திங்கள், 13 மே, 2013

நீ நதி போல ஓடிக் கொண்டிரு - பாரதி பாஸ்கர் - படித்ததன் பகிர்வு


பாரதி பாஸ்கர்.

                                                  

சன் டிவி சாலமன் பாப்பையா தலைமைப் பட்டிமன்றத்தின் இரண்டு சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்! என்ஜீனியரிங், எம் பி ஏ பட்டம் பெற்றவர். சின்னத் திரைகளில் வேறு சில நிகழ்ச்சிகளிலும் வருகிறார். (வாங்க பேசலாம்) பன்னாட்டு வங்கி ஒன்றில் உயர் பணி.

                                                   

ஒரு பிரபலமான திரைப் பாடல் வரியைத் தலைப்பாகக் கொண்ட இந்தத் தொடர், அவள் விகடனில் தொடராக வெளி வந்து, விகடன் நிறுவனத்தாரால் வழக்கம் போலப் புத்தக வடிவம் பெற்றுள்ளது.

                                                
                                                  
பெண்களை முன்னிலைப் படுத்தி, ஆணாதிக்க சமுதாயத்தைச் சாடி, பெண்ணின் கஷ்டங்களைப் பகிர்ந்து, என்று பல்வேறு விஷயங்களைப் பல்வேறு தலைப்புகளில் கட்டுரையாக்கியிருக்கிறார் பாரதி பாஸ்கர்.

                                                                               

நிறைய விஷயங்கள் நாம் அன்றாடம் கேள்விப்படும் விஷயங்கள்தான். நமக்குத் தெரிந்த விஷயங்கள்தான். அவைகளைப் படிக்கும்போது  ஒரு தோழி நம்மோடு உரையாடுவதுபோல உணர வைக்கிறார். நமக்கு நாமே பேசிக் கொண்டால் எப்படி இருக்கும், தர்ம, நியாயங்களை நமக்கு நாமே அலசிக் கொண்டால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது வாசிக்கும்போது.

நிச்சயம் எல்லோரும் ஒருமுறை வாசிக்க வேண்டிய நூல். குறிப்பாகப் பெண்கள்.



"பெண் என்பவள் பிரம்மாண்டமானவள். காலமே ஒரு நதியைப் போல அவள் காலடியில்தான்  ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நதியாகவும், அதில் மிதக்கும் சருகாகவும், ஆங்காங்கு துள்ளும் மீனாகவும், அதில் கல்லெறியும் கரையோரத்துச் சுட்டியாகவும்... அனைத்துமாக வியாபித்து நிற்பவள் அவளே. என்னைப் பெண்ணாக்கிய இயற்கைதான் எத்தனை கருணையுடையது" என்கிறார்.

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா...

வீட்டில் பாராட்டவே படாத பெண்கள், அயலார் வாய் வம்பில் மாட்டும் பெண்களின் மனநிலை, ஃபிரிட்ஜையும் கைப்பையையும் ஒழித்துச் சுத்தம் செய்வதுபோல் நம் மனதின் பழைய குப்பைகளை ஒழிப்பது, முதியோர் இல்லம், பெண்களுக்கு உண்மையான அழகு எது, பாலியல் பலாத்காரம் சமையலறை என்பது பெண்களுக்கே விதிக்கப் பட்டது பற்றி, அழகிப் போட்டிகள், அலுவலகத்தில் பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் ஆண்கள், குழந்தைகளை எப்படி வளர்க்கலாம், என்று பல்வேறு விஷயங்களையும் எழுதுகிறார்.

படிக்கும் காலத்தில் பெண்களுக்கு இருக்கும் எத்தனை நட்புகள் திருமணத்துக்குப் பின்னும் தொடர்கின்றன என்று அலசுகிறார். ஒரு இடத்தில் வளரும் செடியை பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவது போலப் பெண்ணின் வாழ்க்கை, திருமணத்துக்குமுன், திருமணத்துக்குப் பின் என்ற அவஸ்தையைச் சொல்கிறார்.

டீனேஜ் அவஸ்தைகளைச் சொல்கிறார். என்ன செய்யலாம் எப்படி வழி நடத்தலாம் என்று யோசிக்கிறார். அந்தக் காலப் பெண்ணுக்கும், இந்தக் காலப் பெண்ணுக்கும் உள்ள துணிச்சலான வித்தியாசத்தை ஆச்சர்யப்படுகிறார். பெண்ணின் குறுகிய நோக்கங்களையும், பொஸஸிவ்னெஸ்ஸையும் பேசுகிறார். கண்ணிழந்த தோழிக்கு அதனாலேயே இருக்கும் அதிக கவனிப்புத் திறன் பற்றிச் சொல்கிறார். அவருக்குப் பரீட்சை எழுத தான் உதவியதைச் சொல்கிறார்.

குருசரண்தாஸ் தன்னுடைய 'நல்லவனாய் இருப்பதன் சங்கடங்கள்' புத்தகத்தை அறிமுகப் படுத்த சென்னையில் ஒரு விழாவில் பேசியபோது 'அர்ஜுன் என்று தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைக்கும் அம்மாக்கள் ஏன் யுதிஷ்டிரன் என்று பெயர் வைப்பதில்லை' என்று கேட்டாராம். யோசிக்க வேண்டிய கேள்வி! ஆனால் தர்மர், தர்மன்  பெயர் வைத்திருக்கிறார்களே என்று தோன்றியது! விழாவுக்கு வந்திருந்த இவர்களைக் குழுக்களாகப் பிரித்து. 'பாண்டவர்கள் ஏன் வென்றார்கள்?, கௌரவர்கள் ஏன் தோற்றார்கள்?' என்று அலசச் சொன்னாராம். 'கௌரவர்களுக்குள் ஒற்றுமை இல்லை, பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் சண்டை, சல்லியனுக்கும் கர்ணனுக்கும் தகராறு. ஆனால் பாண்டவர்களிடம் ஒற்றுமை இருந்தது' என்பதுதான் அவர் எதிர்பார்த்த பதிலாம்.

பெண்கள் அதிகம் இருந்த பாரதி பாஸ்கர் குழுவில் ஒரு புதிய கருத்தாக்கம் எழுந்ததாம். "பாண்டவர்களின் குழுவில் ஒரு பெண் இருந்தாள். அவள்தான் போருக்கான காரணம். போரைக் கைவிட அத்தனை பேரும் தயாராக இருப்பினும், அவள் தொடர்ந்து போர் செய்ய அவர்களைத் தூண்டினாள். அவளது அறச்சீற்றம்தான் பாண்டவரது வெற்றியை உறுதி செய்தது. பெண்களே இடம்பெறாத கௌரவர் அணி தோற்றது"  என்ற இவர்களின் கருத்துக்குக் கொஞ்சம் முணுமுணுப்போடு கைதட்டல் கிடைத்ததாம்.

இந்த இடத்தில் எனக்கு கீதா சாம்பசிவம் எழுதிவரும் 'கண்ணனுக்காக' நினைவு வந்தது.

ஷிவ்ராமின் ஓவியங்கள் சில இடங்களில் புரிகின்றன. சில இடங்களில் குழப்பம்!

                                                                     

அம்மாவின் நினைவுகளோடு அம்மாவைப் பற்றிய நெகிழ்ச்சியான கட்டுரையோடு புத்தகம் நிறைவு பெறுகிறது.

".... ஆனால் இத்தனைக்கும் மத்தியில் ஓர் அம்மாவாக வாழும் அனுபவமும், தாயாகும்போது தன அம்மாவைப் போற்றும் அனுபவமும் எந்த ஆணுக்கும் கிடைக்கவே முடியாத மிகப் பெரிய வரம்! இறைவன் பெண்ணுக்கேக் கொடுத்த பிரத்தியேகக் கொடை!"

லெண்டிங் லைப்ரரியிலாவது வாங்கி ஒருமுறையாவது படித்துவிட வேண்டிய புத்தகம்தான்.

'நீ நதி போல ஓடிக் கொண்டிரு'
பாரதி பாஸ்கர்,
விகடன் பிரசுரம்,
96 பக்கங்கள், 65 ரூபாய்.

17 கருத்துகள்:

  1. அருமையான விமர்சனம்!

    அவ்வப்போது அவள் விகடனில் படித்திருக்கிறேன்! ரசித்திருக்கிறேன்! புத்தகத்தை மறுபடியும் சேர்ந்தாற்போல முதலிலிருந்து படிக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  2. ".... ஆனால் இத்தனைக்கும் மத்தியில் ஓர் அம்மாவாக வாழும் அனுபவமும், தாயாகும்போது தன அம்மாவைப் போற்றும் அனுபவமும் எந்த ஆணுக்கும் கிடைக்கவே முடியாத மிகப் பெரிய வரம்! இறைவன் பெண்ணுக்கேக் கொடுத்த பிரத்தியேகக் கொடை!//

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பகிர்வு. வாங்கி வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. எல்லாப் பெண்களும் படிக்க வேண்டிய புத்தகம் என்று தோன்றுகிறது.
    நமக்குத் தெரிந்தவைதான் என்றாலும் பிறர் சொல்லும்போது அதிகம் புரிகிறது.
    சிறந்த ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. அருமையான விமர்சனம்...

    நல்லதொரு புத்தகம்... நன்றி...

    பதிலளிநீக்கு
  6. பதிவிலேயே குறிப்புகள் கொடுத்து விட்டால், வேறு என்ன?.. நீங்கள் எதிர்பார்க்கும் பின்னூட்டங்கள் தான்... அதைத் தாண்டி பெண்களின் ஏற்றத்திற்கும் அவர்களின் தலைமை தாங்கும் பண்புக்கும் சிறப்பு சேர்க்கிற மாதிரி இந்த மாதிரி புத்தகங்களில் இல்லாத புதுமையான சிந்தையைக் கவரக்கூடிய கருத்து ஏதாவது பெண்கள் தரப்பிலிருந்து வந்தால் அது அன்னையர் தினப் பரிசாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. அம்மாவின் நினைவுகளோடு அம்மாவைப் பற்றிய நெகிழ்ச்சியான கட்டுரையோடு புத்தகம் நிறைவு பெறுகிறது.

    அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள் ஸ்ரீராம்.


    ".... ஆனால் இத்தனைக்கும் மத்தியில் ஓர் அம்மாவாக வாழும் அனுபவமும், தாயாகும்போது தன அம்மாவைப் போற்றும் அனுபவமும் எந்த ஆணுக்கும் கிடைக்கவே முடியாத மிகப் பெரிய வரம்! இறைவன் பெண்ணுக்கேக் கொடுத்த பிரத்தியேகக் கொடை!"//

    "பெண் என்பவள் பிரம்மாண்டமானவள். காலமே ஒரு நதியைப் போல அவள் காலடியில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நதியாகவும், அதில் மிதக்கும் சருகாகவும், ஆங்காங்கு துள்ளும் மீனாகவும், அதில் கல்லெறியும் கரையோரத்துச் சுட்டியாகவும்... அனைத்துமாக வியாபித்து நிற்பவள் அவளே. என்னைப் பெண்ணாக்கிய இயற்கைதான் எத்தனை கருணையுடையது" என்கிறார்.//
    இயற்கை உண்மையில் கருணையுடையது தான்.

    பாரதி பாஸ்கர் சொன்னது அருமை.
    படித்து விடுகிறேன். தலைப்பே சொல்லிவிட்டது அனைத்தையும்.
    குட்டையாய் தேங்கி விட கூடாது. நதி போல் ஓடிக் கொண்டு தான் இருக்கவேண்டும்.

    பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  8. அம்மாவின் நினைவுகளோடு அம்மாவைப் பற்றிய நெகிழ்ச்சியான கட்டுரையோடு புத்தகம் நிறைவு பெறுகிறது.

    அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள் ஸ்ரீராம்.


    ".... ஆனால் இத்தனைக்கும் மத்தியில் ஓர் அம்மாவாக வாழும் அனுபவமும், தாயாகும்போது தன அம்மாவைப் போற்றும் அனுபவமும் எந்த ஆணுக்கும் கிடைக்கவே முடியாத மிகப் பெரிய வரம்! இறைவன் பெண்ணுக்கேக் கொடுத்த பிரத்தியேகக் கொடை!"//

    "பெண் என்பவள் பிரம்மாண்டமானவள். காலமே ஒரு நதியைப் போல அவள் காலடியில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நதியாகவும், அதில் மிதக்கும் சருகாகவும், ஆங்காங்கு துள்ளும் மீனாகவும், அதில் கல்லெறியும் கரையோரத்துச் சுட்டியாகவும்... அனைத்துமாக வியாபித்து நிற்பவள் அவளே. என்னைப் பெண்ணாக்கிய இயற்கைதான் எத்தனை கருணையுடையது" என்கிறார்.//
    இயற்கை உண்மையில் கருணையுடையது தான்.

    பாரதி பாஸ்கர் சொன்னது அருமை.
    படித்து விடுகிறேன். தலைப்பே சொல்லிவிட்டது அனைத்தையும்.
    குட்டையாய் தேங்கி விட கூடாது. நதி போல் ஓடிக் கொண்டு தான் இருக்கவேண்டும்.

    பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  9. பட்டி மன்ற ரசிகர்கள் விரும்பும் பெண் பேச்சாளர்களில் பாரதி பாஸ்கரே முதல் என்று சொல்லலாம். அவரது நூல் விமர்சனம் சிறப்பு.

    பதிலளிநீக்கு

  10. நீ நதி போல ஓடிக்கொண்டு இரு...

    யாரைப்பார்த்து பாரதி பாஸ்கர் சொல்லுகிறார்கள் ?

    பெண்ணைப் பார்த்தா ?

    பெண்களின் கண்களில் காலம் காலமாய் பெருகிவரும் கண்ணீரைப்பார்த்தா ?

    " நீ நதி போல ஓடிக்கொண்டே இரு." என் ?

    காவிரி நீர் வற்றினாலும் வற்றும்.

    பெண்கள் கண்கள் வற்றாத ஜீவ நதி போல்
    கங்கை போல் அல்லவா இருக்கின்றன...



    நான் சொல்வேன்.
    பெண்ணே ..!! நீ நதி போல் ஓடிடாதே..
    நில். போராடு.

    சுப்பு தாத்தா.



    பதிலளிநீக்கு

  11. நன்றி மனோ சாமிநாதன் மேடம்...

    நன்றி RR மேடம்...

    நன்றி ராமலக்ஷ்மி...

    நன்றி ரஞ்சனி நாராயணன் மேடம்... உங்களுக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளும்!

    நன்றி DD..

    நன்றி ஜீவி ஸார்... //நீங்கள் எதிர்பார்க்கும் பின்னூட்டங்கள் தான்...// பின்னூட்டங்கள் இந்தப் பதிவை நாங்கள் படித்தோம் என்பதற்கான அக்னாலட்ஜ்மென்ட். இதை மீறிய வாசகர்களின் எண்ணங்கள் அந்தப் புத்தகத்தை அவர்கள் படிக்கும்போது தோன்றலாம்! நீங்கள் சொல்வதுபோல ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல் அமையுமாயின் நன்றாகத்தான் இருக்கும்.

    நன்றி கோமதி அரசு மேடம்... சலிப்பில்லாமல் ஒரு முறையாவது கட்டாயம் படிக்கலாம்.

    நன்றி T N முரளிதரன்...

    நன்றி சூரி ஸார்.. கண்ணீரை நிறுத்தி, எந்தப் பிரச்னையிலும் தேங்கி நின்று விடாமல் நதி போல ஓடிக் கொண்டிருக்க யோசனை சொல்கிறார் பா பா.

    பதிலளிநீக்கு
  12. நதி போல் ஓடிக் கொண்டிரு synopsis
    அழகாக கொடுத்திருக்கிறீர்கள், உங்கள் விமரிசனத்தோடு .
    படிக்கத் தூண்டும் விமரிசனம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. கட்டுரை அருமை ஸ்ரீராம்.நதியின் கரையில் நிகழும் சம்பவங்களை நதீ ஓடிக் கடந்துவிடும்.
    ஓடினாலும் அடியில் படியும் வண்டல்,சாயக் கறை எல்லாம் இருக்கத்தான் செய்யும்.
    அதைப் புதுவெள்ளம் வந்துதான் கடத்தவேண்டும்.
    தினப்படி குப்பைகளை எடுத்து வெளியே போட்டால் தான் நதியும் வாழ்வும் செழிக்கும்.
    என்ன எழுதி இருக்கிறார் என்று படிக்க ஆவலாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. சொன்னால் நம்புவீர்களா தெரியவில்லை. நேற்றே ஜி+இல் இந்தப் பதிவின் சுட்டியைப் பார்த்தும் வந்து படிக்கத் தோன்றவில்லை. இந்த எழுத்தாளரின் எந்த எழுத்தையும் இன்று வரை படித்ததில்லை என்பதோடு இவரின் பட்டிமன்றப் பேச்சுக்களையும் கேட்டதில்லை என்பதே உண்மை. அதுவும் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் சான்சே இல்லை! :)))))) எந்தத் தொலைக்காட்சியில்??? சன்?? கலைஞர்?

    நான் பார்த்தால் மதிய நேரத்தில் பொதிகையில் அல்லது நேஷனல் சானலில்! அதுவும் அப்போ மின்சாரம் இருக்கணும். இரவில் மட்டும் ஏழிலிருந்து எட்டரை வரை சாப்பாட்டு நேரத்தில் தவிர்க்க இயலாது சன் தொலைக்காட்சியைப் பார்க்கிறேன். எட்டரைக்குப் படுக்கப் போயிடுவேன். தூக்கம் வராட்டியும் படுத்துக் கொண்டுவிடுவேன். :)))))

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. சுய முன்னேற்றக் கட்டுரைகளைப் படிப்பதே இல்லை. ஆகவே இவரின் எழுத்தையும் படித்தது இல்லை. சூரி சார் சொல்லி இருப்பது ஒரு பக்கம் உண்மை எனத் தோன்றினாலும் நதியாக ஓடுவதே சரி !

    மேட்டிலும், பள்ளத்திலும், ஓடுகிற நதி ஆங்காங்கே எதிர்ப்படும் பல இடையூறுகளையும் தாண்டித்தானே தன் குறிக்கோளான சமுத்திரத்தை வந்தடைகிறது! அதற்குள் தான் எத்தனை இடங்களில் அதற்குத் தடுப்புகள், அணைகள், நீர்த்தேக்கங்கள்! அதோடு வல்லி சொல்கிறாப்போல் அடியில் படியும் வண்டலை ஒதுக்க வேண்டும், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் சாயக்கறைகளை ஒதுக்க வேண்டும். நதிக்கே இவ்வளவு போராட்டங்களைக் கடந்தே சமுத்திரத்துக்குப் போக முடியும் என்னும்போது பெண்கள் கடக்க வேண்டியவை இன்னும் எவ்வளவோ!

    பதிலளிநீக்கு
  17. பதிவின் விளம்பரத்துக்கு நன்னி ஹை!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!