக்கி வேகமாக நடந்தேன். 
ஆபீசர், நர்சிடம், 'என்ன சொல்லிவிட்டுப் போறாரு அந்த ஆளு?' என்று கேட்டது மங்கலாகக் காதில் கேட்டது.  
              
நர்ஸ் ஏதோ சொல்லிவிட்டு, 'துரத்திப் பிடிக்கட்டுமா' என்று கேட்டது போல இருந்தது.   
            
"வேண்டாம் - போகட்டும். விட்டுடுங்க...." 
                   

13 கருத்துகள்:

 1. சுவையான அனுபவம்தான்! நல்லா ஏமாந்து இருக்கார் அந்த ஆபிசர்! இப்ப முடியாது! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 2. சுவையான அனுபவப் பகிர்வு....
  இப்போ பணம் கொடுத்தாத்தான் வேலையே நடக்கும்...

  பதிலளிநீக்கு
 3. இப்படியான அனுபவங்கள் சுவாரஸ்யம்தான் !

  பதிலளிநீக்கு
 4. கில்லாடி சார் நீங்க!
  ஆமாம்,உங்க வயசு என்ன சார்?

  பதிலளிநீக்கு
 5. அலேக் அனுபவம்தான் கேஜிஜி சார்! :-)

  பதிலளிநீக்கு
 6. சிவாஜி இடது கையால் தொப்பையை உள்ளே அழுத்திக் கொள்கிறாரோ?

  பதிலளிநீக்கு
 7. கௌதமன் சென்னைக்கு வந்த மொதோ நாளே ஒரு ஆபீஸரை ஏமாத்தி இருக்கீங்க. வெரி பேட்

  பதிலளிநீக்கு
 8. சுவாரசியம்!
  சம்திங் முதல்ல வெட்டினாதான்னு சொல்லி இருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? :)

  பதிலளிநீக்கு
 9. ('என்னை நீ முன்னே பின்னே பாத்துருக்கியா ஐயா? அப்புறம் ஏன் இந்தக் கொலை வெறி!') //

  haahaahaa, inge nanga varushak kanaka bronchitisoda kudithanam pannarom. ennamo alattal pannaringale! :P:P:P:P

  nalla emathitinga officerunglaiyum doctoraiyum heheheehe

  பதிலளிநீக்கு
 10. வல்லவனுக்கு வல்லவன்... கதை. இது லஞ்ச எதிர்ப்புன்னுல்லாம் சொல்லக்கூடாது. ‘சமாளிப்பு’ன்னு வேணா சொல்லலாம்!! எட்டணாவை வச்சுகிட்டு, என்ன தைரியத்துல ஒத்துகிட்டீங்க? ஆச்சரியம்தான்.

  ஒருவேளை அந்த டாக்டர், திடீர்னு நம்பியாரா மாறி, உங்களைத் துரத்திப் பிடிச்சு, ‘ஹா.. ஹா.. என்னையா ஏமாத்தப் பாக்குறே?’ன்னு (அவர்) கைகளை கசக்கிருந்தா என்னப் பண்ணிருப்பீங்க? :-))))

  பதிலளிநீக்கு
 11. அந்த காப்பரேஷன் அலுவலகத்தில் இருந்த ஆபீசர், டாக்டர் இல்லை; ஒரு சாதாரண கிளார்க்தான்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!