சனி, 29 ஜூன், 2013

பாசிட்டிவ் செய்திகள் 23, ஜூன், 2013 முதல் 29, ஜூன் 2013 வரை


எங்கள் B+ செய்திகள்.  
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 

1) ஆகாய தாமரைகளை, ஏரிகளின் நடுவே சென்று எளிதாக அகற்றும் மிதவை இயந்திரத்தை கண்டுபிடித்த, விவசாயி தேவராஜ்: நான், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயி.ஈரோட்டின் வெண்டிப்பாளைய நீர்மின் நிலையத்தின் அருகில் உள்ள ஏரியில், ஆகாய தாமரைகள் அதிகம் உள்ளன. 

                                                     

இதை பார்த்து, அங்கு தண்ணீர் இருப்பதை அறிகுறியாகக் கொண்டு, மக்கள் குளிக்கச் செல்வர். ஆகாய தாமரைகள் உள்ள இடத்தில், மேல் பகுதியில் நீரோட்டம் குறைவாகவும், கீழ் பகுதியில் அதிகமாகவும் இருக்கும். இது தெரியாமல் குளிக்க செல்லும் பலர், ஆகாய தாமரையின் வேர்களில் சிக்கி, இறக்கும் சூழ்நிலை தொடர்ந்து ஏற்பட்டது.

கடந்த ஆண்டு மட்டும், ஒன்பது பேர் இறந்தனர். ஆகாய தாமரைகளை அழிக்க, "வேதிக்கொல்லி' மருந்துகளை பயன்படுத்தினால், நீரில் உள்ள உயிரினங்களை பாதிக்கும்.
"புல்டோசரை' வைத்து அகற்ற முயற்சித்தால், ஏரியின் நடுபகுதிக்கு சென்று அகற்றுவது, மிகவும் சிரமமான காரியம். அப்படியானால், இதற்கு என்ன தான் தீர்வு என, நான் சிந்திக்கும் போது உருவானதே, "கிலன் கிளீனிங் மெஷின்' என்ற, இந்த மிதவை இயந்திரம். படகு வடிவில் அமைக்கப்பட்டுள்ள, இந்த மிதவை இயந்திரத்தில், மூன்று புரொப்பலர்கள் பொருத்தப்பட்டு, டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. தண்ணீரின் மேல் உள்ள ஆகாய தாமரைகளை, பல்சக்கரம் போன்ற கருவியால் வேருடன் பிய்த்து, கண்வேயர் பெல்ட்டுகள் மூலம், 15 டன் கொள்ளள வுள்ள டேங்கில் சேகரிக்கப்பட்டு, லாரிகள் மூலம் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு முயற்சி மற்றும் தோல்விக்கு பின், இயந்திரத்தில் சிறு சிறு மாற்றம் செய்து, தற்போதைய வடிவம் கிடைத்தது. காவிரி ஆற்றில், சோதனை முறையிலான வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பின், பொதுப்பணித்துறை அமைச்சரிடம் என் கண்டுபிடிப்பை விளக்கினேன். தற்போது, தமிழக அரசின் உத்தரவை அடுத்து, வேளச்சேரி ஏரியில் முதல் கட்டமாக ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில், நான் கண்டுபிடித்த இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதை தயாரிக்க, 25 லட்சம் செலவாகியது.

2) முன்பு தினமலரில் வெளியான உதவிக் கட்டுரையைப் படித்து  நல்ல உள்ளங்கள் உதவிய கதையைச் சொல்லியிருக்கிறது தினமலர். கோகுல கண்ணனின் தாயார் பெயர் கே.பிருந்தா தேவி

அன்றாடம் வயிற்றுப்பாட்டிற்கே அல்லல்பட்டாலும், தான் பெற்ற பிள்ளைகளை படிக்கவைத்து ஆளாக்க நினைக்கும் கனவுகளுடன் வளம்வரும் ஆயிரக்கணக்கான ஏழை குடும்பத்து தாய்மார்களின் பிரதிநிதி இவர்.
தற்போது சென்னை திநகர், முத்துரங்கன் சாலை, வரதராஜன் தெரு, கதவிலக்கம் 26ல் குடியிருக்கும் இவர் படிப்பதில் ஆர்வமாக இருந்தாலும் சூழ்நிலை காரணமாக சென்னையில் உள்ள ஒரு ட்டல் தொழிலாளிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டவர்.
                                                     

குடிசை வீட்டில் அன்புக்கு குறைவில்லாமல் குடும்பம் நடத்தியவருக்கு மூன்று குழந்தைகள், தனது குழந்தைகளை நன்கு படிக்கவைக்கவேண்டும் என்பதுதான் இவரது வாழ்நாளின் லட்சியம், ஆசை எல்லாம். இதற்காக தனது கணவரின் ஊதியம் (மாதம் 3 ஆயிரம் ரூபாய்) போதாது என்பதால் நாலைந்து வீடுகளில் வேலை செய்துவரும் சம்பாத்தியம் மூலம் பிள்ளைகளை படிக்க வைக்கிறார், பெற்றவளின் சிரமம்பார்த்து பிள்ளைகளும் நன்கு படித்துவருகின்றனர்.

இதில் மூத்தவன் கோகுல் கடந்த ஆண்டு பிளஸ் டூவில் 938 மார்க்குகள் வாங்கியிருந்தான், கவுன்சிலிங்கில் இவன் கேட்ட சென்னை குன்றத்தூர் ஸ்ரீமுத்துக்குமரன் என்ஜீனியரிங் கல்லூரியே கிடைத்துவிட்டது.

இவர் நிலையைச் சொல்லி கேட்ட உதவிக்கு வந்த உதவிகளைப் பட்டியலிட்டு விட்டு,

"இப்போது இரண்டாம் வருட படிப்பு துவங்க உள்ளது இரண்டாம் வருட படிப்பிற்கான கட்டணம் ரூபாய் ஐம்பத்து நான்காயிரத்து நானூற்று ஐம்பது ரூபாயாகும், இந்த வருடத்திற்காக நான் எனது பங்காக என்னால் முடிந்த பணத்தை கொடுத்து கணக்கை துவங்கியுள்ளேன் வாசகர்கள் தங்களால் முடிந்ததை வழங்கலாம்.மாணவன் கோகுல கண்ணனின் தாயார் கே.பிருந்தாதேவியின் வங்கி கணக்கிற்கே தங்களால் இயன்ற பணத்தை அனுப்பலாம். கே.பிருந்தாதேவி, கணக்கு எண்:1278 155 0000 94707, கரூர் வைஸ்யா பாங்க், அசோக்நகர் கிளை, சென்னை-83. வங்கியின் ஐஎப்எஸ்சி கோட் எண்: கேவிபிஎல்0001278.

பிருந்தாதேவியிடம் பேசுவதற்கான போன் எண்:9444073157. உங்களால் ஒரு ஏழை மாணவன் தானும் படித்து தன் தம்பிகளையும் படிக்கவைப்பான் என்ற நம்பிக்கை வந்துள்ளது மேலும் ,ஒரு ஏழை, எளிய தாயின் கனவும் நனவாகிக்கொண்டு இருக்கிறது. நன்றி வாசகர்களே. நன்றி!" என்கிறது தினமலர்.

3) சிறு வயதிலேயே போலியோ தாக்குதலினால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட, ஆம்பூர் அருகே பாலூர் கிராமத்தைச் சேர்ந்த, ரவி என்ற இளைஞர் தனது காரை மாற்றுத் திறனாளிகள் இயக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறார்.

                                                

இரு சக்கர வாகனங்களை மட்டுமே மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில் அமைந்து, (ஸ்கூட்டி, கூடுதல் சக்கரங்களுடன்)  அனுமதியளிக்கப் பட்டிருக்கும் நிலையில், கால்களை உபயோகப் படுத்தாமல், கைகளை உபயோகப் படுத்தியே கார் ஓட்டும் வகையில், சென்னை மாதவரத்தில் இருக்கும், இது போன்று ஏற்கெனவே முயற்சி செய்திருக்கும்,சங்கர் என்பவர் உதவியோடு கோயம்புத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தனது காரை மாற்றியமைத்துள்ளாராம். பிரேக் பிடிக்கும்போது கிளட்சை வேலை செய்ய வைக்கவும், கியர் மாற்றும்போதும் கிளட்ச் தானாக வேலை செய்ய வைக்கவும், ஒரு சென்ஸார் ஆக்சிலேட்டர் உள்ள இடத்தில் வைக்கப் பட்டுள்ளதாம்.

இடது கை பக்கத்தில் ஆக்சிலேட்டர், பிரேக், கிளட்ச், கியர் எல்லாவற்றையும் இயக்கும்படி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாம். கார் லைட்டை டிம், டிப் செய்ய, மழை பெய்யும்போது வைப்ரேட்டரை இயக்க எல்லாம் வலது கை பக்கம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாம். இது மாதிரி மாறுதல் செய்யப் பட்ட வண்டிகளுக்கு வாங்க வேண்டிய அங்கீகாரத்தையும் முறையாக வாங்கியுள்ளாராம். இல்லாவிட்டால் ரோட் டேக்ஸ் கட்ட முடியாது, இன்சுரன்ஸ் வாங்க முடியாது. ஓட்டுனர் உரிமையும் வாங்கியுள்ளார்.

இந்த வண்டியை வைத்து சென்னையிலிருந்து தில்லி வரை நிறுத்தாமல் ஓட்டி கின்னஸ் சாதனை செய்யவும் திட்டமிட்டுள்ளாராம். அதனால் இன்னும் பலருக்கு இதுமாதிரி வண்டி வடிவமைக்க முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும் என்ற காரணம்தான்.  இப்போதே ஐம்பது பேர்கள், கிட்டத்தட்ட, இவரிடம் இதுமாதிரி, அவர்கள் வண்டியை மாற்றியமைத்துக்கொள்ள, யோசனை கேட்டிருப்பதாகச் சொல்கிறார். (தினமணி-ஞாயிறு மலர்)


4) கார்த்திக் சாநே. 10ம் வகுப்பில் 500 க்கு 479. CBSE 12ம் வகுப்பில் 96 சதவீதம் மதிப்பெண்கள். ஐ ஐ டியில் பொறியியல் படிக்க ஆசைப் பட்டு, விண்ணப்பிக்க இவரது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது. காரணம் இவர் பார்வையில்லாத மாற்றுத் திறனாளி.
                                                           

ஆனால் அவருடைய படிப்பு தங்குமிடம், உணவு, என எல்லாச் செலவுகளக்கும் ஸ்காலர்ஷிப் தந்து அவரைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது, அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம். டெல்லியின் மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு இதில் தாங்கமுடியாத மகிழ்ச்சி என்கிறது ஞாயிறு தினமணிக் கதிர். 


5) கனடா விஞ்ஞானி ஒருவர், ஜெர்மன் விஞ்ஞானியுடன் இணைந்து உலகின் முதல் 3D, செயற்கை மூளையை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.Montreal Neurological Institute at McGill University in Montreal, என்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் Dr. Alan Evans என்ற விஞ்ஞானி, ஜெர்மன் விஞ்ஞானி ஒருவருடன் இணைந்து செயற்கை மூளை ஒன்றை 3D வடிவில் அமைத்துள்ளார்.

இந்த மூளை சாதாரண மனித மூளையை விட 250,000 மடங்கு அதிக நினைவுத்திறனை வைத்துக் கொள்ளும் சக்தியுடையது.65 வயது உடைய இறந்த பெண்மணியின் மூளையில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த செயற்கை மூளையில் 7400 சிறிய துண்டுகள் உள்ளது.
                                                                        


ஒவ்வொரு துண்டும் மனிதனின் முடியைவிட பாதியளவு பருமன் உடையது.  எனவே இதை மைக்ரோஸ்ப் உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும்.80 பில்லியன் நியூரான்கள் இதில் அடங்கியுள்ளது.இந்த செயற்கை மூளையை உருவாக்க இவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியது.இந்த மூளையானது தொடர்ச்சியாக 1000 மணிநேரம் நடந்த நிகழ்வுகளை நினைவு வைத்துக்கொள்ளும் திறன் உடையது.
(கூகிள் ப்ளஸ் - தமிழ்காரன் பக்கம்)  


6) ஆட்டோவில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய நியாயமான 25 ரூபாய் கட்டணத்தைக் கொடுத்ததுண்டா? ஆட்டோவில் ஏறியவுடன் போக வேண்டிய இடத்தை மட்டும் கேட்டு, மீட்டரை ஆன் செய்யும் ஆட்டோ டிரைவரைப் பார்த்த அனுபவம் உண்டா? நம்மில் யாரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டாலும், இதெல்லாம் நடக்கிற வேலையா என்றுதான் கடுப்புடன் பார்ப்போம். அரிதாக சிலருக்கு மட்டும் சென்னையில் இந்த அனுபவம் வாய்த்திருக்கிறது. வெகுவிரைவில் அனைவருக்கும் சாத்தியமாகப் போகிறது.

வாடகை டாக்ஸி, கார் போன்று, ‘நம்ம ஆட்டோ’ என்ற பெயரில் புதிய கம்பெனி ஒன்று சென்ற மாதம் 17-ஆம் தேதி சென்னையில் துவக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், எலெக்ட்ரானிக் மீட்டர், இறங்கும்போது எவ்வளவு தூரம் பயணம் செய்தீர்கள், அதற்கான கட்டணம் போன்ற விவரங்களைச் சொல்லும் அச்சிடப்பட்ட பில் என்று இந்த ஆட்டோக்களில் கிடைக்கும். கேட்கும்போதே அப்பாடா என்றிருக்கிறதா?
                                        


முதல் கட்டமாக 17 ஆட்டோக்கள்தான் சென்னையில் ஓடுகின்றன. வரும் ஜூன் மாததிற்குள் சென்னை முழுவதும் 350 நம்ம ஆட்டோ ஓட்டத் திட்டமிட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சி, பொது மக்கள் ஆட்டோவைப் பயன்படுத்துவதில் பெரிய மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்" என்கிறார் கம்பெனியின் நிர்வாக மேலாளர் அப்துல்லா.

நம்ம ஆட்டோ என்ற பெயரில் ஆட்டோவைப் பார்த்தவுடன் இவர்களை கடுமையாக எதிர்த்த மற்ற ஆட்டோ டிரைவர்கள், மக்களிடம் நம்ம ஆட்டோவிற்கு இருக்கும் வரவேற்பையும் நம்ம ஆட்டோ டிரைவர்களுக்கு கம்பெனி தரும் சம்பளத்தையும் பார்த்து, நாமும் நம்ம ஆட்டோ கம்பெனியில் சேர்ந்து விடலாமா என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். நம்ம ஆட்டோ டிரைவர்களைப் பார்த்தவுடன், எப்படி இவர்கள் செயல்படுகிறார்கள் என்ற விவரத்தை ஆர்வமாகக் கேட்டு எல்லோரும் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயமாக இருக்கிறதே என்கிறார்கள், சக ஆட்டோ டிரைவர்கள்.

எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள நம்ம ஆட்டோவில் முதல் 2 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்சக் கட்டணமாக 25 ரூபாய்.அதன்பின் ஒவ்வொரு கூடுதல் கி.மீ.க்கும் 10 ரூபாய் நிர்ணயித்து இருக்கிறார்கள். இந்தக் கட்டணத்தில் 2 மணி நேரத்திலேயே 650 ரூபாய் சம்பாதிக்க முடிவதாக நம்ம ஆட்டோ டிரைவர்கள் கூறுகிறார்கள். நியாயமான கட்டணத்தை நிர்ணயித்து, ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை செய்தாலே கணிசமான லாபத்தைப் பெற முடிகிறது. இதுபோன்ற மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களில், மேல்புறத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நம்ம ஆட்டோ என்று எழுதப்பட்டு இருக்கும். பார்த்து ஏறுங்க!

தொடர்புக்கு : 044 65554040 /65552020
(முக நூல்)

7)  இதுபோன்ற கண்டுபிடிப்புகள் பின்னர்  வருகின்றனவா தெரியாது எந்த அளவு நடைமுறைச் சாத்தியம் என்றும் தெரியாது. எனினும் மாணவர்களின் அந்த ஊக்கம்தான் பாசிட்டிவ்!
                                                          


ஆற்றைக் கடந்து செல்ல, மிதக்கும் சைக்கிளை கண்டுபிடித்துள்ள கல்லூரி மாணவன், சூர்யா: நான், வேதாரண்யம் மாவட்டத்தின், செம்போடையில் உள்ள, ஆர்.வீ., பாலிடெக்னிக் கல்லூரியில், இயந்திரவியல் இறுதிஆண்டு படிக்கிறேன்.
ஆற்றங்கரையில் அமைந்துள்ள, பல தமிழக கிராமங்களில், ஆற்றைக் கடந்து செல்ல போதுமான வசதிகள் இன்றி, பல கி.மீ., தூரம், சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக் காலங்களில், இவர்கள் படும் துன்பங்களை விவரிக்க முடியாது. ஆற்றில், நீரோட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் கடக்க முயன்று, அடித்துச் செல்லப்பட்டவர்களும் அதிகம். இப்பிரச்னைக்குத் தீர்வு காண, நான் கண்டுபிடித்ததே, இந்த மிதவை சைக்கிள். லாரியின், "டயர் டியூபை' அரை வட்ட வடிவில் இரண்டாகப் பிரித்து, அதில் காற்று நிரப்பி, சைக்கிளின் முன் டயரில் ஒன்றும், பின் டயரில் ஒன்றுமாக இணைத்தேன். இரும்பு தகடுகளால் செய்யப்பட்ட, சிறப்பு விசிறியை, இரு புறத்திலும் இணைத்தேன். காற்று நிரப்பப்பட்ட டியூபால், சைக்கிளுக்கு மிதக்கும் தன்மை கிடைக்கும். பெடலை அழுத்தும் போது, பின் சக்கரம் சுற்ற, விசிறியும் சேர்ந்தே சுற்றப்பட்டு, முன்னோக்கி செல்கிறது. மற்ற சைக்கிள்கள் போல் இல்லாமல் சக்கரங்களில், "புஷ் பேரிங்' பொருத்தப்பட்டு உள்ள தால், பெடலை மெதுவாக அழுத்தினாலே மணிக்கு, 15 முதல், 20 கி.மீ., வேகத்தில், தண்ணீரில் செல்ல முடியும். இந்த சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே, உள்ளூர் சந்தைகளில் எளிதில் கிடைக்கக் கூடிய, குறைந்த விலை பொருட்களே. சாலையில் ஓட்டும் சைக்கிளை, மிதக்கும் முறைக்கு மாற்ற, 1,500 ரூபாய் செலவாகிறது. மிதக்கும் அமைப்பை எளிதில் மாற்றி, "டூ இன் ஒன்' போன்று, சாதாரண சைக்கிளாகவும் பயன்படுத்தலாம். சிறு மீனவர்களால், படகு வாங்க முடியாது. எனவே, ஏரி, குளம், ஆறு போன்றவற்றில், மீன் பிடிப்பதற்கு, மிதவை சைக்கிளை படகாகப் பயன்படுத்தலாம். சைக்கிளில் இணைக்கப்படும் மொத்த எடை, 7.5 கிலோ என்பதால், சைக்கிள் தண்ணீரில் மூழ்கிவிடும், என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடர்புக்கு: 96888 80213. (தினமலர்)

8)  பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் கவுரவ மேயர் பதவி அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஒரு நாள் மேயராகப் போகும் அம்மாணவியின் பெயர் சுனந்தா கயர்வர். இவர் மத்திய பிரதேச மாநிலம் உக்ஜைன் மாவட்டம் நக்தா என்ற நகரைச் சேர்ந்தவர். 17 வயதான சுனந்தா பிளஸ் 2 தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து நக்தா நகரில் முதல் மாணவியாக வந்துள்ளார். 
                                                         


இதனால், சுனந்தாவை கவுரவிக்கும் பொருட்டு அவருக்கு ஒரு நாள் மேயர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகரின் மேயர் ஷோபா யாதவ் அறிவித்துள்ளார். மேலும், மாணவ, மாணவிகளை கல்வியின் மேல் ஆர்வம் கொள்ளச் செய்யும் திட்டத்தினாலும் இக்கவுரவ மேயர் பதவி வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

வரும் 28-ந்தேதி செவ்வாய்க்கிழமை பதவியேற்க இருக்கும் மாணவி சுனந்தா அன்று காலை முதல் மாலை வரை மேயர் இருக்கையில் அமர்ந்து மேயர் பணிகளை கவனிப்பாராம். அரசிடம் முறைப்படி அனுமதி பெற்றே, இந்த ஒருநாள் மேயர் திட்ட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக மேயர் ஷோபா யாதவ் அறிவித்துள்ளார்.

25-ந்தேதி மேயர் பதவியில் அமரும் மாணவி சுனந்தா அன்றைய தினம் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.40 லட்சம் செலவில் சாலை அமைக்கும் திட்டத்தில் கையெழுத்திடுகிறார். 

தந்தை தொழிற்சாலையில் பணிபுரிகிறார். தாய் அங்கன்வாடி ஊழியர். சுனந்தாவின் உடன் பிறந்தோர் மொத்தம் 4 பேர். தான் என்ஜினீயராகி குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம் என்று சுனந்தா தெரிவித்தார்.
(தினமலர்)

-
9) "கூகுள்' இணையதளம் நடத்திய, உலக அளவிலான, "அறிவியல் போட்டி 2013' ஆய்வுக் கட்டுரைப் போட்டியில், சிதம்பரம் மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கூகுள் இணையதள நிறுவனம், மாணவர்களிடம், அறிவியல் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில், உலக அளவிலான, அறிவியல் போட்டி, 2013 ஐ, நடத்தியது. இதில், மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அதன் முடிவுகளை சுருக்கமாக எழுதி, ஆய்வு கட்டுரையாக சமர்ப்பிக்க வேண்டும்.
                                                             
இதில், 120 நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், 1,000க்கும் மேற்பட்டோர், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில், 13-14 வயது பிரிவில் பங்கேற்ற, சிதம்பரம் மாணவி சாம்பவி, நுண் கிருமிகளை பயன்படுத்தி, தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் உபகரணத்தை வடிவமைத்து, சிறிய அளவில் மின்சாரம் தயாரித்து, அதன் அடிப்படையில், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.

இந்த ஆய்வை மேம்படுத்தினால், பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்க, சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், தொழிற்சாலை கழிவுநீரை பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் எனவும், தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம், 90 பேரின் ஆய்வு கட்டுரைகளை தேர்வு செய்துள்ளது.

இதில், சிதம்பரம் மாணவி சாம்பவியின் கட்டுரையும், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரைகளில், அமெரிக்காவின் இயற்கை பதிப்புக்குழு, 15 வெற்றியாளர்களை தேர்வு செய்துள்ளது. இதிலும், மாணவி சாம்பவியின் ஆய்வுக் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில், வெற்றி பெற்றுள்ள, 14 வயதுடையற மாணவி சாம்பவி, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த, சம்பத் - முல்லை தம்பதியரின் மகளாவார். இவரது தந்தை, அண்ணாமலை பல்கலையில், பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய், அதே பல்கலையில், பேராசிரியராக பணிபுரிகிறார். சாம்பவி, காஞ்சிபுரம் மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
(தினமலர்)
 9) உத்தரகண்டில் சுற்றுலா மேற்கொண்ட மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 2000 பேர் கொண்ட குழு ஒன்று பெருவெள்ளத்தில் மாட்டி, பாதைகள் சிதைந்து எங்கும் செல்ல முடியாத நிலையில் மாட்டிக் கொள்ள, சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான ஜெயெஷ்  பாண்டியா என்ற இளைஞர், சமயோசிதமாகச் செயல் பட்டு, தாங்கள் மாட்டிக் கொண்டிருக்கும் இடத்தை ஒரு வெள்ளைத் தாளில் வரைந்து, தனது அலைபேசியில் அதைப் படமெடுத்து, உத்தர்கண்ட் தலைநகர் டேராடூனில் இருந்த தனது நண்பர் ஒருவருக்கு அனுப்ப, அவர் காவல்துறை ஐ ஜி ராம்சிங் மீனாவிடம் ஜன்கில்சாட்டிப் பகுதியில் சுமார் 2,000 பேர் மாட்டிக் கொண்டிருப்பதைச் சொல்ல, அவர் தக்க நடவடிக்கைகளை உடனே எடுத்து, மீட்புக்குழுவை அனுப்பி, எல்லோரையும் காப்பாற்றினார்கள். ஜெயெஷ் பாண்டியாவின் சமயோசிதம் பாசிட்டிவ். (தினமணி)

15 கருத்துகள்:

 1. பாராட்டுக்கள் எல்லாமே நல்ல செய்திகள் உங்கள் விருப்பம்போல அத்தனையும் அருமையான செய்திகள்.வாழ்த்துக்களுடன் தொடருங்கள் இன்னும் நிறைய எல்லோருடனும் பகிருங்கள்

  பதிலளிநீக்கு
 2. ‘நம்ம ஆட்டோ’ பற்றிய செய்தி ஹைலைட். மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு. சாம்பவி பத்தின செய்தி படிச்சதும் பெருமையைக் கொடுத்துச்சு. மத்தபடி எல்லா பாஸிட்டிவ் செய்திகளுமே எனர்ஜடிக் செய்திகள் தான். தொடரட்டும்!

  பதிலளிநீக்கு
 3. கிலன் கிளீனிங் மெஷின் பல ஊருக்கும் தேவைப்படும்... ஆட்டோ அப்பாடா...! மற்ற அனைத்து செய்திகளுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 4. ஆகாயத் தாமரையிலிருந்து குளங்கள் விடுதலி கிடைப்பது மிக மிக நல்ல செய்தி.
  நம்ம ஆட்டோ சென்னை வாசியான் என்னை குஷிப் படுத்துகிறது.
  ஒரு நாள் மேயருக்கு என் வாழ்த்துக்கள்.

  சமயோசிதமாக நடந்து கொண்ட ஜெஈஷிற்குப் பாராட்டுக்கள்.
  கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்று பிள்ளைகளை வளர்க்கும் தாய்க்கு என் வணக்கங்கள்.
  நன்றி ஸ்ரீராம் சார் நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு.

  பதிலளிநீக்கு
 5. செய்திப் பகிர்வுகள் அனைத்தும் அருமை. நன்றி.

  பதிலளிநீக்கு
 6. நம்ம ஆட்டோ நல்ல செய்தி!..

  அனைத்து செய்திகளும் நிச்சயம் பாசிட்டிவ் தான்!

  பதிலளிநீக்கு
 7. சம்யோசிதமாக உயிர் தப்பியது , மற்ற பாசிட்டிவ் செய்திகளும் அருமை..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 8. அனைத்து செய்திகளூம் பாராட்டப்பட வேண்டிய செய்திகளே! அனவருக்கும் பாராட்டுக்கள்.
  நல்ல செய்திகளை தந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 9. நம்ம ஆட்டோவும், ஆகாசத்தாமரை அழிக்கும் இயந்திரமும் தொடர்ந்து வெற்றிபெற வேண்டும்.மாணவி சாம்பவிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். அவர் தொடர்ந்து முயற்சித்து வெற்றி பெற்றால் நமக்கு நல்லது. தனிமனிதனின் முயற்சியாகக் காரை வடிவமைத்து ஓட்டும் பாலூர் ரவிக்குப் பாராட்டுகள்.கார்த்திக் ஸாநேயின் மகிழ்ச்சிமுகம் மேலும் மற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாகச் செயல் படவேண்டும். செய்ற்கை மூளையும் வந்துவிட்டதா. அப்பா அ...அபார சாதனை. பத்துவருட அயராத உழைப்பு.பொறுத்திருந்து பார்க்கலாம்.தண்ணீரில் சைக்கிள் விட்டுச் சாதனை படைத்திருக்கும் சூர்யா,ஒருநாள் மேயராகப் போகும் சுனந்தா இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். எங்கள் ப்ளாக் ஒரு முன்னேற்ற மாக்சீன் எனும் பெயரைச் சீக்கிரம் பெறப் போகிறது. உங்கள் உழைப்பு வீண்போகாது.

  பதிலளிநீக்கு
 10. அருமையான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 11. நல்ல செய்திகள் மற்றும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி. நீரில் மிதக்கிற மாதிரி சைக்கிளின் படமும் தினமலர் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே.

  பதிலளிநீக்கு
 12. நம்ம ஆட்டோ செய்தியை சாதாரண ஆட்டோக்காரர் ஒருத்தர் மூலமாகவே வித்யாபவன் செல்கையிலே கேட்டோம். டிவிஎஸ் குழுமத்தினரின் முயற்சி எனக் கேள்வி. டிரைவர்களுக்குச் சம்பளமாக நிறையக் கொடுக்கிறார்கள். கேட்டதுமே ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் சாதாரண ஆட்டோக்காரர்களுக்கு இதில் எரிச்சலும்,கோபமும் உள்ளது என்பதையும் பார்த்தோம்.

  பதிலளிநீக்கு
 13. முதலில் வந்திருக்கும் பெண் மருத்துவர் படத்துக்கான செய்தி எது??? புரியலை! மாற்றுத் திறனாளிகளுக்கான கார் பற்றியும் படிச்சேன்.சாம்பவி தான் இப்போதைய ஹாட் நியூஸ்.

  பதிலளிநீக்கு
 14. அனைத்துமே அருமையான செய்திகள்....

  முதல் படம் எந்த செய்திக்காக...?

  பதிலளிநீக்கு
 15. எல்லாமே நல்ல செய்திகள்.

  //"கிலன் கிளீனிங் மெஷின்' என்ற, இந்த மிதவை இயந்திரம்//
  படம் போட்டிருக்கலாமே?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!