புதன், 20 மார்ச், 2013

அலேக் அனுபவங்கள் 18:: பேருந்து நாட்கள்.

              
அசோக் லேலண்டில் பயிற்சி பெற்ற ஆரம்ப நாட்களில், நான் ஒரு பேருந்துப் பயணியாகத்தான் இருந்தேன். 
                
பாக்டரி வேலை நேரம், காலை ஏழரை மணி முதல், மாலை நான்கு மணி வரையில். 
                 
காலையில் நாலே முக்கால் மணிக்கு எழுந்து, ஐந்தரை மணிக்குள் வீட்டை விட்டுக் கிளம்பி, ஐந்து நாற்பதுக்கு புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் டாங்க் பேருந்து நிறுத்தத்தில், மதார் ஷா கடை வாயிலில், வந்து நின்று கொள்வேன். 
                 
தங்கசாலை செல்லுகின்ற பேருந்துக்காக காத்திருப்பேன். தடம் எண் பதினான்கு, முப்பத்தேழு ஆகியவை தங்கசாலை செல்லுகின்ற வண்டிகள் என்று ஞாபகம். அந்தக் காலத்தில், புரசைவாக்கத்திலிருந்து, தங்கசாலை வரையிலும் பதினைந்து பைசா டிக்கெட் கட்டணம்.. காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்காது. நிச்சயம் உட்கார இடம் இருக்கும். 
                 
ஆறு மணிக்குள், தங்கசாலை பேருந்து நிலையம். அங்கேயிருந்து 56A பேருந்தைப் பிடித்து, ஆறு நாற்பது சுமாருக்கு எண்ணூர் அசோக் லேலண்டு வாசலில் இறங்கிவிடுவேன். தங்கசாலையிலிருந்து, அசோக் லேலண்டு வாசல் வரை அம்பத்தஞ்சு பைசா டிக்கெட். இந்த வழித் தடத்தில், சில மாதங்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் கூட எடுத்து, பயணம் செய்தேன். பேருந்து எதிலும் காலை நேரத்தில் உட்கார்ந்துகொண்டுதான் பயணம் செய்வேன்.ஏன் பேருந்துகளில் உட்காருவதைப் பற்றி பிரஸ்தாபித்து எழுதுகிறேன் என்பதைக் கூறுகின்றேன். 
             
பள்ளிக்கூட நாட்களில் பள்ளிக்கூடத்திற்கு முதலில் வருகின்ற பையன், 'ஐ ஃபர்ஸ்ட்' என்று எல்லோரிடமும் பீற்றிக் கொள்வது போல, பல நாட்கள், பாக்டரி கான்டீனுக்குள், முதல் ஆளாக நுழைந்த பெருமை என்னையே  சேரும்.   
               
காண்டீனுக்கு, கவுண்ட்டர்களுக்கு சுடச் சுட வருகின்ற அன்றைய தின சிற்றுண்டியை, கூப்பன் கொடுத்து வாங்கி, தட்டில் ஏந்தி, காண்டீன் பெஞ்சுல அமர்ந்து, மேஜை மீது வைத்து, மின் விசிறிக்குக் கீழே அமர்ந்திருந்தாலும், 'உப் ... உப்ப்ப் ' என்று வாயால் ஊதி, சூடாற்றி, சாப்பிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன. 
               
சிற்றுண்டி மணமும், தேநீர் மணமும் கலந்து, காண்டீன் மணம் அலாதியாக இருக்கும். காலை சிற்றுண்டி நேரம், மதிய நேரத்தில், உணவு உண்ணும் பொழுதும் மட்டும்தான் எங்களுக்கு உட்கார இடம் கிடைக்கும். அப்ரெண்டிஸ் நாட்களில், பாக்டரி உள்ளே, எங்களுக்கு உட்கார இடம் கிடையாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் பயிற்சி. எல்லா இடத்திலும் நிற்க மட்டும்தான் அனுமதி. உட்காருவதற்கு இடம் கிடையாது என்பதும் உண்மை. நேரடி உற்பத்தி இல்லாத பகுதிகளுக்கு பயிற்சிக்கு சென்றால், உட்காருவதற்கு ஒரு ஸ்டூல் கிடைக்கும். (அதற்கு அந்தப் பகுதி நண்பர் யாரும் உரிமை கோராத வரை!)  
                
பயிற்சி பெறுகின்ற கிராஜுவேட் அப்ரெண்டிஸ்கள் அவர்களுக்கு ஒரு ரகசிய இடம் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள். மதிய நேர உணவுக்குப் பின் யார் கண்ணிலும் படாமல் அரட்டை அடிக்க! மேலும் கிராஜுவேட் அப்ரெண்டிஸ்களை யாரும் அதிகமாக நெருங்கமாட்டார்கள். நாளைக்கு அதிலிருந்து ஒருவர் தமக்கு பாஸ் ஆக வருவதற்கு, சாத்தியக் கூறுகள் அதிகம் என்பதால். அதுமட்டும் அல்ல, கிராஜுவேட் அப்ரெண்டிஸ்கள் பயிற்சி முடிந்ததுமே எக்சிகியூடிவ் ஆகிவிடுவார்கள். நாங்கள் கன்ஃபர்ம் ஆகும் பொழுது, யூனியன் கேடர் ஆட்களாக ஆவோம். பாதிக்கப்பட்ட இனமாக இருந்தவர்கள், எங்களைப் போன்ற எஞ்சினீரிங் அப்ரெண்டிஸ்கள்தான்!  
           
 நாங்களும் எங்களுக்கு உட்கார்ந்து ஓய்வு எடுக்க, ஒரு ரகசிய அரட்டை மூலை ஏற்பாடு செய்துகொண்டோம். ஆனால், ஒருநாள் மாட்டிக் கொண்டோம். எப்படி? பிறகு பார்ப்போம். 
                  

17 கருத்துகள்:

  1. நாங்களும் எங்களுக்கு உட்கார்ந்து ஓய்வு எடுக்க, ஒரு ரகசிய அரட்டை மூலை ஏற்பாடு செய்துகொண்டோம். ஆனால், ஒருநாள் மாட்டிக் கொண்டோம். எப்படி? //

    எப்படி அத்தனை நாள் மாட்டாமல் இருந்தீர்கள்?
    ஒரு நாள் எப்படி மாட்டிக் கொண்டீர்கள் என்பதை அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  2. சுவாரசியமான அனுபவங்கள். டிபன் என்னனு மெனு கொடுக்கவே இல்லையே?

    பதிலளிநீக்கு
  3. பள்ளிக்கூட நாட்களில் பள்ளிக்கூடத்திற்கு முதலில் வருகின்ற பையன், 'ஐ ஃபர்ஸ்ட்'// வடைக்காக ஏங்கும் ப்ளாக் வாசகர்கள்ன்னு கூட உதாஹரணம் சொல்லி இருக்கலாமே? சுவையாக இருந்தது. போஸ்ட் லஞ்ச் அரட்டை/காஸிப் எல்லா ஆஃபீஸ்லேயும் இருக்கோ? துபாய்ல நானும் இன்னொரு ஃப்ரெண்டும் வாக்கிங் போயிட்டு ஒரு ஈச்சை மர நிழல்லே போய் உக்காண்டு பேசிண்டு இருப்போம்.. வேற என்ன, டேமேஜர் எப்பேர்ப்பட்ட முட்டாள், நாமெல்லாம் என்ன மாதிரியான ஜீனியஸ்கள் என்பதைப்பத்தி தான்.

    பதிலளிநீக்கு
  4. //சிற்றுண்டி மணமும், தேநீர் மணமும் கலந்து, காண்டீன் மணம் அலாதியாக இருக்கும்.// ஆஹா.. சொல்லும்போதே.. நாக்குல ஜலம்!
    எல்லா இடத்திலும் நிற்க மட்டும்தான் அனுமதி //அப்போ நாள் பூரா நின்னுண்டே இருக்கணுமா? ரொம்ப கஷ்டம் தான்.. நல்ல வேளை அஷோக்லேலண்ட் ஆஃபரை நான் ஆக்ஸெப்ட் பண்ணலை! தப்பிச்சேன்!

    பதிலளிநீக்கு
  5. அனுபவங்கள் தொடரட்டும்! தொடர்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. காலங்காலையில் பஸ்ஸில் தூங்கிப் போய் இடத்தைத் தவறவிட்ட அனுபவமுண்டா?

    பதிலளிநீக்கு
  7. இன்னொன்றைக் கவனித்திருக்கிறேன். இந்த எஞ்சினியரிங் ட்ரெயினிக்களுக்கு என்னவோ தாங்கள் தான் கம்பெனியின் தூண்கள் போல் ஒரு எண்ணம் இருக்கும் - பிற பட்டதாரி ட்ரெய்னிக்களை, அதுவும் மேனெஜ்மென்ட் ட்ரெய்னிக்களை தூசு போல மதிப்பார்கள். வேண்டுமென்றே கல்லூரியில் படித்த கான்செப்டுகளை எடுத்து விடுவார்கள். நீங்க எப்படி?

    பதிலளிநீக்கு
  8. எண்ணூர் ராயல் என்பீல்ட் தொழிற்சாலை நாட்களில் அதிகாலை இட்லி வடைக்கு நானும் அடிமை.

    பதிலளிநீக்கு
  9. அட! புரசைவாக்கம்! அங்கு தான் நாங்கள் இருந்தோம். அலுவலகத்துக்குப் போக பூந்தமல்லி ஹை ரோட் வரை நடை! வானகரத்தில் ஆபீஸ்.

    உங்கள் அனுபவம் என் கணவரின் TVS அனுபவம் போலவே இருக்கிறது.

    'மூலை' சஸ்பென்ஸ் எப்போது தெரியும்?

    பதிலளிநீக்கு
  10. // காலையில் நாலே முக்கால் மணிக்கு எழுந்து, //

    Even today I practice this..
    the only diff. that while the 'place' is 'India', the time being 'Central European'...'


    PS. The head of those who do not LOL for this will blast into 1000 parts...

    பதிலளிநீக்கு
  11. ரகசியமூலை அம்பலமானது எப்படி?.. ஆர்வம் தாங்கலை சட்ன்னு சொல்லுங்க :-)

    பதிலளிநீக்கு
  12. கருத்து உரைத்தவர்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.
    / அப்பாதுரை said...
    காலங்காலையில் பஸ்ஸில் தூங்கிப் போய் இடத்தைத் தவறவிட்ட அனுபவமுண்டா? //
    இல்லை. காலை நேரத்தில், பயணத்தின் பொழுது தூங்கியதே இல்லை.

    /அப்பாதுரை said...
    இன்னொன்றைக் கவனித்திருக்கிறேன். இந்த எஞ்சினியரிங் ட்ரெயினிக்களுக்கு என்னவோ தாங்கள் தான் கம்பெனியின் தூண்கள் போல் ஒரு எண்ணம் இருக்கும் - பிற பட்டதாரி ட்ரெய்னிக்களை, அதுவும் மேனெஜ்மென்ட் ட்ரெய்னிக்களை தூசு போல மதிப்பார்கள். வேண்டுமென்றே கல்லூரியில் படித்த கான்செப்டுகளை எடுத்து விடுவார்கள். நீங்க எப்படி?//
    அநியாயம் - இது அபாண்டம்! எஞ்சினீரிங் ட்ரைணிக்களுக்கு - அதுவும் அசோக் லேலண்டு இ. ட்ரைணிக்களுக்கு வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாது!

    பதிலளிநீக்கு
  13. /Geetha Sambasivam said...
    சுவாரசியமான அனுபவங்கள். டிபன் என்னனு மெனு கொடுக்கவே இல்லையே?/

    செவ்வாய் : பிரிஞ்சி
    புதன் : பூரி கிழங்கு
    வியாழன் : இட்லி, வடை.
    வெள்ளி: பொங்கல்,
    சனி: வெஜ் பிரியாணி
    ஞாயிறு இட்லி வடை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!