சனி, 22 ஜூன், 2013

பாசிட்டிவ் செய்திகள், ஜூன் 16,2013 முதல் 22 ஜூன், 2013 வரை.


எங்கள் B+ செய்திகள்.  
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 

1) கொஞ்சம் பழைய செய்தி!
                                  

தமிழுக்கு தொண்டாற்றிய ஜப்பானியர்!

தமிழ் மொழிக்கு தொண்டு செய்ததற்காக, பிரதமரிடமிருந்து பத்மஸ்ரீ விருது பெற்ற, தமிழறிஞர்  நொபுரூ கராஷிமா: நான், ஜப்பான் நாட்டை சேர்ந்தவன். தமிழகத்தின் பல பெற்றோர், தங்கள் குழந்தைகளை இங்கிலிஷ் மீடியத்தில் படிக்க வைக்க, பல லட்சங்களை செலவிடுகின்றனர். ஆனால் நான், தமிழ் மொழி மீதான ஆர்வத்தால், ஜப்பானிலிருந்து பல ஆயிரம் மைல் தூரத்தை கடந்து, தமிழகம் வந்தேன். தமிழ் மொழியை கற்று, புலமை பெற்றேன்.
நான், வரலாற்றை ஆய்வு செய்யும் அறிஞர் என்பதால், தமிழக கல்வெட்டுகளையும், தமிழினத்தின் வரலாறு தொடர்பான நூல்களையும் படித்து, தென்னக வரலாற்றை அறிந்து கொண்டேன். தமிழக கல்வெட்டுகள் தொடர்பாக நான் ஆராய்ந்தவற்றை, 10க்கும் மேற்பட்ட நூல்களாக வெளியிட்டுள்ளேன். இவை, கல்வெட்டு தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு உதவியாக உள்ளன.

தமிழ் பற்றிய ஆராய்ச்சி முடிந்ததும், மீண்டும் ஜப்பான் சென்று, டோக்கியோ பல்கலை கழகத்தில், தெற்காசிய வரலாற்று பேராசிரியராக பணியாற்றினேன். டாய்ஷோ பல்கலை கழகத்தில், இந்தியவியல் துறையின் பேராசிரியராக பணியாற்றிய போது, என்னை போன்று பல ஆராய்ச்சி மாணவர்களை
உருவாக்கினேன். நான், "சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்' தலைவராக பணியாற்றும் காலத்தில், 1995ல், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தஞ்சையில் நடைபெற்ற, "எட்டாவது உலக தமிழ் மாநாட்டை' வெற்றிகரமாக நடத்தினேன்.

தமிழுக்கு தொண்டு செய்ததற்காக, கடந்த ஏப்., 5ம் தேதி, "பத்மஸ்ரீ' விருது வழங்கி, பாராட்ட அழைத்தபோது, என் உடல் நிலை சரியில்லை. அதனால், பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பானிய பயணமாக சமீபத்தில் வந்த போது, என்னிடம் விருது வழங்கினார். சக்கர நாற்காலியில் நான் அழைத்து வரப்பட்ட போது, பிரதமருக்கு வணக்கம் சொல்லி பேச ஆரம்பித்த நான், இறுதியாக, "நன்றி' சொல்லி தமிழராக நடந்து கொண்டேன்.

2)  உடலுக்கோ, மனதிற்கோ ஒரு சின்ன வலி ஏற்பட்டாலே,என்ன வாழ்க்கை இது?, பேசாம நிம்மதியா போய்ச் சேர்ந்துரலாமா?, என்ற விரக்தியான மனநிலைக்கு தள்ளப்படும் மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில், ஒரு பத்து வயது பார்வையற்ற சிறுவன், எனக்கு பார்வை இல்லைங்றது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க என்று சொல்லியபடி அடுத்தடுத்த சாதனையை தொடர்வதை பார்க்கும் போது இவன்தான் நம்பிக்கை நாயகன் என்று யாருக்கும் சொல்லத் தோன்றும்.


                                                               
அந்த சிறுவனின் பெயர் சபரி வெங்கட்
கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் அந்த சிறுவன் வசிக்கும் சின்ன வாடகை வீட்டை அடையும் முன், சிறுவனைப் பற்றிய ஆரம்ப வரலாறை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

கோவை- பாலக்காடு எல்லைப் பகுதியில் உள்ள வடகாடு என்ற இடத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த சீனிவாஸ்- நீலவேணி தம்பதிக்கு திருமணம் முடிந்து 12 வருடம் கழித்து பிறந்த ஒரே மகன் சபரி வெங்கட்.
பிறந்த போதே பார்வைக் குறைபாடுடன் பிறந்தான்.

பார்வைக் குறைபாட்டிற்கு சிகிச்சை பெறவும், அவனுக்கான கல்வியை தேடவும் வேண்டி, விவசாயம் பார்த்த பூமியை வந்த விலைக்கு விற்று விட்டு கோவை பெரிய நாயக்கன் பாளையத்திற்கு மாறிவந்தனர்.

பார்வைக் குறைபாடு சிகிச்சைக்காக பலரையும் பார்த்ததில் கையிலிருந்த பணம்தான் பெருமளவில் குறைந்ததே தவிர பலனேதும் இல்லை முழுமையாக பார்வை இழந்தவனானான் சபரி வெங்கட்.

பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண வித்யாலய பள்ளியில் சேர்கப்பட்டபின் ஒரு மாற்றமாக சபரி அபரிமிதமான ஆற்றலுடன் படிக்க ஆரம்பித்தான்.

அங்குள்ள பார்வையுள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பார்வை இல்லாத சபரியும் படித்தான், தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறான், எப்போதும் முதல் ஐந்து ரேங்கில் வந்துகொண்டு இருக்கிறான்.

கூடுதலாக புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிவிட்டு வந்ததும், மாலையில் இரண்டு மணி நேரம் பிரெய்லி முறையில் படிக்க எழுத கற்றுக்கொண்டு இருக்கிறான்.

இதெல்லாம் சராசரியாக பார்வை உள்ள,பார்வை இல்லாத மாணவர்கள் யாருமே செய்யக் கூடியதுதான், ஆனால் யாரும் செய்யாததை செய்யும்போதுதான் அவர்கள் வித்தியாசப்படுகிறார்கள்.

ராமகிருஷ்ணா வித்யாலயம் என்பதாலோ என்னவோ சுவாமி விவேகானந்தர் பற்றி நிறைய படித்து, கேள்விப்பட்டு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சின்ன வயது விவேகானந்தராக தன்னை மாற்றிக்கொண்டு விட்டான்.
அவரைப் போலவே உடை, தலைப்பாகை அணிந்து அவரது புகழ் பெற்ற அமெரிக்காவின் சிகாகோ பேச்சை இவன் தன் மழலைக்குரலில் பேசுவதை கேட்பவர்கள் யாராக இருந்தாலும் எழுந்து நின்று கைதட்டாமல் இருக்கமாட்டார்கள்.

விவேகானந்தர் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் இடத்தை பிடித்த சபரிக்கு முதல்வர் கையால் பதக்கம் அணிவித்து பாராட்டும் கிடைத்துள்ளது.

அப்போது நடந்த சம்பவம் சுவராசியமானது, தனது சுருங்கிய வலது கண்ணும், அதற்கு தொடர்பில்லாமல் விரிந்து கிடக்கும் இடது கண்ணும் பார்ப்பவர் முகத்தை கோணச் செய்துவிடக் கூடாதே என்பதற்காக பேருக்கு ஓரு கண்ணாடி அணிந்திருப்பான்.

இந்த தோற்றத்தில் இருந்த சபரியை முதல்வர் முதலில் கண்டுகொள்ளவில்லை, பின்னர் அவனைப் பற்றி கேள்விப்பட்ட பிறகுதான் அட..இப்படி ஒரு சிறுவனா என வியந்தார். பின்னர் விருது வாங்க வந்த போது உச்சி முகர்ந்து பாராட்டினார்.

கோவையில் ஒரு விழாவில் சபரியின் பேச்சை கேட்ட விழா அமைப்பினர், "உனக்கு என்ன வேண்டும் சொல் கட்டாயம் செய்கிறோம்'' என்றனர். பணம், பொருள், மருத்துவம் என்று எதைக் கேட்டிருந்தாலும் செய்திருப்பார்கள், ஆனால் சபரி கேட்டதோ முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான்.

சபரியின் ஆசை, அப்துல் கலாமிடம் தெரிவிக்கப்பட்டது,அவர் அடுத்தமுறை கோவை வரும்போது முதலாவதாக சந்தித்தது சபரியைத்தான்..சில நிமிடம் சபரியிடம் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்துவிட்டு, சபரி என்னுடைய கோவைத்தோழன் என்று எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

இன்னொரு விழாவில் இந்த பத்து வயது சிறுவன் என்ன பேசிவிடப்போகிறான் என்று இருந்தவர்கள், இவன் பேசி முடித்ததும் நாங்கள் கட்டாயம் ஒரு வார்த்தையாவது சபரியிடம் பேசவேண்டும் என்று மைக்கை கேட்டு வாங்கியவர்கள் பலர், அவர்களில் ஒருவர், "ஆமாம் சபரி, உன் முன் கடவுள் தோன்றி, ஒரே ஓரு வரம் தருகிறேன் என்றால் என்ன வரம் கேட்பாய்'' என்று கேட்டிருக்கிறார்.

எனக்கு பார்வை கிடைக்கவேண்டும் என்றுதான் பதில் சொல்வான் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, "நாடு நல்லாயிருக்கணும்' என்ற வரம் கேட்பேன் என்றதும் "என்னப்பா இப்படி சொல்றே', நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், உனக்கு பார்வை வேண்டும் என்று கேட்கமாட்டாயா'? என்றதும், "பார்வை இல்லாதது எல்லாம் எனக்கு ஒரு பிரச்னையே இல்லை, எளிதில் சமாளித்து விடுவேன், நாடு நல்லாயிருக்கணும், நாட்டில் உள்ள நல்லவங்க நல்லாயிருக்கணும் அதான் முக்கியம்'' என்று திரும்பவும், தெளிவாக கூறியதும் மீண்டும் அரங்கில் எழுந்த கரவொலி அடங்க ரொம்ப நேரமாயிற்று.

சுவாமி விவேகானந்தரைப் போல உடையணிந்து கம்பீரமாக அவரது கருத்துக்களை பேசும் போது கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல தோன்றும்., ஒரு விஷயத்தை ஒரு முறை கேட்டாலே போதும் அழகாக கற்றுக்கொள்கிறான். வீட்டில் நிழலுக்கு ஒதுங்கிய ஒரு பாட்டி சொல்லிக் கொடுத்த பகவத்கீதையின் ஸ்லோகத்தை அச்சுப்பிசகாமல் அப்படியே சொல்கிறான். பாட்டுப் பாடுவது என்றால் மிகவும் பிரியம் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை ஆனால் சபரி பாடி கேட்டால்... கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

திருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலய செந்தில்நாதன்தான் தற்போது சபரியின் பேச்சுத்திறமையை பலரும் கேட்கவேண்டும் என்ற ஆர்வமுடன்,அவனை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று வருகிறார். இது போல அவிநாசிக்கு அழைத்து வந்த போது அங்குள்ள தினமலர் நிருபர் மகேஷ் சபரியை பார்த்துவிட்டு, அவனது பேச்சை கேட்டுவிட்டு என்னிடம் தொடர்புகொண்டு, சபரிபற்றி நமது நிஜக்கதை பகுதியில் வெளியிடுங்கள் என்று சபரி பற்றி எழுதுவதற்கு வழி அமைத்துக்கொடுத்தார்.

.சுவாமி விவேகானந்தர் வாழ்ந்தது குறுகிய காலமாக இருக்கலாம் ஆனால் தனது கருத்துக்களால், நம்மிடம் வாழப்போவதும், இனிவரும் இளைய சமுதாயத்தின் மனங்களை ஆளப்போவதும், பல காலத்திற்கு இனி அவர்தான். நாலணா கையில் இல்லாததால் கன்னியாகுமரியில் படகில் பயணிக்க இயலாமல் நீந்திச்சென்று பாறையின் மீது தியானம் செய்தவர், சில நாளில் பத்தாயிரம் மைல் கடந்து சென்று அமெரிக்கா மக்களை திரும்பி பார்க்கவும், விரும்பி ஏற்கவும் செய்யும் வல்லமை கொண்டிருந்தார் என்றால், அவரிடம் குடியிருந்த அந்த மகா சக்தி எது? சொல்லட்டுமா? என்று சபரியின் மழலை மாறாத கணீர் குரலை முழுதாகக் கேட்க நேரில் அழையுங்கள்,கொஞ்சமாய் கேட்க போனில் அழையுங்கள்... சபரியின் அப்பா சீனிவாஸ்தான் போனில் பேசுவார், அவரிடமும், சபரியின் தாயார் நீலவேணியிடமும் முதலில் இந்த தெய்வீகக்குழந்தையை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள், பின்னர் அவர்களே சபரியின் படிப்பு, பள்ளிக்கு இடையூறு இல்லாத நேரத்தில் பேசுவதற்கு ஏற்பாடு செய்வார்கள். தொடர்புக்கு: 9942146558.

3) கோடியிலும் கிடைக்காத மன திருப்தி!

                                            

மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையோரங்களில் சுற்றி திரிபவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும், வெங்கடேஷ்: நான், சென்னை திரு வான்மியூரைச் சேர்ந்தவன். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கி றேன். கூரியர் டெலிவரி, மருத்துவமனையில் வார்டு பாய், கம்பி கட்டுவது என, நான் பார்க்காத வேலையே இல்லை. இருந்தாலும், கிடைக்கிற ஓய்வு நேரங்களில், நூலகத்திற்கு செல்லும் பழக்கம் இருந்தது. 

புத்தர், நபிகள் நாயகம், வள்ளலார் போன்றோரின், புத்தகங்களை படித்த போது, அன்பு ஒன்றை மட்டுமே அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இக்கருத்துக்கள், என் மனதில் அப்படியே ஆழமாக பதிந்தன. 1995ல், திருவான்மியூர் பகுதியில், அரை நிர்வாணமாக, ஒரு வட மாநில பெண் சுற்றி திரிந்தார். மற்றவர்கள் வேடிக்கை பார்க்க, நான் முன்வந்து அவரை காப்பகத்தில் சேர்த்து வீடு திரும்பிய போது, எனக்கு ஏற்பட்ட மனதிருப்தி, கோடி ரூபாய் கிடைத்தாலும் வராது. அடுத்த உயிர்கள் மீது அன்பு செலுத்திய போது, உருவான அற்புதமான அனுபவத்தை அன்று தான், உணர்ந்தேன். இந்த அனுபவத்திற்கு பின், குழந்தைகள், பெண்கள், முதியோர் என, சாலையோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த, 1,000த்திற்கும் மேற்பட்டவர்களை, அரசு மற்றும் தனியார் காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறேன். அவர்களுக்கு தெரிந்த மொழியிலேயே பக்குவமாக பேசி, குளிப்பாட்டி, தலை முடியை வாரிவிட்டு, ஆடைகளை அணிவித்து, சாப்பிட வைத்த பின்னரே அங்கு சேர்ப்பேன். 

சேர்த்த பின்னும், அவர்கள் எப்படி இருக்கின்றனர் என, தொடர்ந்து பார்த்து வருகிறேன். மற்றவர்களுடன் இணைந்து, ஒரு தொண்டு நிறுவனமாகவோ, தனியார் அமைப்பாகவோ இல்லாமல், தனியொரு மனிதனாகவே கடந்த, 18 ஆண்டுகளாக, இச்சேவையை செய்து வருகிறேன். இச்சேவையை செய்யும் போது, ஒரு சில நேரங்களில், வீடு திரும்ப ரொம்ப நேரம் ஆகும்; இருந்தாலும், என் மனைவி சலித்துக் கொள்ளாமல், என்னை ஊக்கப்படுத்துவாள்.
தொடர்புக்கு: 93801 85561

4) ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் நவீன இயந்திரம் ஒன்றை சுமார் 7 லட்சம் செலவு செய்து பல்வர் டிரயல் அண்ட் எரர்ஸுக்குப் பிகு குறைகளை நீக்கி, சிறந்த முறையில் தயாரித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர், தீயணைப்புத் துறை அதிகாரிகள் முன்பு டெமோ காட்டி அப்ப்ரூவல் வாங்கியிருக்கிறார் நாமக்கல் மாவட்டம், உத்தகிடிக் காவல் ஊராட்சி, வெட்டுக்காடு கிராமம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்த 29 வயது முதுநிலைப் பட்டதாரி இளைஞர் வெங்கடேஷ்.

இந்த இயந்திரத்தில் ஆழ் துளைக் கிணற்றில்  நிலையை அறிந்துகொள்ள அகச்சிவப்புக் கதிர்களுடன் கூடிய கண்காணிப்புக் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த குழிக்குள் சிக்கிய குழந்தையை துல்லியமாகக் காண கேமிராவைச் சுற்றி விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன. தொழில்நுட்பக் கோளாறால் அந்த விளக்குகள் எரியாவிடில், கேமிராவில் உள்ள சென்சார் மூலம் ஒளி உண்டாக்கப் பட்டு கருப்பு வெள்ளை விடியோவாக குழந்தையைக் காண முடியும். தவிர, குழிக்குள் மாட்டியிருக்கும் குழந்தையுடன் பேசவும், குழந்தை பேசுவதை மேலிருந்து கேட்கவும் முடியும். குழந்தைக்கு சீரான ஆக்சிஜன் கிடைக்கவும் ஏற்பாடுகள் இருக்கின்றன. இதன்மூலம் குழந்தை உயிருடன் இருப்பதைத் தெரிந்து கொள்வதுடன் குழந்தையை இறுகப் பிடித்து மேலே கொண்டுவர 3 அங்குலம் முதல் 5 அடி வரை விரிவடையும் தன்மையுள்ள இடுக்கியும் அமைக்கப் பட்டுள்ளது.

அவ்வாறு குழந்தையை மேலே இழுக்கும்போது பக்கவாட்டுச் சுவரிலிருந்து மண் குழந்தையின் சுவாசக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்க பாதுகாப்புக் கவசமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதனால் உடலில் சிறு சிராய்ப்புக் காயங்கள் கூட இல்லாமல் குழந்தையை வெளியில் எடுக்க முடியும். இந்த நவீன இயந்திரத்தைத் தயாரிக்க 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை செலவாகுமாம். இந்த இயதிரத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்து ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கும் மின் மோட்டார்கள், நிலக்கரி மற்றும் தங்கச் சுரங்கங்களில் சிக்குபவர்கள், திறந்தவெளிக் கிணற்றில் விழும் விலங்குகள் என்று ம் காப்பாற்ற முடியுமாம்.

மிக மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்த வெங்கடேஷ் எம் எஸ் சி இயற்பியல் படித்துள்ளார். இந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்க வேண்டி தான் பார்த்துவந்த வேலையைக் கூட ராஜினாமா செய்து விட்டு கடந்த 5 ஆண்டுகாலமாகப் போராடி இதைத் தயாரித்திருக்கிறாராம். 

5)  விளக்கம் படத்திலேயே.


11 கருத்துகள்:

 1. பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் மனம் நெகிழ்த்தின. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  என்னை மிகவும் நெகிழச்செய்தது ஆழ்குழாய்க் கிணற்றுக்கான துளைகளில் சிக்கித் தவிக்கும் பிஞ்சுகளை மீட்க தயாரிக்கப்பட்ட கருவி. இதைப் பற்றி பலமுறை நான் யோசித்திருக்கிறேன். இப்படியொரு கண்டுபிடிப்பு நம் நாட்டுக்கு அத்தியாவசியத் தேவை. கண்டுபிடித்த வெங்கடேஷ் அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றி.

  மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மகத்தான மனிதர் வெங்கடேஷ் அவர்களுக்கு வந்தனம்.மனிதநேயம் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள் அது என்னவென்று இவரிடமிருந்து தெரிந்துகொள்ளவேண்டும்.

  தமிழுக்குத் தோண்டாற்றிய ஜப்பானியர் நொபுரூ கராஷிமா அவர்களுடைய தமிழ்ச்சேவை நினைத்து புளகாங்கிதம். யாதவின் அசாத்தியத் துணிவும் சபரி வெங்கட்டின் அபூர்வத் திறனும் வியப்பையும் நெகிழ்வையும் ஒருசேரத் தந்து மனம் நிறைத்தன.

  பதிலளிநீக்கு
 2. அத்தனை செய்திகளும் நன்றி. சிறுவன் யாதவுக்கு நமது வணக்கமும். ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் மாட்டும் ஒவ்வொரு முறையும் பதைபதைப்புதான். சபரி வெங்கட் ஆச்சரியப்படுத்துகிறான். வெங்கடேஷின் சேவை மகத்தானது.

  பதிலளிநீக்கு
 3. /// நாடு நல்லாயிருக்கணும், நாட்டில் உள்ள நல்லவங்க நல்லாயிருக்கணும் அதான் முக்கியம்... /// குருடன் போல் உணர்கிறேன்... சபரி வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  மற்ற அனைத்து சிறப்பான செய்திகளுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 4. நெஞ்சம் நெகிழ வைத்த செய்திகள். உண்மையில் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.பலருக்கு இவை தூண்டுதலாக அமையும்

  பதிலளிநீக்கு
 5. பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் நெகிழ வைத்தன.
  ஆழதுளைக் கிணற்றில் விழுந்தவர்களை காப்பாற்றும் கருவி கண்டுபிடித்த வெங்கடேஷ் வாழ்க.

  பதிலளிநீக்கு
 6. ஆழ்துளைக் கிணறு வெங்கடேஷுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
  சிறுவன் சபரியுடனும் பெற்றோருடனும் பேசினேன். அவன் குரலில் இருந்த மகிழ்ச்சி சொல்ல முடியாது,. இடையிடையே கமறினன்.''என்னப்பா சளி பிடிச்சிருக்கா'ன்னு கேட்டேன். இல்லம்மா. எங்கம்மா குண்டு மிளகாய் போட்டு பொரியல் செய்தாங்க. மிளகா கமறுது'என்று சிரிக்கிறான்.
  இந்த நல்ல செய்தியைக் கொடுத்த எங்கள்ப்ளாகிற்கு நன்றி.

  இந்தத் தெய்வக் குழந்தை நன்றாக இருக்கட்டும்.
  அடுத்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் நாலரை மணிக்கு பொதிகையில் அவன் பேட்டி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. பாஸிடிவ் செய்திகள் நிறைவான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 8. //"நன்றி' சொல்லி தமிழராக நடந்து கொண்டேன்.// நெகிழ்சியான வரிகள்

  // எழுந்து நின்று கைதட்டாமல் இருக்கமாட்டார்கள்.// கேட்க வேண்டும் போல் இருக்கிறது சார், வாங்களேன் ஒரு எட்டு போயிட்டு வருவோம்

  மூன்றும் நான்கும் அருமையான பாசிடிவ் செய்திகள்

  பதிலளிநீக்கு
 9. சிறுவர்கள் சபரியும், யாதவும் மனதை நெகிழ வைத்தனர்.
  உங்கள் பாசிடிவ் செய்திகள் உண்மையிலேயே மனதில் பாசிடிவ் எண்ணங்களை உண்டு பண்ணுகின்றன.

  ஆழ்குழாய் கிணற்றில் விழும் குழந்தைகளை அப்படி விழாமல் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கட்டும், முதலில். வருமுன் காப்போம்!

  தொடரட்டும் உங்கள் பணி!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!