திங்கள், 10 ஜூன், 2013

நான் நாத்திகனல்ல - பாஹே


           


எலிகள் வேட்டையில் தொடர் வெற்றி 

புலிவேட்டையில்தான் தோற்று விட்டேன் 
விண்வெளிஎங்கும் பரவிடும் தூய்மையைப் 
புழுதிமண் புரண்டே கோட்டை விட்டேன் 

வினாடித் துளியில் கணத்தின் விளிம்பில் 
வெற்றி மகிழ்ச்சி சிரிக்கிறது 
நிமிஷம் கடத்தி நேரம் மறைந்தபின் 
நிஜம் போய் பொய்யே கிடைக்கிறது.

எது சரி எது பிழை என்பது எதுவும் 
அது அது நடக்கையில் புரிவதில்லை - பின் 
நடந்ததை எண்ணி மறுகிக் குமைவதில் 
நாளும் பொழுதும் ஓய்வதில்லை.

ஆயிரம் தெய்வப் பொய்மைப் புரட்டுகள் 
அற்புத அதிசய மாய்மா லங்கள் - 
நிச்சய பயன்களின் கற்பனை நிவாரணம் 
நேற்றுமுந்தா நாள்தான், இன்றைக் கில்லை 

மானுடம் தோற்பது தெய்வத்தின் வெற்றியா?
மனசு இருள்வது ஆன்மீக வெளிச்சமா?
பாவம், புண்ணியமும் சொர்க்கம் நரகமும் 
பாழ்மனக் காரரின் கற்பனை மட்டுமா?

எத்தனை இருள்திரை இறைவனை மூட?
எத்தரும் பித்தரும் எண்ணி மாளாதவர் -
எதற்கும் ஒரு பொய்மைப் பூச்சுடன் 
எலிகளை வென்று புலிகளைத் தோற்க -

11 கருத்துகள்:

 1. ///எது சரி எது பிழை என்பது எதுவும்
  அது அது நடக்கையில் புரிவதில்லை///

  புரிந்து விட்டால்...?

  பதிலளிநீக்கு
 2. /வினாடித் துளியில் கணத்தின் விளிம்பில்
  வெற்றி மகிழ்ச்சி சிரிக்கிறது
  நிமிஷம் கடத்தி நேரம் மறைந்தபின்
  நிஜம் போய் பொய்யே கிடைக்கிறது./

  உண்மைதான்.

  பதிலளிநீக்கு
 3. எலிகளை வென்று புலிகளைத் தோற்க -

  கடுகு போவதை கவனித்துக்கொண்டிருந்தால்

  பூசணிக்காய் நஷ்டமகும் தானே ..!

  பதிலளிநீக்கு
 4. //மானுடம் தோற்பது தெய்வத்தின் வெற்றியா?//

  மானுடம் என்றுமே தோற்காது. இப்போதைய போலி மனிதநேயப் புரவலர்களால் தோற்கடிக்கப்பட்டது போல் அதுவும் ஆன்மிக வாதிகளால் தோற்கடிக்கப்பட்டது போல் ஒரு தோற்றம். இந்த ஆன்மிகவாதிகளும் உண்மையானவர்கள் அல்ல. பொய்யான பகட்டு ஆன்மிகவாதிகளே. தெய்வத்துக்கு வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை. நம்மையே வெற்றி, தோல்வியை சமமாகப் பார்க்கச் சொல்லும்போது, இன்பம், துன்பத்தைச் சாதாரணமாக எண்ணச் சொல்கையில் தெய்வத்திற்கு மட்டும் வெற்றி, தோல்வினு உண்டா என்ன??? வாய்ப்பே இல்லை. மேலும் தெய்வம் என்பது நம் வசதிக்காக நாம் உருவாக்கிய ஒரு தோற்றம். இருப்பது ஒரே ஒரு பரம்பொருள் தானே!

  //மனசு இருள்வது ஆன்மீக வெளிச்சமா?//

  இல்லை; பார்வைக் கோளாறு தான். மனம் இருண்டிருக்குனு எப்போத் தெரியுதோ அப்போ தப்பை உணர ஆரம்பிச்சாச்சுனு தானே அர்த்தம்! அதுக்கப்புறமா இருட்டு எங்கே? வெளிச்சம் தான்!

  //பாவம், புண்ணியமும் சொர்க்கம் நரகமும்
  பாழ்மனக் காரரின் கற்பனை மட்டுமா?//

  படைப்பிலேயே எத்தனை வித்தியாசங்களைப் பார்க்கிறோம்! ஒரு குழந்தை குண்டு, ஒன்று ஒல்லி, ஒன்று சிவப்பு, இன்னொன்று கறுப்பு, ஒன்று பணக்கார வீட்டுக் குழந்தை, இன்னொன்று ஏழை வீட்டுக் குழந்தை! இப்படி எத்தனை இருக்கு? இதுக்கெல்லாம் என்ன பொருள்
  சொல்ல யாரால் முடியும்?

  பொருள் தெரிஞ்சால் பாவ, புண்ணியம் என்பதே இல்லைனு சொல்லட்டும், ஏத்துக்கலாம்.

  பதிலளிநீக்கு
 5. //http://packirisamy.blogspot.com/2013/05/6.html//


  ஒரு மனநல மருத்துவரின் உண்மை அனுபவங்களை இங்கே போய்ப் படியுங்கள்; அல்லது அவர் கொடுத்திருக்கும் சுட்டியில் போய் மூலப் புத்தகத்தைத் தரவிறக்கிப் படியுங்கள். சிலிர்க்க வைக்கும்.:)))))

  பதிலளிநீக்கு
 6. பாவமும் உண்டு புண்ணியமும் உண்டு.
  அதற்கேற்ற விகிதாசாரம் தான் துன்பம் இன்பம்
  வெற்றி தோல்வி
  பிறப்பு இறப்பு எல்லாம் பலாபலன்கள்.
  படிக்க நல்ல கவிதை.

  பதிலளிநீக்கு
 7. ***எத்தனை இருள்திரை இறைவனை மூட?***

  எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆவதும் அவனால் அழிவதும் அவனால்!

  ஆனால் இப்போ திரை மூடுவது மட்டும் அவன் இல்லையா? :)))

  இப்படியே ஏதாவது உருக்கமான கவிதை எழுதி உண்மைபோல் பொய்யையும், புரட்டையும் அர்த்தமற்ற வாக்கியங்களையும் அர்த்தமுள்ளதாகக் காட்டிகொண்டு நம்மையும் ஏமாற்றி ஏற்கனவே அறியாமையில் வாழ்பவனையும் இன்னும் அதில் மூழ்கடிச்சு, சாதிங்கப்பா!

  நீங்க எல்லாம் சொர்க்கத்துக்கு போயி "போர்" அடிச்சு நரகவேதனை அனுபவிப்பீங்க! நான் சொல்லல! உங்க் ஆண்டவன் என்னை சொல்லச் சொன்னான்! :)))

  பதிலளிநீக்கு
 8. புரியவில்லை! புரிந்துவிட்டால் நம்மைப் பிடிக்க முடியாது.....

  பதிலளிநீக்கு
 9. நன்றி DD!

  நன்றி ராமலக்ஷ்மி!

  நன்றி RR மேடம்!

  நன்றி கீதா மேடம்! இன்னும் நீங்கள் கொடுத்த சுட்டிக்குச் செல்லவில்லை! :))

  நன்றி வல்லிம்மா!

  நன்றி வருண்!

  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 10. கீதா மேடம்! நீங்கள் கொடுத்துள்ள சுட்டி திறக்க மறுக்கிறது.'டஸ் நாட் எக்ஸிஸ்ட்' என்கிறது. (ஊக்கமது கைவிடேல்)

  பதிலளிநீக்கு
 11. http://packirisamy.blogspot.com

  இதை முயன்று பாருங்கள். இங்கே நான் கொடுத்த சுட்டியிலிருந்தே போய்த்தான் இந்த வாரப் பதிவை இப்போது படித்தேன். சுட்டி வேலை செய்கிறது. இரு பக்கத்து // இந்த டாஷை எடுத்திருக்க மாட்டீர்கள்! :P:P:P:P

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!