சனி, 9 மார்ச், 2013

பாசிட்டிவ் செய்திகள்... மார்ச் 3/2013 முதல் மார்ச் 10/2013 வரை


எங்கள் B+ செய்திகள்.  

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....  

=============================================================   
 1) மத்திய அரசின், "இளம் விஞ்ஞானி' விருது பெற்ற, சென்னை மாநிலக் கல்லூரி மாணவன், பிரபாகரன்:

                                   
பழநி அருகேயுள்ள, ஆண்டிப்பட்டி கிராமம் தான், என் சொந்த ஊர். அப்பா மயில்சாமி, விவசாயம் செய்கிறார். அப்பா, அம்மா படிக்கவில்லை என்றாலும், என்னை, நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். எங்கள் தலைமுறையில், முதல் பட்டதாரி நான் தான்.
கோவையில், பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜியும்; பழநி யில், எம்.எஸ்சி., தாவரவியலும்; மதுரையில் எம்.பில்., லும் படித்தேன். தற்போது, சென்னை மாநிலக் கல்லூரியில், ஆய்வு மாணவராக ஆராய்ச்சி செய்கிறேன்.
இதுவரை, 10 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து, இந்தியாவிலும், சர்வதேச அளவிலும், பாராட்டு பெற்றேன். என் ஆய்வு கட்டுரைகளைப் பாராட்டிய மத்திய அரசு, "இளம் விஞ்ஞானி' விருது வழங்கியது. மாநிலக் கல்லூரியின் வரலாற்றில், முதல் மாணவனாக, இவ்விருதைப் பெற்றேன்.
ஒரு முறை, அப்பா, அதிக அளவில் துவரை பயிரிட்டார். பூச்சிகளின் தாக்குதல் அதிகளவு இருந்ததால், மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. எனவே, பூச்சிகள் தாக்க முடியாத, துவரை இனத்தை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டேன். சாதாரணமாக துவரையை பயிரிட்டால், துவரை செடியில் ஒரு தண்டு உருவாகி, கிளை பிரியும். ஆனால், என் கண்டுபிடிப்பில், மூன்று முதல் ஆறு தண்டுகளைக் கொண்ட செடியாக வளர்ந்து, அதிக மகசூலை தருவதுடன், பூச்சிகளின் தாக்குதலும் இருக்காது. பரிசோதனை வெற்றியில் முடிந்ததால், அரசின் அனுமதி பெற்று, விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

உணவு மற்றும் மருந்துகளுக்கு, இயற்கையாக நிறங்களை தரும் நிறமிகளை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளேன்.

இதற்கு, வெளிநாடு செல்லவும், அரசு அனுமதித்துள்ளது. ஆய்வுகள் இறுதி கட்டத்தில் இருப்பதால், உணவு மற்றும் மருந்துகளில், இயற்கை நிறமிகளை எதிர்பார்க்கலாம்.

2) ‘‘அரசு வழங்குகிற முதியோர் உதவித்தொகை வாங்குகிறீர்களா?’’ என்று கேட்டால் பாட்டியின் முகம் கோபத்தில் சிவக்கிறது. வயது 103.

                                              
 ‘‘உழைக்காம வாங்குற காசு உடம்புல ஒட்டுமா..? என் உழைப்பால வர்ற காசு எனக்குப் போதும். உடம்புல வலு இருக்கிற வரைக்கும் என்னால உழைச்சுச் சாப்பிட முடியும். புள்ளைகளுக்கே சுமையா இருக்கக்கூடாதுன்னு நினைச்சுத்தான் இன்னமும் யாவாரம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அரசாங்கத்துக்கு சுமையா இருக்கச் சொல்றீகளே... வேணாம் தம்பி...’’ என்கிறார் சீதாப்பாட்டி.

3) மது அரக்கனால் பாதிக்கப்பட்ட பலப்பல குடும்பங்களில் பெண்களின் கண்ணீர் கண்டு அந்தப் பெண்களை ஒன்று திரட்டி 'அக்னியஸ்த்ரி ' என்ற அமைப்பை உருவாக்கி போராக் கற்றுத் தருகிறார் நிர்மல்.

                                              

4) ‘‘நேர நிர்வாகம்கிற வார்த்தை ஜாலம் பத்தியெல்லாம் எங்க கிராமத்து மக்களுக்குத் தெரியாது. ஆனா, அவங்க அளவுக்கு வேற யாரும் நேரத்தை முறையா நிர்வாகம் பண்ண முடியாது. மரபுவழி வந்த அவங்க வாழ்க்கை முறையிலேயே எல்லா இலக்கணங்களும் உள்ளடங்கியிருக்கு... - கனிவும் பணிவுமாகப் பேசுகிறார் சாந்தி மதுரேசன்.


                                           

இந்தத் தோழியின்
பன்முகங்கள்
‘தானம்’ மக்கள் கல்வி
நிலையத்தின் இயக்குனர்

‘களஞ்சியம்’ பரஸ்பர
இயக்கத்தின்
முதன்மை நிர்வாகி

இந்திய குறுநிதி
கூட்டமைப்புகளுக்கான
பேரிணையத்தின் (இன்போஸ்) முதன்மை நிர்வாகி

பத்தரை லட்சத்துக்கும் அதிக அங்கத்தினர்களை உள்ளடக்கி சத்தமேயில்லாமல் மிகப்பெரும் மக்கள் புரட்சியை நிகழ்த்தி வரும் மதுரை ‘தானம்’ அறக்கட்டளையின் தூண்களில் ஒருவர். இந்திய பிரதமரையே கால் தொட்டு வணங்க வைத்த சின்னப்பிள்ளையைப் போல ஆயிரக்கணக்கான கிராமியத் தலைவிகளுக்கு அடையாளம் கொடுத்தவர். 12 மாநிலங்களைச் சேர்ந்த ஐந்தரை லட்சம் பெண்கள் ஒருங்கிணைந்து இயங்குகிற களஞ்சியம் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறாக ஓடிய கள்ளச்சாராயத்தை பெண்களைத் திரட்டி அழித்தொழித்தவர்.

அகமதாபாத் ஐ.ஐ.எம்.மில் ‘மேனேஜ்மென்ட் எஜூகேஷன் புரோகிராம்’ படித்த சாந்தி, இப்போது பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து லட்சக்கணக்கான பெண்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இவர், தனது வெற்றிக்கான அடிப்படையாக நேர நிர்வாகத்தையே சுட்டிக்காட்டுகிறார்.

 இவரைப் பற்றிய விவரமும், இவர் எப்படிப் போராடி இந்த அமைப்பி முதலில் பிரதான் என்ற பெயரிலும் பின்னர் களஞ்சியம் என்ற பெயரிலும் உருவாக்கினார், நேர மேலாண்மையை  கடைப் பிடிக்கிறார் என்பது பற்றியும் நிறைய சொல்லியிருக்கிறார்கள் இந்த முகநூல் பக்கத்தில்.

முதல் கட்டமா கடலூர்ல நடந்த ‘அக்னிஸ்திரீ’ விழிப்புணர்வுக் கூட்டத்துல 80 ஆயிரம் பெண்கள் கலந்துக்கிட்டாங்க. அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுக்க முழுவேகத்துல களமிறங்கப் போறாங்க எங்களோட நெருப்புப் பெண்கள்...’’ என்கிறவரின் பேச்சில் அத்தனை ஆதங்கம், ஆவேசம்!
‘‘அக்னிஸ்திரீ’ அமைப்புல சில திட்டங்களையும் பயிற்சிகளையும் வச்சிருக்கோம். குடிச்சிட்டு வீட்டுக்கு வர்ற ஆண்கிட்ட சண்டை போடாம, திட்டாம, அவர் நிதானத்துக்குத் திரும்பின பிறகு, குடும்ப உறவுகள் சூழ உட்கார்ந்து அவர் ஆழ்மனசைத் தொடற மாதிரிப் பேசறதுக்கான பயிற்சிகள் இதுல உண்டு.

பாதிக்கப்பட்ட நபரே, தன் தவறை உணர்ந்து, குடிப்பழக்கத்தை விட்டு விலகச் செய்யற அளவுக்கு ரொம்பவும் சக்தி வாய்ந்த பயிற்சி இது. அடுத்து ‘நமக்கு நாமே’ங்கிற திட்டத்துல மது அடிமைகளைக் கூப்பிட்டு, அவங்களோட தனிப்பட்ட தகுதிகளை அவங்களை விட்டே எழுதச் சொல்லி, உளவியல் நிபுணரோட ஆலோசனைகளையும் கொடுத்து, மனம் திருந்த வைக்கிறது. ‘குடும்பங்களின் குடும்பம்’னு இன்னொரு திட்டம். உன் வீட்டு ஆம்பிளை குடிச்சிட்டு, அடிதடியில இறங்கினா ‘எனக்கென்ன’ன்னு போகாம, ஊரே திரண்டு வந்து அநியாயத்தைத் தட்டிக் கேட்கறது... இப்படி இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கு.

ஒவ்வொரு ஊர்லயும் பத்து பெண்கள் சேர்ந்து, எங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அவங்க அக்னிஸ்திரீ அமைப்புல இணைய அங்கீகாரம் கொடுப்போம். இந்த உலகத்துலயே மிகச்சிறந்த முதலீடு, மனித முதலீடு. பெண்கள் நினைச்சா, எதையும் சாதிக்கலாம். ‘தனியாக இருக்கிறபோது எதுவுமில்லாதவர்கள், சேர்ந்திருக்கும்போது எல்லாம் ஆகிறார்கள்’னு சொல்வாங்க. பெண்கள் சமுதாயம் ஒன்று சேர்ந்தா, எந்த இடத்துலயும், யார்கிட்டயும், எதுக்காகவும் ஏமாறாம வாழ முடியும்.

ஊர்கூடித் தேர் இழுக்கற ‘அக்னிஸ்திரீ’யோட கதவுகள், பெண்களுக் காக எப்போதும் திறந்தே இருக்கும். அப்பா, சகோதரன், கணவன், பிள்ளைகள்னு குடிகார ஆண்களோட வன்முறைச் செயல்கள், இனி அடுத்த தலைமுறைப் பெண்களை நிச்சயம் தாக்காது...’’ - நம்பிக்கையளிக்கின்றன நிர்மலின் வார்த்தைகள்.

5) தேக்கடி வந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணி ஆவணங்களுடன் தவறவிட்ட 50 ஆயிரம் ரூபாயை நேர்மையான ஓட்டல் தொழிலாளி போலீசில் ஒப்படைத்தார்.தேக்கடி தனியார் ஓட்டலில் வேலை பார்ப்பவர் சுகுமார் (35). இவர் குமுளி காந்தி நகர் காலனியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் குமுளி ஆனவச்சால் பகுதி வழியாக வரும்போது, கீழே ஒரு பை கிடந்துள்ளது. அதை எடுத்து பார்த்தார். அதில் வெளிநாடு சுற்றுலா செல்லும் ஆவணங்களும், ஸி50 ஆயிரமும் இருப்பது தெரிந்தது. உடனடியாக சுகுமார் அந்த பையை குமுளி போலீசில் ஒப்படைத்தார்.

                                                                             
போலீசார் பையை சோதனை செய்தனர். அதில் இருந்த ஆவணங்கள் மூலம் அதன் உரிமையாளர் ஜெர்மனி ஏர்போர்ட் இன்ஜினியராக உள்ள என்ரிக்கோ (41) என தெரியவந்தது. பையில் அவரது ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், பான் கார்டு, இந்திய ரூபாய் 7,500, ரூ.42 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய யூரோ கரன்சி ஆகியவை இருந்தது. பையில் இருந்த தொலை பேசி எண் மூலம் போலீசார், என்ரிக்கோவு க்கு தகவல் தெரிவித்தனர்.

குமுளி வந்த அவர், சுற்றுலா வந்தபோது பையை தவற விட்டதாக தெரிவித் தார். பின்னர் அவரது பையை, ஓட்டல் தொழி லாளி சுகுமார் கையாலேயே பெற்றுக் கொண் டார்.இதுகுறித்து என்ரிக்கோ கூறுகையில், ‘இந்தியர்கள் நேர்மையானவர்கள் என கேள்விப்பட்டுள்ளேன். இப்போது அதை நேரில் பார்த்து விட்டேன்’ என்றார்.
பின்னர் அவரது பையை, ஓட்டல் தொழிலாளி சுகுமார் கையாலேயே பெற்றுக் கொண் டார்.


6) பெங்களூரு தேவசங்கரி நகர் பகுதியில் இருந்து வெளி வருகிறது ஒரு ஆட்டோ. அந்த ஆட்டோவை ஓட்டி வருகிறார் ஒரு பெண். மலர்ந்த கண்களும், சிரித்த முகமும் கொண்ட அந்த பெண்ணை பார்த்து, பலரும் வாழ்த்து தெரிவிக் கின்றனர். பதிலுக்கு அவரும் நன்றி தெரிவித்தபடி, தன் பயணத்தை தொடர்கிறார். இவரது இந்த ஆட்டோ ஓட்டுனர் பணி, இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அடுத்த மாதம் முதல், இவர் காக்கி சீருடையை கழட்டி வைத்துவிட்டு, கறுப்பு கவுனை மாட்டி, நீதிமன்றத்தில் வாதாடப் போகிறார்.

                                                 
ஆம்... ஆட்டோ டிரைவர் வெங்கடலட்சுமி, வழக்கறிஞர் வெங்கடலட்சுமி ஆகிறார். இது ஒன்றும் ஒரு நாள் கதை அல்ல, அவரது மனதிற்குள் விழுந்த பல நாள் விதை. எளிய குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடலட்சுமிக்கு, டிகிரி முடித்த கையோடு திருமணம் ஆகி விட்டது. கணவர் வெல்டிங் வேலை செய்பவர். திருமணத்திற்கு சாட்சியாக ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
பெண் குழந்தையை நல்லதொரு பள்ளியில் சேர்த்தார். படிப்பு செலவு அதிகமானது. கணவரது வருமானம் போதவில்லை. தனக்கு தெரிந்த சமையல் வேலையை மேற்கொண்டார். ஐம்பது, நூறு பேரின் தேவைக்கு, வீட்டிலேயே சமைத்து, எடுத்துப்போய் கொடுத்து, வருமானம் பார்த்து வந்தார். சமைத்த உணவுகளை எடுத்துப் போக வேண்டிய ஆட்டோ டிரைவர், பல சமயம் வராமல் போய், தொழிலில் சங்கடத்தை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, இவரே ஆட்டோ ஓட்டுவது என்று முடிவு செய்தார்.
ஆட்டோ வாங்கியதும், பலரும் இவரது ஆட்டோவில் பயணம் செய்ய விருப்பப்படவே, சமையல் தொழிலை விட்டுவிட்டு, ஆட்டோ ஓட்டுனராகி விட்டார். மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலிப்பது இல்லை. வாடிக்கையாளரிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசுதல் போன்றவற்றால், இவருக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடியது. இப்படியே சில ஆண்டுகள் ஓடியது. இந்த நிலையில் தான் ஒரு நாள், ஐந்து பேர் கொண்ட ரவுடி கும்பல் இவரை தாக்கி, கடத்தி, விபச்சார கும்பலிடம் விற்பதற்கு முயன்றது. மிகவும் போராடி தப்பிய வெங்கடலட்சுமி, உடனே, போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இவரது புகார் அங்கே கண்டு கொள்ளப்பட வில்லை. "நாளைக்கு வாம்மா, அப்புறம் வாம்மா' என்று அலைக்கழிக்கப்பட்டார். குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில், தீவிரமாக இருந்த வெங்கடலட்சுமி, வழக்கு பதிவு செய்ய மிகவும் சிரமப்பட்டார். கோர்ட்டில் வெங்கடலட்சுமி சார்பில் வாதாடிய வழக்கறிஞரின் வாதத்தில் உயிரே இல்லை. மேலும், இந்த வழக்கை கோர்ட்டிற்கு கொண்டு வருவதற்கே பதிமூன்று ஆண்டு களாகி விட்டது.
தன்னைப் போல எத்தனை அபலைப் பெண்கள் இப்படி சத்தில்லாத, உணர்வில்லாத, உயிரில்லாத வாதத்தால் மோசம் போய்க் கொண்டு இருக்கின்றனர் என்று உணர்ந்து, அப்போதே தானும் ஒரு வழக்கறிஞராவது என்று முடிவு செய்தார். சட்டக்கல்வியை தபால் மூலம் படிப்பதால் பலன் இல்லை என்பதால், தன் 36வது வயதில், கல்லூரியில் சேர்ந்தார். காலை 8:00 மணியில் இருந்து, மதியம் 2:00 மணி வரை கல்லூரி வாழ்க்கை. பிறகு மதியம் 2:00 மணி முதல், இரவு வரை ஆட்டோ ஓட்டும் பணி. ஆட்டோவிலேயே பாட புத்தகங்களை வைத்திருப் பார். வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் நேரத்திலும், ஆட்டோவை ஓட்டாத நேரத்திலும், பாட புத்தகங்களை படிப்பார். வீட்டிற்கு போனதும், அன்றைய பாடக் குறிப்புகளை படித்து முடித்து விட்டே தூங்கப் போவார்.


இப்படியான இவரது ஐந்து ஆண்டு படிப்பு வீண் போகவில்லை. நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றிகரமாக, எல்.எல்.பி.,படித்து முடித்தார். ஆனாலும், பார் கவுன்சில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான், வழக்குகளில் ஆஜராக முடியும் என்ற நிலை. அந்த தேர்வையும் வெற்றிகரமாக முடித்ததன் எதிரொலியாக, வருகிற மார்ச் மாதம் முதல் கோர்ட்டிற்கு வழக்கறிஞர் வெங்கட லட்சுமியாக செல்ல இருக்கிறார். "ஒரு நியாயமான ஆட்டோ ஓட்டுனராக இருந்த நான், இனி நேர்மையான, அதே நேரத்தில், சமூகத்தில் நீதி கிடைக்காத பெண்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக இருப்பேன்...' என்கிறார் உறுதியாக. பெண்கள் தினம் கொண்டாட இருக்கும் இத்தருணத்தில், இவரது சாதனையை பாராட்டி வாழ்த்துவோம்.


7) வரும் 18ந் தேதி இ2ஓ எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா ரேவா கூட்டணி. இந்தியாவின் முதல் 4 சீட்டர் எலக்ட்ரிக் கார் என்ற பெருமையுடன் இந்த புதிய கார் வர இருக்கிறது.

இந்த புதிய எலக்ட்ரிக் காரில் 39.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். ரூ.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

                                                          
பெங்களூரில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆலையில் இந்த புதிய எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறுகையில், "எதிர்காலத்துக்கு தேவையான போக்குவரத்து தீர்வாக இந்த எலக்ட்ரிக் காரை முன்னோடியாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்," என்றார்.

லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்ட மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை செல்லலாம் என மஹிந்திரா ரேவா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் காரில் ஒரு கிலோமீட்டர் செல்வதற்கு 50 பைசா மட்டுமே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


18ந் தேதி அறிமுகமாகிறது 4 சீட்டர் எலக்ட்ரிக் கார்! வரும் 18ந் தேதி இ2ஓ எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா ரேவா கூட்டணி. இந்தியாவின் முதல் 4 சீட்டர் எலக்ட்ரிக் கார் என்ற பெருமையுடன் இந்த புதிய கார் வர இருக்கிறது.


8) மும்பையின் ஒர்லி குடிசைப் பகுதியில் வசித்து வரும் எம். பிரகாஷ் (35) என்ற தமிழர், மார்ச் 8ம் தேதி அரபிக் கடலில் 42 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி கடந்து உலக சாதனை நிகழ்த்த இருக்கிறார். கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து ராய்கட் மாவட்டம் ரேவாஸ் வரையிலான 21 கிலோ மீட்டர் தூரம் நீந்தி பிறகு அங்கிந்து திரும்புவார். இந்த 42 கிலோ மீட்டர் தூரத்தை 15 மணி நேரத்தில் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். பிரகாஷ் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் பாதிக்கப் பட்டவர்.

                                                          
எனினும் தனது அயராத முயற்சியால் பல சாதனைகளை செய்துள்ளார். நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 81 தங்கம், 29 வெள்ளி மற்றும் 27 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது, மும்பை-ரேவாஸ்-மும்பை ஸ்விம்மதான் போட்டியில் கலந்து கொண்டு இந்த உலக சாதனையை நிகழ்த்தவிருக்கிறார். ஒர்லி, மோதிலால் நகரில் உள்ள மதராஸ்வாடியில் பிறந்த பிரகாஷ், அங்கேயே வசித்து வருகிறார். அந்த பகுதியில் அரபி கடலில் கடக்கும் ஒரு சாக்கடை நீரில்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் நீச்சலை அவர் கற்றுக் கொண்டார்.

பின்னர் உள்ளூரில் நடந்த நீச்சல் போட்டி ஒன்றில் அவர் பங்கேற்றார். அதை நேரில் பார்த்த மூத்த போலீஸ் அதிகாரியான பாலாசாகேப் காட்கே (தற்போது உதவி போலீஸ் கமிஷனராக இருக்கிறார்) பிரகாசிடம் மறைந்து கிடக்கும் திறமையை கண்டு ஆச்சரியமடைந்தார். ஒர்லி, போலீஸ் முகாமில் உள்ள நீச்சல் குளத்தில் பிரகாஷுக்கு முறைப்படியான நீச்சல் பயிற்சி அளிக்க அவர் முயற்சி எடுத்துக் கொண்டார்.

தனது நீச்சல் திறமைக்கும், நீச்சல் போட்டிகளில் இத்தனை பதக்கங்கள் கிடைத்ததற்கும் போலீஸ் அதிகாரி காட்கேதான் காரணம் என்று பிரகாஷ் நன்றியுடன் குறிப்பிட்டார். மேலும் வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச பெண்கள் தினம் என்பதால் அந்த நாளில் இந்த உலக சாதனையை நிகழ்த்தி அதை தன் தாயார் எம்.பாலசுந்தரிக்கு அர்ப்பணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

பிரகாஷ் கடந்த 18 ஆண்டுகளாக நீச்சலில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். சுவாபிமான் சங்கட்டணா தலைவர் நிதேஷ் ராணே மற்றும் வருமான வரி கமிஷனர் வி.மகாலிங்கம் ஆகியோர் கொடுத்த ஊக்கம் காரணமாகவே வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அரபிக் கடலில் 42 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைக்க உள்ளார்.

பிரகாஷுக்கு சத்யா என்ற மனைவி, 6 வயதில் ஹரிஹரன் என்ற மகன் மற்றும் 4 வயதில் வர்ஷினி என்ற மகள் உள்ளனர்

9) தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயங்கும் நிலையில், மதுவை முற்றிலும் ஒதுக்கி முன் மாதிரியாக திகழ்கின்றனர் மதுரை சரந்தாங்கி கிராம மக்கள்.

இக்கிராமத்தில் 1,400 பேர் வசிக்கின்றனர். இம்மக்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை தவறாமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றனர். ஆண்கள் மது அருந்துவது கிடையாது. இங்கு "டாஸ்மாக்' கடையை திறக்க சிலர் முயன்றனர். கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் முடியவில்லை.

                                       

சரந்தாங்கி கிராம தலைவர் ஜெயக்கொடி:

ஊர்கட்டுப்பாட்டை நாங்கள் மீறியது கிடையாது. கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் ஊர்க்காரியங்களை செய்கிறோம். கிராமத்தில் யாராவது இறந்தால், கிராம நிதியில் இருந்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏழை, பணக்காரர் என வித்தியாசம் இங்கில்லை. பூரண மதுவிலக்கு இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறி மது அருந்தி ஊருக்குள் வரக்கூடாது. இங்குள்ள தோட்டங்களுக்கு வேலி கிடையாது. திருடாமை, பொய்கூறாமை எங்களது கொள்கை.

மூக்கம்மாள், சரந்தாங்கி:

மது விலக்கு கொள்கை அமலில் இருப்பதால், என் கணவருக்கு குடி பழக்கம் இல்லை. இக்கொள்கை இங்கு பின்பற்றப்படாமல் இருந்திருந்தால் பலர் குடி பழக்கத்திற்கு ஆளாகி குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். எங்கள் ஊரில் யாருக்கும் இப்பழக்கம் இல்லாதது நாங்கள் செய்த புண்ணியம். சரந்தாங்கி கிராமத்தை முன்மாதிரியாக கொண்டு, குடியை கெடுக்கும் மது எனும் கொடூரனுக்கு சாவு மணி அடிக்க பிற கிராமங்களும் முன்வர வேண்டும்.


10) படத்திலிருப்பவர் பெயர் ராதாகிருஷ்ணன் என்று படித்த நினைவு. படித்த இடத்திலேயே பெயர் தவிர வேறு விவரம் இல்லை. படங்கள் பேசும் இவர் சேவையை என்று மட்டுமே பார்த்தேன். குறித்து வைத்திருந்த அந்தப் பெயர் விவரம் சேமிக்கப் படாததால் சரியான விவரம் கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

                                

12 கருத்துகள்:

  1. மற்ற எல்லாவற்றையும் விட சீதாப்பாட்டி - உழைப்பிற்கு தெய்வம்...

    பதிலளிநீக்கு
  2. ஆட்டோ டிரைவர் வெங்கடலட்சுமிப்ப்ற்றி டி.என் முரளிதரன் மூங்கில் காற்று அவர்கள் பதிவில் படித்து இருக்கிறேன்.
    கடைசி செய்தியும் உங்கள் பதிவில் படித்து இருக்கிறேன்.
    மற்றவை புதிய செய்திகள்.

    சீதாபாட்டி என்ன தொழில் செய்து வாழ்கிறார்கள்?
    தன்னம்பிக்கையுடன் உழைக்கும் பாட்டிக்கு வாழ்த்துக்கள்.
    அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் மனநிறைவைத்தந்தன..
    பாராட்டுக்கள் அனைவருக்கும் ...

    பதிலளிநீக்கு
  4. மாணவர் பிரபாகரனுக்கு என் வாழ்த்துக்கள். அவர் மென்மேலும் பல சாதனை புரிவார் என்பதில் சந்தேகமில்லை.
    சீதாப்பாட்டியின் தன்னம்பிக்கை ஆச்சர்யப்பட வைக்கிறது.
    வக்கீல் வேங்கடலட்சுமி பல பேருக்கு முன்னுதாரணமாக இருக்கப் போகிறார்.
    ரேவா கார் வந்தால் பெட்ரோல் விலையைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கலாம்.

    நல்ல பாசிட்டிவ் செய்திகளாய் தரும் உங்களுக்கு பாராட்டு.

    பதிலளிநீக்கு
  5. மனதுக்கு நிறைவாக இருக்கிறது வாசிக்க.

    2. இவர் போல் எத்தனைபேர்? ஆரோக்கியமான வாழ்வை வழங்கட்டும் கடவுள்!

    4. ‘அக்னிஸ்திரீ’யின் சேவை மகத்தானது.

    சாதனையாளர்களுக்கு வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றி.





    பதிலளிநீக்கு
  6. வெங்கடலெக்ஷ்மியும் சீதாப்பாட்டியும் வியக்க வைக்கிறார்கள்.இளம் விஞ்ஞானி வாழ்த்துக்கள். தகவல்களுக்கு நன்றி. உங்கள் ப்ளாகில் நான் தவறாமல் படிப்பது இந்த் பாசிடிவ் செய்திகள் பகுதி

    பதிலளிநீக்கு
  7. சீதா பாட்டி மனதில் நின்று விட்டார் . அனைத்தும் நல்ல செய்திகளே.

    பதிலளிநீக்கு
  8. மனதுக்கு இதமளித்த செய்திகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அனைத்தும் அருமையான நற்செய்திகள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. சீதா பாட்டி - Grate....

    அனைத்து செய்திகளும் மனதை மகிழ வைத்த செய்திகள்.

    பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  11. அனைத்து செய்திகளுமே அருமை.

    சீதப்பாட்டியின் செய்தி சிறப்பு.

    பதிலளிநீக்கு
  12. படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் எங்கள்...






    நன்றி...! நன்றி...!! நன்றி....!!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!