சனி, 8 ஜூன், 2013

பாசிட்டிவ் செய்திகள் ஜூன் 1,2013 முதல், ஜூன் 8 2013 வரை.


எங்கள் B+ செய்திகள்.  
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =   

1) பெட்ரோல் வேண்டாம், டீசல் வேண்டாம், காந்தம் மூலம் இயங்கும் பைக்!  11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடிப்பு.
                                 

பெட்ரோல், டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜினைக் கண்டுபிடித்து இருக்கிறார், கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ்.


''தற்போது உள்ள சவாலான விஷயம் பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக மாற்றுவழி. அதற்கான முன் உதாரணம்தான், காந்த விசையின் மூலம் இயங்கும் இந்த இன்ஜின். இது அதிக வெப்பத்தை வெளிவிடாது, குறைந்த எடையுடையது, அதிக இடத்தையும் ஆக்கிரமிக்காது. மின்வெட்டுக்கும தீர்வாகிறது. இதனை ஜெனரேட்டராகவும் பயன்படுத்தலாம். இந்த இன்ஜினுக்குள் ஏற்படும் காந்த விசையின் அளவுக்கு ஏற்ப மின்சாரத்தையும் தயாரிக்கலாம்'' என்கிறார் வெங்கடேஷ் மேலும் 'தான் ஒரு இயற்கை விஞ்ஞானி’ என்கிறார் வெங்கடேஷ்.

2) சென்னை: "கடும் நெஞ்சுவலியிலும், மின்சார ரயிலை நிறுத்தி, பயணிகளை பாதுகாத்து விட்டு, மாரடைப்பால் இறந்த டிரைவருக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும்' என, ரயில்வே வாரியத்திற்கு, தெற்கு ரயில்வே, பரிந்துரைத்துள்ளது.
                                               


கடந்த மாதம், 23ம் தேதி, கும்மிடிப்பூண்டியிலிருந்து, சென்னை சென்ட்ரலுக்கு, புறநகர் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. இதில்,1,300 பேர் பயணம் செய்தனர். ரயிலை டிரைவர் மனோகர், 48து, இயக்கினார். ரயில், கவரப்பேட்டை நிலையத்தை கடந்து சென்ற சிறிது நேரத்தில், டிரைவர் மனோகருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. கடும் நெஞ்சுவலியிலும், ரயிலை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, எதிரில் வரும் டிரைவரிடம் உதவி கேட்கும் வகையில், ரயில் இன்ஜின் முன்பகுதியில் உள்ள, எமர்ஜென்சி விளக்கை எரிய விட்டார்; பின், மாரடைப்பால் இறந்தார். ரயிலை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு, இறந்த டிரைவரின் பணியினை பாராட்டி, தெற்கு ரயில்வே மூலம், "வீர வணக்கம்' செலுத்தப்பட்டது. அவரது குடும்பத்திற்கு தேவையான உடனடி உதவிகளும் வழங்கப்பட்டன. பணியில் இருந்த போது இறந்தால் வழங்கப்படும், துறை ரீதியான சலுகைகளும் விரைவாக வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொறுப்பாக கடமையாற்றியதை கவுரவிக்கும் விதமாக, டிரைவர் மனோகருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும் என, ரயில்வே வாரியத்திற்கு, தெற்கு ரயில்வே பரிந்துரைத்துள்ளது. 


3) ஈரநெஞ்சங்களின் நற்பணிகள் பற்றி முன்னரேயும் படித்துப் பகிர்ந்திருக்கிறேன். இப்போது இன்னொன்று.

                                               


கடந்த 13/07/2010 அன்று கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் 55 வயதுள்ள ஒரு பெண் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், உடலில் உடைகூட இல்லாமல் கோவை காந்திபுரம் பகுதியில் இருந்தார் . இவரை ஈரநெஞ்சம் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் மூலமாக கோவை அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் தேவியை நல்ல முறையில் பராமரித்து வந்த நிலையில், ROBERT BOSCH கம்பெனி உதவியுடன் மருத்துவர் ரமணி அவர்களின் சிகிச்சையில் , கடந்த மூன்று வருடத்திற்கு பிறகு தேவிக்கு சுயநினைவு திரும்பியது . அதனை அடுத்து அவருக்கு தான் யாரென்றும், தன் மகன் யாரென்றும் நினைவு திரும்பியது. தான் தேவி , தன்னுடைய மகன் கணேஷ் என்கின்ற ரகு என்றும் அவர் கோவை செல்வபுரம் பகுதியில் வசிப்பவர் என்று இருந்த இடத்தையும் கூறினார். இதன் மூலமாக தேவியின் மகன் ரகுவை அழைத்து கேட்கும் போது தேவி என்பவர் என்னுடைய தாயார் தான் நானும் என் அம்மாவும் மட்டும் தான் எங்கள் வீட்டில் இருந்து வந்தோம் கடந்த 5 வருடங்களாக அவர் காணவில்லை, எங்கு தேடியும் கிடைக்கவில்லை , போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார் தனது அம்மா கிடைத்த மகிழ்ச்சியில் திரு.ரகு மூன்று வருடமாக அம்மாவை பராமரித்து வந்த அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்திற்கும், சாலையில் பரிதாபமாக இருந்த தனது அம்மாவை காப்பகத்திற்கு அழைத்து வந்து சேர்த்த ஈரநெஞ்சம் அமைப்பிற்க்கும் , மருத்துவ சிகிச்சைக்கு உதவிய ROBERT BOSCH கம்பெனி மற்றும் Dr. ரமணி அவர்களுக்கும் மனதார ரகு நன்றியை தெரிவித்துக்கொண்டார். அதனை அடுத்து தேவி அம்மாவை இன்று 05/06/2013 துடியலூர் காவல் நிலையத்தின் முன்னிலையில் அவருடைய மகன் ரகுவிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலையில் மிகவும் பரிதாபமான நிலையில் இருந்த தேவி அம்மாவிற்கு உறவு கிடைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறது.


4) ரவி சக்சேனா. காசிபூர் டீ விற்பனையாளர். மாதத்தில் 20 நாள் உழைத்து எட்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பவர். மிச்ச பத்து நாட்கள் பொதுச் சேவைக்குச் செலவிடுகிறார், உறவினர்களின் 'பிசினசைப் பார், உன் பிழைப்பை முதலில் பார்' என்னும் எதிர்ப்பையும் மீறி!
                                                     

என்ன பொதுச் சேவை?  பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களை நல்ல தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சையளிக்க உதவுவது. அவருக்கும் விவரம் தெரியாமல்தான் இருந்ததாம் யதேச்சையாக சில வருடங்களுக்குமுன் ஆஸ்துமாவால் அவதிப்பட்ட ஒரு முதியவருக்கு உதவப் போய், முதன்முதலாக தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்து மிரண்டிருக்கிறார். பிறகு தனியார் மருத்துவமனைகளில் பத்து சதவிகித உள்நோயாளிகளையும், 25 சதவிகித வெளிநோயாளிகளையும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு இவருக்குத் தெரிந்ததாம். 

டெல்லியில் இதுபோன்ற உத்தரவு 4பெற்ற 8 தனியார் மருத்துவமனைகள் இருக்கின்றனவாம். இவர்கள் அரசின் அரசாங்கத்திடமிருந்து குறைந்த விலையில் நிலம் பெற்றவர்கள். ஒருசில மருத்துவமனைகள் ஒத்துக் கொள்கின்றனவாம். ஒரு மருத்துவமனை கிட்னி பிரச்னை ஒன்றில் ஒருவருக்கு, 26 லட்ச ரூபாயை தள்ளுபடி செய்தாலும், இன்னொரு மருத்துவமனை வயிற்றில் புற்றுநோய் இருந்த ஒருவருக்கு உதவி செய்யாமல், அப்புறம் வழக்குப் போட்டு நடவடிக்கை எடுத்த பிறகு ஒத்துக் கொண்டதாம். 

உதவி பெற்றவர்கள் இவரை 'தெய்வம் அனுப்பிய தூதன்' என்கிறார்கள். இவர் அவர்களிடமிருந்து, மிகவும் வற்புறுத்தினால், எதிர்பார்ப்பது அதிகபட்சம் அரை கிளாஸ் டீ!  (முகநூல் வாயிலாக டைம்ஸ் ஆஃப்  இந்தியாவிலிருந்து)

8 கருத்துகள்:

 1. காந்த மாணவனுக்கு வாழ்த்துகள். உன் முயற்சிகள் நல்லபடியாக முன்னேறட்டும்.

  ஐந்து வருடங்களாக ஒரே ஊரில் இருந்தும் மகனைப் பிரிந்திருந்த தாயைச் சொல்வதா.உதவிய மருத்துவரைச் சொல்வதா. ஈரநெஞ்சங்களைத்தான் சொல்வதா.
  மிக மகிழ்ச்சியான செய்தி.

  சூப்பர் டீ சார்.உங்கள் சேவை இறைவனின் சேவை நன்றாக இருங்கள். எங்கள் ப்ளாகிற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. வெங்கடேஷ் அவர்களின் கண்டுபிடிப்பு இன்றைக்கு... என்றைக்கும் தேவை...

  ஈரநெஞ்சங்களின் சேவைகள் தொடரட்டும்...

  உண்மையிலேயே தெய்வம் அனுப்பிய தூதன் தான்...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  நன்றிகள் உங்களுக்கு...

  பதிலளிநீக்கு
 3. நல உள்ளங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அறிமுகபடுத்துவது நன்று.
  மாணவனுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. புதிய கண்டுபிடிப்பை வாழ்த்துவோம்.மாணவன் வெங்கடேஷுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. 11 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவனின் கண்டுபிடிப்பு பாராட்டுக்குரியது.
  ஒரு சந்தேகம்: இது மாதிரியான கண்டுபிடிப்புகள் எல்லாமே செய்தி அளவில் நின்று விடுகின்றனவே, ஏன்? இவை நடைமுறைக்கு வருவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன என்பது தெரிய வருவதில்லை என்பது பெரிய சோகம்!

  தன் உயிரைக் கொடுத்து பயணிகளைக் காப்பாற்றியிருக்கிறார். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
  இங்கும் ஒரு கேள்வி மனத்தைக் குடைகிறது: இத்தனை சின்ன வயதில் நெஞ்சு வலி வரக் காரணம் என்ன?

  ஈர நெஞ்சங்களுக்கும், டீ விற்பனையாளர் ரவி சக்சேனாவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!
  பதிலளிநீக்கு
 6. வெங்கடேஷுக்கு வாழ்த்துகள்.

  ஓட்டுநருக்கு நமது வணக்கங்களும்.

  ஈரநெஞ்சங்களின் சேவை தொடரட்டும்.

  ரவி சக்சேனா வியக்க வைக்கிறார். அவரது நற்பணியும் தொடரட்டுமாக.

  நல்ல செய்திகள்.

  பதிலளிநீக்கு
 7. ரயில் டிரைவரைப் பத்தி ஏற்கெனவே படிச்சேன். நம்மளோட நல்ல குணம் இம்மாதிரியான நல்ல நிகழ்வுகளைப் பாராட்டவே மனம் வராது. எந்தத் தொலைக்காட்சியிலும் இது பற்றிச் சொன்னதாகத் தெரியலை! :(

  அவங்களுக்கு மாட்ச் ஃபிக்சிங் குறித்தும், அத்வானி, மோடி குறித்தும் கவலைப்படவே நேரமில்லை. :(((((

  டீக்கடைக்காரர் குறித்த செய்தி புதியது.

  பதிலளிநீக்கு
 8. அனைத்துமே பாசிட்டிவ் செய்திகள்.

  தில்லி செய்தி இங்கே நாளிதழில் படித்தேன்......

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!