சனி, 23 மார்ச், 2013

பாசிட்டிவ் செய்திகள் மார்ச் 17, 2013 முதல் மார்ச் 23, 2013 வரை.



எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 


===============================================================  
1) "சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல; உறுதியான மனம் இருந்தால் போதும்' என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார், பார்வை குன்றிய, கால்கள் செயலிழந்த இளைஞர் ஒருவர். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நடத்திய பி.ஏ., தேர்வில் முதல் ரேங்க் பெற்று, தங்கப்பதக்கம் வென்றுள்ளார், இந்த மாற்றுத்திறனாளி இளைஞர்.

 
                                          
பல்லடம் அருகேயுள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி - மல்லிகா தம்பதியர். இவர்களின் ஒரே மகன் சங்கர் சுப்ரமணியம், 26. பிறவியிலேயே 90 சதவீத பார்வை குறைபாடு உடையவர்; இரண்டு கால்களுக்கும் வளர்ச்சியில்லாமல், நடக்க முடியாது. 

பெற்றோர் உதவியின்றி நடமாட முடியாது. பார்வை குறைபாடு காரணமாக, உருவங்கள் நிழல்களாக தான் தெரியும்; வண்ண வேறுபாடுகளை முழுமையாக அறிய முடியாது. கண்ணொளி இல்லாவிட்டாலும், காதொலியை ஆழமாக மனதில் பதிய வைக்கும் அபார திறன் ஒன்று மட்டுமே, தெய்வம் தந்த வரம்; எந்த விஷயத்தையும் எளிதில் மறந்துவிடாத, நுட்பமான ஞாபக சக்தி உண்டு. அதைவிட மேலாக, சாதிக்க வேண்டும் என்ற திடமான உறுதி மனதில் உண்டு. இதுவே, சங்கர் சுப்ரமணியத்தை சாதனையாளராக மாற்றி வருகிறது. 

முழுமையாக பார்வை குறைபாடு இருப்போர், "பிரெய்லி' முறையில் படிக்க முடியும்; ஆனால், சங்கர் சுப்ரமணியத்துக்கு 10 சதவீத பார்வை இருக்கிறது; எனினும், பாட புத்தகங்களை படிக்க முடியாது; பிறரை வாசிக்கச் சொல்லி தான், இவரால் படிக்க முடியும். பாடங்களை மனம் பாடம் செய்து, "ஸ்கிரைப்' ஆசிரியர் உதவியுடன், தேர்வு எழுதி வருகிறார்.கணுவாய் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து, 10ம் வகுப்பு தேர்வில் 62 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். பாட புத்தகத்தை புரட்டாமல், பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித் தந்த பாடங்களை மனதில் பதிய வைத்தே, இவர் தேர்வில் சாதித்து காட்டியுள்ளார். 

தற்போது, சென்னை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பி.ஏ., பொருளாதாரம் பட்டப்படிப்பில், முதல் ரேங்க் வாங்கி, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பல்கலையில் நடந்த விழாவில், கவர்னர் ரோசைய்யா தங்கப்பதக்கம் வழங்கி, சாதனை மாணவர் சங்கர் சுப்ரமணியத்தை கவுரவித்துள்ளார். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் அருகேயுள்ள காற்றாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். தாய், தந்தையின் தளராத ஊக்கமும், அரவணைப்பும், சிறப்பாசிரியர்களின் பயிற்சியும் சங்கர்சுப்ரமணியத்தை, படிப்பின் சாதனை படிகளில் ஏற வைத்துள்ளது.

"பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெறுவதே, எனது அடுத்த லட்சியம்,'' என்கிறார், சங்கர் சுப்ரமணியம்.அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் மல்லிகா கூறியதாவது: பிறவியிலேயே கால்கள் ஊனம், கண் பார்வை குறைவுடன் பிறந்ததால், குழந்தையை வளர்ப்பதும், படிக்க வைப்பதும் சிரமம் என கருதினோம். எனினும், அர்ப்பணிப்புடன் வளர்த்து வந்தோம். இன்று, அந்த குழந்தை சாதனை இளைஞனாக மாறி எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளான். முதலில், பள்ளியில் சேர்க்க மிகவும் சிரமப்பட்டோம்; பல பள்ளிகளிலும் அட்மிஷன் கிடைக்கவில்லை. கணுவாய் ஹோலிகிராஸ் பள்ளியில், சேர்த்துக் கொண்டனர். அங்குள்ள ஆசிரியர்களின் ஊக்குவிப்பு, சிறப்பு ஆசிரியர்கள் ரகுபதி ஐயர், பத்மநாபன் ஆகியோரின் பயிற்சி ஆகியவை, எங்கள் மகனின் திறமையை வெளியே கொண்டு வர மிகவும் உதவியது.
 

சங்கர் சுப்ரமணியத்துக்கு இசையிலும் ஆர்வம் உண்டு. கோவை அரசு இசைக்கல்லூரியில் குரலிசை பிரிவில் படிக்க "அட்மிஷன்' கிடைத்தது. பார்வை குறைபாடு மற்றும் கால் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு, வாரம் இரு முறை மட்டும் வகுப்புக்கு வர தனிப்பட்ட சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், சுல்தான்பேட்டையில் இருந்து கோவைக்கு காரில் வர வேண்டும் என்றால், தினமும் 1,000 ரூபாய் செலவாகும் என்பதால், பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை. எங்கள் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அரசு வேலை அளித்து உதவ வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.



2) தனது கண்டுபிடிப்பின் மூலம் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த திரு பி. டேவிட் ராஜா பியூலா. இவர் நெல்லை மாவட்டம் கடையத்தில் தோட்டக்கலை உதவி இயக்குநராக பணியாற்றுகிறார். 

                                                     .
நெல்லை மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம்தான். அதுவும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் பகுதியான கடையம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மல்லிகை, கத்தரிக்காய் போன்ற பயிர்களை பயிரிடுவது வழக்கம்..

ஆனால் அவர்களின் பிரச்சினை பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்..குறிப்பாக மல்லிகையை பாதிக்கும் வெள்ளை ஈக்கள் மற்றும் கத்தரியைத் தாக்கும் கத்தரி தாய் அந்து பூச்சி.. இந்த இரண்டையும் ஒழிக்கும் கருவி உண்மையில் அப்பகுதி விவசாயிகளுக்கு ஒரு வரம்தான். இதைத்தாண்டி இந்தக் கருவி ஒளி தரும் விளக்காகவும் பயன்படுகிறது. 

மேலும், கொசுக்களையும் ஒழிக்கிறது. இந்தப் புதிய கருவியினால் கடையம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் பூச்சிக்கொல்லிக்காக பயன்படுத்திய செலவும் கணிசமாக குறைந்துள்ளதோடு பணி நேரமும் மிச்சமாகியுள்ளது. பொதுவாக இந்தப் பகுதி விவசாயிகள் 7 நாட்களுக்கு ஒரு முறை பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அந்தச் சமயத்தில் தான் டேவிட் தனது கண்டு பிடிப்பான ‘டேவிட்டின் சூரிய ஒளி விளக்குப் பொறி’யை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தினார். 

முதலில் 1 ஏக்கர் நிலத்தில் இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டன. மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த 35 விவசாயிகளுக்கு இந்தக் கருவி கொடுக்கப்பட்டது. இந்தக் கருவி தொடக்கத்தில் 3 தாய் அந்துப் பூச்சிகளை பிடித்த நிலையில் படிப்படியாக 500 அந்துப் பூச்சிகளைப் பிடிக்கத் தொடங்கியது. இதனால் 7 நாட்களுக்கு ஒரு முறை பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த விவசாயிகள் அதை 15 நாட்களுக்கு ஒரு முறையாக மாற்றினர். 

இதனால் விவசாயிகளின் செலவும் பாதியாகக் குறைந்தது. ஒரு ஏக்கர் மல்லிகை தோட்டத்திற்கான பூச்சிக்கொல்லி மருந்து செலவு ரூபாய் 24,000 த்தில் இருந்து ரூ. 12,000 ஆகவும், ஒரு ஏக்கர் கத்தரித் தோட்டத்திற்கான செலவு ரூபாய் 10,000 ல் இருந்து ரூபாய் 5000 ம் ஆகவும் குறைந்துள்ளது. இந்த கருவியின் விலை ரூபாய் 8000 மட்டுமே. இரண்டு ‘டேவிட்டின் சூரிய ஒளி விளக்குப் பொறி’யை வாங்கும் கத்தரி விவசாயிகளுக்கு 3 மாதத்தில் ரூபாய் 5000 மிச்சமாகும். 

இதே போல் மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 12,000 மிச்சமாகும். பொருளாதார லாபங்கள் மட்டுமின்றி இந்த கருவியைப் பயன்படுத்துவதால் பூச்சிக்கொல்லி மருந்து உபயோகத்தை கட்டுப்படுத்த முடியும். இது நமது சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும். 

இதைத்தாண்டி இந்த கருவியை நாம் வீடுகளிலும் பயன்படுத்த முடியும் என்பது மற்றொமொரு சிறப்பு. வீடுகளில் இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்களை நாம் கட்டுப்படுத்த முடியும். 

இதனால் நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்பதும் கூடுதல் மகிழ்ச்சிதான். இப்படி பல்வேறு வகைகளிலும் பயனளிக்கக் கூடிய இந்த கருவியை வாங்க விரும்புபவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

திரு பி டேவிட் ராஜா பியூலா உதவி இயக்குனர், தோட்டக்கலைத் துறை,
கடையம்,
திருநெல்வேலி மாவட்டம்,,
தமிழ்நாடு.
மின்னஞ்சல் microeconomicsdavid@yahoo.co.in
அலைபேசி - 9486285704


3) கர்ப்பப்பை புற்றுநோய் தீர்க்கும் ஆன்டிவைரஸ் சித்தா மருந்து


                           
பெண்களின் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு சித்தா முறையில் ‘ஆன்டி வைரஸ்’ மருந்து கண்டறிந்து தமிழக அரசின் மருந்து கட்டுப்பாடு மைய அனுமதி பெற்றுள்ளார் சூரியா பாரத் மருத்துவமனையின் சித்த, அலோபதி டாக்டர் எஸ்.எஸ்.மணிகண்டன். இதுபற்றி அவர் மேலும் கூறுவதாவது:
நாட்டில் நடக்கும் பல குற்றங்களுக்கு காரணம் மது. போதை வெறியில் இருப்பவர்களால்தான் பல கொடூர செயல்கள் நடக்கின்றன. கஞ்சா, அபின், பிரவுன்சுகர், புகையிலை பழக்கங்களும் இதுபோன்றதே. இவை சமூகத்தை மட்டுமின்றி உடல்நலத்தையும் பாதிக்கின்றன. பான்பராக், புகையிலை பழக்கத்தால் வாய் புற்றுநோய் வரவும் வாய்ப்பு உள்ளது. உடலில் நீர் பற்றாக்குறை, மயக்கம், ஆக்சிஜனை சுவாசிக்க முடியாமல் போவது போன்ற பல பாதிப்புகளும் அடுத்தடுத்து ஏற்படக்கூடும்.

மதுவில் இருக்கும் எத்தனால் என்ற வேதிப்பொருள்தான் இத்தனை பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. மதுபோதையில் இருந்து இளைஞர்களை விடுவித்து அவர்களை நல்வழிப்படுத்தினால் மட்டுமே இத்தகைய பாதிப்புகளை போக்க முடியும்.

போதை பழக்கம் உள்ளவர்களை அதில் இருந்து மீட்பதற்காக, நான் தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி செய்து ஆரோக்கியம் தரும் புகையிலையை உருவாக்கியுள்ளேன். இதில் நிக்கோடின் இருக்காது. இந்த புகையிலை ஆரோக்கியம் தரக்கூடியது.

இதுபோல, பெண்களுக்கான கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் சித்தா முறையில் ‘ஆன்டி வைரஸ் மருந்து’ கண்டுபிடித்து அதற்கு தமிழக அரசின் மருந்து கட்டுப்பாடு மையத்தின் அனுமதி பெற்றுள்ளேன். ரத்த கட்டிகள், டெர்மாய்டு சிஸ்ட், பெல்விக் இன்பிளமேஷன் நோய்கள் ஆகியவற்றை ஆபரேஷன் இல்லாமலே இந்த மருந்து மூலம் குணமாக்கலாம்.
 
4) ஏதோ ஒரு விஷயம் அவரவர் உள்ளத்தினுள் ஒடிக்கொண்டே இருக்கும், அந்த விஷயத்தை யாராவது தூண்டிவிட்டால் போதும், பிறகு அவர் சுடர்விட்டு பிரகாசிப்பார்.

அப்படி பிரகாசித்துக்கொண்டு இருப்பவர்தான் ரேகா விஜயசங்கர்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தட்சிணசித்திரா கலைக்கூடத்தின் நூலராகவும், உதவியாளராகவும் உள்ளே சென்ற ரேகாவிற்கு புகைப்படக்கலையின் மீது ஒரு கண்.
இதைப்புரிந்து கொண்ட கலைக்கூட நிர்வாகத்தினர் கொடுத்த ஒத்துழைப்பு, செய்திட்ட உதவிகள் காரணமாக மள,மளவென வளர்ந்த ரேகா இப்போது கலைக்கூடத்தின் ஆஸ்தான புகைப்படக்கலைஞராவார்.

கலைக்கூடத்தின் சார்பில் வெளிவரும் அனைத்து புத்தகங்கள்,மற்றும் வழிகாட்டிகளில் இவரது புகைப்படங்களே அலங்கரிக்கின்றன.


இது போக மழை, அய்யனார், ஆடிப்பெருக்கு, கூடை, முகங்கள் என்று பல்வேறு தலைப்புகளில் இவரது தனி நபர் புகைப்படக் கண்காட்சிகள் நடந்துள்ளது.


மேலும் சென்னையில் "ஆர்ட் சென்னை' நிறுவனம் நடத்திய புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு ஆயிரம் பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். இவரது பரிசு பெற்ற அந்த புகைப்படம் இப்போதும் வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தின் முகப்பில் பிரம்மாண்டமாய் அலங்கரித்துக் கொண்டு இருப்பதை அந்த பக்கம் போனால் பார்க்கலாம்.


இதோ இப்போது "வேஷம்' என்ற தலைப்பில் தட்சிணசித்ராவில் புகைப்பட கண்காட்சியினை நடத்தி வருகிறார், கடந்த வாரம் துவங்கிய இந்த கண்காட்சி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.


தட்சிணசித்ராவில் நடன நிகழ்ச்சி நடத்த வந்த கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநில கலைஞர்கள் தங்களது நடனத்தின் பொருட்டு முகத்தில் போட்டுக்கொண்ட வேஷங்களை மட்டும் தொகுத்து புகைப்படக் கண்காட்சியாக வைத்துள்ளார்.


இந்த கண்காட்சியினை நாட்டின் தொன்மை மற்றும் சரித்திரம் தொடர்பான விஷயங்களை அழகாக ஆங்கிலத்தில் புத்தகமாக்கி வரும் எழுத்தாளர் சித்ராமாதவன் துவக்கிவைத்தார், ஓ
வியர் கீதா ஒருங்கிணைத்துள்ளார்.

அரங்கத்தில் ஐந்து பேர் இருந்தாலும் சரி, ஐயாயிரம் பேர் இருந்தாலும் சரி, சமரசமே செய்துகொள்ளாமல் ஆடும் கலைஞர்களின் அர்ப்பணிப்பை அருகே இருந்து பார்த்து வியந்திருக்கிறேன். அவர்கள் முகங்களில் மட்டும்தான் வேஷம் அகங்களில் கொஞ்சமும் கிடையாது, மிகவும் வெள்ளந்தியான மனிதர்கள், மக்களை மகிழ்விக்கும் கலைக்காக தங்களை அவர்கள் அதிகப்படியாக வருத்திக் கொள்கிறார்கள், அதனை என் பார்வையில் வெளிப்படுத்தும் சின்ன முயற்சியே இந்த புகைப்படக் கண்காட்சி என்று கூறி முடித்தார் ரேகா விஜயசசங்கர்.
(இந்தச் செய்தி படிக்கும்போது யார் நினைவுக்கு வருகிறார்கள்?) 

9 கருத்துகள்:

  1. இந்தச் செய்தி படிக்கும் பொழுது யார் நினைவுக்கு வருகிறார்கள்? எனக்கு ஐந்தெழுத்துப் பதிவர் ஞாபகத்திற்கு வந்தார்.

    பதிலளிநீக்கு
  2. சங்கர் சுப்ரமனியத்தின் சாதனை மனம் நெகிழ வக்கிறது.
    டேவிட் ராஜாவின் சாதனை பெருமை கொள்ள‌ வைக்கிறது.
    மருத்துவர் மணிகண்டனின் சாதனை இந்த நோயினால் அவதியுறுவோர்க்கு ஒரு வரப்பிரசாதம்!
    ரேகா விஜ‌ய‌ச‌ங்க‌ரின் சாத‌னை திற‌மையுள்ளோர் அனைவ‌ரையும் ஊக்குவிக்கும்!!

    பதிலளிநீக்கு
  3. //பெற்றோர் உதவியின்றி நடமாட முடியாது. பார்வை குறைபாடு காரணமாக, உருவங்கள் நிழல்களாக தான் தெரியும்; வண்ண வேறுபாடுகளை முழுமையாக அறிய முடியாது. கண்ணொளி இல்லாவிட்டாலும், காதொலியை ஆழமாக மனதில் பதிய வைக்கும் அபார திறன் ஒன்று மட்டுமே, தெய்வம் தந்த வரம்;
     
    கருணை வடிவான கடவுள்.

    பதிலளிநீக்கு
  4. (இந்தச் செய்தி படிக்கும்போது யார் நினைவுக்கு வருகிறார்கள்?) //

    நம்ம ரா.ல. தான் வேறே யாரு? :)))))

    மற்றச் செய்திகளும் அருமை. மாற்றுத் திறனாளியைக் குறித்து ஏற்கெனவே படிச்சேன்.

    //கருணை வடிவான கடவுள்.//

    அப்பாதுரை, தீதும் நன்றும் பிறர் தர வாரா! :(

    பதிலளிநீக்கு
  5. (இந்தச் செய்தி படிக்கும்போது யார் நினைவுக்கு வருகிறார்கள்?) //

    நம்ம ரா.ல. தான் வேறே யாரு? :)))))

    மற்றச் செய்திகளும் அருமை. மாற்றுத் திறனாளியைக் குறித்து ஏற்கெனவே படிச்சேன்.

    //கருணை வடிவான கடவுள்.//

    அப்பாதுரை, தீதும் நன்றும் பிறர் தர வாரா! :(

    பதிலளிநீக்கு
  6. சங்கர்சுப்ரமணியம் சாதனை பாராட்டப்படவேண்டியது.அவருக்கு அரசு வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

    திரு.டேவிட் ராஜா பியூலா அவர்களின் சூரியஒளி விளக்கு அற்புதம். அவருக்கு பாராட்டு.
    டாகடர் எஸ்.எஸ். மணிகண்டன் அவர்கள் சித்தா முறையில் ஆன் டி வைரஸ் மருந்து கண்டு பிடித்தது பெண்களுக்கு வரபிரசாதம்.

    பிரகாசிக்கும் ரேகா விஜயசங்கர் மிகவும் பாராட்டபடவேண்டியவர் இந்த செய்தியை படிக்கும் போது நம் நினைவுக்கு வருவது, நம் முத்துச்சரம் ராமலக்ஷ்மி தான்.

    பதிலளிநீக்கு
  7. //தீதும் நன்றும் பிறர் தர வாரா! :(

    ஓ.. நன்று மட்டும். [..அபார திறன் ஒன்று மட்டுமே, தெய்வம் தந்த வரம்;]

    பதிலளிநீக்கு
  8. கட்டாயம் இறைவனின் கருணையாலயே நல்ல பெற்றோர்கள் கிடைத்திருக்கிறார்கள் இந்த இளைஞருக்கு. மேலும் கருணை சுரக்க இறைவனை வேண்டுவோம்.
    புகைப்படம் என்றால் ராமலக்ஷ்மிதான்;)


    சித்தா முறையில் மருந்து கிடைத்துவிட்டால் பக்கவிளைவில்லாத பலன் கிடைக்கும்.அதுவே பெரிய வரப்பிரசாதம்.

    திரு டேவிடின் சூரிய ஒளிபூச்சிக்கொல்லி பற்றி அறிய மிக மகிழ்ச்சி.
    நன்றி எ.பி.

    பதிலளிநீக்கு
  9. ரீடர் பிரச்சனையால் பார்க்கத் தவறியிருக்கிறேன்.

    1./பல பள்ளிகளிலும் அட்மிஷன் கிடைக்கவில்லை. கணுவாய் ஹோலிகிராஸ் பள்ளியில், சேர்த்துக் கொண்டனர். /

    பெற்றோருடன் இவர் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுத்த ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள். சாதனை இளைஞருக்கு அரசு வேலை கிடைக்கட்டும்.

    4. ரேகா விஜயசங்கர் பற்றி பத்திரிகையொன்றில் வாசித்திருக்கிறேன். இங்கு தந்துள்ள கண்காட்சித் தகவல்கள் புதிது. கடைசிக் கேள்விக்குப் பதிலாக என்னை நினைவு கூர்ந்த நண்பர்களுக்கு நன்றி:)!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!