திங்கள், 11 மார்ச், 2013

அலுவலக அனுபவங்கள் - பசவப்பா

                   
பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. எங்கள் அலுவலகம் எப்போதுமே ஜாலியான குடும்பம் போல இருக்கும். சண்டைகளும் இருக்கும். கிண்டல் கேலிகளும் இருக்கும்.
         
வேளாண் துறை அலுவலகம் அது.   ஆல் இந்தியா ரேடியோவில் இவர்கள் அலுவலகம் பங்கு பெறும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது. வேளாண்மை சம்பந்தப்பட்ட கலந்துரையாடல் போல இருக்கட்டும் என்று பேசி முடிவெடுத்தார்கள்.
               
டைரக்டர் உள்ளே வரும்போதே உற்சாகமாக வந்தார். எல்லோரையும் ஆபீசின் மெயின் ஹாலில் கூட்டினார். 


                                                                                    

அந்தக் காலத்தில் ரேடியோவில் வருவது பெரிய கவரேஜ். எனவே அன்று முழுவதும் டிஸ்கஷன் நடந்தது. யார் யார் என்னென்ன பேசுவது என்று ஒதுக்கிக் கொண்டார்கள்.

டைரக்டர் சொன்னார். "யார் யார் என்னென்ன பேச வேண்டும் என்று குறித்துக் கொடுத்திருக்கிறேன். நான் உங்கள் பெயர் சொல்லி உங்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கும் விஷயத்தைச் சொல்லி, அது குறித்து என்ன நினைக்கறீங்கன்னு கேட்பேன். நீங்கள் பதில் சொல்வது போல நேச்சுரலா படிக்கணும்... ரிஹர்சல் நாளைலேருந்து பார்த்துடுவோம்.." என்றார். 

                                         

 

அவரவர்கள், அவரவர் பேப்பரை வைத்துக் கொண்டு பேசிப் பழகினார்கள். டைரக்டர் இன்று உற்சாகமாக இருந்தாலும் என்றுமே அவர் டெரர். கோபம் வந்து விட்டால் வாயில் சரளமாக வார்த்தைகள் வந்து விழும்.

ரிஹர்சலில் டெஸ்பாட்ச் கிரிஜா நிறையத் திட்டு வாங்கினாள். பசவப்பாவுக்கு தமிழ் வராது. வடநாட்டு நடிகை தமிழ் பேசுவது போல எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து ஒப்பித்துக் கொண்டிருந்தான்.

மேனஜர் குருநாதன் தனி டைப். யார் லீவு போட வேண்டி வந்தாலும் அவரிடம்தான் போவார்கள்.

"சார்... நான் நாளையும் நாளை மறுநாளும் லீவு..."

"சரி.."

"பில் போட எல்லாம் ரெடியா வச்சிருக்கேன்..."

"சரி..."

எந்த சீட்டாக இருந்தாலும் அவர்கள் லீவு போட்டால் அவர்கள் சீட்டில் அமர்ந்து அங்கு பெண்டிங்கில் இருக்கும் வேலையை குருநாதன் முடித்து விடுவார். மிக நல்லவர். அவரிடம் ஒரே ஒரு குறை, அவரின் குசும்பு. சாரி குறும்பு!

ரெகார்டிங் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது...பசவப்பா குணசேகரை நெருங்கினான்.

"ஒரு ஹெல்ப் குணா... ரெகார்டிங் அப்போ டைரக்டர் என்னைக் கேள்வி கேட்கும்போது என் காலில் லேசா சுரண்டு...இல்ல தட்டு... காது சரியாக் கேட்காது. தமிழ் வேற அவ்வளவு தெரியாது..."


                                               

குணா 'சரி' என்றான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்தார் குரு. என்னை நிமிண்டி ஓரமாக அழைத்துச் சென்றார்.

"ரெகார்டிங்க்ல பசவப்பாவைப் போட்டுப் பார்க்கறோம். அவனை நான் சொல்ற நேரத்துல நீ சொரண்டிடு" என்றார்.

"எதுக்கு சார் பாவம்..."


                                     


"அட.. சும்மா தமாஷ்தானே... விடு"

அந்த நாளும் வந்தது. வானொலி நிலையம் சென்றோம். ரெகார்டிங் ஆரம்பித்தது. டைரக்டர் இறுக்கமாக இருந்தார். இரண்டு பேர் கேள்வி பதில் முடிந்தது. அடுத்ததாக ஏதோ ஒரு விஷயம் சொல்லி, "நீங்க என்ன நினைக்கறீங்க கிரிஜா" என்றார்.

சரியாக இந்த சமயம் குருநாதன் எனக்கு ஜாடை காட்ட, பேனாவைக் கீழே போட்டு விட்டு அதை எடுக்கும்போது யதேச்சையாகப் படுவது போல பசவப்பா காலில் சுரண்டி விட்டேன்.

திடுக்கிட்டுச் சுதாரித்த பசவப்பா பேப்பரை எடுத்துக் கொண்டு ராகமாக ஒப்பிக்க ஆரம்பிக்க, பதில் சொல்லத் தொடங்கிய கிரிஜா குழம்பிப் போய் எங்கள் டைரக்டர் முகத்தைப்பார்க்க, அவர் கை காட்டி ரெகார்டிங்கை நிறுத்தச் சொல்லி ஜாடை காட்டியவர், பசவப்பாவை நோக்கிக் கை நீட்டி ஜாடை செய்தபடி "*&^%***&^$#*#$%&*(&^%#)(*&&^***... " என்று ஆரம்பித்து.....


நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம். பசவப்பா "சாமி... காலை வாரி வுட்டிட்டியே" என்றான்.


                                       

"யோவ்... நான் என்ன செஞ்சேன்... நீ குணா கிட்டதான சொல்லியிருந்தே...கீழ விழுந்த பேனாவை எடுக்கும்போது கை பட்டுடுச்சி...பசவப்பா.. உனக்குத் தமிழ்தான் தெரியாது.. உன் பெயர் கூடவா தெரியாது? கிரிஜான்னுதான சொன்னாரு?"

"அதானே" எல்லோரும் கோரசாகச் சொல்ல, பசவப்பா நொந்து போய்க் கிளம்பிச் சென்றான்.          

           
படங்கள் : நன்றி இணையம் 
                         

25 கருத்துகள்:

 1. பாவம் தான் பசவப்பா. என்றாலும் ரசிக்கவும் முடிந்தது.(போனால் போறதுனு):P:P:P:P

  பதிலளிநீக்கு
 2. இப்படியா காலை வாரிவிடுவது ..?!

  கண்டனங்கள்,,,

  பதிலளிநீக்கு
 3. எப்படியெல்லாம் செய்றாங்க....:)))

  பதிலளிநீக்கு
 4. ஒரு ஆள இப்டியா அழ வைக்கிறது... எல்லா ஆபீஸ்லையும் தமிழ் தெரியாதவன் பாடு திண்டாட்டம் தன போல

  பதிலளிநீக்கு
 5. பாவங்க... பதட்டத்திலே ஒன்னும் தெரியலே அவருக்கு...

  பதிலளிநீக்கு
 6. சிரிப்பு வந்தாலும் ஐயோ பாவம் பசவப்பா!!என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 7. பசவப்பா பாவம்...
  ஆனால் இப்போது அவர் படித்தாலும் ரசிப்பது உறுதி! :)))

  பதிலளிநீக்கு
 8. "ஒரு ஹெல்ப் குணா... ரெகார்டிங் அப்போ டைரக்டர் என்னைக் கேள்வி கேட்கும்போது என் காலில் லேசா சுரண்டு...இல்ல தட்டு... காத்து சரியாக் கேட்காது. தமிழ் வேற அவ்வளவு தெரியாது..."//

  இவ்வளவு தயவாய் கேட்ட பின்பும் இப்படி ஏமாற்றலாமா?

  உனக்குத் தமிழ்தான் தெரியாது.. உன் பெயர் கூடவா தெரியாது? கிரிஜான்னுதான சொன்னாரு?"//

  அவர் முறை வருவதற்குள் எழுந்து ஆர்வத்தில் பேசி பாவம் பசவப்பா.

  பதிலளிநீக்கு
 9. பாவம்ப்பா பசவப்பா !
  என் இப்படி போட்டு வாங்கிட்டீங்க?

  பதிலளிநீக்கு
 10. கிண்டலுக்கு அளவில்லையா ? பாவம் அவர்.

  பதிலளிநீக்கு
 11. ஹாஹாஹா, முதல் போணி, முற்றும் அதுவே! :))))) பாவம் பசவப்பா! :)))))

  பதிலளிநீக்கு
 12. நல்ல காமெடிதான்.சினிமா காமெடிகளைவிட சூப்பர்.

  பதிலளிநீக்கு
 13. பாவம்! இப்படி காலை வாரிவிட்டீர்களே! நல்ல சுவாரஸ்யமான அனுபவம்தான்!

  பதிலளிநீக்கு
 14. நானும் கண்டனம் தெரிவிக்கணும்னுதான் வந்தேன். எல்லாருமே கண்டிச்சிருக்காங்க போல!! குட்!!

  (ஆமா, இந்த மாதிரி ஜோக் பண்றதைப் பார்த்து சிரிச்சிட்டு மட்டும் போகாம, எல்லாருமே கண்டிச்சிருக்கோமே - (சிரிச்சாலும், கண்டிச்சுமிருக்கோம்), நாம எல்லாருக்குமே வயசாகிடுச்சோ??!!#டவுட்டு!!)

  பதிலளிநீக்கு
 15. //நாம எல்லாருக்குமே வயசாகிடுச்சோ??!!#டவுட்டு!!)//

  ஹுசைனம்மாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)))))))) உங்களுக்கெல்லாம் வயசாகி இருக்கலாம். ஆனால் என்னையும் உங்களோட சேர்த்தால் எப்பூடி! நான் என்றும் பதினாறாக்கும். இன்னும் பிறக்கவே இல்லை. பிறந்தால் பதினாறு வயதுதான். அதுக்கு மேலேயும் இல்லை. அதுக்குக் கீழேயும் இல்லை. :)))))))

  பதிலளிநீக்கு
 16. நான் ‘பாவம் பசவப்பா’ கட்சிதான்!

  ஏதோ பள்ளி, கல்லூரி காலத்தில் என்றால் போகுதென்று விடலாம்:).

  பதிலளிநீக்கு

 17. கீதா சாம்பசிவம், இராஜராஜேஸ்வரி, கோவை2தில்லி, சீனு, ராம்வி, வெங்கட் நாகராஜ், அருணா செல்வம், கோமதி அரசு, ராஜலக்ஷ்மி பரமசிவம், சசிகலா, சே. குமார், T N முரளிதரன், ஹேமா (HVL), தளிர் சுரேஷ், எல்கே, ஹுஸைனம்மா...

  அனைவருக்கும் நன்றி. கண்டனம் சொல்லியிருப்பவர்கள் கவனத்துக்கு...!! ஆரம்ப வரிகளிலேயே எங்கள் ஆபீஸ் ஒரு குடும்பம் மாதிரி என்று சொல்லப்பட்டுள்ளதைக் கவனிக்கலையா?! குடும்பத்துல இதெல்லாம் சகஜமப்பா.. அவை ஒரு நகைச்சுவையாகவே பார்க்கப் பட்டு மறக்கப் படும். மற்றபடி ஹுஸைனம்மா... ... உங்களுக்கு வயசாகி விட்டது குறித்து நீங்கள் சொல்லி அறிந்தோம்!

  இதுக்கே கண்டனம் சொல்கிறீர்களே... அடுத்த அனுபவத்தைக் கேட்டால் என்ன சொல்வீர்களோ... பிரசுரிக்கத் தயக்கமாக இருக்கிறது. வேண்டாம் விடுங்கள்!

  பதிலளிநீக்கு
 18. நன்றி ராமலக்ஷ்மி... பசவப்பா பாவமப்பா ஆகி விட்டார்!

  பதிலளிநீக்கு
 19. /பிரசுரிக்கத் தயக்கமாக இருக்கிறது. வேண்டாம் விடுங்கள்! /

  எழுத முடிவெடுத்து விட்டீர்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். நாமெல்லாமும் குடும்பம் போலதானே? கண்டனம் எழுந்தால் பிறகு விளக்கம் கொடுத்துக் கொள்ளலாம்:)!

  பதிலளிநீக்கு
 20. //ஹுஸைனம்மா... ... உங்களுக்கு வயசாகி விட்டது குறித்து நீங்கள் சொல்லி அறிந்தோம்! //

  அப்ப, என் பேச்சு-எழுத்துகளில் எதிலும் வயதின் அடையாளம் தெரியவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி!! :-))))

  பதிலளிநீக்கு
 21. /எழுத முடிவெடுத்து விட்டீர்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். நாமெல்லாமும் குடும்பம் போலதானே? கண்டனம் எழுந்தால் பிறகு விளக்கம் கொடுத்துக் கொள்ளலாம்:)!//

  அதானே!! :-)))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!