புதன், 27 மார்ச், 2013

இலக்கியம்...

  
இலக்கியம் பற்றி இரு பிரபலங்களின் எழுத்துகள் இங்கே.


1)
                                                     

"ஒரு தேசத்தின், ஒரு நாகரீகத்தின், ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின்,  ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்.

ஓர் எழுத்தாளன் ஆத்மசுத்தியோடு எழுதுகிறானே, அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல.  அது ஒரு தவம்!  நீங்கள் கதை என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே...  அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாஸனம்.

                                                    
அதை உங்கள் திருப்திக்காகவோ, எனது திருப்திக்காகவோ கூட நான் எழுதிக் கொள்ள முடியாது. உங்களை ஏமாற்றவோ, என்னை நான் ஏமாற்றிக்கொள்ளவோ கூட
தை நான் எழுதக் கூடாது. இலக்கியத்தில் வெற்றி என்பது உங்களது புகழ்ச்சி அல்ல; எனது அகம்பாவமும் அல்ல. உங்களை வெல்வது வெற்றியே அல்ல... சில சமயங்களில் அதுவே ஒரு வீழ்ச்சி.  இலக்கியத்தில் வெற்றி என்பது காலத்தை வெல்வது. உங்களைக் கடந்து செல்வது என் வெற்றி.  நீங்களே உங்களைக் கடந்து செல்வதற்கு உதவி செய்வது இலக்கியத்தின் வெற்றி. அதற்கு இன்னொரு பெயர் வளர்ச்சி.

........................................................................................................................................................................

......................................................................................
............................................................................................................
....................................................................................................................

இலக்கியத்தில் ஈடுபாடில்லாதவர்கள், இலக்கிய ஆசிரியர்களின் பெருமையை உணராதிருப்பது பொருட்படுத்தத் தகுந்த விஷயமல்ல. ஆனால் இல்லக்கியத்தின்மீது மாளாத காதல் கொண்டு விட்டதாக மடலூர்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த மொழிக்காக, இந்தக் கலாச்சாரத்துக்காக சர்வபரித்தியாகம் செய்யத் தயாராயிருப்பவர்க
ள் போல் காட்டிக் கொள்பவர்கள் கூட இலக்கியத்தின் தலைவிதியை எழுதுபவனை ஏதோ கிள்ளுக் கீரை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
                                       

 
இதையெல்லாம் வெளியில் சொல்வது அவமானம் என்று நான் கருதவில்லை. அவமானமெனினும் அதை மறைத்துப் பயனில்லை. எனவேதான் என்னோடு, எனது கருத்துகளோடு, எனது வாழ்வியல் நெறிகளோடு ஒத்துப் போகக் கூடிய, உடன்பாடு காணக்கூடிய, முகம் தெரியாத வாசகர்கள்,முகம் தெரிந்த நண்பர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் என்னைப் பாராட்டியபோதிலும் - நமது சமூகத்தின் பொது நிலையைப் பிரதிபலிக்கும் இதற்கு மாறான கருத்துகளையும் கடிதங்களையும் முதன்மைப் படுத்தி கவலையோடும் பொறுப்போடும் சிந்திப்பது எனது கடமை என்று நான் நினைக்கிறேன்."


==================================================
 
2)
                                                          

"இலக்கியம் என்பது சமூகத்தின் கண்ணாடி. அவ்வளவுதான் மாற்றி அமைக்க அது பயன்படாது.சமூகம் இலக்கியத்திவிட மிக மிகச் சிக்கல் வாய்ந்தது. மக்களுடைய பிரச்னைகள் பற்றி இலக்கியம் பேசலாம். ஒரு பிரஞ்சுப் புரட்சிக்கு இலக்கியம் தூண்டுகோலாக இருந்தது மாதிரியான நிலைமை எல்லாம் இப்ப இல்லை. இலக்கியத்துனால ஒரு மெலிதான விழிப்புணர்வைக் கொண்டு வரலாம் இலக்கியத்துனால சமூகத்தை மாற்ற முடியும் என்பது உண்மையாயிருந்தா தமிழ்நாட்டைப் போல மாறி இருக்கக் கூடிய சமூகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

                                                        
 
இலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் அடையாளக்குறி. கேரளம், மகாராஷ்டிரம், வங்காளம் இங்கேயிருந்து வர்ற இலக்கியங்களைப் பாருங்க. அந்தப் பிரதேசங்களுடைய வாழ்க்கை முறை தெரியுது.

                                                    

நம்ம சமூகத்தில் உள்ள அடக்குமுறை மாதிரி உண்டா? ஏன் அந்த மாதிரி இலக்கியங்கள் வரலே? நமக்கு ஒரு தட்டுல இலக்கியம் இருக்குது. அதுக்கு மேல் அடுக்குல அரசியல் இருக்கு. அதுக்கு மேல சினிமா இருக்குது. எல்லாத்தையும் போட்டு இங்க குழப்பிட்டாங்க.

                                               
 
சிவராம காரந்த் போன்றவர்கள் 400 பக்கம் நாவல் எழுதினா உட்கார்ந்து படிக்கிறாங்க சார்.. நம்ப ஊர்ல எங்க படிக்கிறான்?

இலக்கியத்தைப் பற்றி சரியான உணர்வு தமிழில் ஏற்படாததற்கு நம்பகிட்ட உள்ள அரசியலும் வெகுஜனப் பத்திரிகைகளும்தான் காரணம்"

12 கருத்துகள்:

  1. 400 பக்கம் எல்லாம் படிக்கிற நிலையில் இல்லை. மற்றபடி இராமாயணம் எல்லாமொரு நாளைக்கு ஒரு சர்க்கம் படித்தாலே பகவான் பார்த்துப்பார் னு நம்பிக்கை.

    பதிலளிநீக்கு
  2. இன்னோன்று,பொறுமை இல்லை. வாழ்க்கை வேகம்.
    எங்களை மாதிரி வயதானவர்களுக்கு ப் பெரிய எழுத்தில் சிறிய புத்தகங்களைப் படிப்பது சுலபம்.
    முன்பு படித்த பொன்னியின் செல்வனோ, சிவகாமியின் சபதமோ அந்தந்த வயதில் ஈர்த்தது.
    இப்பொழுது இணையம் ஈர்க்கிறது. அவ்வளவுதான். இணையம் இல்லாமல் தொலைக்காட்சி இல்லாமல் புத்தகங்களோடு ஒரு கடற்கரையில் உட்கார்ந்தால் ஒரு வேளை படிப்போமோ.

    பதிலளிநீக்கு

  3. //நம்ம சமூகத்தில் உள்ள அடக்குமுறை மாதிரி உண்டா? ஏன் அந்த மாதிரி இலக்கியங்கள் வரலே? நமக்கு ஒரு தட்டுல இலக்கியம் இருக்குது. அதுக்கு மேல் அடுக்குல அரசியல் இருக்கு. அதுக்கு மேல சினிமா இருக்குது. எல்லாத்தையும் போட்டு இங்க குழப்பிட்டாங்க.//

    எவ்வளவு உண்மை! ஆயிரம் பக்கம்னாலும் நல்ல புத்தகம்னால் படிச்சுடலாம். பிரச்னை இல்லை. ஆனால் அப்படி நல்ல புத்தகம் இப்போல்லாம் தேட வேண்டி இருக்கே! :))))

    பதிலளிநீக்கு
  4. //இலக்கியத்தைப் பற்றி சரியான உணர்வு தமிழில் ஏற்படாததற்கு நம்பகிட்ட உள்ள அரசியலும் வெகுஜனப் பத்திரிகைகளும்தான் காரணம்"//

    ஜூப்பரோ ஜூப்பரு!!!!

    பதிலளிநீக்கு
  5. வல்லிம்மா... நீங்கள் சொல்லியிருப்பது சரி. இணையம் இல்லாட்டா கடற்கரைக்கு ஏன் போகணும்? வேறெங்காவது கூட அமர்ந்து படிக்கலாமே...

    அப்புறம் ஒரு விஷயம்... இதில் உள்ள கருத்துகளில் முதலாவது 1966 இல் எழுதப் பட்டது. இரண்டாவது 1972 அல்லது 74! பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதைகள் எங்கள் வீட்டில் இருந்தது. இப்போது எங்கே போச்சோ, தெரியவில்லை.

    கீதா மேடம்... நல்ல புத்தகம் என்பதுதான் அண்டர்லைன் செய்யவேண்டிய விஷயம். மற்றபடி ஆயிரம் பக்கங்களில் எல்லாம் புத்தகங்கள் இப்போ வருதே...


    பதிலளிநீக்கு
  6. இதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்னாலும்.. நீங்க சொல்றாப்புல மிச்ச மொழிகள்ள அப்படியொண்ணும் பிரமாத இலக்கியம் வர்றதா தெரியலியே? படிக்க விரும்புறவங்களைப் பத்து வரிக்கு மேலே படிக்க வைக்க முடியலினா இலக்கியம் எழுதி என்ன பயன்?

    பதிலளிநீக்கு
  7. டைம் டேபில் போட்டாவது இதையெல்லாம் படிக்கணும்ன்னு ரொம்ப நாளா நானும் முயற்சி செய்யறேன்! முடியலை. டைம் இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். வாரத்திற்கு குறைந்தது நான்கு புத்தகமாவது படிக்க நேரம் இருக்கிறது. ஏனோ ஆர்வம் வரமாட்டேன் என்கிறது.

    பதிலளிநீக்கு
  8. /"ஒரு தேசத்தின், ஒரு நாகரீகத்தின், ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்.

    ஓர் எழுத்தாளன் ஆத்மசுத்தியோடு எழுதுகிறானே, அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம்! நீங்கள் கதை என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே... அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாஸனம்./

    உண்மை.

    வெகுஜனப் பத்திரிகைகள் என்பதை விட ஊடகங்கள் எனச் சொல்லலாமோ? மொத்தத்திலேயே வாசிப்பு மக்களிடையே குறைந்து விட்டது:(!

    பதிலளிநீக்கு
  9. நன்றி அப்பாதுரை, HVL, ராமலக்ஷ்மி..

    அதிகமாப் படிக்கலைன்னாதான் அது இலக்கியமோ என்னமோ..! :)

    பதிலளிநீக்கு
  10. பதிவில் சொல்லப் பட்ட இரண்டில் முதலாவதைச் சொன்னவர் (எழுதியவர்) ஜெயகாந்தன் 1966 இல் சொன்னது / எழுதியது.

    இரண்டாவது சுஜாதா 1974 இல் சொன்னது.

    பதிலளிநீக்கு
  11. "ஒரு தேசத்தின், ஒரு நாகரீகத்தின், ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்.//
    ஜெயகாந்தன் அவர்கள் சொன்னது உண்மை தான்.
    சுஜாதா சொன்னதும் உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  12. இலக்கியம் பற்றிய சரியான கருத்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!