சனி, 27 ஜூலை, 2013

பாசிட்டிவ் செய்திகள் 21, ஜூலை 2013 முதல் 27, ஜூலை 2013 வரை.


எங்கள் B+ செய்திகள்.  
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 
1) சென்னை நகரில் ஆட்டோ ஓட்டிய முதல் பெண், கோவிந்தம்மாள், 50. கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். காக்கி நிறத்தில் சட்டை, கால்சட்டை, பெயர்பட்டை, நெற்றியில் குங்குமம், கிராப்பு தலை என, மிடுக்கான தோற்றத்தில் கம்பீரமாக சென்னை நகரை வலம் வருகிறார்.
                                          

ஆட்டோ ஓட்டுனரானது குறித்து அவர் கூறியதாவது: எனக்கு சொந்த ஊர் செய்யாறு. திருமணமாகி வேளச்சேரிக்கு குடிபுகுந்தேன். என் கணவருக்கு பூ வியாபாரம்தான். சற்று வசதியான குடும்பம் என்பதால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே 20 ஆட்டோக்களை வாங்கி வாடகைக்கு விட்டுவந்தேன். ஏமாற்று கும்பலால் என் ஆட்டோக்களை விற்க வேண்டிய சூழல். குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது.

உறவினர்களின் அவச்சொல்லுக்கு ஆளாகி நின்றேன். ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. அப்போது, என்னிடம் ஒரே ஒரு ஆட்டோ மட்டுமே இருந்தது. அதை நானே ஓட்ட முடிவு செய்தேன். என் முதல் சவாரி விஜயநகரில் இருந்து சென்ட்ரல் சென்றதுதான். அந்த அனுபவம் மறக்க முடியாது. தொடர்ந்து போராடினேன். படிப்படியாக முன்னேறி என் மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தேன். மகனை படிக்க வைத்தேன். தொழிலில் நேர்மை முக்கியம். அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதில்லை.

அனைத்து ஆவணங்களும் எப்போதும் இருக்கும். சாலை விதிமுறைகளை மீறுவதில்லை. சீருடை இல்லாமல் ஆட்டோ எடுக்க மாட்டேன். என், 20 ஆண்டு கால ஆட்டோ பணியில் ஒரு முறை கூட போக்குவரத்து போலீசாரிடம் முறை தவறி நடந்து அபராதம் கட்டியது கிடையாது. 

சென்னையிலேயே ஆட்டோ ஓட்டிய முதல் பெண் என்ற சந்தோஷம் இன்றும் உள்ளது. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் பல பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட பழகி கொடுத்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

2) கடந்த சில நாள்களுக்கு முன்னர் சுற்றுலா சென்ற மதுரை திருநகர் பள்ளி மாணவர்கள் 4 பேர் கடலில் மூழ்கி இறந்த துயரச் சம்பவம் இப் பகுதி மக்களின் மனதில் இருந்து இன்னும் அகலவில்லை.
                                                      

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் இரு மாணவர்கள் ஆபத்தான நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தனது உயிரைப் பொருட்படுத்தாமல் சென்று, சக மாணவர்களைக் காப்பாற்றிய அந்த மாணவர், அலையின் சீற்றத்தில் இருந்து அவரது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

 திருநகர் சி.எஸ். ராமாச்சாரியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 113 பேர் மற்றும் 5 ஆசிரியர்கள் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூருக்கு ஜூலை 12 ஆம் தேதி சுற்றுலா சென்றனர்.

 தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரைக்குச் சென்றபோதுதான் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. அங்கு மாணவ, மாணவிகள் கடலில் கால்களை நனைத்தபடி நின்று கொண்டிருந்த வேளையில், ஒருசில மாணவர்கள் அலைகளில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் சிலரை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்றபோது, அவர்களை உயரமான மாணவர்கள் காப்பாற்றச் சென்றுள்ளனர்.

 அதில் திருநகர் காந்திஜி தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் பரமேஸ்வரன் (17)தண்ணீரில் தத்தளித்த தன் சக நண்பர்களைக் காப்பாற்றச் சென்றுள்ளார். நீச்சல் தெரிந்த பரமேஸ்வரனின் முயற்சியில் பாலாஜிராஜன், பாலமுருகன் ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். தண்ணீரில் தத்தளித்த விஷ்ணுதரனையும் கரை சேர்த்த பரமேஸ்வரன், மீண்டும் கடலுக்குச் சென்றபோது திரும்பவில்லை. ஆனால், விஷ்ணுதரன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். கரையில் இருந்த மீனவர்கள் ஓடிவந்து கடலில் மூழ்கிய சதீஷ்குமார், தேவ் ஆனந்த் ஆகியோரது உடல்களை மீட்டனர்.

 மூன்று மாணவர்களை மீட்ட பரமேஸ்வரன், நண்பர்களுடன் இருப்பார் என நினைத்துக் கொண்டிருந்தனர். அரை மணி நேரம் கழித்தே அவர் காணவில்லை என்பது ஆசிரியர்களுக்குத் தெரியவந்துள்ளது. பெரும் அதிர்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்களும் தள்ளப்பட்ட நிலையில், மாலை 6 மணிக்கு பரமேஸ்வரனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

 இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில் உள்ளனர் அவரது பெற்றோர் சரவணன் - ராஜேஸ்வரி. நீச்சல் பயிற்சி பெற்ற பரமேஸ்வரனை, கடலில் மூழ்கி இறந்த நிலையில் பார்த்த அதிர்ச்சி இன்னும் எங்களைவிட்டு நீங்கவில்லை. தூத்துக்குடி போலீஸôர் தெரிவித்தபோதுதான், சக மாணவர்களை கடலில் சென்று காப்பாற்றியது தெரியவந்தது என்றனர்.

 சக மாணவர்களை மீட்ட பரமேஸ்வரனின் வயிற்றில் கடல் நீர் இல்லை. பிரேதப் பரிசோதனையின்போது இது தெரியவந்திருக்கிறது. கரைக்குத் திரும்ப முயற்சி செய்தும் அவரால் முடியாமல் நீரில் மூழ்கியிருக்கிறார். நல்ல நீச்சல் தெரிந்தவர்கள்தான் தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள் என்று தூத்துக்குடி போலீஸôர் தெரிவித்ததாக பரமேஸ்வரனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

 மற்ற மாணவர்களைப் போல கடலில் விளையாடச் சென்றபோது இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அவரது வீரச் செயல் தற்போது வெளியே தெரிய வந்திருக்கிறது. பரமேஸ்வரன் மறைந்தாலும், அவரது நினைவலைகள் திருநகர் வாசிகளின் மனதில் நிழலாடிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

3) செஞ்சி அருகே, தனியாக வசிக்கும், 100 வயது கடந்த தம்பதியர், தங்கள் உணவை தாங்களே சமைத்து, அனைவரையும் அசத்தி வருகின்றனர்.
               
விழுப்புரம் மாவட்டம், ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர், ரங்கசாமி. 130 வயது எனக் கூறும் இவருக்கு, 2005ல் வழங்கியுள்ள ரேஷன் கார்டின்படி, 123 வயதாகிறது. இவர், மனைவி சடைச்சியம்மாள், 108. இவருக்கு, மூன்று மகன்கள், 10 பேரன், 3 பேத்திகள், 12 கொள்ளு பேரன், 12 கொள்ளு பேத்தி, ஒரு எள்ளு பேரன், ஒரு எள்ளு பேத்தி உள்ளனர்.கணவன், மனைவி வெற்றிலை போடுவர். ரங்கசாமியின் பற்கள் கரைபடிந்துள்ள போதிலும் விழவில்லை; கைத்தடி உதவியுடன் நடக்கிறார். இருவருக்கும் பார்வை தெளிவாக உள்ளது.
                                                       

சடைச்சியம்மாள் ஒரு ஆண்டுக்கு முன் கீழே விழுந்ததில், சரியாக நடக்க முடியவில்லை. உடல் நலக்குறைவுக்காக, ஒரே ஒரு முறை மட்டும் மருத்துவமனைக்கு சென்றதாக, ரங்கசாமி கூறுகிறார்.மகன்கள் இருப்பதாலும், வயது அதிகமாக இருப்பதாலும் அரசு உதவித் தொகை கிடைக்கவில்லை. தனி வீட்டில் வசிக்கும் இவர்களுக்கு, உள்ளூரில் இருக்கும் பிள்ளைகள், உணவிற்கான பொருட்களை வாங்கித் தருகின்றனர்.தங்களுக்கான உணவை அவர்களே சமைக்கின்றனர். நூறாண்டு கடந்த இருவரும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதைப் பார்த்து, அனைவரும் வியப்பில் ஆழ்கின்றனர்.
 

15 கருத்துகள்:

  1. பரமேஸ்வரனின் சம்பவம் மனதை வருந்தச் செய்தது...

    வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் - கோவிந்தம்மாள் அவர்களுக்கும், வியப்பளிக்கும் தம்பதியருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. பெயரோ பரமேஸ்வரன். ஈஸ்வரனாக் இருந்து சக உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது இந்த பிள்ளை.
    அஞ்சலிகள்.
    கோவிந்தம்மாள் சாதனை அரசி.

    நூறு வயது வந்தும் தளரா மனத்தினராய் வாழ்ந்து காட்டும் தம்பதியினர் நமக்கு வழிகாட்டிகள்.
    நன்றி எபி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல செய்திகள் ... அந்த தம்பதியர் அனைவருக்கும் முன் உதாரணம்

    பதிலளிநீக்கு
  4. பாவம் பரமேஸ்வரன்...

    சமீபத்தில் அரையடி சந்துக்குள் சிக்கிய நான்கு வயது சிறுவன் ஒருவனை தீயணைப்பு வீரர்கள் அற்புதமாக காப்பாற்றி உள்ளார்கள், நேற்றைய மலர் என்று நினைக்கிறன்... கண்ணில் சிக்கினால் அதையும் பகிருங்கள்.... அருமையான பணி அவர்கள் செய்தது..

    பதிலளிநீக்கு
  5. பாவம் அந்த சிறுவன், தாத்தாவும் பாட்டியும் நலமோடு வாழ் இறைவனை வேண்டிக்குறென்

    பதிலளிநீக்கு
  6. பரமேஷ்வரன் ஆத்மா சாந்தியடையட்டும் .. மனம் கனத்துப்போனது.
    வயதானலும் தன்மானத்துடன் வாழும் அவர்களை பார்த்து நாம் கற்க நிறைய உண்டு.
    செய்யாறு எங்க ஊர் பக்கத்து பெண்மணிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. / பல பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட பழகி கொடுத்து வருகிறேன்/

    தொடரட்டுமாக. இப்போது பள்ளி வேன்கள் (பஸ் அல்ல) பலவற்றை இளம்பெண்கள் ஓட்ட, குழந்தைகளைக் கவனமாகப் பார்த்து ஏற்றி இறக்க சற்று நடுத்தர அல்லது வயதான பெண்மணிகள் உடன் பயணிக்கிறார்கள் பெங்களூரில். பெற்றோரும் இவர்களது வண்டிகளில் அனுப்ப ஆர்வம் காட்டுகிறார்கள்.

    பரமேஸ்வரன் மறைவு வருத்தம் அளிக்கிறது. பெற்றோருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்தனைகள்.

    அசத்துகிறார்கள் ரங்கசாமி-சடைச்சியம்மாள் தம்பதியர்.



    பதிலளிநீக்கு
  8. பாஸிட்டிவ் செய்திகள் பாசிட்டிவ்வாய்... அருமை.

    பதிலளிநீக்கு
  9. பரமேஸ்வரன் இறந்த செய்தி வருத்தமளித்தாலும் அவரது தீரம் வியக்க வைக்கிறது! மூன்று செய்திகளுமே நல்ல செய்திகள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. ஆட்டோ ஓட்டுனரின் செய்தி மனதில் தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது.வாழ்த்துகள் அவருக்கு !

    பதிலளிநீக்கு
  11. ஆட்டோ ஓட்டும் கோவிந்தம்மாள் நல்ல தன்னம்பிக்கை உள்ள பெண்மணி வாழ்க வளமுடன்.
    நண்பர்களை காப்பாற்றிய வீரசிறுவன் பரமேஸ்வரன் நண்பர்கள் நினைவில் நிறைந்து இருப்பான்.

    பதிலளிநீக்கு
  12. அசத்திய பாசிட்டிவ் மனிதர்கள்.......

    பதிலளிநீக்கு
  13. ஆன ஆட்டோ ஓட்டுனர்கள் இவரை முன் மாதிரியாகக் கொள்ளவேண்டும்.

    என்னதான் நீச்சல் தெரிந்தாலும் கடலில் அது எடுபடாது.மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்பவர்கள் கடலில் இறங்க ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. பலபேரை காப்பாற்றிய மாணவன் பிழைத்திருக்கக் கூடாதா? கண்கள் கலங்குகிறது

    பதிலளிநீக்கு
  14. திருமதி கோவிந்தம்மாள், ரங்கசாமி-சடைச்சி அம்மாள் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.
    சக மாணவர்களைக் காப்பாற்றிய பரமேஸ்வரனுக்கு வாழ்க்கை பாசிடிவ் ஆக இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!