சனி, 29 செப்டம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் 23/9/2012 To 29/92012


முன்னர் குடிநீர் வாரியம் ஆறாயிரம் லிட்டர் குடிநீர் நானூறு ரூபாய்க்கும், ஒன்பதாயிரம் லிட்டர் அறுநூறு ரூபாய்க்கும் தருவதை இதே பாசிட்டிவ் செய்திகளில் வெளியிட்டிருந்தோம். இப்போது அதிலேயே இன்னொரு செய்தி. வீட்டு உபயோகத்திற்கான குடிநீர் ஆயிரம் லிட்டர் ரூபாய் நாற்பதுக்குக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது குடிநீர் வாரியம். இந்த விலையில் குடிநீர் பெற விரும்புபவர்கள் தங்கள் சொந்த செலவில் லாரிகள் மூலம் நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் கொண்டு செல்லலாம் என்று அறிவித்துள்ளது குடிநீர் வாரியம்.

======================================
தென்னக ரயில்வேயில் துணைப் பொது மேலாளராகப் பணி புரிகிறார் இளங்கோவன். அரசு ஊழியராக இருந்தாலும் கூட 'சுடர்' என்ற அமைப்பின் மூலம் 12 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத பல ஏழை மாணவிகளின் மேல் படிப்புக்கு வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.  அதில் சரண்யா என்ற மாணவி எஞ்சினியரிங் படித்து விட்டு இப்போது ஐ ஏ எஸ் படித்து வருகிறாராம்.  இவருடைய மனைவி கீதா. அவரும் 'கூடு' என்கிற அமைப்பை பெண்களுக்காக நடத்தி வருகிறார். மாத விலக்கு நாட்களில் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப் பட்டு அல்லலுறும் பெண்களின் மூட நம்பிக்கைகளை அகற்ற இவர் அமைப்புப் பாடுபடுகிறது. இவரும் ஒரு அரசு ஊழியரே. இருவருமே சமுதாய விழிப்புணர்வுக் குறும்படங்கள் இயக்கி உள்ளார்கள். தினமணியில் இவர்களின் பேட்டி....

====================
ஸ்கேட்டிங்கிலும் 'இன்லைன்' ஹாக்கிப் போட்டியிலும் சாதித்துக் கொண்டிக்கும் சென்னையைச் சேர்ந்த பதினைந்து வயது பி என் ரவுஷில். சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஃப்ரீ ஸ்டைல் இன்லைன் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று ஒட்டுமொத்தத்தில் 19 வது இடத்தையும், இந்திய வீரர்களில் 2 வது இடத்தையும் பெற்றுள்ளார்.  "வழக்கமாக எல்லா அணிகளுக்கு எதிராகவும் 20, 30 கோல்கள் போடும் பஞ்சாபிகள், எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் 7 கோல்கள் மட்டுமே அடித்தனர். போட்டி முடிந்த பிறகு எங்களைச் சந்தித்த பஞ்சாபிகள் எங்களைப் பாராட்டி விட்டுச் சென்றது மறக்க முடியாதது" என்கிறார் இவர் தினமணிக்கு அளித்த பேட்டியில்....

===================

மின் சிக்கனத்தை மேம்படுத்தும் விதமாக நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சென்னை நீங்கலாக சில மாவட்டங்களில் தெரு விளக்குகளை எல் இ டி விளக்குகளாக மாற்றும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. ரிமோட் டில் கட்டுப் படுத்தக் கூடியதாக தனியார் பங்களிப்புடன் செயல் பட இருக்கும் இந்தத் திட்டத்தால் 30 முதல் 35 சதம் மின்சாரம் சிக்கனப் படுத்த முடியும் என்கிறது தினமலர் செய்தி.

=================

அரசு மருத்துவர்களோ, மருத்துவமனைப் பணியாளர்களோ நோயாளிகளிடம் எரிந்து விழுந்தால் 104 என்ற 'டோல் ஃப்ரீ'எண்ணுக்கு தொலைபேசி புகார் தரும் புதிய வசதி மிக விரைவில் அறிமுகம் ஆக இருக்கிறதாம்.

=================

தேனியைச் சேர்ந்த மீனா, ஹோட்டல் சப்பளையரான கணவனின் வருமானம் போதாமல் அவதிப் பட்ட ஒரு நாளில், பக்கத்து வீட்டில் இவர் தந்த இவர் கைத் தயாரிப்பான ஊறுகாயைச் சாப்பிட்டு விட்டு அவர்கள் சொன்ன 'உன் கைப் பக்குவத்துக்கு ஊறுகாய் போட்டே பொழச்சுக்கலாம்' என்ற வார்த்தையில் உற்சாகமடைந்து, 'முனீஸ்வரன் ஊறுகாய்' என்ற பெயரில் ஊறுகாய்ப் போடத் தொடங்கி அதன் அபார வரவேற்பால், இன்று கணவர் தன் வேலையை விட்டு விட்டு இந்தத் தொழிலில் முழு மூச்சாய் இறங்கி உதவி செய்ய, பிசினசில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார், (தினமலர்)

===========


'படிக்கிற காலத்தில் கேம்ஸ் பீரியடில் ஓரமாக உட்காரவைக்க'ப் பட்டபோது மனம் நொந்து போனதாகச் சொல்லும் கலையரசி, உயரக் குறைபாடு, போலியோ பாதிப்புகள் கொண்ட மாற்றுத் திறனாளி. அவர் மற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக 'பூர்ணோதயா தொண்டு நிறுவனம்' நடத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகளின் கஷ்டத்தைப் போக்க அவர்களுக்கு அங்கே தொழிற்பயிற்சி அளிக்கச் செய்யும் இவர் இதற்காகச் சில காலம் ஒரு கிறிஸ்துவ மிசனரியில் பணி புரிந்து களமிறங்கிப் பணி புரியும் திறன்கள் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார். 'நானே அவர்களுக்கு உதவவில்லை என்றால் எப்படி' என்று கேட்கிறார்.  (முகப்புத்தகம்)

=================

ஒன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி சேலத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞர் பெரியசாமி. உயரக் குறைவை சக மாணவர்கள் கிண்டல் செய்த காரணத்தினால் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டாராம். இசையின் மீது ஆர்வம் என்பதால் தாளம் போடும் போடும் பழக்கம் வர, அப்புறம் குறை தீர்க்கும் நாளன்று கலெக்டர் மகாபூஷணத்தைச் சந்தித்து மனு கொடுக்க, அவர் இசைக் கல்லூரி முதல்வரை அங்கு வரவழைத்து இவரின் இசை ஆர்வத்தைச் சோதனை செய்து, மிருந்தங்க வகுப்பில் இலவசமாகச் சேர்த்துக் கொண்டதோடு இலவச உணவு, ஹாஸ்டலில் தங்கிக் கொள்ளும் வசதியோடு மாதம் நானூறு ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்க ஆவன செய்துள்ளாராம். (தினமலர்)

===============

ரயிலில் பயண முன்பதிவு செய்யும்போது பயணச்சீட்டின் அப்போதைய நிலை- ஸ்டேடஸ் - குறித்து அலைபேசியிலேயே சுலபமாக அறிந்து கொள்ள வசதியான முறை ஒன்று இருப்பதை விகடன் சுட்டிக் காட்டுகிறது. டிக்கெட்டின் PNR என்னை 139 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினால் நொடியில் குறுஞ்செய்தியாக தேவைப்படும் தகவல் வந்து விழுகிறதாம்.

================

பிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட் கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் மனைவி அலமேலுவுக்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஏகத்துக்கும் ரத்தப்போக்கும், மருத்துவமனையில் சோதனை செய்த போது தொப்புள்கொடி அறுந்து குழந்தை இறந்து விட்டது தெரிந்த  நிலையில் அறுபட்ட தொப்புள்கொடி வழியாக தாய்க்கு தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரது ரத்தத்தின் உறையும் தன்மையும் பாதிக்கப் பட்டது. உடனடியாக புதிய ரத்தம் கொடுக்கப்பட்டால் மட்டுமே அலமேலுவின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் டோனர்ஸ் யாரும் கிடைக்காத நிலையில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் கவிதாவே தனது ரத்தத்தைக் கொடுத்து அலமேலுவைக் காப்பாற்றி இருக்கிறார். இருவரின் ரத்தமும் ஓ பாசிட்டிவ்.

============

 

11 கருத்துகள்:

 1. மின் சிக்கனத்தை மேம்படுத்தும் திட்டம் விரைவில் வரட்டும்...

  முனீஸ்வரன் ஊறுகாய் : இது போல் சிறு சிறு தொழில் செய்து உயர்ந்தவர்கள் எங்கள் ஊரில் பல பேர் உண்டு... (அவர்களுக்கு... என்னே ஒரு மனத்திடம்)

  மற்ற பாசிட்டிவ் செய்திகளுக்கும், முக்கியமாக ரயிலில் பயண முன்பதிவு தகவலுக்கும் மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 2. //தமிழகத்தில் சென்னை நீங்கலாக சில மாவட்டங்களில் //

  Why Chennai is excluded !!

  பதிலளிநீக்கு
 3. எல்லாமே மிக உபயோகமான, தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! குடிநீர் வாரிய செய்தி, முன் பதிவு தகவல், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியப்போக்கு குறித்து புகார் செய்ய வசதி ‍போன்ற‌ முக்கியமான தகவல்களைத் தந்ததற்கு இனிய நன்றி!!

  பதிலளிநீக்கு
 4. அனைத்து பாசிடிவ் செய்திகளும் பாராட்டுக்குரியவை.

  தொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.

  பதிலளிநீக்கு
 5. பாசிடிவ் செய்திகள் படிப்பதற்கே உற்சாகம் தறும் செய்திகளாக உள்ளது, சுடர் மற்றும் கூடு இயக்கம் வாழ்க வளர்க

  பதிலளிநீக்கு
 6. வாடிக்கையாளர்களை அலட்சியப்படுத்தும் அலைக்கழிக்கும் அரசு அலுவலக ஊழியர்கள் குறித்து புகார் செய்யவும் ஒரு டோல்ஃப்ரீ வர வேண்டும். (தபால் நிலையத்தில் ஒரு பெண்மணி நடத்தப்பட்ட விதத்தைப் பற்றி என் பதிவொன்றில் பகிர்ந்திருந்தேன்.)

  நல்ல தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 7. நம்பிகை தரும. மனதிற்கு உற்சாகம் தரும் பாஸிடிவ செய்திகளை மிக ரசித்தேன். அருமை.

  பதிலளிநீக்கு
 8. என்ன சார், பாசிட்டிவ் செய்தி என போட்டு வெறுப்பேத்துகிறீர்கள்?

  செந்தமிழ் நாட்டு பத்திரிகைகளைப் போல,
  "அவனுக்கும் இவளுக்கும் கள்ளக் காதல்"
  "அவளுக்கும் இவனுக்கும் நல்ல காதல்"
  "மூன்றெழுத்து நடிகை உல்லாசம்"

  இப்படிப்பட்ட சுவாரசியமான செய்திகள்தான், என்னைப் போன்ற வாசக கண்மணிகளுக்கு "பாசிட்டிவ் செய்தி"

  பதிலளிநீக்கு
 9. திண்டுக்கல் தனபாலன், middleclassmadhavi, மோகன் குமார், மனோ சாமிநாதன், வெங்கட் நாகராஜ், சீனு, அமைதிசாரல், ராமலக்ஷ்மி, பாலா கணேஷ், அனானி, முரளிதரன்...

  பாசிடிவ் செய்திகளைப் படித்து மகிழ்ந்த அனைவருக்கும் நன்றி. அனானி... பாசிட்டிவ் செய்திகளின் ஆரம்பத்தில் நாங்கள் இணைத்துக் கொண்டிருந்த ஆரம்ப வரிகளை இணைக்க விட்டது தெரிகிறது. அடுத்த பதிவு முதல் மீண்டும் இணைத்து விடுவோம்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!